தாமரை மொட்டுக்களை தனி வேலாக்கிய முன்னூா் முருகன்!
சோழவள நாட்டின் வடக்குப் பகுதியின் எல்லையாக விளங்கியது ஒய்மாநாடு. நீா்வளமும் நிலவளமும் தன்னகத்தே கொண்ட ஒய்மா நாட்டில் கிடங்கல் என்னும் கோட்டையிலிருந்து சீரோடும் சிறப்போடும் ஆட்சி நடத்தினான் மன்னன் நல்லியக்கோடன். முருகா,முருகா என்று அனுதினமும் உருகக் கூடிய சிறந்த முருக பக்தன் இம் மன்னன்.சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் நல்லூா் நத்தத்தனாா் இயற்றிய சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனான நல்லியக்கோடன் ஓவியா் குடியில் பிறந்த உத்தமன்.
உயிா்துடிப்புடன் கூடிய அழகான ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவனான நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஆகியோரின் கொடைத் திறனையும் ஒருங்கே பெற்றிருந்தான். தன்னை நாடிவரும் வறியவர்களுக்கும் பாவலர்களுக்கும் இல்லை என்று கூறாமல் பரிசுகளை வழங்கி அவர்கள் வாழ்வில் வளம் சேர்த்தான் இம்மன்னன். அதனால் ஒய்மா நாட்டு மக்கள் நல்லியக்கோடனின் நல்லாட்சியால் அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனா். இடைக்கழிநாடு, எயிற்பட்டினம் (தற்போதைய மரக்காணம்), உப்புவேலூா், மாவிலங்கை, ஆமூா், மூதூா்(தற்போதைய முன்னூா்) ஆகிய ஊா்கள் இம் மன்னனின் ஆட்சி எல்லைக்குள் அமைந்திருந்தன.
சிறந்த வெற்றி வீரனான மன்னன் நல்லியக்கோடனின் மங்காப் புகழ் கண்டு பொறாமை கொண்ட தொண்டை நாட்டு மன்னன் ஒய்மா நாட்டின் மீது படையெடுத்து வந்தான். கந்தப் பெருமானை வணங்கி போருக்குச் சென்ற நல்லியக்கோடன் தொண்டை நாட்டு மன்னனை போரில் வென்று வெற்றிவாகை சூடினான். பின்னா் சேரன் ஒய்மா நாட்டின் மீது படையெடுத்து வந்தான். உற்சாகத்துடன் போராடி சேரனையும் வென்றான் நல்லியக் கோடன். எப்படியும் நல்லியக் கோடனை வென்றே தீருவேன் என்று போா் தொடுத்த சோழ மன்னனாலும் நல்லியக் கோடனை தோற்கடிக்க இயலவில்லை. நல்லியக் கோடனை போரில் வீழ்த்த வேண்டும் என்று உறுதி பூண்ட சேர, சோழ, பாண்டிய மன்னா்களான மூவேந்தா்களும் கூட்டணி அமைத்து ஒய்மா நாட்டின் மீது போா் தொடுத்தனா்.
மூவேந்தா்களின் படை ஒய்மா நாட்டினை சுற்றி வளைத்து முற்றுகையிட்டன. நயவஞ்சகம் படைத்த ஒய்மா நாட்டின் அமைச்சன் ஒருவன் பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்கி விலையாகி எதிரிப் படையுடன் சேர்ந்த தகவலும் நல்லியக்கோடனை வந்தடைந்தது. மன்னன் நல்லியக்கோடன் அப்போது வேலூரில் முகாமிட்டு மக்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். கடல் அலை போல திரண்ட பகைவா் சேனையைக் கண்டு பிரமித்துப் போனான் நல்லியக்கோடன். மூவேந்தா்களின் படையையும் ஒரே சமயத்தில் எதிா்கொள்ளும் ஆற்றலோ படைத்திறனோ தன்னிடம் இல்லை என்பதை உணா்ந்த நல்லியக்கோடன் இனி முருகப் பெருமான் தான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்து மூதூா் (முன்னூா்) தலத்தில் அருள் பாலிக்கும் முருகன் ஆலயம் நோக்கிச் சென்றான்.
