உதாசீனம் ( சிறுகதை)

uthaseenam-short-story
உதாசீனம் ( சிறுகதை)

அவளோட மாமியாதான் போன் பண்ணிச்சு. அவளுக்கு. இவளோட புருசன் நைட்டு இரண்டுமணிபோல வெசம் குடிச் சிட்டு ஆஸ்பத்திரிலஉசிறுக்குப்போராடிக் கிட்டு இருக்குறதா. கடைசியா பிள்ளையக் கொண்டாந்து காமிக்கச்சொல்லி அழுகிறதா போன்ல சொல்லிச்சி..இவளுக்குக்குக் கையும் ஓடல காலும் ஓடலை.

நேத்து முழுசும் அவன் போன் பண்ணிட்டே இருந்தான். இவ எடுக்குறதில்ல ரொம்ப நாளாவே.. முன்னெல்லாம் ஒருதடவ போன் பண்ணிஎடுக்கலைன்னா விட்டுருவான் . எடுத்தா தண்ணிபோட்டுட்டு மணிக்கணக்குல உசிற எடுப்பான். அதுனால எடுக்கிறதில்ல. வேற நம்பர்ல இருந்தெல்லாம் கூப்புடுவான் அதுனால போன அமத்திவைச்சிருவா...

நேத்து விடாம நைட் 2 மணி வரைக்கும் கூப்புட்டுக்கிட்டு இருந்தான் இவதான் எடுக்கல அனேகமா இவளுக்குக்கால் பண்ணிட்டுத் தான் விசம் குடிச்சிருப்பான் போல இருந்துச்சு..ஒருவேளை அதைச் சொல்றதுக் குத்தான் போன் பண்ணினானான்னு தெரியல..அப்படிச்சொல்லிருந்தாலும் இவ அதைப்பெருசா எடுத்துக்கப்போறதில்ல. ஏன்னா அப்படிச்சொல்றது ஒண்ணும் புதுசு மில்ல.. அடிக்கடி மிரட்டுறதுதான்....

இவளுக்கும் அவனுக்கும் 7 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்துச்சு. அப்ப இவன் துபாயில வெல்டரா இருந்தான். நல்ல வேலைக்காரன். நல்லா சம்பாரிச்சான். கல்யாணம் எல்லாம் தடபுடலா நடந்துச்சு..

கல்யாணத்தை லீவுல வந்துதான் பண்ணி னான் . மூணுமாச லீவுமுடிஞ்சி துபாய்க்கே திரும்பிப்போனான். இவ அவங்க வீட்டுல இருந்தா. மூணுமாசத்துல இவ கர்பமா இருக்குறது தெரிஞ்சது. போன் பண்ணிச் சொன்னா. ரொம்ப சந்தோசப் பட்டான். தினம் போன்லதான் குடும்பம் நடத்துனான்...

ஆனா வீட்டுல இவளுக்கும் மாமியாவுக்கும் ஒத்துக்கல. அதுனால இவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. அவனோட அம்மா அங்கயே வந்து இருக்கச்சொல்லிச்சி. இவ முடியாதுன்னு சொல்லிட்டா...

அவளுக்கு மகனும் பொறந்துட்டான்.அது கேட்டு அவன் சந்தோசப்பட்டான். அவங்க வீட்டுக்கு வரச்சொன்னான். அதுக்கு இவ சொன்னா நீ வந்து இருக்குறதுன்னா சொல்லு வாறேன் நீ இல்லாம அந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டா. அந்த வருசம் கண்ட்ராக்ட் புதுப்பிக்காம ஊருக்கே வந்து சேந்தான்...

கொஞ்சநாள் நல்லாத்தான் போச்சு. சகவாசம் சரியில்லாம குடிப்பழக்கத்துக்கு அடிமை யானான். அதுனால காசு கரைய ஆரம்பிச்சது. வேலைக்கிப்போனாலும் கை நடுங்க ஆரம்பிச்சது.வேலை செய்ய முடியல அது வெல்டிங் வேலை அதுவும்நுணுக்கமான வேலை .கைநடுக்கத்தால செய்ய முடியல.

