அருள்மிகு சடராய ஈசுவரர் திருக்கோயில், கரிமணல்.
இறைவன்: சடராய ஈசுவரர்
இறைவி : சாந்த நாயகி
விருட்சம் : பனைமரம்
ஆகமம் : சிவாகமம்
அருள்மிகு சடராய ஈசுவரர் திருக்கோயில் பழவேற்காடு அருகில் கரிமணல் என்னும் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் திருக்கோயிலாகும். இத்தலத்தில் உள்ள அம்பிகையின் திருநாமம் "அருள்மிகு சாந்தநாயகி" என்பதாகும்.
பழவேற்காடு பகுதியில் இத்திருக்கோயில் ஒரு முதன்மைக் கோயிலாக விளங்குகின்றது. தற்போது இத்திருக்கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை யின் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கரிமணல் கிராமத்தில் கால்வாய் தோண்டும் பணிக்காக சில பனை மரங்கள் வெட்டப்பட்டன. அவ்வாறு ஒரு பனை மரத்தை வெட்டும்போது அம்மரத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த மரத்தினை வெட்டியவரும் மயக்கமுற்று மூர்ச்சையானார்.
இந்த நிகழ்வு நடைபெற்ற அன்று இரவு ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய ஈசன், "யாம் பனை மரத்தில் சுயம்புவாக இருக்கிறேன்! யாமே உங்களது குலதெய்வம். எமக்குத் திருக்கோயில் அமைத்து வழிபாடு செய்து வருவீர்களாக," என்று திருவாய் மலர்ந்தார்.
ஈசனது விருப்பத்தை ஏற்று அருள்மிகு சடராய ஈசுவரருக்கும் அங்காள பரமேசுவரி அம்பிகைக்கும் ஒரு பெரிய திருக்கோயில் அமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் இங்குள்ள செட்டியார்கள் சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது.
கரிமணல் கிராமம் பழவேற்காட்டை அடுத்து உள்ளது. பழவேற்காட்டில் இருந்து ஒரு மணி நேரப் படகுப் பயணம் மூலம் இத்திருத்தலத்தை அடையலாம்.
தற்போது சடராய ஈசுவரர் அமைந்துள்ள கரிமணல் கிராமம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் பகுதிக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. இதனால் ராக்கெட் ஏவுதளக் கேந்திரத்தின் பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய அரசு கரிமணல் கிராமம் முழுவதையும் கையகப் படுத்தியது.
அச்சமயம் திருக்கோயிலில் அறங்காவலராக இருந்த திரு சொக்கலிங்க செட்டியார் அவர்கள் 1985 -ஆம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை யினரிடம் கரிமணல் சடராய ஈசுவரர் திருக்கோயிலை ஒப்படைத்தார்.
பின்னர் கரிமணல் கிராமத்திற்கும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள நிர்வாகத்தினரால் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சடராய ஈசுவரர் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இன்றி அன்றாட வழிபாடுகளும் தடைப்பட்டன. இக்காரணங்க ளால் இத்திருக்கோயிலும் கோயிலுக்குச் சொந்தமான சத்திரமும் பழுதடைந்து சேதமுற்றன.
தங்களது குலதெய்வமாகப் போற்றி வணங்கப்பட்ட ஈசனின் திருக்கோயில் வழிபாடுகள் இல்லாமல் இருந்த நிலையை எண்ணி வருந்திய செட்டியார் சமூகத்தினர் இக்கோயிலின் உற்சவர் திருமேனிகளைப் பாதுகாப்பு கருதி திருப்பாலைவனம் கோயிலில் வைத்துப் பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையைப் போக்க முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து சமுதாய மக்களும் தமிழக அரசின் ஒப்புதலோடு பழவேற்காட்டினை அடுத்துள்ள எடமணி கிராமத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அருள்மிகு சடராய ஈசுவரருக்கும் அங்காள பரமேசுவரிக்கும் புதியதாக திருக்கோயில் நிர்மாணம் செய்தனர்.
புதிய திருக்கோயில் கரிமணல் கிராமத்தில் இருந்தது போலவே எடமணி கிராமத்திலும் சிவாச்சாரியார்களின் ஆலோசனைகளின் படியும், ஆகம விதிகளைப் பின்பற்றியும் அமைக்கப்பட்டது. புதிய கோயிலில் விநாயகர், வள்ளி தேவசேனா உடனுறை முருகப்பெருமான், நந்திதேவர், சண்டிகேசுவரர், அருள்மிகு சாந்தநாயகி அம்பிகை ஆகிய திருமேனிகள் அமைக்கப்பட்டன.
இத்திருக்கோயிலுக்கு 7.7.1995 இல் முதல் குடமுழுக்கும் 3.7.2011 இல் இரண்டாவது குடமுழுக்கும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் பழவேற்காட்டினை அடுத்துள்ளது அருள்மிகு சடராய ஈசுவரர் திருக்கோயில்.
அருள்மிகு சடராயர் துதி
மெய்யெல்லாம் வெண்ணீறு சண்ணத்துச்
சடைவிரித்து மேன்மேல் அன்பு
செய்யும் அடியாரை வாழ்வித்து அவர்தம்
எதிரிகளை சிதறடிக்க
வெய்யதிரி சூலம் கை ஏந்திப்பா
தத்தில் வீரக்கழல் பூன்
ஐயனருட் சடைராயர் அடிபணிந்து
நலம் பலவும் அடைந்து வாழ்வாம்.
அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி துதி
சார்ந்தார் தம் குறை தவிர்த்து வாழ்விக்கும்
சடைராயர் தம்பாகத்தே
ஆர்ந்தவர் சூலம் தாங்கி அங்கமெலாம்
திரு நீற்றை அடரப்பூசி
நேர்ந்தாடத் தாளமிட்டே உலகுயிர்கள்
வாழ்ந்துய்யும் நியதி காத்துக்
கூர்ந்தருள் செய்யும் சாந்த நாயகியின்
அடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.