மது உள்ளே போனால் மதி வெளியே போகும்?
சாராயத்தை உள்ளே போனால் பூராயம் எல்லாம் வெளியே வந்து விடும்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.
கள்ளு குடிச்சவனுக்கு சொல்லு புத்தி ஏறாது.
இவை எல்லாம் கிராமத்து பழமொழிகள்.
சட்டம் போட்டு ஒன்றை மறைக்க மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்தெழும்.
முழுக்க மூடிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்க்க விரும்பும் கண்ணை போல் முழுக்க மறைக்கப்பட்ட ஒன்றை சுவைக்க விரும்புவது மனித இயல்பு.
ஆகவேதான் மதுப்பழக்கம் ,விலை மாதர் உறவு இரண்டையும் சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியாது.
அடுத்தவனுக்கு தீமை பயக்கக்கூடிய சமுதாய ஒழுக்க கேட்டை மட்டுமே சட்டம் தடுக்க முடியும்.
தனிமனிதனின் ஒழுக்கத்திற்கு அது உத்தரவாதம் தேட முடியாது.
அவன் எங்கேயாவது மறைந்து நின்று கொண்டு அந்த ஒழுக்க கேட்டிற்கு பலியாவான்.
ஆகவே மது, விலைமாது என்ற விடயங்களில் அழுத்தமான நீதி போதனை மனிதனின் மனத்தை மாற்றும்.
குடித்தால் உன் உடம்பு கெடும்.
மலத்துக்கும் சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாது.
காரணம் இல்லாமல் வீண்பகைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.
நீ நிதானமாக பேசினாலும் கூட இது குடிகாரன் பேச்சு என்று தள்ளிவிடும்.
நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வை குடித்து விடும்.
உன் வருமானம் பாழாகும்.
செய்ய வேண்டிய காரியத்தை செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாது.
மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.
குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட புல்லாக பூச்சியாக நீ மாறி விடுவாய்.
நற்குல பெண்கள் உன் அருகில் வரவே பயப்படுவார்கள்.
மொத்தத்தில் நீ மனிதனாகவே வாழ முடியாது.
இப்படி அவனுக்கு இடித்துக் காட்டினால் ஒரு கட்டத்தில் இந்த அனுபவம் அவனுக்கு வந்து மதுவை கைவிட்டு விடுவான்.
மதுவிலக்கு பிரச்சாரம் பல விதங்களில், பல கட்டங்களில், பல கோணங்களில் நடைபெற்று வந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் குடிகாரர்கள் குறைவாகவே இருந்தார்கள்.
என்று மதுவிலக்கு சட்டம் வந்ததோ அன்றில் இருந்துதான் குடிப்பவர்கள் அதிகமானார்கள்.
ஆகவே எந்த வகையிலும் மதம் போதித்து எழுப்பும் தார்மீக சக்தியை சட்டம் உருவாக்க முடியாது.
குடித்துவிட்டு சபைக்கு வரும் ஒருவனை அந்நாளில் காணவே முடியாது.
அன்னாளில் அரசாங்கம் லைசென்ஸ் கொடுத்தாலும் ஊருக்குள்ளே கள்ளுக்கடையோ சாராயக்கடையோ வைக்க கிராமத்திலும் யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
குடிப்பவனுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்.
தாங்கள் குடிப்பதற்கு பெரும்பாலோர் சொல்லும் காரணம் கவலைகளை மறப்பதற்கு என்பதாகும்.
ஒரு இடத்தில் கம்பன் இதனை சுக்ரீவன் வாய் மொழியாக மிக அழகாகச் சொல்லுகிறான் நெருப்பை நெய்யால் அணைத்தேன் என்கிறார்.
கவலைக்காக குடிக்க ஆரம்பித்தால் உள்ளே போய் விழுந்த மது அந்தக் கவலையை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.
ஒரு குடிகாரன் குடிக்க ஆரம்பிக்கும் போது எதை நினைத்துக் கொண்டு குடிக்க துவங்குகிறானோ அதுதான் அவன் குடித்து முடித்து தூங்கும் வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கும்.
முதல் ரவுண்டு குடிக்கும் போது ஒருவனை உதைக்க வேண்டும் என்று நீ நினைத்தால் மூன்றாவது ரவுண்டு முடிந்ததும் அவனைத் தேடி உன்னை போகச் சொல்லுமே தவிர அந்தக் கோபத்தை அது குறைக்காது.
தனியாக குடித்தால் கவலையின் அளவு அதிகமாகிறது.
கூட்டமாக குடித்தால் குடிக்கும் அளவு அதிகமாகிறது.
ஆரம்ப காலத்தில் குடிகாரர்கள் நிறைய சாப்பாடு சாப்பிடுவார்கள்.
குடி அதிகமாகி ஆகி சாப்பாடு குறைந்து விடும்.
மரணம் வாசல் வரைக்கும் வந்து விட்டோம் என்பது இதன் பொருள்.
தண்ணீரையும் நாம் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம்.
ஆனால் எதையும் குடி என்று அழைப்பதில்லை.
இதை மட்டும் ஏன் குடி என்கிறோம்.
இது ஒன்றுதான் உயிரைக் குடிக்கிறது.
குடியைப் பற்றிச் சொல்கின்ற புராண இதிகாசங்கள் எல்லாம் அவர்கள் குடித்தார்கள் என்று கூறிவிட்டு அதன் மூலம் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதை விவரிக்கின்றன.
வள்ளுவர் சுருக்கமாக நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்றார்.
எவ்வளவு அறிவுள்ள மனிதனையும் முட்டாளாக்கிவிடும் அந்த மதுவிற்கு அடிமையாகி விட்டால் , பிறகு மீள்வது கடினம் என்பதே நிதர்சனமான உண்மை.
- அர்த்தமுள்ள இந்து மதம்