21+ மட்டும் படிக்கவும் - திருமணம் வேண்டாமென நினைப்போர்?

marriage-rules-and-restriction
21+ மட்டும் படிக்கவும் - திருமணம் வேண்டாமென நினைப்போர்?

எங்க காலத்துல.."என்றெல்லாம் நாம இப்போ பேச முடியாது.

அந்த காலத்துல இருந்தது போல இருக்கவும் தேவையில்லை.. ஆனால் எந்த கட்டுப்பாட்டையும் விரும்பாத இந்த தலைமுறை திருமணமே வேண்டாம் என்று யோசிப்பது தான் சற்று கவலையை தருகிறது.

என் சிநேகிதி வீட்டிலேயே இரண்டு பெண்களும் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்கள்..என் கணவரின் நண்பர் ஒருவர் வீட்டில் அவருடைய இரண்டு மகன்களும் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்கள்..இந்தப் பிள்ளைகள் இப்படி இருப்பதில் இவர்களின் அம்மா, அப்பா இருவரின் நிம்மதியும் சுத்தமாக போய்விட்டது. பிள்ளைகளை வற்புறுத்தவும் முடியாமல், அதே நேரம் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோராக அவர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கும்.

அதேபோல 20 களின் ஆரம்பத்தில் இருக்கும் என் இன்னொரு சிநேகிதியின் மகள் மிகவும் அழுத்தமாக .." கல்யாணம் வேண்டாம் என்பது அவரவர் எடுக்கும் முடிவு. எனக்கு வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நான் தான்..அதற்கான சுதந்திரம் எனக்கு இருக்கிறது " என்று ஆணித்தரமாக வலியுறுத்தி கூறினாள்.

இருபது வயதில் அவள் தன்னுடைய கருத்தை அவ்வளவு சுதந்திரமாக தெளிவாக கூறியபோது நாம் அடுத்த காலகட்டத்தில்.. காலமாற்றத்தில் இருக்கிறோம் என்று என் மனதில் தோன்றியது.

இப்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் நிறைய படிக்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கை.. கை நிறைய சம்பளம்.. அவர்கள் தன்னிச்சையாக சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள் என்பது நன்றாக புரிந்தது அவளிடம் பேசிய பிறகு ..அது சரியா தவறா என்ற குழப்பமே மிஞ்சியது எனக்கு.

ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது இந்த காலத்து பிள்ளைகள் தாங்கள் கையில் இருக்கும் புகைப்படத்திற்கு சட்டம் தேடாமல்.. சட்டத்திற்கு ஏற்ற புகைப்படம் தேடுகிறார்கள்..நான் கூற வருவது உங்களுக்கு புரிந்திருக்கும். அதாவது அவர்கள் எதிர்பார்ப்பு என்ற சட்டத்திற்குள் இல்லற துணை என்ற புகைப்படத்தை திணிக்க நினைக்கிறார்கள் .அது ஒத்து வராது என்பது அவர்களுக்கே புரிவதால் தான் திருமணமே வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு குடும்பங்களிலும் அந்தப் பெண்கள் முன்வைக்கும் கேள்வி கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்களா?? என்பதே.. தங்கள் அப்பா அம்மாவையே உதாரணம் காட்டுகிறார்கள். எதையும் கேட்க மறுக்கும் இவர்களிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது.

சண்டே சச்சரவோ..கருத்து வேறுபாடோ இல்லாத தம்பதியர் கிடையாது. அதையும் தாண்டி இழையோடும் ஒரு அன்பும் பாசமும்..இல்வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே என்று ஆதங்கமும் எழுகிறது.

திருமணம் வேண்டாம் என்று நினைக்கும் எண்ணம் ..இளமை பருவத்தின் இறுதிவரை நன்றாகத் தான் இருக்கும்.அதற்குப் பின்னர் எந்த எத்தனை நட்புகளோ உறவுகளோ இருந்தாலும் நமக்கு என்ன ஒரு உறவு குடும்பமோ, குழந்தைகளோ இல்லை என்றால் ஒரு தனிமை..ஏக்கம் வரத்தான் செய்யும்.

என் உறவினர் ஒருவருடன் பல காலம் பழகி இருக்கிறேன்.
அவர் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர் .

ஆரம்பத்தில் மிகவும் மகிழ்வாக "உங்களுக்கெல்லாம் உங்க புருஷன் பிள்ளைங்கன்னு ஒரு அடிமையான வாழ்வு.. ஆனால் எனக்கு சுதந்திரமான வாழ்க்கை" என்று கூறுவார். அவரே நடுத்தர வயது வரும்போது என்னிடம் கூறியது" உங்களுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பாக குடும்பம் கணவன் பிள்ளைங்கன்னு இருக்காங்க எனக்குன்னு யாரு இருக்காங்க" என்றது தான். அதே எண்ணம் வாழ்வின் இறுதியில் அவருக்கு நிறையவே இருந்தது..எந்த உறவுகளுடனும் ஒட்ட முடியவில்லை.

இன்று திருமணம் வேண்டாம் என்று நினைக்கும் பெண்கள் இறுதிவரை தங்களால் இதே சந்தோஷத்துடன் வாழ்க்கை ஓட்ட முடியுமா என்பதை யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் "அடிமைத்தனம்" என்ற எண்ணத்தில் பார்க்காமல் அனுசரணையோடு வாழ்க்கையை பார்த்தால் இந்த திருமண பந்தம் பயமுறுத்தாது.

ஆனால், பொறுப்புகளை எதிர் கொள்ள மறுக்கும், இளைய சமுதாயத்தினரின் மன போக்கு, பயமுறுத்தும் வகையில் தான் இருக்கிறது.

பழைய படி, காட்டு மிராண்டிகளின், வாழ்க்கை முறை மாதிரி, போய் விடுமோ எனும் பயமும் அதிகரிக்கவே செய்கிறது.