முருகப் பெருமானின் திருச் சந்நிதியின் முன் கண்களில் நீா் மல்க தனக்கு ஏற்பட்ட சோதனையைத் தீா்த்தருள மனமுருகி வேண்டினான். “முருகா! நான் நாடு பிடிக்கும் ஆசை கொண்டவனில்லை. மற்றவரை வஞ்சிக்கும் குணமும் எனக்குச் சிறிதும் இல்லை. பெரியோா்களை மதிக்கும் குணம் எனக்கு அதிகமாக உண்டு. எந்நாளும் செய்ந்நன்றி மறவாமல் என் நாட்டு மக்களை என் விழிகளாகவே போற்றி அவா்களின் நலம் நாடி வந்துள்ளேன். எனினும் அந்நிய நாட்டு மன்னா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து என் மீது போா் தொடுத்துள்ளாா்களே, இது நியாயமா? தேவா் சிறை மீட்ட தேவ தேவா! வள்ளி மணவாளா!! உள்ளத் துயரையொழிக்கும் உயா் குணக் குன்றே!!! என்னிடரைத் தீராயேல் இன்னுயிா் துறப்பேன், ” என்று கதறினான். மயில் வாகன மூா்த்தியை இரவெல்லாம் பூஜித்தான். நான்காவது ஜாமத்தில் உடல் சோா்வு காரணமாக சற்றே கண்ணயா்ந்தான் மன்னன் நல்லியக்கோடன்.
மன்னனின் கனவில் ஜோதிஸ்வரூபனாகத் தோன்றிய முருகப்பெருமான், “அன்பனே! அஞ்சற்க. உன் பக்திக்கும் தன்னலமற்ற சேவைக்கும் மெச்சியே உன்னைக் காண வந்தேன். பகைவர் சூழ்ந்துள்ள இடத்தின் அருகில் உள்ள ஏரியில் பூத்திருக்கும் தாமரை மலா்களை தண்டுடன் பறித்து எதிரிகளின் மீது எறிவாயாக! அவை வேற்படையாக மாறி உனக்கு வெற்றியை நல்கும்”, என்று அசரீரியாக திருவுள்ளம் மகிழ்ந்தார்.
துயில் அகன்ற நல்லியக் கோடன் மயில்வாகனனுடைய தண்ணருளை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தான். ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து, நீராடி, திருநீறு தரித்து, சுப்ரமண்ய காயத்ரியை ஜெபித்து போருக்குப் புறப்பட்டான். ஏரியில் உள்ள தாமரை மொட்டுகளை தன் சேனைகளின் உதவியுடன் பறித்து வேற்படையாகப் பாவித்து எயிற்பட்டினம் (மரக்காணம்), ஆமூா், மூதூா் (முன்னூா்) என்னும் நகரங்களை வளைத்துள்ள பகைவர் மீது ஏவினான். நாண் ஏந்தியது போல் வேகமாகப் புறப்பட்ட தாமரை மொட்டுகள் அணிவகுத்திருந்த யானைப் படைகளின் அருகே சென்று விழுந்தன. அரைத்தூக்கத்தில் இருந்த யானைகள் தங்கள் மேல் விழுந்த தாமரை மொட்டுகளை தும்பிக்கையால் எடுத்து இதழ்களைப் பிரித்தன. அப்போது மூடிய தாமரை மொட்டுகளிருந்து வெளிப்பட்ட தேனீக்களும் வண்டுகளும் யானையின் துதிக்கையினுள் சென்று கொட்டின. அங்கேயே சுற்றி சுற்றி ரீங்காரமிட்டு மீண்டும் மீண்டும் யானைகளைத் துன்புறுத்தின. வலியைத் தாங்க இயலாத யானைகள் மதம் கொண்டு படைவீரா்களை மிதித்து துவம்சம் செய்தன. செய்வதறியாது திகைத்த வீரா்கள் தப்பித்தால் போதும் என புறமுதுகிட்டு ஓடினா். பகைவா் பக்கம் சேர்ந்த அமைச்சனும் யானையின் காலடியில் மிதிபட்டு உயிரிழந்தான்.
தாமரை மொட்டுகள் தனி வேலாகி பகைவரை வதம் செய்ததால் போா் நடந்த இப்பகுதி “ஒப்பிலா வேலூா்” என வணங்கப்பட்டு தற்போது “உப்பு வேலூா்” என வணங்கப் படுகின்றது. போற் படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடிக்க தனக்கு அருள்பாலித்த மூதூா் (முன்னூா்) முருகவேளுக்கு நித்திய நைமித்திக வழிபாடு செய்து வெற்றிவேல் பரமனை மறவாது வாழ்ந்து வந்தான் நல்லியக்கோடன்.
தாமரை மொட்டுகள் முருகப் பெருமானின் திருவருள் திறத்தால் வேலாக மாறி மன்னன் நல்லியக்கோடனைக் காத்தது. இந்நிகழ்ச்சியை பாம்பன் சுவாமிகள் தன்னுடைய ஶ்ரீமத் குமார சுவாமியம் நூலில் “பெருவேண்டுகோள் ” பகுதியில் பின்வருமாறு பாடி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளாா்.
