அருள்மிகு வைத்தீசுவரர் திருக்கோயில், பூவிருந்தவல்லி.
இறைவன் :வைத்தீசுவரர்
இறைவி : தையல்நாயகி
தீர்த்தம் : வினை தீர்த்த குளம்
விருட்சம் : பனை மரம்
மலர்களின் இனிய நறுமணமும் அதில் தேனூறும் சுவையும் தேனீக்களை மட்டுமே கவர்ந்திழுப்பதில்லை. தேவாதி தேவர்களையும் ஈர்க்கும் வல்லமை மலர்களுக்கு உண்டு. இதன் காரணமாகவே தேவர்களும் முனிவர்களும் ஈசனை வழிபாடு செய்ய வழிமுறைகள் பல இருப்பினும் தூய மலர்களால் அர்ச்சனை செய்தும், மாலைகள் சூட்டியும், பூச்சொரிந்தும் ஐயனின் திருமேனி அழகில் தம் நிலை மறந்து வழிபட்டுப் பேருவகை அடைந்துள்ளனர். நித்ய வழிபாடுகளில் மலர்களின் முக்கியத்துவம் கருதியே ஈசன் அருள்பாலிக்கும் பல தலங்கள் பூவின் பெயரோடு சேர்ந்து பூந்தோட்டம், பூந்துறை, பூவனம், பூந்துருத்தி, புஷ்பவனம் மற்றும் பூவனூர் எனப் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வந்துள்ளது. இத்தலங்களைப் போன்றே பூவின் அடைமொழி கொண்ட "பூவிருந்தவல்லி" தலமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புராதனத் திருத்தலமாகும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தின் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கின்றது.
வரலாற்றில் பூவிருந்தவல்லி!
புராதன நூல்களில் பூவிருந்தவல்லி திருத்தலம் "பூந்தண்மலி" என்று வணங்கப்பட்டுள்ளது. (பூ-மலர்கள், தண்-குளிர்ந்த, மலி- நிறைந்துள்ள இடம்) குளிர்ந்த மலர்கள் நிறைந்துள்ள இடம் என்பது இதன் பொருளாகும்.
பாரதப்போரில் வெற்றி பெற்று விட்டாலும் தன் சொந்தங்களை இழந்து மன அமைதி இல்லாமல் தவித்த பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர் இத்தலத்தில் தவம் செய்து மன அமைதி பெற்றதாகவும், இதனால் இத்தலம் "தருமபுரி" என்று வணங்கப்பட்டதாகவும் இத்தல வரலாறு தெரிவிக்கின்றது. காஞ்சி பேரருளாளப் பெருமானுடன் பேசும் பேறு பெற்ற திருக்கச்சி நம்பிகள் இத்தலத்தில் நந்தவனம் அமைத்து வரதனுக்கு புட்ப கைங்கரியம் செய்து வந்ததால் இத்தலம் "புட்(ஷ்)ப மங்கலம்" புட்(ஷ் )பபுரி என்று வழங்கப்பட்டு தற்போது "பூவிருந்தவல்லி" என்று அழைக்கப்படுகின்றது. இத்தலத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருத்தலத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு புஷ்பவல்லி த்தாயார் மல்லிகை மலரிலிருந்து தோன்றியதால் பூவிருந்தவல்லி என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் இத்தல வரலாற்றின் மூலம் அறிய முடிகின்றது.
இத்தலத்தின் புராதனக் கல்வெட்டுகளில் "பூந்தண்மலி" என்ற பெயரே காணப்படுகின்றது. "புலியூர்க்கோட்டத்து பூந்தண்மலி" என்று முதலாம் பராந்தகன் காலக் (கி.பி.907-954) கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் (தர்கா) சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோல்கொண்டா சுல்தானால் கட்டப்பட்டது ஆகும். இம்மசூதியின் தரையில் (அடித்தளம் அமைந்துள்ள இடம்) உள்ள கற்களில் கீழ்க்கண்ட வாசகம் உள்ள கல்வெட்டு காணப்படுகின்றது.
"புலியூர்க் கோட்டத்துப்
பூந்தண் மலி
நெடுஞ்செழிய
விண்ணகர்,"
இதில் விண்ணகர் என்பது இங்குள்ள பெருமாள் கோயிலைக் குறிப்பதாகும். சங்க காலத்தினைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் நெடுஞ்செழியன் என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளதால் அக்காலத்தில் தொண்டை நாடு வரையில் பாண்டிய மன்னர் களின் ஆதிக்கம் பரவியிருந்ததை அறிந்து கொள்ள முடிகின்றது.
