கரூர் வழக்கில் கணக்கு தீர்ப்போம்னு பேசிய அமைச்சருக்கு சிபிஐ கண்டனம்!.
கடம்பூர் சிவன் கோயில், அரியலூர் மாவட்டம்
V.கைகாட்டியில் இருந்து தென் கிழக்கில் 17. கிமி சென்றால் விக்கிரமங்கலம் உள்ளது; இதன் தெற்கில் 5 கிமி தூரத்தில் மருதையாற்றின் வடகரையில் கடம்பூர் கிராமம் உள்ளது. சில கிமி தொலைவில் கொள்ளிடத்தின் வடகரை உள்ளது. மருத நிலங்களை வளம் செய்யும் ஆறாக உள்ளதால் மருதையாறு என பெயர்.
அரியலூர் மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்கள் மரங்களின் பெயராலேயே அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன, அதற்க்கு இந்த ஊரும் விலக்கல்ல. கடம்ப மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் (கடம்பு+ஊர்) கடம்பூர் என பெயர்.
இங்கு சிறிய சிவன் கோயில் ஒன்று பல காலமாக பழுதடைந்த நிலையில் இருந்து சில ஆண்டுகளின் முன்னம் குடமுழுக்கு கண்டுள்ளது. கிழக்கு நோக்கியதிருக்கோயில் கோயிலை ஒட்டி ஒரு சிறிய ஏரி ஒன்றும் உள்ளது.
இறைவன் சந்திரசேகரர்; கிழக்கு நோக்கிய கருவறையும் அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளனர். இறைவன் முன்னர் புதிய கான்கிரீட் முகப்பு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதன் வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. அதே போல் அம்பிகை எதிரிலும் நந்தி மண்டபம் உள்ளது.
இறைவன் சன்னதி வாயிலில் சிறிய விநாயகர் உள்ளார். கருவறை கோட்டத்தில் தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். பிரகார வலம் வரும்போது விநாயகர் முருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசரும் தனி சன்னதி கொண்டுள்ளார். நவகிரகங்கள் வடகிழக்கில் தனி மண்டபத்தில் உள்ளன.
இந்து சமய அறநிலைய துறையின் இணையதள பக்கத்தில் இவ்வூர் இறைவன் பெயர் கைலாசநாதர் என உள்ளது.