சிவராத்திரி ஸ்பெஷல் - திருக்கோளக்குடி தலம்!

sivaratri-special-thirukkolakudi-temple
சிவராத்திரி ஸ்பெஷல் - திருக்கோளக்குடி தலம்!

ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த திருக்கோளக்குடி தலம்.

இந்த ஆலயம் கட்டும் பணி 8-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் பல கல்வெட்டுகள் மாறவர்மன் திருப்புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பதாக இருக்கிறது. எனவே திருக்கோளக்குடி ஆலயத்தின் திருப்பணிகள், 13-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி வேந்தன் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது.

மேலும் பூங்குன்ற நாட்டில் ‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ என்று 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே முழங்கிய கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டிக்கு வடக்கில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல பூங்குன்றநாடு, கோனாடு, கானாடு, கல்வாயில்நாடு என்னும் நான்கு நாடுகளுக்கும் நடுவில் அமைந்துள்ளது. அந்த நான்கு நாட்டாரும் வந்து வழிபடும் சிறப்பு பெற்ற ஆலயம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை ‘நானாட்டீசர்’ என்று தல புராணம் போற்றிப் புகழ்கிறது.

திருக்கோளக்குடி கிராமத்தின் மேற்கு எல்லையில் பெரியனவும், சிறியனவுமான கோளப்பாறைகளை சுமந்தபடி எழுந்து நிற்கிறது ஒரு குன்று. அதன் நடுவில் பெரியதொரு கோளக்குன்று அமைந்துள்ளது. அதில் தான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோளக்குடி மலைக்கோவில்.

இந்தக் குன்றின் வடக்கு பக்கத்தில் ‘உலக்கைக் குன்று’ என்ற பெயரிலும், தென்கிழக்கு பகுதியில் ‘பிச்சூழிப்பாறை’ என்ற குன்றும் காணப்படுகின்றன. இந்தக் குன்றின் பாறைக் கோளங்கள் எந்த தருணத்தில் கீழே உருண்டு விழுமோ? என்று காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த மலை மீது 4 ஆலயங்கள் இருக்கின்றன. அடிவாரம் ‘பொய்யாமொழீசர் ஆலயம்’, அதற்கு சற்று மேலே ‘சிவ தருமபுரீசர் ஆலயம்’, மேல் பகுதியில் ‘திருக்கோளபுரீசர் கோவில்’, அதற்கும் கொஞ்சம் மேலே ‘முருகப்பெருமான் ஆலயம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திருக்கோளக்குடி உள்ளது.
முன்காலத்தில் இந்தப் பகுதியை ‘சிவபுரம்’ என்றும், ‘திருக்கோளபுரம்’ என்றும், ‘கன்னிமாநகரம்’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.

ஓர் உருவும் இல்லாத இறைவனை, அகத்தியர், புலத்தியர் என்று இருபெரும் முனிவர்கள் பலா மர வடிவம் கொண்டு வழிபட்டது இத்தலத்தின் பெருமையாகும். இரண்டு முனிவர்களும் நான்கு யுகங் களாக மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆன்மா, சூரியன், சந்திரர் என எட்டு வடிவங்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள்.

இந்தத் தலத்தில் அமர்ந்து உணவு உண்பது, வேள்வி செய்வதற்கு ஒப்பானதாகும். இங்கு உறக்கம் கொள்வது, சிவ யோகம் செய்வது சமமானது. அதே கோவிலை வலம் வருவது திருவிழா நடத்தியதற்கு சமமானதாகும்.

கொலை செய்தவர், பிறர் பொருளைக் களவு செய்தவர், பசுவை கொன்றவர், வேதத்தை பழித்தவர், கற்புடைய பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள், இத்தல இறைவனை வழிபட்டால், அவர்கள் திருந்தி வாழும்படியாக அவர்களை இறைவன் ஆட்கொள்வார் என்று கூறுகிறார்கள்.
இத்தல இறைவனை வழிபடுபவர்களை எந்த தீங்கான செயலிலும் ஈடுபடாதவாறு இறைவன் தடுத்தாட் கொள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஆலயத்தின் அடிவாரத்தில் பொய்யாமொழீசர் ஆலயம் இருக்கிறது. இங்கு கருவறையில் லிங்கத் திருமேனியில் இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அன்னை மரகதவல்லியம்மை நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தின் திருப்படிக்கு முன்பாக ‘திருப்பாறை’ என்ற பெயரில் ஒரு சிறு பாறை நிலத்திற்குள் இருந்து, சுமார் 10 சதுர அடி பரப்பளவில், ஓர் அங்குல உயரத்திற்கு வெளிப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்தப் பாறை இறைசக்தி கொண்டது என்றும், பக்தர்களுக்கு முறையீடுகளுக்கு நீதி வழங்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள். பொய்யாமொழீசரின் திருவருள் இந்தப் பாறையில் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 60 படிகளைக் கடந்த நிலையில் காணப்படுகிறது, சிவதருமபுரீசர் திருக்கோவில். இந்த ஆலயம் இறைவனின் பூமி, அந்தரம், சொர்க்கம் ஆகிய நிலைகளில் நடுநிலையான அந்தரம் என்று சொல்லப்படுகிறது.

இத்தல மூர்த்தியான சிவதருமபுரீசர் லிங்க வடிவத்தில் உள்ளார். இவர் சுயம்புமூர்த்தியாவார். இந்த இறைவனுக்கு பின்புறத்தில் ‘தவளை படாதச்சுனை’ என்ற பெயரில் தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் அருகே உட்சரிவான பாறையின் நெற்றிப்பரப்பில் மிகப்பெரிய தேன் கூடு வடிவில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி மலைமூர்த்தி விநாயகர் உள்ளார். இவருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானது ‘வீரகத்தி விநாயகர்’ என்பதாகும்.

சிவாய நம சிவமே ஜெயம் சிவமே தவம் . எங்கும் சிவ நாமம்‌ ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி*