குடுகுடுப்பைக்காரர் - சிறுகதை

kudukuduppaikarar-short-story
குடுகுடுப்பைக்காரர் - சிறுகதை

அப்பப் பத்து அல்லது பதினோரு வயசிருக்கும்
சின்னப்பயலா இருந்தேன் , நான் இருந்தது ஒரு கிராமம் மதுரைக்கிப்பக்கத்துல , பெருசா மின்சாரம் எல்லாம் வராத காலம், பெரிய காரவீடுகள்ல செலவீடுகள்லதான் கரண்டே எடுத்திருந்தாக வீட்டுக்கு 3 குண்டுபல்பு தான் இருக்கும். தெருவில லைட் போஸ்டுல ஒரு குண்டு பல்பு எரியும் அதுல பெருசா வெளிச்சம் ஒன்னும் வராது , லைட் மேல இருக்குறதுனால மூஞ்சி மொகரை தெரியாது

ஏதோ ஆள் தெரியும் ஆம்பளையா பொம்பளையா நு செரமப்பட்டுத் தெரிஞ்சிக்கலாம் வயசானவுகளுக்கு அதுவும் தெரியாது, யாராவது அந்தவழியாப்போனா

“ஆரு வாரது இன்னாருன்னு சொல்லிட்டுப் போங்க” ந்னு பெருசுக வெசாரிக்கும். பெரும்பாலும் வெளக்கு வைச்சவன்ன தூங்கப்போயிருவாங்க , தூக்கம் வராத பெருசுக தான் திண்ணையில் ஒக்காந்து ஊருக்கதை ஒலக்கதை பேசிட்டு இருப்பாக

அதுவும் 9 அல்லது 10 வரைக்கும் தான், அதுக்கு மேல அதுகளும் நொடக்கிடும். அப்புறம் மயான அமைதிதான் நாய்க மாத்திரம் அப்ப அப்ப கொலைச்சிக்கிட்டுக் கெடக்கும் அதுகளையும் பெருசுக “ சே வாய மூடிக் கிட்டுகெட மூதி” நு கல்லெடுத்து எறிவாக

ஊரு ஒறங்குனப்பத்தான் ஊரில உள்ள நாயெல்லாம் கொலைக்க குடுகுடுப்பைக் காரர் வருவாரு, ரெண்டுமூனு சட்டைக வேட்டிய தார்ப்பாச்சி கட்டிருப்பாக, தலையில உருமா மேல ஒரு கருப்புக்கோட்டு தோள்ல ஒரு பை கையில குடுகுடுப்பை அதுல கர்ச்சீப் கட்டிருப்பாக கழுத்துல நெறையா பாசி பவளம் போட்டு செலநேரம் கண்ணுல மைதடவி பாக்கவே பயமாருக்கும்

வீடு வீடுக்கு முன்னாடி நின்னு “ நல்ல காலம் ப் பொறக்குது நல்லகாலம் பொறக்குது, இந்த வீட்டுல ஒரு பெண்தெய்வம் இருக்கு அதுக்கு வெள்ளி செவ்வாயில வெளக்கேத்தி கும்புடுங்க அதான் ஒங்க வீட்டக்காக்குது” னு ஏதாவது சொல்லிட்டு போய்ருவாரு. மறுநாள் வந்து வீடு வீடா அரிசி பருப்பு நு குடுக்குறதை வாங்கிட்டுப்போவாரு

செல வீடுகள்ல இந்த வீட்டுல ஒரு தோசம் இருக்கு அதுக்குப்பரிகாரம் செய்யனும் நு சொல்லி காசுவாங்க முயற்ச்சி பண்ணுவாரு

பொம்பளைகதான் இதுக்கு பயப்படுவாக அதைச்சரி பண்ணுறேன்னு சொல்லி காசு வாங்கி ஏதாவது பரிகாரம் பண்ணுறேன்னு தொழில் பண்ணுவாங்க

அதே மாதிரிதான் அன்னிக்கி தூரத்துல நாய்க கொலைக்கிற சத்தம் கேட்டுச்சு அது த்தெருத்தெருவா மாறி எங்க தெருக்கிட்ட வாரப்ப குடுகுடுப்பை அடிக்கிற சத்தமும் குடுகுடுப்பைக்காரர் கொரலும் கேட்டுச்சு எங்க தெரு மொனையில வந்து முச்சந்தில நின்னு ”இங்க ஒரு பெரிய உசிறுக்கு பங்கம் வந்துருச்சு, ஜக்கம்மா சொல்றா நாளைக்குள்ள இங்க ஒரு உசிறு பங்கமாகப்போகுதுனு” சொல்லிட்டு அடுத்தடுத்த வீட்டுக்கு முன்னாடி போய் என்னமோ சொல்ற சத்தமும் கேட்டுச்சு

