வைகுண்ட ஏகாதசி பிறந்த வரலாறு!

vaikunda-egadasi-varalaru
வைகுண்ட ஏகாதசி பிறந்த வரலாறு!

ஒரு சமயம் முரண் என்ற அசுரன், பல ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து, இறைவனிடம் இருந்து பல அரிய வரங்களை பெற்றுக்கொண்டான். அதனால் மிகுந்த பலம் பெற்ற அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தான். இதனால் கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். எப்படியாவது முரணை அழித்து, தங்களைக் காத்தருள வேண்டும் என்று வேண்டினர்.

மகாவிஷ்ணுவும் அனைவரையும் காக்கும் பொருட்டு அரக்கனை அழிப்பதாக உறுதி அளித்தார். அதன்படி, அசுரனான முரணுடன் மகாவிஷ்ணு போரிட்டார் . பல ஆண்டுகளாக கடுமையாக போரிட்டும் மகாவிஷ்ணுவால் முரணைக் கொல்ல முடியவில்லை. காரணம், பல வரங்களை பெற்றிருந்த முரண், 'தனக்கு பெண்ணால் மட்டும் தான் மரணம் நிகழ வேண்டும்' என்ற வரத்தையும் கொண்டிருந்தான்.

இதை அறிந்த மகாவிஷ்ணு, இனியும் போர் புரிந்து பயனில்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார். விஷ்ணு இருக்கும் இடத்தை அறிந்து, அவரை கொல்ல குகையை நோக்கி வந்தான் முரண். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு சக்தி தோன்றி, அது ஒரு அழகான பெண்ணாக மாறியது.

அந்த பெண் முரணுடன் போரிட்டு அவனைக் கொன்றாள். இதையடுத்து, அசுரனை அழித்த அந்த பெண்ணுக்கு 'ஏகாதசி' என்று மகாவிஷ்ணு பெயர் சூட்டினார். மேலும் இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வரமளித்தார். அதன்படியே அந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சொர்க்க வாசல்....
ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவருக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை ஒடுக்க நினைத்தார் மகாவிஷ்ணு. பிரம்ம தேவரின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அதன்படி ஊழிக்காலம் தொடங்கியதும், பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவின் தொப்பிள் கொடியில் இருந்த தாமரையில் அடங்கினார். அப்பொழுது, மகாவிஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என இரண்டு அசுரர்கள் தோன்றினர்.

இருவரும் கடும் தவம் புரிந்து இறைவனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றுக்கொண்டனர். பிரளயக் காலம் முடிந்து, மீண்டும் உலக உயிர்களை தோன்றுவிக்க பிரம்மன் வந்தார். அப்போது பிரம்மா விடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை அசுரர்களான மதுவும், கைடபரும் திருடி சென்றனர். இதையடுத்து, பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார்.

மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார். பின்னர் இரண்டு அசுரர்களும் தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினர். இதனால் மிகவும் வருந்திய தேவர்கள், உலக உயிர்களை காத்து அசுரர்களை அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். இதையடுத்து மகாவிஷ்ணு, மது, கைடபருடன் போரிட்டு அவர்களை அழித்தார்.

மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியவர்கள் என்பதால், இருவரும் வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெற்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் வைகுண்டம் சென்றது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி தினத்தில் ஆகும். வைகுண்டம் சென்ற அவர்கள் மகாவிஷ்ணுவிடம், "உங்களிடம் இருந்து உருவான எங்களுக்கு உங்கள் கருணையால் இந்த பாக்கியம் கிடைத்தது. இதைப் போன்றே, மக்கள் பலரும் இந்த பலனைப் பெற அருள வேண்டும்" என வேண்டினர்.

அதோடு "மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் வழியாக வந்து வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும்" என்றும் கேட்டனர். அதன்படியே, பகவானும் அருள் வழங்கினார். இதன்பொருட்டே பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

ஓம் நமோ நாராயணாய நமக