அருள்மிகு சிவானந்தேசுவரர் திருக்கோயில், திருக்கண்டலம்.
இறைவன்: சிவானந்தேசுவரர்
திருக்கள்ளீசுவரர்
இறைவி : ஆனந்தவல்லி
விருட்சம் : கள்ளிச்செடி
தீர்த்தம் : நந்தி தீர்த்தம்
சிவானந்த தீர்த்தம்
ஆகமம் : காரணாகமம்
சென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் செல்லும் சாலையில் கன்னிகைப்பேர் என்று வழங்கப்படும் கன்னிப்புத் தூரை அடைந்து அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திருக்கண்டலம் என்ற இத்தலத்தினை அடையலாம். இத்தலம் வெங்கல் கிராமத்திற்கும் கன்னிகைப் பேருக்கும் இடையில் கன்னிகைப் பேருக்கு மிக அருகில் உள்ளது.
அகத்திய முனிவர் இத்தலத்தில் வழிபட்ட போது ஈசன் இவருக்கு அம்பிகை மற்றும் முருகப்பெருமானுடன் சோமாசு கந்தர் ( ச+ உமா+ கந்தர்) வடிவத்தில் திருக்காட்சி தந்துள்ளார்.
பிருகு முனிவர் கள்ளில் மலர்களால் இத்தலத்து ஈசனை அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார். ஈசன் இம்முனிவருக்கு "சிவசக்தி வடிவமாக" அம்பிகையைத் தன் திருமடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தட்சணாமூர்த்தி வடிவில் திருக்காட்சி தந்துள்ளார். இத்தலம் திருக்கள்ளில் மற்றும் திருக்கண்டலம் என்று வழங்கப்படுகின்றது.
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இத்தலத்தில் இறைவன் சிவானந்தேசுவரர் கருவறையின் மீது தூங்கானை மாட விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சதுர வடிவிலான ஆவுடையாரின் மீது லிங்க மூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
பிரணவ மந்திரத்தின் பொருள் மறந்த நான்முகனை சிறைப்பிடித்தார் முருகப்பெருமான். அப்போது படைப்புத்தொழிலை தானே ஏற்றதால் "பிரம்ம சாத்தன்" என்று திருநாமம் பெற்றார் முருகப்பெருமான். திருக்கண்டலம் திருத்தலத்தில் முருகன் படைப்புக் கடவுளாக தமது வலது திருக்கரத்தில் அக்கமாலையும் இடது திருக்கரத்தில் அமுத கலசத்துடனும் திருக்காட்சி தருகின்றார்.
அகத்திய முனிவருக்கு சோமாசுகந்த மூர்த்தமாக திருக்காட்சி கொடுத்த வடிவத்திலேயே இத்தலத்தில் ஈசன் சன்னதியும் அதனை அடுத்து முருகப்பெருமானின் சன்னதியும் அம்பிகை ஆனந்த வல்லியின் சன்னதியும் அமைந்துள்ளன.
ஆளுடைப் பிள்ளையான திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்து ஈசனைத் தொழுது தேவாரப் பதிகம் பாடி மகிழ்ந்துள்ளார்.
"முள்ளின் மேல் முதுகூகை
முரலுஞ் சோலை
வெள்ளின் மேல் விடு கூறைக்
கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல்
கழல்கள் நாளும்
உள்ளு மேல் உயர்வெய்தல்
ஒரு தலையே"
(முதல் திருமுறை)
"திருக்கள்ளிப்பதி சிவாநந்த
நாயகர்
மருக்கமழானந்த
வல்லியானந்தம்"
- என்று சிவசேத்திர விளக்கம் என்ற நூல் இத்தலத்தைப் போற்றுகின்றது.
புராண காலத்தில் இத்தலம் "வஜ்ரவனம்" என்று வழங்கப் பட்டுள்ளது.
சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக ஈசன் தன் தேவியான பார்வதிக்கு தமது இடது பாகத்தில் இடத்தைக் கொடுத்து பிருகு முனிவருக்கு அர்த்தநாரீசுவரராக (சக்தியுடன் இணைந்த தட்சிணாமூர்த்தி) திருக்காட்சி கொடுத்தார்.
பிருகு முனிவருக்கு சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்தும் வண்ணம் சக்தியை அணைத்தவாறு பிருகு முனிவருக்குத் திருக்காட்சி கொடுத்ததால் அம்பிகை பேரானந்தம் அடைந்தாள். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு "ஆனந்தவல்லி" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. அம்பிகை ஆனந்தவல்லி கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத் துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
தன் திருப்பாதங்களில் சரணடைந்த அன்பர்களைக் கைவிடாமல் காத்தருள்வேன் என்பதை உணர்த்தும் விதமாக தமது இடது திருக்கரத்தை தம் பாதங்களை நோக்கிக் காட்டியவாறும், வலது திருக்கரம் அபய திருக்கரமாகவும் கொண்டு அம்பிகை காட்சி தருகின்றார். இந்த அம்பிகையின் பாதத்தில் சரணடைந்தவர்களுக்கு குறைவில்லாத வாழ்வும், அளவு கடந்த ஆனந்தத்தையும் அருள்புரிவாள் அம்பிகை என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்டு வரும் உண்மையாகும்.
ஞானசம்பந்தப் பெருமான் திருவெண்பாக்கம் தலத்திற்கு (பூண்டி) வந்தபோது ஈசனை வணங்கி விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது கொசற்றலையாற்றின் கரையில் தான் கொண்டு வந்திருந்த பூஜை பொருட்களை வைத்துவிட்டு நீராடச் சென்றார். ஆற்றில் நீராடி விட்டு வந்த ஞானசம்பந்தர் தனது பூஜைப் பொருட்கள் வைத்திருந்த மூட்டையைக் காணாமல் அதனைத் தேடிச் சென்றார். அப்போது சுயம்பு வடிவில் இருந்த ஈசனைக் கண்டதும் சம்பந்தப் பெருமானின் திருவாயிலிருந்து பதிகம் ஊற்றாகப் பெருக்கெடுத்த து.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவராக வணங்கப்படுகின் றார். இதனால் இந்த நந்தி எம்பெருமானின் பெயரிலேயே ஈசன் சிவானந்தீசுவரர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கின்றார். இத்தலத்தின் புனித தீர்த்தமும் "நந்தி தீர்த்தம்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தலத்தில் உள்ள பைரவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் களவு போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அன்பர்களி டையே உள்ளது. களவு போன பொருட்கள் திரும்பக் கிடைத்ததும் பால் அபிஷே
கம் செய்து பைரவரை வழிபடுபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் வழிபாடுகள் செய்ய இனிய இல்லறம், தம்பதிகளிடையே ஒற்றுமை, நன்மக்கள், அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்தையும் பெற்று சிவானந்தப்பேறு அடையலாம்.
இத்தலம் காலை 6:00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
மேலும் விபரங்களுக்கு 044- 27629144 மற்றும் 099412 22814 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.