விருத்தாச்சலம் பெரிய கோயில் மகா கும்பாபிஷேக விழா 

virudhachalam-kovil-kumbabishekam
Virudhachalam kovil kumbabishekam

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.  இந்த ஆலயத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. கடந்த 2-ந் தேதி மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இன்று காலை 6-ம் கால பூஜை முடிந்ததும் காலை 8.30 மணிக்கு கோபுரங்கள், விமானங்கள், மூலவருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க நவீன மின்மோட்டார் மற்றும் நீர் தூவும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

கோவில் வெளிப்பகுதியில் 53 கண்காணிப்பு கேமராக்களும், உள்பகுதியில் 42 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதினம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து எஜமான் சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருமுதுகுன்றம் வீரசைவ ஆதீனம், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

Tags