குழந்தைகளை கையாளத் தேவையான குறிப்புகள்?

child-care-tips
குழந்தைகளை கையாளத் தேவையான குறிப்புகள்?

மனித சமுதாயத்திற்கு இயற்கை கொடுத்த பெரிய வரம் குழந்தைகள். தங்கள் தாயின் கருவறையில் இருந்த வரையில் குழந்தைகளுக்கே அதுவே உலகம். இந்த பூமியில் பிறக்கும்வரையில் அவர்களுக்கு தாயின் உணவும் உணர்வும் தான் அவர்களின் வாழ்வு. இந்த உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல், பிறந்தவுடன் தான் குழந்தைகள் அனைத்தையும் புதியதாக கற்கிறார்கள். அவர்கள் கற்பதும் கற்றபடி வாழ்வில் நிற்பதும் பெற்றோர்களின் முதல் கடமை மட்டுமல்ல, பெரும் பொறுப்பும் ஆகும். ஏனெனில் அவர்கள் தங்கள் முதல் கற்றலை பெற்றோரிடமிருந்தே தொடங்குகிறார்கள். அவர்களின் முதல் கற்றலுக்கும், தொடர் கற்றலுக்கும் பெற்றோர்களே முதல் குரு. தங்கள் குழந்தைகளை சரியாக புரிந்துக்கொண்டு, அவர்களுக்கு, தங்கள் பெற்றோர்கள், இந்த சமுதாயம், உலகம், இங்கே வாழ்தல் ஆகியவற்றை பற்றி சரியான புரிதலை தந்து சரியானவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் இந்த சமுதாயத்தை புரிந்து கொள்ள அவர்களுக்கு சிறிது காலம் பிடிக்கும். இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள வேண்டும். குழந்தைகளை கையாளும் திறனை சரியாக புரிந்துக்கொண்டு நடப்பவர்கள் தான் நேர்நிறை ஆற்றலுடைய பெற்றோர்களாக (Positive Parents) பெருமையடைகிறார்கள்.

இந்த சமுதாயத்தை புரிந்து கொள்ள குழந்தைகளுக்கு சிறிது காலம் பிடிக்கும். இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள வேண்டும். நேர்நிறை (Positive) ஆற்றலுடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சரியான மற்றும் நல்ல எதிர்காலத்திற்காக தங்கள் நலனையும் தியாகம் செய்திட தயங்குவதில்லை. ஆனால் சில நேரங்களில் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் தங்கள் குழந்தைகளை எப்படி கையாள்வது என்று திணறுவதுண்டு. அதை சரியாக புரிந்துக் கொண்டால் அது பெரும் பிரச்னையாக இராது. பெற்றோர்கள் முக்கியமான ஓரிரு விடயங்களை அறிவுநிலையிலும் உணர்வுநிலையிலும் அதேசமயம் அன்பு நிலையிலும் புரிந்துக்கொண்டால் குழந்தைகளை கையாள்வது எளிதாக அவர்களுக்கு கைகூடும்.

1. குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளோ, அழகு பொருட்களோ, பெற்றவர்களின் அல்லது மற்றவர்களின் வசதிகான, பயன்பாட்டுக்கான பொருட்களோ அல்ல என்பதை மனதில் வைக்கவேண்டும். முதலில் உங்கள் குழந்தையை, ஒரு பொருளாக நினைத்து கண்மூடித்தனமாக கையாள்வது சரியானதல்ல. அவர்கள் நமது மகிழ்ச்சிக்காக வீட்டில் வளர்க்கப்படும் செல்ல விலங்குகளோ, பறவைகளோ அல்ல. பெற்றோர், உற்றார் அல்லது மற்றவர் விருப்பத்திற்கேற்ப அவர்களை ஆட்டுவிக்க கூடாது. சரியான மனநிலைக்கேற்ப அவர்களை செயல்பட வைக்கவேண்டும். குழந்தைகளை கையிலெடுத்து கண்டப்படி விளையாடுவதோ, தூக்கிப்போட்டு பிடிப்பதோ, இரண்டுக் கைலளால் பிடித்து சுற்றி விளையாடுவதோ குழந்தைகளின் பிஞ்சு உடலுக்கும் இளகிய மனதிற்கும் நல்லதல்ல. உங்கள் குழந்தையின் உடலும் மனமும் மிருதுவானது. அதன் மனோபாவம் இயற்கையானது, ரசிக்க கூடியது, ஆர்வ மூட்டுவது, வழி நடத்த ஏதுவானது, குழந்தையின் மன நிலையை அறிந்து செயல்படுவதே பெற்றோரின் நேர்நிறை தன்மையாகும்.

