அருள்மிகு பவானி அம்மன், பெரியபாளையம்.

bavani-amman-temple-periyapalayam
அருள்மிகு பவானி அம்மன், பெரியபாளையம்.

இறைவி : பவானி அம்மன் 
விருட்சம் : வேம்பு

கிருஷ்ணா நதியின் கிளை நதியான ஆரணியாறு திருவள்ளூர் மாவட்டம் வழியாகப் பாய்கின்றது. கிருஷ்ணா நதியின் உபரி நீர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள "பிச்சாட்டூர்" அணையில் சேகரித்து வைக்கப்படுகின்றது. இந்த அணையில் நீர் நிரம்பியதும், உபரி நீரானது ஆரணியாற்றில் திறந்து விடப்படுகின்றது. பிச்சாட்டூர் அணையில் நீர் திறக்கும் போதும், மழைக் காலங்களிலும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்த ஆரணி ஆறு உத்தரவாகினியாகப் பாயும் பெரியபாளையம் என்ற புனிதமான திருத்தலத்தில் அமைந்துள்ளது அதீத சக்தி வாய்ந்த அருள்மிகு பவானி அம்மன் ஆலயம்.

பவானி அம்மனின் திருத்தல வரலாறு, பரமாத்மாவான கிருஷ்ண பகவானின் பிறப்போடு தொடர்புடையது என்பது ஆச்சரியமான தகவலாகும். அந்த வரலாற்றினைக் காண்போம். 

மதுராவைத் தலைநகராகக் கொண்டு "விருசினி" நாட்டை ஆண்ட மன்னன் கம்சன் ஆவான். பரமாத்மாவை ஈன்றெடுத்த தேவகியின் உடன் பிறந்தவன். வசுதேவர், தேவகி தம்பதியரின் எட்டாவது மகனால் கமசனுக்கு இறப்பு நேரிடும் என்று கணிக்கப்பட்டதால், கம்சன் தன் சகோதரி தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான்.

தன் தங்கை என்றும் பாராமல் தேவகியைக் கொல்லத் துணிந்தான் கம்சன். அவனது செயலைத் தடுத்த வசு தேவர் தங்களுக்குப் பிறக்கும் அனைத்து க் குழந்தைகளையும் பிறந்த மறுகணமே கம்சனிடம் கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர். 

இதனை ஏற்ற கம்சன் அவர்கள் இருவரையும் சிறை வாழ்க்கை நடத்த அனுமதித்தான். வசு தேவருக்கும் தேவகிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றான் கம்சன். எட்டாவது குழந்தையாக கண்ணன் திரு அவதாரம் செய்தார். 

உலகத்தையே தன் வாயில் அடக்கிய உத்தமன் பிறந்த நள்ளிரவில் ஒரு அசரீரி வான் வழியாகப் பெற்றோருக்குக் கேட்டது. "வசுதேவரே....! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபன் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கிருக்கும் பெண் குழந்தையைச் சிறைக்குக் கொண்டு வரவும்," என்பதே அச்செய்தியாகும். 

எட்டாவதாக அவதரித்த தன் அன்புக் குழந்தை எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று தன் உள் மனதில் நினைத்த வசுதேவர் மந்திர சக்திக்குக் கட்டுண்டவாறு, தனக்குப் பிறந்த இளம் பாலகனைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்தபடிச் சென்று யசோதையிடம் வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் மகவை எடுத்து எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். 

தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்த செய்தி அதிகாலை நேரத்தில் கம்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. சிறைக்கு வந்த கம்சன், ஆண் வாரிசுக்குப் பதிலாக பெண்மகவு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.  இருப்பினும் எட்டாவது குழந்தையான இக்குழந்தையால் தனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என அந்தக் குழந்தையைக் கையில் எடுத்து வான் நோக்கி எறிந்து தன் உடைவாளை உருவிப் பிடித்துக் கொண்டான்.  மேலே எறிந்த குழந்தை வானிலிருந்து திரும்பாமல் மேல் நோக்கிச் சென்றது. அத்துடன் தெய்வ சாந்நித்தியம் பெற்ற அக்குழந்தை சக்தியின் வடிவமாகக் காட்சி தந்து, "கம்சா! உன்னைக் கொல்ல இருக்கும் குழந்தை வேறு இடத்தில் பாதுகாப்பாக வளர்கின்றான்,"  என அசரீரியாகக் கூறி மறைந்தது. 

