மாதா அன்னபூரணி தேவி வரலாறு!
ஒரு சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். அந்த உடலில் உயிர் தரித்திருக்க உணவு அவசியம். உணவில்லாமல் யாரும் வாழமுடியாது. உணவு என்னும் இரையைத் தேடுதலின் பொருட்டே உயிர்கள் இடம் பெயரத் தொடங்கின. உயிர்களின் அடிப்படையாக இருக்கும் உணவுக்கு ஆதார சக்தியாக விளங்குபவள் அன்னபூரணி தேவி. அங்கமெல்லாம் தங்க நகைகளால் ஜொலிக்க, நவரத்தின ஆசனத்தில் அமர்ந்து, ஒரு திருக்கரத்தில் அட்சயப் பாத்திரமும், மறு திருக்கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்திக் காட்சியளிக்கும் இந்த தேவி, உலக உயிர்களின் பசியைத் தீர்க்கும் தயாபரி. உயிர்களின் பசியைத் தீர்க்கும் அன்னபூரணி தேவிதான், மண்ணின் உரமாக, மண்வளம் சிறக்கச் செய்யும் மழையாக, மண்ணில் விதைக்கும் விதையாக, விதை முளைத்து வரும் பயிராக, பயிரின் தானியமாக, மலராக, காயாக, கனியாக என்று அனைத்துக்கும் ஆதார சக்தியாக இருக்கிறாள். அனைத்து உயிர்களையும் அன்புடன் பரிபாலிப்பவள் அன்னபூரணி.
அன்னபூரணியின் அவதாரம்
ஒருமுறை பிரம்மதேவருக்கு கர்வம் ஏற்பட்டது. சிவபெருமானைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் ஏற்பட்ட கர்வம் அது. பிரம்மதேவரின் கர்வம் சிவனாருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? அதை அடக்கத் திருவுள்ளம் கொண்டார். சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்துகொண்ட அன்னை பார்வதி, அதற்கேற்ப தானும் ஓர் அருளாடலை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டாள். அதன்படி கர்வத்துடன் கயிலைக்கு வந்த பிரம்மதேவரை, சிவபெருமான் என்று எண்ணி வணங்கினாள். அதைக் கண்டு பிரம்மதேவர் சிரித்துவிட்டார். அனைத்தும் தெரிந்த அம்பிகை தன்னை சிவனாராக நினைத்து வணங்கியது அவளுடைய லீலைகளில் ஒன்றுதான் என்பது கர்வம் கொண்டிருந்த பிரம்மதேவருக்குப் புரியவில்லை.
அடுத்து சிவனாரின் லீலை தொடங்கியது. கர்வத்துடன் கயிலைக்கு வந்த பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான். பிரம்மதேவரின் தலையைக் கொய்த சிவபெருமானுக்கு தோஷம் ஏற்பட்டுவிட்டது. தோஷத்தின் விளைவாக பிரம்மதேவரின் கபாலம் சிவனாரின் கரத்துடன் ஒட்டிக்கொண்டது. தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கவேண்டி, பல இடங்களில் பலரிடமும் பிட்சை பெற்று வந்தும்கூட, அவர் கையில் ஒட்டிக்கொண்ட கபாலம் நீங்கவில்லை.
இந்தத் தருணத்தில், பிரம்மதேவரை சிவபெருமான் என்று நினைத்து வணங்கிய அன்னை பார்வதி, தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொண்டு, பூவுலகில் காசி நகரத்தில் அன்னபூரணியாக அவதரித்தாள். பல இடங்களில் பிட்சை எடுத்து வந்த சிவனார் இறுதியாக காசி நகரத்தை அடைந்தார். மாதா அன்னபூரணியிடம் பிட்சை ஏற்றார். அன்னபூரணி பிட்சை இட்டதுதான் தாமதம் சிவனாரின் திருக்கரத்தில் இருந்த பிரம்ம கபாலம் அவர்கையை விட்டு நீங்கியது.
அன்னபூரணி சிவனாரின் பசி தீர்ப்பதற்காக மட்டுமா அவதரித்தாள்? ஆணவம் ஆபத்தானது. ஆனால், அதே நேரத்தில் ஆணவத்தைவிட ஆபத்தானது பசி என்பதை உணர்த்தவும், அம்பிகை அன்னபூரணியாக அவதரித்தாள். மேலும், பசிப் பிணியால் எந்த உயிரும் துன்புறக் கூடாது என்பதை உணர்த்தவும் காசி மாநகரில் அருளாட்சிபுரிகிறாள்.
காசி மாநகருக்கு அன்னபூரணி தேவி வந்த காரணம் என்று காசி தல புராணம் வேறொரு கதையும் கூறுகிறது.
ஒருமுறை ஈசனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆட்டத்தின் இறுதியில் ஈசன் வெற்றி பெற்றார். சக்தியோ, ஈசன் தவறாக ஆடி வெற்றி பெற்றார் என்று எண்ணி வாதம் புரிந்தாள். ஈசனோ `சகலமும் மாயை, அதில் இந்த ஆட்டமும் ஒரு சிறிய மாயை’ என்றும், `அதனால் வெற்றி தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றும் கூறினார்.
