ஸ்ரீ தன்வந்திரி பெருமானை வணங்கினால் நிச்சயம் இது நடக்கும்!
நல்லோரைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம்.
மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரஙகள்
ஆகும்.
இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்து மக்களுக்கு நல் உபதேசங்களைச் செய்துள்ளார்.
ஸ்ரீதன்வந்திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும்
பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் தனது செல்வங்களை இழந்தான்.
மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.
அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது.
அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார்.
தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன.
பாற்கடலிலிருந்து கடைசியில் திருமாலே தன்வந்திரியாக அம்ருதகலசத்தை ஏந்தி வெளிப்பட்டார்.
தேவேந்திரன் சாவா மருந்தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட்களையும் பெற்று தேவலோகம் சென்றான்.
திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளாகும்.
இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர்.
திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.
இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம்.
இறைவனே மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக் காட்டுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்தியவாறும் காட்டப்படுவது வழக்கம்.
அல்லது முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கையில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் தன்வந்திரி காட்சி அளிப்பதும் உண்டு.
அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம்.
இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக் கொண்டுள்ளது.
முக்கியமான வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனிச் சந்நிதி இருப்பதைக் காணலாம்.
திருவரங்கம் ஆலய தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது.
தமிழ்நாட்டில் வேலூர் அருகேயுள்ள வாலாஜாபேட்டையில் தன்வந்திரிக்கு என்று தனி ஆலயமே அமைந்துள்ளது.
அனைத்து நோய்களுக்கும் நிவாரண அளிக்கும் ஹோமங்களும் இங்கு சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
கோவையில் தன்வந்திரி ஆலயம் உள்ளது.
ஆயுர்வேத மருத்துவ முறை மிகப் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் கேரள மாநிலத்தில் தன்வந்திரி பகவானுக்கு பல ஆலயங்கள் உள்ளன.
ஆலப்புழை மாவட்டம், சேர்த்தலா வட்டத் திலுள்ள- மருதோர் வட்டம் ஸ்ரீ தன்வந்திரி ஆலயம் மிகப் பெரியதும் பிரபலமானதும் ஆகும்.
சேர்த்தலாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
600 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளூடு மூஸ் என்ற ஆயுர்வேத வைத்தியர் இப்பகுதியில் பிரபலமான அஷ்ட வைத்தியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
நோயாளிகள் அவரிடம் வந்து ஒரு வட்டம் (ஒரு முறை) மருந்து அருந்தினாலே நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
அவரால் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி விக்கிரகமே இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
இங்கே வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தன்வந்திரி.
அவருக்கு எதிரே கருடன் சந்நிதியும், திருச்சுற்றில் பகவதி, கணபதி, சாஸ்தா, சிவன் சந்நிதிகளும் உள்ளன.
இங்குள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட கொடிமரம் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது.
இந்த ஆலயத்தில் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பாக தினமும் மோர்க்குழம்பும் கீரைக் கூட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன.
இதை பக்தர்கள் சாப்பிட்டால் தீராத வயிற்று வலி தீருமென்று நம்புகின்றனர்.
வல்லாரை இலை, மாந்தளிர், புளியாரை இலை, நல்ல மிளகு, மல்லி, சீரகம், சுக்கு, ஓமம் போன்ற மருந்துச் சரக்குகளைச் சேர்த்து தயிரில் கலக்கி மோர்க்குழம்பும்; உப்பு, புளி, மிளகு மற்றும் கொத்தமல்லி விதை சேர்த்து தயாரித்த கீரைக் கறியும் பிரசாதமாகத் தயாரிக்கப்படு கின்றன.
வைக்கம் மகாதேவருக்கும் இதுவே பிரசாதமாகும்.
ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப் படுகிறது.
தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரித்த அவலேகம் (அல்வா) முக்கிய நைவேத்தியமாகப் படைக்கப்படுவது வழக்கம்.
இதிலிருந்தே வீடுகளில் தீபாவளிக்கு அல்வா தயாரிக்கும் பழக்கம் வந்திருக்கலாம்.
தீபாவளி லேகியம் தயாரிக்கும் வழக்கமும் தன்வந்திரி வழிபாட்டில் இருந்தே தொடங்கிய தென்பர்.
வட மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி நாளன்றே தீபாவளித் திருவிழா துவங்கிவிடுகிறது.
அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும், தன்திரயோதசி என்றும் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் 13 வெள்ளி அல்லது தங்கக் காசுகள் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை.
இதே தன்திரேயாஸ் நாள் எமனுக் குரிய நாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, அன்றிரவு யமதீயா என்ற யமதீபம் ஏற்றப்படுகிறது.
ஹிமா என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.
இதை அறிந்த அவன் மனைவி அந்த நாள் (தன்திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்குகளை ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து, கணவனுக்கு புராணக் கதைகளைக் கூறி தூங்காது பார்த்துக் கொண்டிருந்தாளாம்.
பாம்பு உருவில் வந்த எமன் தீப ஒளியில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசவே, காலை வரை காத்திருந்து விட்டுத் திரும்பினான் என்றும்; மன்னன் யமனிடமிருந்து காப்பாற்றப்பட்டான் என்றும் ஒரு கதை உள்ளது.
தன்வந்திரி அவதார நாளன்று தன்னைச் சுற்றிலும் யம தீபங்கள் ஏற்றி, தன்னை தன் மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி கடவுளே காரணமென்று மன்னன் நம்பினான்.
மக்கள் அனைவரும் தன்திரேயாஸ் நாளைக் கொண்டாட வேண்டுமென்றும்; அன்று இரவில் யம தீபம் ஏற்ற வேண்டுமென்று மன்னன் உத்தரவிட்டானாம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தன்திரேயாஸ் அன்று கொத்தமல்லி விதை மற்றும் வெல்லத்தை இடித்து வீடுகளில் பிரசாதமாக இறைவனுக்குப் படைப்பது வழக்கம்.
தன்திரேயாஸ் நாளை அடுத்தநாள் சோடி தீபாவளி, மூன்றாவது நாள் (தீபாவளி) லட்சுமி பூஜை, அடுத்த நாள் கோவர்த்தன பூஜை, கடைசி நாளன்று சித்ரகுப்த பூஜை, கோதான் என்று ஐந்து நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.
நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது.
தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம்.
இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்.
"ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'
பொருள்:
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்;
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங் களைப் போக்குபவரும்;
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;
மூன்று உலகங்களுக்குத் தலைவராக விளங்குபவரும்;
அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்