பொட்டவெளி சிவன் கோயில்

pottaveli-sivan-temple
பொட்டவெளி சிவன் கோயில்

அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம், பொட்டவெளி சிவன் கோயில்

செந்துறையில் இருந்து 3 கிமி தூரத்தில் உள்ளது இந்த பொட்டல்வெளி ஊரின், இரு புறமும் இரு சிறு ஏரிகள் உள்ளன. அதனால் ஊரே பசுமையானதொரு காட்சியாக உள்ளது. அதனால் பொட்டல் என்றால் பாழ்நிலம் என்ற அர்த்தம் இங்கே எடுத்துக்கொள்ள இயலாது. பொட்டல் என்றால் அடக்கம் செய்யப்படும் இடம் எனும் பொருள் ஒன்றும் இருப்பதால். அரசன் அல்லது தளபதிகள் யாரேனும் அடக்கம் செய்யப்பட்டார்களா என அறியமுடியவில்லை.

இவ்வூரில் விநாயகர் கோயில் சிவன்கோயில், பெருமாள் ஆலயம் மாரியம்மன் ஆலயம் தையல்நாயகி பெரியநாயகி முருகன் என பல கோயில்கள் உள்ளன.

பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளது சிவன்கோயில்.

கிழக்கு நோக்கியது, பிரதான வாயில் தெற்கில் உள்ள சாலையை நோக்கியபடி உள்ளது அதனை ஒட்டி விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.

நுழைவாயில் மேல் இறைவன் இறைவி கயிலையில் அமர்ந்துள்ளனர் உடன் விஷ்ணு பிரம்மன் அகத்தியர் நந்தி நாரதர் இந்திரன் அமர்ந்திருக்கக் முருகன் மயில் மேல் கயிலையை சுற்றி வருகிறார், ரம்பையும் ஊர்வசியும் நாட்டியமாடுகின்றனர். இப்படி ஒரு சுதை வேலைப்பாடு நுழைவாயில் மேல் உள்ளது அற்புதமான காட்சியாக தோற்றமளிக்கிறது.

அதனை கடந்து உள்ளே சென்றால் பெரிய வளாகம் நடுவில் கருவறை, சுற்று முழுவதும் சிமென்ட் தளமிடப்பட்டு உள்ளது. கருங்கல் கொண்டு கருவறை எழுப்பப்பட்டு உள்ளது. கருவறை இடைநாழி முகப்பு மண்டபம் என உள்ளது. முகப்பு மண்டபத்தில் தெற்கு நோக்கிய வாயிலும் கிழக்கு நோக்கிய வாயிலும் உள்ளது. முகப்பு மண்டபத்தின் வெளியில் நந்தி மண்டபம் பலிபீடம் உள்ளது.

கோஷ்டங்கள் தாமரை தாங்கு தூண்களை பார்க்கும்போது , பிற்கால பாளையக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம்.என தோன்றுகிறது. கருவறை பின் பகுதியில் வணிகன் என்றும் திருப்பணி என்றும் கல்வெட்டு எழுத்துக்கள் உள்ளன. இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி அம்பிகையும் நடுத்தர அளவில் உள்ளார். தென்முகனின் கோஷ்டம் ஒரு முகப்பு மண்டபமாக இரு தூண்களுடன் முன்னிழுக்கப்பட்டு உள்ளது.

விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை என கோஷ்டங்கள் கொண்டுள்ளனர். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். விநாயகர் முருகன் இருவருக்கும் தனித்தனி சிற்றாலயங்கள் உள்ளன. விநாயகருடன் ஒரு பெரிய நாகர் சிலையும் உள்ளது. அதில் பின்னிய நாகங்களின் இடையில் லிங்கம்,காளிங்கநர்த்தன கிருஷ்ணனும், பிரம்மனும் உள்ளனர் .

முற்பிறவியில் செய்த பாவங்களால் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் இது போன்ற நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும்.

வடகிழக்கில் ஒரு கிணறு ஒன்றும் உள்ளது. முகப்பு மண்டபத்தின் உள்ளேயே பைரவர் சூரியன் வைக்கப்பட்டு உள்ளனர்.

இறைவன் சிதம்பரேஸ்வரர் இறைவி சிவகாமசுந்தரி

இறைவனுக்கு நேர் எதிரில் மண்டபத்துக்கு வெளியில் நந்தி சிறிய மண்டபத்தில் உள்ளார். முகப்பு மண்டபத்தில் இறைவன் சன்னதி வாயிலில் விநாயகர் முருகன் இருவரும் உள்ளனர்.

நன்கு பராமரிக்கப்படும் திருக்கோயில் பூஜைகளும் குறைவின்றி நடந்து வருகிறது கண்டு மகிழ்ச்சி. செந்துறை சாலையில் பயணிப்பவர்களுக்கு இக்கோயில் கூப்பிடு தூரம் தான். ஒருமுறை வந்து செல்லுங்கள்.

அப்படின்னா எவ்வளவு தூரம் என்பவர்களுக்காக .... வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி, இந்தக் கோலால் 500 X 6 = 3000 அடிகள். கிட்டத்தட்ட ஒரு கிமி தூரம் தான்.