ஆனால், சக்தியோ `சகலமும் மாயை என்றால் உயிர்களின் இயக்கமும் மாயைதானா?' என்று வினவினார். ஈசனும், `ஆம். அப்படித்தான்’ என்று கூற, அதை மறுத்து காசி நகருக்குச் சென்று தவமியற்றத் தொடங்கினாள். அகிலத்துக்கும் படியளக்கும் பராசக்தி தனது கடமையைவிட்டு நீங்கியதால், உலக உயிர்கள் பசியால் வாடின. உலக உயிர்களின் துயரம் போக்கத் திருவுள்ளம் கொண்டு சிவபெருமான், தாமே பிட்சாடனராக காசிக்குச் சென்று தேவியிடம் பிட்சை ஏற்றுப் பசியாறினார். அப்போது, `உலகம் மாயை என்றாலும், அதில் உயிர்கள் வாழ உணவு எனும் சக்தியும் அவசியம். அந்த உணவை அருள்பவளும் சக்தியே' என்று ஒப்புக்கொண்டார். இதனால் மகிழ்ந்த அன்னபூரணி காசி நகரின் பிரதான தேவியாக அமர்ந்தாள்.
அங்கு அன்னக்கூடம் அமைத்து சகல உயிர்களின் பசியையும் நீக்கினாள் என்கிறது காசி புராணம்.
அன்னபூரணியை வணங்குபவர்களுக்கு, `அன்னதோஷம்’ என்னும் வறுமை அணுகவே அணுகாது. வடநாட்டில் காசியிலும், தென்னாட்டில் மேல்மலையனூரிலும் அன்னபூரணியின் அருளாட்சி நடைபெறுகிறது. தீபாவளி அன்று இந்த தேவிக்கு விசேஷ விழாவும், வைபோகமும் நாடெங்கும் நடைபெறும். அன்னபூரணி சகஸ்ரநாமம், அன்னபூரணி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம், ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்... போன்ற துதிப்பாடல்களைப் பாராயணம் செய்பவர்களின் இல்லங்களில் அன்னத்துக்குக் குறைவே இருக்காது என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. சகலருக்கும் பசியை நீக்கிய பிறகே இந்த அன்னை தனது பசியாறுவாள் என்றும் கூறப்படுகிறது.
வயிற்றுப் பசியை மட்டுமல்ல ஞானப் பசியையும் போக்க வல்லவள் மாதா அன்னபூரணி. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தில் பால் அன்னம் கொண்டு உலக உயிர்களின் பசிப் பிணி போக்கும் அன்னை அன்னபூரணியின் பிரியமும் அருளும் நமக்கு நாளும் கிடைக்கவேண்டுமெனில், அன்னதானம் செய்வது ஒன்றே சிறந்த வழி. ஆம், `உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்று சங்க இலக்கியம் சொல்வதைப்போல, உணவளித்தவர் அந்த உயிரைக் காத்தவர் என்றே போற்றப்படுவார். எனவே, சக உயிர்களை நேசித்து உணவளிப்பவர்கள் வெகு நிச்சயமாக அன்னபூரணியின் அருளைப் பெறுவார்கள் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.
பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானத்தின் மகிமை
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்".
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை.
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.
அன்னதானத்தால் ப்ராணனையும், ப்ராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் ச்ரத்தையையும், ச்ரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும், ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்கு சமமாகும்.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பு௬ம் தேஹி ச பார்வதீ
கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்து தனத்திற்கே பெயர் பெற்றவன்.
அவன் இறந்து சொர்க்கம் சென்றபொழுது, கர்ணனுக்கு அங்கு அடங்காப்பசி ஏற்பட்டது.
அதற்கான காரணம் குறித்து சொர்க்கலோகத்தின் தலைவனிடம் கேட்டான்.
அதற்கு சொர்க்கலோகத்தின் தலைவனோ, கர்ணா நீ பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் பொன்னும், பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாக கொடுத்து புகழ் பெற்றவன்.
ஆனால் வாழ்நாளில் யாருக்கும் நீ அன்னதானம் செய்யவில்லை, தனத்திற்கெல்லாம் தலையாய தானமான அன்னதானம் செய்யாததால் தான் உனக்கு இந்த அடங்காப்பசி உண்டாயிருக்கிறது என்றார்.
இந்த புண்ணிய பூமியில் ஆதரவற்றோருக்கு அன்னமளிப்பவன் மாபெரும் செல்வந்தராக வாழ்வான். தானம் செய்வதற்கு பணம் முக்கியமே அல்ல.
நல்ல மனம்தான் வேண்டும். சிலர் தானம் செய்வது எள்முனை அளவு கூட வெளியில் தெரியாது. மன நிறைவுக்காக ஏழை-- எளியவர்களை, ஆதரவற்றோர்களை தேடி, தேடி போய் உதவி செய்து கொண்டே இருப்பார்கள்.
முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள், ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கு மகிழ்ச்சியையும், புண்ணியத்தையும் தரும்.
ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று அன்னதானம் செய்து பாருங்கள், அவர்கள் முகம் கோடி சூரியனை கண்டது போல பிரகாசிக்கும். அந்த மகிழ்ச்சி தரும் புண்ணியத்துக்கும், திருப்திக்கும் அளவே இல்லை.
எனவே அளவற்ற புண்ணியமும், ஆனந்தமும் தரும் அன்னதானம் செய்து நன்மையடையுங்கள்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.
அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.
இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.
எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான்.
மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.
குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார்.
"என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.
கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது.
என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.
அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது.
என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா.
ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.
குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான்.
'ராஜா... நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்.
மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான்.
இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார்.
வா... இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார்.
'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.
குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார்.
சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை.
இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க.
"நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா.
இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான்.
ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்.
கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்.
கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.
நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்.
நல்லதே நடக்கும்.