2. குழந்தைகளின் உணர்வுகளை சரியாக புரிந்துக்கொள்ள அவர்களை நெருக்கமாக கவனியுங்கள். அவர்களிடம் உற்சாகமாக உரையாடுங்கள். அவர்களின் எண்ணங்களை புரிந்துக்கொண்டு, நன்று எனில் பாராட்டுங்கள். சரியற்றது எனில் அதை கடுமையாக மறுப்பதை விட, ஏன் சரியில்லை என்பதை விளக்கி சொல்லி சரியானதை சொல்லிக்கொடுங்கள்.

3. நீங்களே குழந்தைகளிடம் எப்போதும் பேசிக்கொண்டேயிருப்பதை விட, உங்கள் குழந்தைகள் பேசுவதை, சொல்வதை செவிகொடுத்து கவனமாக கேளுங்கள். அது உங்களுக்கும் ஒரு நல்ல பழக்கமாக மாறும். உங்கள் குழந்தைகள் வளாந்து வரும் சமயத்தில் அவர்கள் சொல்வதை, அவர்களின் பிரச்சனையை செவிகொடுத்து கவனமாக கேட்க உங்களால் இயலும். குழந்தைகளின் மழலைப் பேச்சை, அவர்களின் உடல்மொழியை சரியாக கவனித்து கேளுங்கள். பல விடயங்களை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். புதியதாகவும் தெரிந்துக்கொள்வீர்கள்.

4. குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய பரிசுகளை கொடுத்து ஊக்குவியுங்கள். அதற்காக அவர்கள் செய்யவேண்டிய அவர்களின் தினசரி கடமைகளுக்கும் பரிசு கொடுப்பது சரியானது அல்ல. எல்லாவற்றையும் விட உங்கள் வாய்மொழி பாராட்டுகள் மிக முக்கியம். மேலும் அவர்கள் உங்கள் பேச்சை கேட்க தவறும்போது, சிறு சிறு தப்பு செய்யும்போது, அவர்களுக்கு தர வேண்டிய பரிசுகளைத் தர தாமதப்படுத்துங்கள். அது பெற்றோர்களின் அன்பான கண்டிப்பின் வலுவை குழந்தைகளுக்கு உணர்த்தும்.

5. பெற்றோர்கள் தான் குழந்தைகளின் கண் முன் இருக்கும் உயிருள்ள எடுத்துக்காட்டு. குழந்தைகள் பெற்றோர்களின் வார்த்தைகளை கேட்பதைவிட, பெற்றோர்களின் போதனையை விட அவர்களின் சாதனை, சோதனை, வேதனை அனுபவம் அடங்கிய வாழ்க்கையை பார்கிறார்கள், பதிவு செய்துக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு அவைகளை பற்றி புரியவில்லை என்றாலும்கூட தங்கள் பெற்றோரின், சிரிப்பை, அழுகையை, மகிழ்ச்சியை, எல்லா உணர்வுகளையும் மற்றும் அதிகமாக நடப்பவற்றையும் கவனித்தே கற்றுக்கொள்கிறார்கள்.

6. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் வழியிலேயே சென்று பக்குவமாக எடுத்து கூறி தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பதையே பாரமாக நினைப்பார்கள், குழந்தைகள் செய்யும் சிறு சிறு குறும்புகள் கூட சில சமயத்தில் எரிச்சல் அடைவார்கள். குழந்தை பருவம் என்பது கவனமாக பாதுகாக்க வேண்டிய நேரமாகும். குழந்தைகள் வழியிலேயே சென்று அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வருவது நேர்நிறை பெற்றோர்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

7. ஒரு குழந்தை ஒவ்வொரு நாளும் புதுப்புது விடயங்களை கற்றுக் கொண்டு வளர்ந்து வருகிறது. நல்ல பழக்க வழக்கங்களுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள். நன்று சிந்திக்க. நன்று சொல்ல, நன்று செய்ய, நல்லவைகளை பகிர்ந்துக்கொள்ள குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். அவைகளை நீங்களும் செய்யுங்கள். குழந்தைளின் உணர்வுகளை புரிந்து அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தி வாருங்கள். உங்கள் குழந்தையின் கெட்ட பழக்க வழக்கங்களை மாற்ற அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களுக்கு பிடித்த பொம்மையின் அல்லது விளையாட்டின் உதவியுடன் அவர்களுக்கு சரியானவற்றை எடுத்துக் கூறுங்கள். எளிதாக புரியும் வகையில் அவர்களுக்கு சொல்லும் போது அவர்கள் அதை புரிந்து செயல்படுவார்கள். வளர வளர அந்த நல்ல பழக்க வழக்கங்கள் அவர்களின் வாழ்க்கை பழக்கங்களாக இருக்கும்.