அப்ப அவரை விடாம ஒரு நாய் கொலைச்சித் தொறத்த அவர் என்னமோ சொல்லி அதட்ட தூரத்துல அவர் அது மேல என்னத்தையோ தூவ அந்தநாய் கப்புன்னு ஆயி படுத்துருச்சு அதுக்கப்புறம் அவர நாய்கள் எதுவும் கொலைச்சி த் தொரத்தல

அவர் போன கொஞ்ச நேரத்துலயே கூகை வந்து லைட் போஸ்டுல ஒக்காந்து அலற ஆரம்பிச்சது. அப்ப நான் வீட்டில் மெச்சுலதான் படுத்துருந்தேன். எனக்கு ஈரகொலை ஆடிப்போச்சு. பயத்துல வேர்த்துக்கொட்டுச்சு
அதே பயத்துல யோசனை பண்ணப்ப ஒரு பெரிய உசிறுக்குப் பங்கம்ன்னாரே யாரைச்சொல்லிருப்பாருன்னு பாத்தேன்

எங்க தெருவிலதான் சொன்னாரு. ஆருன்னு தெரியலயே மூலை வீட்டுல கோண்டு அய்யாதான் ஒடம்புக்கு முடியாம இருந்தாரு கூரைவீட்டுல பொன்னுத்தாயிக் கெளவியும் ரொம்ப வயசானதுதான், 70- 80க்கு மேல வயசத்தாண்டுனவுங்க அஞ்சாறு பேரு தெருவில இருந்தாங்க , பாவம் யாரை இவரு சொல்றாருன்னு தெரியலயே நு பயமா இருந்துச்சு பயத்துல ஒன்னுக்கு வந்தும் போகல. அடக்கிட்டு தூங்காமப் படுத்திருந்தேன்
கொட்டக்கொட்ட முழிச்சிருந்தேன் ஆரு வீட்டுலயாவது ஒப்பாறிச்சத்தம் கேக்குதான்னு அப்ப அப்ப காதைக் கூர்மையாக்கி கேட்டுப்பாத்தேன். ஆனா அது மாதிரி ஒன்னும் நடக்கல

ஒரு வழியா விடிஞ்சிருச்சு எனக்கு எங்க அம்மாயி நெனப்பு வர அதுவும் வயசானது தானேன்னு ஒருவேளை அதுக்கு எதுனாச்சும் ஆயிடப்போகுதுன்னு கவலைப்பட்டுக்கிட்டுப் பாத்தா அது காலையில எந்திரிச்சி தெம்பா வாசத்தொளிச்சிக்கிட்டு இருந்துச்சு

அப்புறமா அடக்கிவைச்சிருந்த ஒன்னுக்கு எல்லாம் போயிட்டு அம்மாயிகிட்ட லேசாப் பேச்சுக்குடுத்தேன் “ அம்மாயி ராத்திரி குடுகுடுப்பைக்காரர் வந்தப்ப நீங்க முழிச்சிருந்தீங்களா?” நு

“ ஆமா முழிச்சிருந்தேன் அதுக்கு என்னா இப்ப?”
“ அவர் ராத்திரி முக்குல சொன்னதை கேட்டீங்களா”

“ ஆமா கேட்டேன் யாரோ பெரிய உசிறுக்குப் பங்கம்னு சொன்னாரே அதைக் கேட்டீங்களா?”
“ அவங்க இப்புடித்தேன் குத்து மதிப்பா எதுனாச்சும் சொல்லிட்டு போவாங்க காக்கா ஒக்கார பனம்பழம் விழுந்த மாதிரி ஏதாவது நடந்துருச்சுன்னா ’பாத்தியா ராத்திரி குடுகுடுப்பைக்காரன் சொன்னான்’ நு சொல்லுவாங்க

ஏதும் நடக்கலைன்னா அவன் சுடுகாட்டுல ஒழுங்கா பூசை போட்டிருக்கமாட்டான் அதான் பலிக்கலைனு சமாதானம் சொல்லுவாங்க அம்புட்டுத்தேன்”நு சொல்லிச்சி

” அது சரி அம்மாயி ராத்திரி அவரு கொலைச்ச நாய் வாயக்கட்டிப்புட்டாரு அதுவரைக்கும் கொலைச்சது திடீருன்னு சுருண்டு விழுந்துருச்சு கொலைக்கவே இல்ல அவங்களுக்கு மந்திரம் தெரியுமா?”