காசெல்லாம் கரைஞ்சு போச்சு.கைல காசு இல்லாமக்கடன் வாங்கினான். ரொம்பநாள் ஓட்டமுடியல. திரும்ப துபாய்க்கே டிரை பண்ணுனான். ஒண்ணும் வேலைக்கிஆகல..

வீட்டுல வறுமை ஆட்டம் போட்டிச்சி. பொறுத்துப்பாத்து இவ வேலைக்கிப்போனா. பெருசா ஒண்ணும் காசு வறாட்டியும் வயித்தை கழுவுற அளவுக்கு வந்துச்சு.

ஆனா இவன் அதையும் பிடுங்கி குடிக்கத் தொடங்கினான். காசு குடுக்கலைன்னா அவளையும் பிள்ளையையும் போட்டு அடிச்சான். அதுனால இவளுக்கு கஞ்சிக்கி காசு தட்டுப்பாடாச்சு கைக்கொழந்த வேற அதுக்குப்பாலகுடுக்க முடியல அவ்வளவு வீக்காப்போனா...இவ வேலைக்கிப்போயும் பிரயோசனம் இல்ல. காசு மதுக்கடைக்கித் தான் போச்சு.

அதுனால வெறுத்து அம்மா வீட்டுக்கே போயிட்டா. இவளும் போயிட்டதால அவனுக்குக்காசு தட்டுபாடா ஆகிப்போச்சு வரச்சொல்லிசண்டை போட்டான் . அவ குடிய நிறுத்துனா வாறேன்னு சொன்னான். அதை நம்பி ரெண்டுமூணுதடவ வந்து திரும்ப பழைய குருடி கதவதொறடி பொழப்புத்தான் நடந்துச்சு.

அதுனால இவ அவனை விட்டு ப்போய் மூணு வருசம் ஆச்சு . வரவே இல்ல, அவன் வேலைக்கிப்போகாததால அவன் அம்மா 100 நாள் வேலைக்கிப்போய் காசு கொண்டாந்து கஞ்சி ஊத்துச்சு.. அப்பயும் குடி நிக்கல.

இவ அவனோட அம்மாவக்கூப்புட்டா. ஏன் கெடந்து கஸ்ட்டப்படுறீங்க அத்தை என்கூட வந்துருங்க நான் உங்களுக்கு கஞ்சி ஊத்திக்காப்பாத்துறேன்னு சொன்னா. அதுக்குஅவன் அம்மா சொன்னாங்க ஆயிரம் இருந்தாலும் அவன் என் மகன். நான் உசிறோட இருக்குறவரைக்கும் கஞ்சி எப்பாடுபட்டாவது ஊத்துவேன் நானும் இல்லைன்னா அவன் செத்துப்போயிறுவான்....ன்னு அழுதுச்சு..
அதுக்கப்புறம் போனில கூப்புடுவான். இவ பேசுறது இல்ல.அந்த சூழ்நிலையிலதான் நேத்து நைட்டு வெசத்தக்குடிச்சிட்டான்.

அவ அவசரமாக்கெளம்பினா பிள்ளையத் தூக்கிக்கிட்டு கொஞ்சம் காசும் எடுத்துக் கிட்டுக் கெழம்பினா. பஸ்ல போகையில மாமியாவுக்குப்போன் பண்ணினா எப்புடி இருக்கு அவருக்கு ந்னு.. அதுக்கு மாமியா சொல்லிச்சி... கஸ்டம்தான் நம்பிக்கையா சொல்லமாட்டீங்குறாரு டாக்டர். சீக்கிரமா வா அவன் ஒன்னையும் மகனையும் தான் கேட்டுக் கிட்டே கெடக்கான் . உசிறு போறதுக்குள்ள பிள்ள மூஞ்சியப்பாக்கனும் உன்கிட்ட மன்னிப்பு கேக்கனும்ன்னு அழுகிறான்னு சொன்னப்ப இவளுக்கும் அழுக வந்துருச்சு.

