திருமணத்தடை நீங்க ஆண்டாள் விரதம்!

aandaal-viratham-palangal
திருமணத்தடை நீங்க ஆண்டாள் விரதம்!

ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அதனால், ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணமாகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும், பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டாலும், வாரணம் ஆயிரம் பாடி வந்தாலும் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.

திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர் ஆண்டாள்.

உலகத்தை ஆளும் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, ஆண்டாள் மேற்கொண்ட நோன்பு தான் பாவைநோன்பு. இந்த நோன்பை கடைபிடிப்பதற்காக அதிகாலையில் எழுந்து, தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துச் சென்று நீராடிவிட்டு வருவார். பின்பு தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

திருமாலை தவிர, மற்ற மானிடரை கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ஆண்டாள், கிருஷ்ணன் அவதாரத்தின் போது கிருஷ்ணரை மணக்க கோபியர்கள் மேற்கொண்ட பாவை நோன்பை, மார்கழி மாதத்தில் ஆண்டாளும் மேற்கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு, அவரது கையில் இருந்த சங்கை பார்த்தபடி, மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் - என தொடங்கி, வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று முடியும் முப்பது பாடல்களை திருமாலை நினைத்து பாமாலையாக பாடினார்.

ஆண்டாள் விரதம் இருந்து மனதிற்கு பிடித்த திருமாலை திருமணம் செய்தது போல, தனக்கும் விரும்பிய கணவர் அமைய வேண்டி விரதம் இருக்கும் பெண்கள், தங்கள் விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது.

மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள்புரிவாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

மனநிம்மதி கிடைக்க ஆண்டாளை வணங்குங்கள்..!

பாவை (பெண்) ஒருவர் பாடியதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடல் என்பதாலும், ஆண்டாள் பாடிய பாடல் திருப்பாவை என்று பெயர் பெற்றது.

திருப்பாவை மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. திருப்பாவையின் முதல் பாடலானது, திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்டதற்கான நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2 முதல் 5 வரையுள்ள பாடல்கள், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நாராயணரின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

ஆறு முதல் பதினைந்து வரையுள்ள துதிப்பாடல்கள், ஆழ்வார்களுக்கு ஒப்பாக, பெண் தோழியர்களை கற்பனை செய்து கொண்டு அவர்களை எழுப்பி, நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை சொல்கிறது. அடுத்து வரும் பதினைந்து பாடல்களும், உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள் என்று வெண்ணெய் உண்டவனை நினைத்து உருகிப்பாடுவதாக அமைந்திருக்கிறது.

மனநிம்மதி தரும் ஆண்டாள்:

இத்தனை பெருமைமிக்க ஆண்டாளாகிய மகாலட்சுமியிடம் நாம் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

ஆனால் செல்வம் இருந்தால் மனநிம்மதி கிடைத்துவிடுமா? அந்த நிம்மதியைத் தருபவர் தான் ஆண்டாள்.

ஆண்டாள் பூமாதேவியின் அவதாரம் என்பதால் பொறுமை குணம் வாய்ந்தவர். நாம் அறிந்தும் அறியாமலும் செய்கின்ற தவறுகளை உணர்ந்து ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டால் பகவானிடம் கூறாமல் மறைத்து விடுவார்.

அதேநேரம், ஏதேனும் ஒரு நல்லது செய்தால், அதை பெருமாளிடம் பெரிதாகக் கூறி, வேண்டிய வரத்தை வாங்கித்தந்து அருள் புரிவார். ஆண்டாளை பரமகாருண்ய தேவதை என்று கூறுவர்.

மனிதனாகப் பூமியில் பிறந்த அனைவரும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து, தான் செய்த பாவங்களையெல்லாம், ஒரு முறையாவது ஆண்டாளிடம் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாம் மனதார மன்னிப்பு கேட்பதால், அவர் மனம் இறங்கி அவற்றையெல்லாம் மறைத்து, மனம் திருந்திவிட்டதை மட்டும் பகவானிடம் எடுத்துச்சொல்லி மன்னிப்பைப் பெற்றுத் தருவார். நாமும் குற்றமற்ற மனதுடன் மனநிம்மதி பெற்று வாழலாம்.