இந்த சக்தியின் வடிவமே பெரியபாளையத்தில் "பவானி" அம்மனாகத் திருக்கோயில்  கொண்டு எழுந்தருளியிருப்பதாக ப் பெரியபாளையம் தல வரலாறு தெரிவிக்கின்றது.
    வளையல் வியாபாரியின்
     கனவில் வந்த அம்மன்! 

ஒரு காலத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வளையல் வியாபாரிகள் பலர் பெரியபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கு வந்து வளையல் வியாபாரம் செய்து வந்தனர்.  தங்களது தொழிலின் மீது பக்தி கொண்டிருந்த இந்த வியாபாரிகள், தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களின் மாங்கல்யம் நிலைத்திருக்க வளையல்களுடன் மஞ்சள், குங்குமம் வழங்குவதையும் தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

ஒரு சமயம், வளையல் வியாபாரம் செய்ய வந்த வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வியாபாரம் முடிய இரவு நேரமாகி விட்டதால் பெரியபாளையத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் ஓய்வெடுத்து அன்றைய இரவைக் கழித்தார் அந்த வளையல் வியாபாரி. 

அதிகாலையில் கண்விழித்துப் பார்த்தபோது வியாபாரியின் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் அருகில் இருந்த புற்றின் அருகில் சென்று பார்க்க அந்த புற்றினுள் வளையல் மூட்டை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவர். தன் அருகே இருந்த வளையல் மூட்டை புற்றினுள் எப்படிச் சென்றது என்று மர்மம் விலகாத நிலையில், பயம் அதிகரிக்கத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார் வளையல் வியாபாரி. 

அன்றைய இரவில் வளையல் வியாபாரியின் கனவில் வந்த பவானி அம்மன், "பக்தனே! நானே ரேணுகாதேவி! பெரியபாளையத் தில் பவானி அம்மனாக உன் வளையல் மூட்டை இருக்கும் புற்றினுள் சுயம்புவாக வீற்றிருக்கிறேன். எமக்குத் திருக்கோயில் அமைத்து வழிபாடு செய்க!" என்று கூறி மறைந்தாள். 

மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி கடப்பாரையைக் கொண்டு புற்றினை அகற்றினார். அப்போது சுயம்புத் திருமேனியான அம்பிகையின் மீது கடப்பாரை பட்டு இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு அதிர்ந்த வளையல் வியாபாரி, தன்னிடமிருந்த மஞ்சளை ஒரு கைப்பிடி  எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்தினார். உடனே ரத்தம் வருவது நின்றது. புற்றினை முழுவதும் அகற்றிவிட்டு புற்றில் இருந்த அம்மனுக்கு அனுதினமும் அபிஷேக அலங்காரம் செய்து வழிபட்டு வந்தார். 

புற்றிலிருந்து தோன்றிய அம்மன் தன் பக்தர்களுக்கு தெய்வீகத் திருவருள் புரியும் தன்மை, எட்டுத் திக்கிலும் பரவிட அம்மனுக்கு விரைவில் திருக்கோயில் அமைக்கப்பட்டது. சுயம்புத் திருமேனியான இந்த அம்மனுக்கு எப்போதும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப் பட்டு இருக்கும். கவசத்தை நீக்கிப் பார்க்கும்போது அம்மனது சிரசின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதை இன்றும் காண முடியும். 

ஓங்காரத்தின் திருவடிவமாக, சங்கு, சக்கர தாரிணியாக பாதி அளவு திருவுருவத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேல் இரு திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் கீழ் இரு திருக்கரங் களில் வாளும் அமுத கலசமும் தாங்கிய அன்னையைக் காணும் போது நம் உள்ளத்தில் ஏற்படும் பரவச் சிலிர்ப்பை வார்த்தை களால் வர்ணிக்க முடியாது. 

ஈன்றெடுத்த தாய், தன் கருவை எவ்வாறு பத்து மாதம் கருவறையில் பாதுகாத்து உயிர் தருகின்றாளோ, அந்தத் தாயின் கருணையை விடக் கூடுதலாக தன்னை வணங்கும் பக்தர்களை காத்தருளுகின்றாள் பவானி அன்னை. 

