மருதமலை தல வரலாறு!
நவகோடி சித்தர்களில் முதன்மையானவர்கள் பதினெண் சித்தர்கள், அதில் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.
பாம்பாட்டிசித்தர் வாழ்ந்த காலம் கி.பி 1200 ஆகும். கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில்.
இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.
ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது எனவும் , இந்த பாம்பை பிடித்தால் கோடிஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலை ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார்.
அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சாட்டைமுனி சித்தர் நின்றார்.
‘இங்கு எதைத் தேடுகிறீர்கள்?’ என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் ‘நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை’ என்றார். இதைக் கேட்ட சாட்டைமுனி சிரித்தார்.
‘நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை.
அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே’ என்றார்.
அப்படியா? என்றவாறே வியந்து சட்டமுனியை நோக்கி ”எமக்கு அதை காண அருள்வீரா” எனக்கேட்க, குண்டலினி, கூடு விட்டு கூடுபாய்தல், பிராயணமப் பயிற்சிகளை பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி கொடுத்தார்.
எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சட்டைமுனி சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.
பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு.
மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர் குகைக்ககும் வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி சித்தர் தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார் என்றும், இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது, இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார்.
தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார்.
விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார்.
அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும்.
அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர்.
இத்தலம் “ஏழாம்படை வீடாக’ கருதப்படுகிறது.