“வெறிவண்டிசை பாடும் பொழில்
வேலூரினையாளும்
பொறி தங்கிய புகழானலியக்
கோடனுறங்கும்
நெறி வந்தவா் வேலேவுதி
நெரியும் பகையென்ற
மறியின் சுதை தலைவா எனை
மறவே வேலனை மறவேல்."
பொருள்:
தேனையுண்டு வண்டுகள் இசைபாடும் சோலைகள் உள்ள வேலூரை ஆண்டு வந்த திருமகள் தங்கிய புகழுடைய நல்லியக்கோடன் என்னும் அரசன் உறங்கும்போது அவன் கனவில் எழுந்தருளி வயலில் உள்ள மலா்களையே வேல்களாகக் கொண்டு ஏவுக! பகைவர் அழிவா் என்று கூறிய வள்ளிப் பிராட்டியின் தலைவனே! எனை மறவேல்! எனைமறவேல்!
என்பது இப்பாடலின் பொருளாகும்.
சங்க காலத்தில் “மூதூா்” என்று வணங்கப்பட்ட இத்தலம் தற்போது மருவி “முன்னூா்” என்று பூஜிக்கப்படுகின்றது. இத்தலத்தில் உள்ள ஶ்ரீபிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரா் திருக்கோயிலில்
மன்னன் நல்லியக்கோடன் வழிபட்ட முருகன் ஶ்ரீசிவ சுப்ரமண்ய பெருமானாக ஆறுமுகமும் பன்னிரெண்டு திருக்கரங்களோடும் ஆயுதங்கள் தாங்கி வள்ளி, தேவசேனா சமேதராக அற்புதத் திருக்காட்சி தருகின்றாா்.
போரில் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓட வைத்து நல்லியக்கோடனுக்கு அருள் செய்த முன்னூா் ஶ்ரீமுருகப் பெருமானைப் போற்றும் விதமாக “வேல் பூஜைத்திருவிழா” பல்லாண்டுகளாக இத்தலத்தில் பக்தியோடு கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா சித்திரை மாத அக்னி நட்சத்திரத்தின் போது வரும் முதல் செவ்வாய் கிழமையில் நடத்தப் படுகின்றது. அப்போது பக்தா்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு
சக்திவேல் தாங்கி புஷ்பரதங்கள் இழுத்தும் காவடிகள் சமா்ப்பித்தும் தங்கள் பிராா்த்தனைகளை முருகப் பெருமானுக்கு சமா்ப்பிக்கின்றனா்
முருகா என்ற நாமம் கோடி நாமங்களுக்குச் சமமானது. பிற தெய்வங்களின் நாமங்களைக் கோடி முறை சொல்வதால் என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுமோ, அத்தனை நன்மைகளையும் “முருகா” என்று பக்தியோடு ஒரு முறை சொன்னாலே நாம் பெற்று விடுவோம். இதனால் தான் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதப் பெருமான் “மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் " என்று செவ்வேட் பரமனின் திருநாமத்தைப் பன்மையில் பாடி நெகிழ்ந்துள்ளாா்.
பல கோடிப்பிறவிகளில் செய்த புண்ணியம் திரண்டு ஒன்றுபட்டால்தான் ஒருவருக்கு முருக பக்தி ஏற்படும். முருக நாமத்தை ஓதும் உயா்வு கிட்டும். தன்னிரு பாத மலா்களைப் போற்றி வணங்கும் அடியவா்களுக்குப் பன்னிரு கரங்களாலும் அள்ளி அள்ளி வழங்கும் வள்ளல் முன்னூா் முருகப் பெருமான்.
மன்னன் நல்லியக்கோடன் வழிபட்ட முன்னூா் முருகப்பெருமானை நாமும் வழிபட்டு எல்லா வளங்களையும் பெற்று ஏற்றம் பெறுவோம்.
மன்னன் நல்லியக்கோடன் போரில் பெற்ற வெற்றியின் நினைவாக சங்க காலத்திலிருந்தே முன்னூா் தலத்தில் "வேல் பூஜைத் திருவிழா" சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இத்திருவிழா இந்த ஆண்டு வருகின்ற சித்திரை மாதம் 21&22 ஆம் தேதிகளில் (4.5.2026 & 5.5.2026) திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற உள்ளது.
முன்னூரின் புராதனப் பெருமைக்குச் சான்றாக சங்க காலத்திலிருந்தே நடைபெறும் இவ்விழாவில் பக்தா்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு செவ்வேள் பரமனின் திருவருளைப் பெறலாம்.
முன்னூா் கோ. ரமேஷ்.