நேத்து அவன் போன் பண்ணினப்ப எடுத்திருக் கலாமோ எடுத்திருந்தா ஒருவேளை அவன் வெசம் குடிச்சிருக்கமாட்டானோன்னு தோணிச்சி... டிவில ஒருத்தர் தற்கொலை எண்ணம் வரது சில நொடிகள் தான் அதைக் கடந்துட்டாங்கன்னா பண்ணிக்க மாட்டாங் கன்னு சொன்னது நெனவுக்கு வந்துச்சு.

இவளோட மனசாட்சி நீ பேசாததாலதான் அவன் அதை செஞ்சிட்டான் பேசி இருந்தா அவன் அப்படிச்செஞ்சிருக்கமாட்டான்னு குத்துச்சு. அவள அறியாமக்கண்ணீர் கொட்டுச்சு.. அவ வேண்டிக்கிட்டா. சாமி அவன எனக்குத்திருப்பிக்குடுத்துரு... நு அழுதா. அவ மகன் கேட்டுக்கிட்டே வந்தான் என்னா ஆச்சும்மா ஏன் அழுகுறன்னு இவ ஒண்ணு மில்லன்னு மழுப்பிக்கிட்டு வந்தா
அவ மனசுல அவன் எங்கயாவது உசிறோட இருக்குறான் அவனைப்பாத்து பிள்ளையும் கெட்டுப்போகக்கூடாது.. அதேநேரத்துல தான் ஒழைச்சி சம்பாரிக்கிறதும் பிள்ளையக் காப்பாத்தப் பயன் படனும் மதுக்கடைக்கி போகக்கூடாதுன்னுதான் தனியா இருந்தா
அவன் இல்லாம மகன் அப்பனில்லா பிள்ளையாக வளர்றத நெனைச்சிப் பாக்கமுடியல . என்ன ஆகப்போகுதுன்னு பதட்டத்துல ஆஸ்பத்திரிய நெருங்கிட்டா.

வெளிய மாமியா நின்னுக்கிட்டு இருந்தாங்க அவங்களைப்பாத்தவன்ன அழுக வந்துச்சு அவளுக்கு. அவருக்கு என்னாச்சு எப்புடி இருக்காருன்னு கேட்டா... மாமியா ஒண்ணும் சொல்லாம இவளைக்கையப்புடிச்சி உள்ளாற கூட்டிட்டுப்போனா...
கவர்மெண்டு ஆஸ்பத்திரிதான் தீவிர சிகிச்சைப்பிரிவில இருந்தான் மூக்குல கொழா மாட்டி பக்கத்துல மிசின் ஓடிக்கிட்டு இருந்துச்சு... இவளுக்கு அழுக பொத்துக்கிட்டு வந்துச்சு. இவ வந்ததும்கண்ணுமுழிச்சி மகனை பார்வையால கூப்புட்டான். அதைப்புரிஞ்சிக்கிட்டு நர்ஸ்கிட்ட சொல்லிட்டு மகனக்கூட்டிட்டுப்போனா. ஆனா மகன் வரமாட்டேன்னு அடம் பிடிச்சான்... அதைப் பாத்து அவன் கண்ணுல தண்ணி ஊத்தத் தொடங்குச்சு.

இவளும் அழுதா. அதுக்குள்ள நர்ஸ்ம்மா வெளியபோங்க பேசண்ட தொந்தரவு பண்ணாதீங்கன்னாங்கஇவங்க வெளியே அனுப்பிட்டாங்க. அப்ப நர்ஸ் வெளியே வந்து குடிச்சி குடிச்சி லீவர் எல்லாம்கெட்டுப்போச்சு. குடுக்குற மருந்த ஒடம்பு ஏத்துக்கமாட்டீங்குது.. கஸ்டம்தான்... பாப்போம்னு சொன்னாங்க.

