திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கமுகக்குடி சிவன்கோயில்
Kamugakudi sivan temple
குடவாசல் தெற்கில் 6 கிமி தூரத்தில் உள்ள செல்லூர் வந்து முள்ளியாற்றின் கரையில் அபிவிருதீஸ்வரம் சாலையில் சிறிது தூரம் சென்று வலதுபுறம் உள்ள பாலத்தின் வழி ஆற்றை கடந்தால் கமுககுடி அடையலாம். சிறிய கிராமம் என்பதால் சிவாலயத்தை கண்டுபிடிப்பதில் சிரமமிருக்காது.
கமுகு மரம் என்பது வழக்கமான பாக்கு மரங்களை குறிக்கும். பாக்கு மரங்கள் நிறைந்திருந்த ஊராதலால் இதன் பெயராலேயே இந்த ஊருக்கு கமுககுடி என பெயர்ஏற்ப்பட்டிருக்க வேண்டும். எனினும் தற்போது பாக்கு மரத்தோப்புகள் காணப்படவில்லை, பெரிய தென்னந்தோப்புக்களும் வயல் வெளியுமாகவே இவ்வூர் உள்ளது. இவ்வூரின் வடகிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி திருக்கோயில் அமைந்துள்ளது.
நாம் சென்றிருந்த உச்சி வேளையிலும் சிவாச்சாரியாரும் அவரது மனைவியும் அனைத்து மூர்த்தங்களுக்கும் எண்ணை சார்த்தி அபிஷேகம் செய்துகொண்டிருந்தனர். பெரிதாக மக்கள் வராத இது போன்ற கோயில்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் இது போன்ற சிவாச்சாரியார்கள் தாம் காரணம்.
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத திருக்கோயில் தன்னை
வாழ்விக்க வந்த மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! - என பாரதி சொன்னதையே சற்றே மாற்றி சொல்கிறேன்.
இறைவன் கைலாசநாதர் இறைவி பெரியநாயகி - என நினைக்கிறேன்.
இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தி, எதிரில் அழகிய நந்தி பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிர்ந்திருக்கும் அழகுதான் என்னே!! இறைவன் இறைவி இருவரின் சன்னதி வாயிலில் பெரிய சுதையாலான துவார பாலகர்கள் நின்றுள்ளனர். பழமையான கோஷ்ட மூர்த்திகளில் தக்ஷணமூர்த்தி தவிர மீதமுள்ளவை முகமண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இறைவனின் வலது புறத்தில் பிரம்மன் துர்க்கை லட்சுமிநாராயணரும் ஒரு நீண்ட மேடையில் உள்ளனர். , அம்பிகையின் இடது புற மேடையில் அர்த்தநாரீஸ்வரரும் உடன் ஒரு அம்பிகையும், மேற்கு நோக்கிய பெரிய சனிபகவானும், பைரவரும் மேடையொன்றின் மேல் உள்ளனர்.
மதில் சுவற்றில் கிழக்கு தெற்கு என இரு வாயில்கள் உள்ளன, தென்வாயில் அருகில் சிறிய ஆஞ்சநேயர் சிற்றாலயம் ஒன்றிலுள்ளார். விநாயகர் பாலசுப்ரமணியர் சண்டேசர் ஆகியோரும் தனி சிற்றாலயம் கொண்டு உள்ளனர். பாலசுப்ரமணியர் சன்னதி அருகில் ஒரு மேடையில் இரு சிறிய அளவிலான சிவலிங்கங்களும் நந்தி பலிபீடங்களும், ஒரு படி தாழ்ந்த நிலையில் மூன்று நாகர்களும் உள்ளனர். இவை அனைத்தும் கடும் வெயிலிலும் மழையிலும் இருப்பது வருத்தமளிக்கும் ஒரு நிகழ்வு. உடனடி தேவையாக ஒரு 10x10 தகர செட் அமைக்க உதவிட வேண்டும் அது நீங்களாக இருந்தால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.