ஈசனின் அருள் பெற்ற தேவேந்திரன்!
தேவர்களின் தலைவனான தேவேந்திரனுக்கு ஒரு சமயம் தீர்க்க இயலாத நோய் ஏற்பட்டது. செய்வதறியாத திகைத்த இந்திரன் நாரத முனிவரின் ஆலோசனைப்படி, குளிர்ச்சி பொருந்திய இப்பகுதிக்கு வருகை தந்து ஒரு சிவலிங்கத்தை அமைத்து நீண்ட நாட்கள் தவமிருந்து வழிபாடுகள் செய்தான். இந்திரனின் தவத்தால் மகிழ்ந்த ஈசன், அவனுக்குக் காட்சி கொடுத்து நோய் தீர அருளினார். மேலும் தன் வினை போக்கியது மட்டும் அல்லாமல் இத்தலத்தில் வழிபடும் அடியவர்களின் உடல் நலிவுகளைத் தீர்த்து அவர்களின் துயர் போக்கவும் அருள வேண்டும் என வேண்டினான் தேவர்களின் தலைவன். "அப்படியே ஆகட்டும்" என்று திருவாய் மலர்ந்த ஈசன், அன்று முதல் "வினை தீர்த்தான்" என்ற திருநாமத்துடன் அன்பர்களால் பக்தியோடு வணங்கப்பட்டு வருகின்றார். இந்திரனால் சிவ வழிபாடு மேற்கொள்ள அமைக்கப்பட்ட புண்ணிய தீர்த்தம் " வினை தீர்த்த குளம்" என வழங்கப்படுகின்றது.
சதுரமான ஆவுடையார் மீது அமைந்த லிங்க மூர்த்தியின் பிரம்மாண்டமான திருக்காட்சி நம் நெஞ்சத்தில் நீங்காமல் நிறைகின்றது. கிரக தோஷங்கள் நீங்கவும், நோய் நொடிகளில் இருந்து விடுபடவும், வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருளவும் இத்தலத்தில் நித்ய வாசம் செய்து பக்தர்களின் குறைகளைக் களைவதில் சிறந்த வரப்பிரசாதியாக விளங்குகின் றார் அருள்மிகு வைத்தியநாதர். ஆண்டுதோறும் மாசி மாதம் 21, 22, 23 ,24 மற்றும் 25 தேதிகளில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை நீட்டி வைத்தியநாதரை வழிபடுவது அரிய திருக்காட்சி யாகும். கிழக்கு கோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி எம்பெருமான், முகப்பு மண்டபம், மகா மண்டபம் மற்றும் அர்த்தமண்டபத்தைக் கடந்து செம்பொற்சோதி மயமான ஈசனை சூரியன் வழிபாடு செய்யும் இந்த அரிய திருக்காட்சி யினைக் கண்டு வழிபட அந்த நாட்களில் மக்கள் கூட்டம் இத்தலத்தில் அலைமோதும்.
தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் கற்பனைகளை மீறிய பேரெழிலொடு அபய, வரத முத்திரையுடன் அஞ்சேல் என்று அருள்பாலிக்கும் அன்னை "தையல்நாயகியின்" தரிசனம் மனதுக்கு இதமளிக்கிறது. தன் பதியான பரமேஸ்வரனின் கருணைக்குச் சற்றும் குறையாமல் தன்னை வணங்கும் அடியவர்களின் குறைகளை தீர்த்தருள்கின்றாள் அம்பிகை. கர்ப்பிணிப் பெண்கள் இந்த அம்பிகையை மூன்று வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வணங்க மகப்பேறு எளிதாகும் என்பது மங்கையர் அனுபவத்தில் கண்டு வரும் உண்மையாகும். கருப்பை தொடர்பான நோய்களினால் அவதியுறும் பெண்கள் ஐந்து செவ்வாய் கிழமைகள் நெய் தீபம் ஏற்றி வழிபட குறைகள் நீங்கப் பெறும் என்ற நம்பிக்கையும் அன்பர்களிடையே உள்ளது.
இத்தலத்தில் அத்வைதம் அருளிய ஆதிசங்கரர் மூன்று சக்கரங்களை அமைத்து வழிபாடு செய்துள்ளார். அவை திருச்சக்கரம் (ஸ்ரீ சக்கரம்) சுப்ரமணிய சக்கரம், சண்முக சக்கரம் ஆகியனவாகும்.
