அருள்மிகு சமயேசுவரர் திருக்கோயில், பழவேற்காடு

samayeswar-temple-pazhavergadu
அருள்மிகு சமயேசுவரர் திருக்கோயில், பழவேற்காடு

இறைவன்: சமயேசுவரர்
இறைவி : ஆனந்தவல்லி
தீர்த்தம் : துறைக் கிணறு
விருட்சம் : வில்வம்
ஆகமம் : சிவாகமம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு என்னும் கடற்கரை கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சமயேசுவரர் திருக்கோயில்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பினால் கட்டப்பட்டுள்ளது.

சோழர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இக் கோயிலின் தூண்களில் அழகான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் காண்போரைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும். நரசிம்மர் தூணிலிருந்து வெளியே வருவது போன்ற சிற்பம், குரங்கு தலை கீழாகத் தொங்குவது போன்ற சிற்பம், கண்ணப்ப நாயனார் சிற்பம் ஆகியவை கவின்மிகு சிற்பங்களாகும். முதலாம் பராந்தக சோழ மன்னரின் கல்வெட்டுகள் இத்தலத்தில் உள்ளன.

சன்னதியின் வலது புறம் செங்கற்களால் கட்டப்பட்ட வட்ட வடிவப் படிக்கிணறும் கிணற்றில் இறங்கப் படிக்கட்டு வசதிகளும் அமைந்துள்ளன. இது மற்ற திருக்கோயில்களில் காண முடியாத சிறப்பு அம்சமாகும். கோயிலில் சுரங்கப் பாதை ஒன்றும் உள்ளது.

மிகவும் புராதனமான இத்தலம் சிதிலமடைந்து இருப்பதை எண்ணி வருந்திய இப்பகுதி மக்கள், திருக்கோயிலின் நிலையை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஜனவரி 2024 மாதத்தில் துறை அதிகாரிகளுடன் கோயிலை ஆய்வு செய்து கோயிலைப் புனரமைக்கவும் கோயிலுக்குச் செல்லும் சாலைகளைச் சீரமைக்கவும் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

அத்துடன் இக்கோயில் புனரமைப்பிற்காக ரூபாய் 2.62 கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டு புனரமைப்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. திருக்கோயிலை அதன் பழமை மாறாமல் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு புதுப்பிக்கப்பட ஆணை வழங்கப்பட்டு உற்சவத் திருமேனிகள் வைக்க பாதுகாப்பு அறையும் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை.

நான்கு வேதங்களில் ஒன்றான சாம வேதம் இந்திய இசை மற்றும் நடனக்கலையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவதாகும். மேலும் அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தையும் சமத்துவத் தையும் வலியுறுத்துவதும் சாம வேதமாகும்.

சாம வேதம் ஆன்மிக அறிவையும், பிரம்ம ஞானத்தையும் அளிக்கக் கூடியதாகும். இந்த வேதத்தின் திருநாமத்தைக் கொண்டு இந்த ஈசனுக்கு "சாம ஈசுவரர்" என்ற திருநாமம் ஏற்பட்டிருக்கின்றது. தொல்லியல் ஆவணங்களும் இத்தல ஈசன் "சாம ஈசுவரர்" என்று வழங்கப்படுவதைத் தெரிவிக்கின்றது. சாம ஈசுவரர் என்ற திருநாமமே மருவி சமயேசுவரராக மாறியுள்ளது.

மேலும் தன் பக்தர்களுக்குத் துன்பம் என்றால் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் தக்க சமயத்தில் உதவி செய்யும் ஈசன் இவர் என்பதால் இப்பெருமானுக்கு "சமய ஈசுவரர்" என்ற திருநாமம் ஏற்பட்டுப் பின்னர் சமயேசுவரர் என்று மருவி வழங்கப்பட்டு வருவதாகவும் தல வரலாறு தெரிவிக்கின்றது.

சமயத்தில் உதவும் சமய
ஈசுவரருக்கு பாலாலயம் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக இறைவன் பாலாலயத்தில் காத்துக் கொண்டிருக்கின்றார். பரமனுக்காக பக்தர்கள் காத்திருக்கலாம். ஆனால் பரமனை நீண்ட நாட்கள் பாலா லயத்தில் காக்க வைக்க கூடாது.

உதவி செய்யும் அன்பர்களுக் காக காத்திருக்கின்றார் ஆபத்தில் அரவணைக்கும் அம்பிகை பாகன். மேலும் விபரங்களுக்கு இத்திருக்கோவில் சோழர்காலப் பொலிவினைப் பெற வேண்டும் என்று எந்த நேரமும் ஈசனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் சிவாச்சாரியார் திரு கே. கணேச குருக்கள் அவர்களை 86828. 21200 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பாலாலயத்தில் ஈசன் இருப்பதால் திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் மேற்கண்ட சிவாச்சாரியார் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின்னர் திருக்கோயிலுக்குச் செல்லலாம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது பழவேற்காடு அருள்மிகு சமயேசுவரர் திருக்கோயில். பழவேற்காடு ஊரின் நடுவிலேயே இத்தலம் அமைந்துள்ளது.