அருள்மிகு திருவரங்கம் ரங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம்

thiruvarangam-sri-ranganathar-temple-srirangam-tiruchirappalli
அருள்மிகு திருவரங்கம் ரங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம்

08 திவ்யதேசம்

வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் , திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.

ஸ்தல வரலாறு

திருவரங்கம் கோயில் சிறிய சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து சுயம்புவாக வெளிப்பட்டு தோன்றியதாகும் பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

அந்த . சூரிய குலத்தில் பிறந்த ஸ்ரீராமர், ராவணன் வதத்திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக ” முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார்.

அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் காவிரிக்கரையில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், அங்கு சிறுவனாக இருந்த இடையனிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என கூறி காவேரி நதி தீரத்திற்கு சென்றான். சீக்கிரம் வந்துவிட வேண்டும், தவறினால் மூன்று முறை உங்களை அழைப்பேன், அப்போதும் நீங்கள் வரவில்லை என்றல் சிலையை கீழே வைத்து விடுவேன் என கூறிய இடைச்சிறுவன் விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகியதால் அச்சிலையை கீழே வைத்து சென்று விட்டான்.

பிறகு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்பதும் அச்சிலை மிகப்பெரிய அளவில் உருமாறியிருப்பதையும் பார்த்து , அதை தூக்க முயற்சித்தான்; முடியவில்லை. சிறுவனாக வந்தது சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி விநாயக பெருமான் மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும்,

அப்போது நாராயணன் அசரீரியாக தான் இங்கேயே இருக்க விரும்பு வதாகவும், அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே தான் வீற்றிருப்பதாகவும் விபீஷணனுக்கு வாக்களித்தார்.

அக்காலகட்டத்தில் இப்பகுதியை ஆண்ட “தர்ம வர்ம சோழன்” ரங்கத்தாருக்கு ஆலயம் எழுப்பினான். ஒரு சமயம் காவிரி நதியில் ஒரு மிகப்பெரும் வெள்ளம் வந்தது, அந்த வெள்ளத்தில் அக்கோவில் ஆற்றுமணலில் முற்றிலும் புதைந்து போனது.

பின்னாளில் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை தினந்தோறும் ஆற்றுப்பகுதிக்கு வந்து தேடலானான். அப்படி ஒரு முறை இங்கு வந்த போது ரங்கநாதர் ஆலயம் மணலில் புதைந்து போவதற்கு முன்பு ரங்கநாதருக்கு செய்யப்படும் பூஜையின் போது வேதியர்கள் ஓதிய மந்திரங்களை, அக்கோவில் வளாகத்திலிருந்த மரத்தில் வசித்த கிளி ஒன்று நன்கு கவனித்தபடியால் அம்மந்திரங்களை புதையுண்ட கோவிலுக்கு மேல் அமர்ந்து மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டிருந்தது. இதை வைத்து புதைந்த கோவில் இருக்கும் இடத்தை அந்த மன்னன் கண்டுபிடித்து மீண்டும் சீரமைத்து கட்டியதால் “கிளிச்சோழன்” என அந்த சோழ மன்னன் அழைக்கப்பட்டான். -

பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகஅளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில்.

5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) தீவில் அமைந்துள்ளது, சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது. . இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன் விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு பொதுமக்கள் முயற்சியால் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கோவிலில் வைணவ சம்பிரதாயத்தை உயிர்ப்பிக்க வந்தவரும், ஆதிசேடனின் அவதாரமாக கருதப்படுபவருமான “ஸ்ரீ ராமானுஜர்” தமிழை முதன்மையாக கொண்டு கோவில் சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு செய்து, நிர்வாகத்தை சீர் செய்தார். அதன்படியே இன்றளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.

ராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்து இறைவன் திருவடி சேர்த்தபின்பு, அவரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம். இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது.

இக்கோவிலில் தான் திருவில்லிபபுத்தூரில் பிறந்து “கோதை” என்றழைக்கப்பட்ட “ஆண்டாள்” அரங்கனுக்குள் ஐக்கியமானாள்.

இந்த கோவிலின் இறைவனான ரங்கன் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனில் ஐக்கியமானாள். எனவே அவள் “துலுக்க நாச்சியார்” என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள்.

இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

இங்கு கம்பராமாயண மண்டபம் இருக்கிறது இங்கு தான் “கவிச்சக்ரவத்தி கம்பன்” தன் “கம்பராமாயணத்தை” அரங்கேற்றம் செய்து அந்த” நரசிம்ம மூர்த்தியாலேயே” பாராட்டப்பெற்றார். கம்பராமாயண மண்டபம் எதிரில் நரசிம்மர் சன்னதி உள்ளது.

பன்னிரு ஆழ்வார்களில், ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் உட்பட 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும்.

இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார்.

நவகிரகங்களில் “சுக்கிரனின்” அம்சம் பொருந்தியவராக இவர் கருதப்படுவதால் “சுக்கிரன் பரிகார தலமாகவும்” இக்கோவில் விளங்குகிறது.

இங்கிருக்கும் “சக்ரத்தாழ்வார்” சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக கூறப்படுகிறது. இங்கு வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

மார்கழியில் வரும் “வைகுண்ட ஏகாதசி” தினத்தில் இக்கோவிலில் “சொர்க்க வாசல்” திறந்து, அதில் பங்கேற்று வழிபட பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது சிறப்பு அம்சமாகும். இங்கு நடைபெறும் “பகல் பத்து, ராப்பத்து” விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோயில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.

கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.

விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.

கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.

வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

கோயிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.

கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

கோவில் அமைவிடம்
“அருள்மிகு திருவரங்கம் ரங்கநாதர் கோவில்”
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006
தொலைபேசி எண் 431 243 2246
Fax: + 91- 0431 - 2436666

ரயில் மார்க்கமாகவும், சாலை மார்க்கமாகவும் இக்கோவிலை அடையலாம். திருச்சியிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.