பெரியபாளையம் என்ற ஊருக்கே பெரும்புகழ் அளிக்கும் சர்வ வல்லமை படைத்த ஆதிசக்தி நாயகியாகத் திகழும் பவானி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். ஆடி மாதங்களில் பவானி அம்மன் கோயிலில் கூடுவது மக்கள் தலையா அல்லது ஆரணியாற்றில் கரைபுரளும் வெள்ளமா என்ற அளவுக்குக் கூட்டம் நிறைந்திருப்பது அம்மனின் அருள் வழங்கும் சக்திக்குச் சிறந்த ஆதாரமாகும். 

 மீனவ குலப் பெண்களின் தாயாக இருப்பவள் பவானி. கடலுக்குச் சென்ற தங்களது கணவனும் உற்றார் உறவினரும் பாதுகாப்பாகத் திரும்பி வர பவானி துணை நிற்பாள் என்பது மீனவப் பெண்களின் நம்பிக்கையாகும். 

கணவருக்கு உடல்நிலை குணமாக பிரார்த்தனை செய்து கொள்ளும் பெண்கள், கணவர் உடல்நலம் பெற்றவுடன் தங்களது திருமாங்கல்யத்தை அன்னைக்கு காணிக்கையாக வழங்கும் பிரார்த்தனை இத்தலத்தில் மிகவும் பிரசித்தி ஆகும்.  இப்பூ வுலகில் அளவோடு மழை பொழியவும், பேரழிவுக்கு மக்கள் ஆளாகாமல் இருக்கவும், கொள்ளை நோய்கள் பரவாமல் தடுக்கவும் பெரியபாளையம் அன்னை பவானியை வேண்டிக் கொள்வது நல்ல பலன்களைத் தரும். நம் தமிழகத்திற்குத் தலைசிறந்த காவல் தெய்வமாக இந்த அன்னை திகழ்கின்றாள் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர் பல அனபர்கள்.

அன்னையின் அருகில் அவளது அண்ணனான கண்ணனும் நாகதேவனும் உள்ளனர். தனித்தனி சன்னிதிகளில் கணபதி, மகா மாதங்கி, (ரேணுகா தேவிக்கு அடைக்கலம் தந்த தேவி) அருள்மிகு சிவசுப்ரமணியர், சீனிவாச பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், பரசுராமர், நாகர், புற்றுக் கோயில் தேவி ஆகியோரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். 

திருமணத் தடைகள் நீங்க கரகம் சுமக்கும் குடைக்கல்யாணம் என்ற பிரார்த்தனையை இத்தலத்தில் பக்தர்கள் செய்கின்றனர். வாழ்வில் எல்லா வளங்களும் பெருகவும் மகப்பேறு வாய்க்கவும் மாங்கல்யம் நிலைக்கவும் வேப்பிலை ஆடை உடுத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றியும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். 

இத்தலத்தில் உள்ள தல விருட்சமான வேம்பு மரம், பிள்ளை இல்லாத பெண்களின் பெருந்துயரை நீக்கும் சக்தி வாய்ந்த மரமாக வணங்கப்படுகின்றது. இந்த மரத்தில் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்து தொட்டில் கட்டி வழிபட விரைவில் மழலை வரம் கிட்டும் என்பது அன்பர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

இத்தலத்தில் வணங்கி பலன் பெற்ற அன்பர்கள் மீண்டும், மீண்டும் இங்கு வந்து அம்மனிடம் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை தங்களது தாயாக, மகளாக, சகோதரியாகத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்களும் சித்ரா பௌர்ணமி திருநாளும் இத்தலத்தில் மிகவும் சிறப்பான நாட்களாகும். 

தினமும் காலை 8.00 மணி, 11.00 மணி, மாலை 5 மணி என மூன்று வேலைகள் பவானி அம்பிகைக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகின்றது. குங்குமமும் மஞ்சளும் கலந்த புனித நீரான இந்த தீர்த்தம், தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் மருந்தாக திருக்கோயிலுக்கு வரும் அன்பர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. 

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5:30 முதல் பகல் 12.00 மணி வரையிலும் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை களில் காலை 5.00 மணி முதல் தொடர்ந்து இரவு 9.00 மணி வரையிலும் திருக்கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். 

சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத்திலும் திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம். ஒரு முறை, ஒரே ஒரு முறை சென்று, அன்னை பவானியை தரிசனம் செய்து விட்டு வாருங்கள். உங்களது வாழ்வில் ஏற்படும் உன்னதமான மாற்றங்களை அதி சீக்கிரம் உணர்வீர்கள்.  இது சத்தியமான வார்த்தை.