8. உங்கள் குழந்தையின் அநாவசியமான நடத்தையைக் கண்டு நீங்கள் கோபப்படும் முன், உங்கள் கோபத்திற்கு ஒரு வரையறையை அமைத்துக் கொளுங்கள். உங்கள் குழந்தையின் தப்புக்காக நீங்கள் நடவடிக்கை எடுக்கும் முன், உங்கள் குழந்தையை அமைதிப்படுத்துங்கள். அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் அமைதியாக இருந்தால்தான், தங்கள் செய்த தப்பையும் அதற்காக நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கை சரியானது என்பதையும் புரிந்துக்கொள்வார்கள்.

9. கீழுள்ள இந்த 5 குறிப்புகளை ஒரு அட்டையில் எழுதிவைத்து அதை உங்கள் பார்வையில்படும் இடத்தில் வையுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையின் மேல் கோபப்படும்முன் அதை ஓரிரு முறை படித்து பாருங்கள்.
– கோபப்படுவது இப்போது முக்கியமல்ல.
– குழந்தைக்கு தேவை அன்பு, அதை பெற அவன்/ள் தகுதியானவன்/ள்.
– குழந்தையின் இந்த உணர்வுநிலையில் கோபத்தைவிட அவனு/ளுக்கு என் உதவி தான் தேவை.
– என் கோபத்தை நான் உடல்ரீதியான செயலாக வெளிப்படுத்த மாட்டேன்.
– இன்று முழுவதும் நான் அன்பையே தருவேன்.

10. நீங்கள் கோபமாக இருகிறீர்கள் என்பதை உங்கள் குழந்தை உண்மையில் உணர வேண்டும். அவர்கள் செய்த தப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள். உங்கள் கோபத்தை அதிருப்தியாக வெளிப்ப்படுத்தலாம், அடியாக அல்ல.

11. குழந்தைகளோடு சில சமயங்களில் ஒத்துப்போகலாம். அப்போது அவர்கள் உங்களோடு ஒத்துழைப்பார்கள். குழந்தைகளோடு வேடிக்கையாக விளையாடுங்கள். குடும்பத்தில் சிறு சிறு விளையாட்டு, சின்ன போட்டிகள் வைத்து, அதன் மூலம், அந்த நேரத்தில் சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை பற்றி கற்றுக்கொடுக்கலாம்.

12. குழந்தைகளுக்கு அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுங்கள். விருப்பத்தேர்வு (Choices/Options) மூலம், சரியனவற்றை தேர்ந்தெடுக்கும் கலையை அவர்களே கற்றுக்கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தைகளுக்கு பெரியவர்கள் போல தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலை செய்யகூடிய அறிவுணர்வு குறைவு. ஆனால் பழக்கவழக்கத்தின் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலை செய்யகூடிய செயலுணர்வை உருவாக்க முடியும். சரியானவைகள் எவை என்பதையும், அவைகளை எப்போது செய்யவேண்டும் என்பதையும், பழகப் பழக குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.

14. குழந்தைகளின் நிலையில் உங்களை வைத்து பார்த்து யோசியுங்கள். உங்களுக்கு சாதரணமாக இருக்கும் பல சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு பயமுறுத்துவதாகவும், சமாளிக்க இயலாததாகவும் இருக்கும் என்பதை மறவாதீர்கள். (உதாரணம்: இடி இடித்தல்)

15. குழந்தைகளுக்கு தேவை உங்கள் அன்பும், நேரமும் தான். நீங்கள் அவர்களை அன்பு செய்கிறீர்கள் என்பதை குழந்தைகள் உணர வேண்டும். ‘நான் உன்னை அன்பு செய்கிறேன்’ என்று உங்கள் வார்த்தையால்; எடுத்து சொல்லுங்கள். அதை செயலாலும், வாழ்க்கையாலும் எடுத்துக் காட்டுங்கள்.

அன்புப் பெற்றோரே, குழந்தைகளுக்கு தினமும் புது புது அனுபவங்களை கொடுங்கள். அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள்.