சோமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
சென்னையின் நவக்கிரகக் கோயில்களில் ஒன்றாகும்.
இறைவன் : சோமநாதீஸ்வரர்
இறைவி : காமாட்சியம்மன்
தலவிருட்சம் : சரக்கொன்றை
ஊர் : சோமங்கலம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
இக்கோயிலானது சென்னை நவகிரக தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகும் .
ஸ்ரீ சந்திர பகவான் இங்கு சிவனை வழிபட்டதால், இங்குள்ள சிவன் சோமநாதேஸ்வரர் என்றும், இத்தலம் சோமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த கோவில் சந்திர பகவானுடன் தொடர்புடைய தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார ஸ்தலமாகும்.
தேவார வாய்ப்பு தலமாகவும் விளங்குகிறது .அப்பர் தன் வாக்கில் இக்கோயிலை பற்றி கூறியுள்ளார் . இக்கோயிலானது சோழர்காலத்தை சேர்ந்ததாகும் .இவ்வூருக்கு சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உண்டு . பிருஷ்ட அமைப்பில் உள்ள இக்கோயிலானது 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது .
சோமன் என்ற பெயருடைய சந்திரன் தட்சனின் சாபத்தால் 18 கலைகளையும் இழந்து க்ஷயரோகமுற்று இந்த தலத்தில் உள்ள இறைவனை நோக்கி பெரும் தவம் புரிந்து சிவபெருமான் அருளால் தட்சனின் சாபம் நீங்கி முழு சந்திரனாக உருப்பெற்றான்.
தொண்டை நாட்டை ஆண்டு வந்த சோமகாந்தன் மன்னன் தன் நாட்டில் 108 பிருஷ்ட சிவாலயம் அமைத்து திருப்பணி செய்துவந்தான் , அவற்றில் ஒன்றான இத்தலத்தில் திருப்பணிகள் நடைபெறும்போது வேற்றுநாட்டு அரசன் போர்புரிய வரும்போது படைவீரர்கள் ஆலைய பணியில் இருந்ததினால் அரசனால் எதிர்த்து போர் புரிய முடியாமல் சோமநாத ஈஸ்வரரிடம் மன வேதனையுற்று வேண்டும் போது இறைவன் நந்திதேவரை அழைத்து அப்படைகளை விரட்டி மேலும் எந்த இடையூறும் வராதிருக்க ‘கிழக்கு நோக்கியே இருப்பாயாக ‘ என்று ஆணையிட்டதால் நந்தி கிழக்கு நோக்கி திரும்பி, எதிரியின் முழுப் படைகளையும் தன் பலமான மூச்சுக் காற்றால் அடித்துச் சென்றது.
நந்திதேவர் இறைவனை நோக்காது , கிழக்கு நோக்கி இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.*
இறைவன் கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் பானம் சற்று உயரமாக காட்சிதருகிறார் . சதுர்புஜங்களுடன் கருணை முகத்தோடு தாயார் காட்சி தருகிறார் . சந்திரன் தனி சன்னதியில் அழகே உருவாக காட்சிதருகிறார் . அவர் கையில் அல்லிமலருடன் நின்ற கிழத்தில் உள்ளார்.
இத்தலத்தில் உள்ள நடராஜருக்கு சதுர தாண்டவ நடராஜர் என்று பெயர் .
சந்திரன் தன் சாபம் நீங்க தீர்த்த குளம் ஒன்றை அமைத்தான்.வினைதீர்த்தான் குளம் என்ற பெயரில் இக்கோயிலின் மேற்கில் உள்ளது . இப்போது தீர்த்தாங்குளம் என்று அழைக்கப்படுகிறது .
இவ்வாலய இறைவனையும் , சந்திரனையும் சோமவாரம் , பௌர்ணமி ஆகிய தினங்களில் வழிபடுவதினால் சந்திரனால் ஏற்படும் அனைத்து வகையான தோஷங்களும் நிவர்த்தியாகும் .
சந்திரன் மற்றும் ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற நீர் தொடர்பான பிரச்சனைகள், மற்றும் மனநோய் முதலிய பிரச்சனைகள் நீங்க சோமநாதேஸ்வரரையும் சந்திரனையும் வழிபடலாம். மேலும், சோமநாதேஸ்வரர் மக்களுக்கு உரிய நேரத்தில் திருமணம், சந்ததி, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கை.
கஜபிரிஷ்டா வடிவில் கட்டப்பட்டுள்ளது, இது சோழ கட்டிடக்கலையில் பிரபலமானது.
சென்னை தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா வழியாக செல்லலாம் . குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியில் சென்றால் இக்கோயிலை அடையலாம் .
பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் செல்வதே சிறந்த மாற்று வழி. குன்றத்தூர் சந்திப்பை அடைந்ததும், இடதுபுறமாக (தெற்கு நோக்கி) சோமங்கலத்தை அடைய வேண்டும். குன்றத்தூரில் இருந்து சோமங்கலம் சுமார் 10 கி.மீ. மேலும் போரூரில் இருந்து நேரடியாக சோமங்கலத்திற்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.