இவளால அழுகைய அடக்கமுடியல தேம்பிதேம்பி அழுக ஆரம்பிச்சிட்டா. அவ ளோட மாமியாவும் என் உசிற எடுத்துக் கிட்டு அவன் உசிறக்கொடு சாமின்னு அழுதா.

அவளோட மகனக்கட்டிப்பிடிச்சி உன் நீ அப்பனில்லாத பிள்ளையா ஆகிடாதடா ந்னு அழுதாங்க...
கொஞ்சநேரத்துல நர்ஸ் வெளியே வந்து இவங்களைக்கூப்புட்டாங்க. குப்புன்னு வேர்த்துப்போச்சு. இவளுக்கு. பதட்டத்தோட போனா. உள்ளாற டாக்டர் இருந்தாரு.

அவர் சொன்னாரு நீதான் அவர் சம்சாரமா சொல்றதைகவனமாக்கேட்டுக்க. இப்ப நாங்க அவரைக்காப்பாத்திட்டோம் ஆனா எவ்வளவு நாள் தாங்கும்னு தெரியல,லீவர் குடல் எல்லாம் புண்ணாப்போச்சு... மருந்து எழுதித்தாறேன் இனிமே குடிச்சா ஆட்டம் முடிஞ்சிரும்.. பத்திரமா நீங்கதான் பாத்துக்கனும்ன்னு சொன்னாரு.

மறுநாள் அவனை டிஸ்ச்சார்ஜ் பண்ணினாங்க . வீட்டுக்குக்கு கூட்டிட்டுப்போய் வைச் சிருந்தாக. கொஞ்சம் சரியானப்புறம் அவகிட்ட அழுதான் என்ன மன்னிச்சிரு மன்னிச் சிரு நான் போய்டுவேன்னு அழுதான்.

இவ அவனை நல்லாப்பாத்துக்கிட்டா. அவளுக்கு மருந்து மாத்திர வாங்க ரொமப் செலவாச்சு.பல்லைக்கடிச்சிக்கிட்டு சமாளிச்சா. அவனுக்குச் சரியாகிக்கிட்டே வந்துச்சு... ஒருநாள் அவன் ரத்த வாந்தி எடுத்தான்... அவசரமா ஆஸ்பத்தி ரிக்கிக் கொண்டுபோனாங்க
போகும் போது சொன்னான் பிள்ளைய நல்லா பாத்துக்க, நான் பிழைக்கமாட்டேன். எனக்காக நீ படுற கஸ்ட்டம் என்னால தாங்க முடியல எனக்கு செய்யிற செலவு வேஸ்ட் நீ அதை வைச்சி பிள்ளையப்பாத்துக்க.. உனக்குச் சிரமம் குடுக்கக் கூடாதுன்னுதான் நான் கடைசியா போய் குடிச்சிட்டேன் என்ன மன்னிச்சிருன்னு அழுதுக்கிட்டே சொன்னான்.

அப்ப அவ சொன்னா இப்பயும் உன்ன காப்பாத்துவேன் ஆனா இனி அதைத் தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணுன்னா... அவன் கண்ணுல தண்ணி வர சத்தியம் பண்ணினான்.... ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் வேகமாப்போச்சு....

அவ எப்புடியும் புருசனக்காப்பாத்துவான்னு அவளோட மாமியா அழுதுக்கிட்டே சொல்லிக்கிட்டு இருந்துச்சு...
இதுதான் பல பெண்களின் நிலமை. தன் புருசன உசிறுக்கு உசிறா நேசிக்கும் பெண்கள் பலருக்கு பொறுப்பான நல்ல கணவன்கள் அமையிறதே இல்ல... இதுதான் விதின்றதான்னு.... அவங்க மாமியா சொல்லிக்கிட்டு இருந்துச்சு அழுகையோட.

நன்றி: அ.முத்துவிஜயன்