“ அதெல்லாம் ஒன்னுமில்ல நாய்க ரொம்ப பயந்த சுவாபம் உள்ளதுக யாரையாவது பாத்து கொலைச்சி அவங்க ஓடுனா தொரத்தும் கொலைக்கும் அதே சமயத்துல நின்னு மொரைச்சா அடங்கிடும் குடுகுடுப்பைக்காரவுங்க கையில கொடை வைச்சிருப்பாங்க அதை எடுத்து அடிக்க வந்தா நாய் பயந்துரும் அதுவும் போக அதுக்கு ஒரு வேர் ஒன்னு வைச்சிருப்பாங்கன்ன்னு சொல்லுவாங்க அதை மோந்துபாத்தா மயக்கம் வரும் அதை ஒபயோகப் படுத்து வாங்க”

” சரி அம்மாயி அவங்க சொல்றாங்க சுடுகாட்டுல தலைச்சன் பையன் மூளையத் தோண்டி எடுத்து அதை கருக்கி மை செய்வாங்க அத யாரோட நெத்தில வைச்சிட்டாங்கன்னா அவங்க அவர் சொல்றதச்செய்வாங்க மயக்கிடுவாருன்னு சொல்றாங்களே”

” மையெல்லாம் கதைதான் ஆனா அவங்கள்ல செல பேருக்கு மெஸ் மரிசம் தெரியும் அதை வைச்சி வெளையாடுவாங்க அதுவுமே நாம ஒத்துழைச்சாத்தான் செய்ய முடியும்”

” சரி அவங்க யாரு எங்க இருந்து வாராக”
“ அவங்க ஆந்திராவுல இருந்து குடிபெயந்தவங்க கம்பளத்து நாயக்கர்னு சொல்லிக்கிறாங்க வீட்டுல 3 அல்லது 4 மாசம் தான் இருப்பாங்க மத்தநேரம் இப்புடி ஊரைவிட்டுக் குடும்பமா வந்து ஊருக்கு வெளில தங்கி பொழப்ப நடத்துவாங்க”

“ வேல எதுக்கும் போகமாட்டாங்களா?”
“ அதுக்கு அவங்க ஒரு எடத்துல இருக்கனுமே ஊரில 2 அல்லது மூனுமாசத்துக்கு மேல தங்கக்கூடாதுன்றதுக்கு ஒரு கதை வைச்சிருக்காங்க, அதுனால இப்பையும் அப்புடித்தான் இருக்காங்க”
“ சரி அதெல்லாமிருக்கட்டும் ராத்திரி அவர் சொன்னது பலிக்குமா பலிக்காதா?”

“ பொறுத்திருந்து பாரு நாளைக்கி வரைக்கும்”நு அம்மாயி முடிச்சிக்கிருச்சு
ஆனா எனக்கு என்னமோ திகிலாவே இருந்துச்சு யாரு வீட்டுல எழவு விழுகப்போகுதோன்னு பயந்துக்கிட்டே அன்னிக்கிப்பூரம் பாத்துக்கிட்டே இருந்தேன்
சாயங்காலம் வரைக்கும் ஒன்னும் ஆகல

சாயங்காலமா போஸ்ட்மேன் ஏழுமலை அய்யா வீட்டுக்கு ஒரு தந்தியகொண்டாந்தாரு
எல்லாரும் பதறி அடிச்சிக்கிட்டு வாங்கிப்பாத்தா அதுல அவரோட சம்பந்தி மெட்ராசில காலமாயிட்டதா வந்திருந்துச்சு
அவங்க அலறி அடிச்சி அங்க கெளம்புனாங்க
இப்ப நான் அம்மாயிகிட்ட போய் கேட்டேன்

“ ராத்திரி குடுகுடுப்பைக்காரர் சொன்னது பலிச்சிருச்சு பாத்தீங்களா?
அதுக்கு அம்மாயி” அவர் மூணுமாசமா ஒடம்பு சரியில்லாம இருந்தாரு அப்புடியே பாத்தாலும் இங்கதான நடக்கும்னு சொன்னாரு இது நடந்ததுமெட்ராசிலதான நாயமாப் பாத்தா அங்கதான இவரு சொல்லிருக்கனும்”
” என்ன இருந்தாலும் ஏதோ ஒன்னு நடந்துருச்சே அவர் சொன்னமாதிரி”

“ இதைத்தான் நான் சொன்னேன் காக்கா ஒக்கார பனம்பழம் விழுந்தமாதிரின்னு”
” போங்க அம்மாயி நீ ஒத்துக்க மாட்டீங்களே” என்ன சொன்னாலும் எனக்குப் பயம்தான் ”

“ பயப்படாதடா இதெல்லாம் நாமலா நெனைச்சிக்கிறதுதான் இதைப்பத்தியே யோசிச்சிக்கிட்டு இருந்தா ஒன்னும் உருப்படாது போய் ஆக வேண்டிய வேலையக் கவனி வீட்டுல கோழி அடிச்சி கொழம்பு வைச்சிருக்கேன் போய் நல்லா சாப்புடு” ந்னாக
” அப்பஅவர் சொன்ன அந்தப்பெரிய உசிறு கோழியோ?”

- அ .முத்துவிஜயன்