அங்காரக தோஷ பரிகாரத்தலம்
(செவ்வாய் தோஷம்)
நவக்கிரகங்களில் அளவற்ற வீரியமும் சக்தியும் கொண்ட கிரகம் "அங்காரகன்" என்னும் செவ்வாயாகும். மரபணு, ரத்த அணுக்கள், ஆண் மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஒருவரின் நடத்தையை நிர்ணயிப்பதிலும் செவ்வாய் கிரகம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் காரணமாக திருமணத்தடை உள்ள அன்பர்கள் இத் திருக்கோயிலுக்கு வருகை தந்து அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியை வழிபட, அந்த ஜாதகருக்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கைத் துணை அமைய பெறுவது அனுபவத்தில் கண்டு வரும் அற்புத உண்மையாகும்.
ஆறாத ரணம், மூட்டு, கை, கால் வலி போன்ற நோய்களுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஜோதிட ரீதியாகக் குணமளிப்பவர் அங்காரகன். ஒருவரது ஜாதகத்தில் அங்காரகன் சுப கிரகமாகவும் சாதகமாகவும் அமைந்திருந்தால் பூமி, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை நியாயமான முறையில் அபரிதமாகப் பெறலாம் என்றும், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்றும் மிகப் புராதனமான ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. எனவே அங்காரக தோஷம் உள்ளவர்கள் பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமியை வழிபட எல்லா வளங்களையும் பெற்று மகிழலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீசுவரன் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு வடக்கு திசையில் இத்தலம்
அமைந்துள்ளதால், பூவிருந்தவல்லி திருக்கோயி லுக்கு "உத்தர வைத்தியலிங் கேசுவரர் கோயில்" என்ற பெயரும் வழங்கப்படுகின்றது.
கல்வெட்டுச் செய்திகள்
சோழப்பேரரசர் ராஜ ராஜ சோழ
ரின் 25 ஆம் ஆட்சியாண்டி னைச் சார்ந்த (கி.பி. 1010) கல்வெட்டில் இத்தலம் பூவிருந்தவல்லி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் பூவிருந்தவல்லி திருத்தலம் "உலகுய்யக் கொண்ட சோழபுரம்" என்றும் இத்தல இறைவன் "உலகுய்ய வந்த நாயனார்" என்றும் "உலகுய்ய வந்த பெருமான்" என்றும் வணங்கப்பட்டுள்ளதை கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.
"சோராஞ்சேரி என்னும் ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்றில் பூந்தமல்லி திருத்தலம் "உலகுய்யக் கொண்ட சோழபுரமான பூவிருந்தவல்லி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சந்திரகிரியை அரசாண்ட சாளுவ நரசிம்ம நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1509- இல் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள மற்றொரு கல்வெட்டில் பூவிருந்தவல்லியில் எழுந்தருளியிருக்கும் பரமனின் திருநாமம் "தீராத வினை தீர்த்த நாயனார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவியல் முன்னேற்றத்திற்கு நிகராக, மக்களின் உடல்நலன் தொடர்பான பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இத்தருணத்தில் நமக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து நம்மை வழிநடத்தக் கூடியவன் கருணைக் கடலான திருக்கயிலை நாதன் ஒருவனே. அப்பரம்பொருளே நோய் தீர்க்கும் மருத்துவராக சென்னைக்கு அருகில் பூவிருந்தவல்லியில் எழுந்தருளி அருள்பாலிப்பது நமக்கு கிடைத்த பெரும் பேறு ஆகும். மேலும் ராஜராஜ சோழ மன்னரின் கால திருக்கோயில் "வைத்தியநாதம்" என்ற தலப் பெயரோடு எழுந்தருளியிருப் பதால் நம்பிக்கையோடு இத்தலம் சென்று நாம் வழிபாடு செய்ய வேண்டும். அவன் பாதார விந்தங்களில் பக்தியோடு சரணடைந்து விட்டால் நம் நோய் நொடிகளைத் தீர்த்து வைப்பதோடு நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த தீய வினைகளும் நம்மை விட்டு நீங்க அருள்பாலிப்பான் அம்பிகை பாகன்.
சென்னையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூவிருந்தவல்லி நகரில் அரசு மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ளது இத்தலம்.