அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில், பொன்னேரி

karikrishna-perumal-temple-ponneri
அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில், பொன்னேரி

அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில், திரு ஆயர்பாடி, பொன்னேரி.

இறைவன் : கரி கிருஷ்ணர்

இறைவி : சௌந்தரவல்லி

விருட்சம் : மகிழமரம்

தீர்த்தம் : சந்தான தீர்த்தம்

ஆகமம் : வைகானசம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகில் "திரு ஆயர்பாடி" என்ற ஊரில் அமைந்துள்ளது கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில். முற்காலச் சோழ மன்னரான கரிகால் வளவனால் நிர்மாணிக்கப்பட்டது என்பதால், இக்கோவிலுக்கு கரி கிருஷ்ணப் பெருமாள் கோயில் என்ற திருநாமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆரணியாறு

கிருஷ்ணா நதியின் கிளை நதியான ஆரணியாறு, ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழ்நாட்டினுள் நுழைந்து பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, பெரும்பேடு வழியாகப் பயணித்து பழவேற்காடு அருகே வங்கக் கடலில் கலக்கின்றது. இந்த ஆரணி ஆறு புண்ணியம் வாய்ந்த புனித நதியாகக் கருதப்படுகிறது. இந்நதியின் கரையில் பல சக்தி வாய்ந்த திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

ஆரணி பிச்சாலீஸ்வரர் கோயில், சோடேஸ்வரி அம்மன் ஆலயம், பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில், ஊத்துக்கோட்டை பாபஹரேஸ்வரர் கோயில், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் மற்றும் திரு ஆயர்பாடி கரி கிருஷ்ணப் பெருமாள் கோயில் ஆகிய திருக்கோயில் கள் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. ஆரணியாறு கங்கைக்கு இணையான புண்ணிய நதியாகவும் இந்த நதியில் நீராடி நமது பாவங்கள் நீங்கப் பெறலாம் என்றும் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

திரு ஆயர்பாடி

"ஆயர்பாடி" என்பது ஆடு மாடுகளை மேய்க்கும் "இடையர்" என்னும் சமூகத்தவர் வாழ்கின்ற பகுதியைக் குறிப்பதாகும். "ஆயர் குலத்தினில் தோன்றிய அணி விளக்கான" கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பிடமும் ஆயர்பாடி என்றும் கோகுலம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. கிருஷ்ணர் அவதரித்த ஆயர்பாடியைப் போன்றே பொன்னேரி அருகில் எழுந்தருளியிருக்கும் இந்த திருத்தலத்திற்கும் திரு ஆயர்பாடி என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

கரி கிருஷ்ணப் பெருமாள்

முற்காலத்தில் மகிழ மரங்களும் துளசிச் செடிகளும் அடர்ந்திருந்த காட்டுப்பகுதியாக இருந்த இப்பகுதியில் புற்று ஒன்று இருந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் இடையன் ஒருவருக்கு சொந்தமான பசு இங்குள்ள காடுகளில் மேய்ச்சலுக்காகச் செல்லும். அப்போது அந்த மாட்டுக்கு சொந்தக்காரரான இடையன் இந்தப் புற்றின் மீது பசு தானாக பால் சுரப்பதைக் கண்ணுற்றார். இதைக் கண்டு திகைத்த அவர், ஊர் மக்களை அழைத்து அவர்களது உதவியுடன் புற்றினை அகற்றிப் பார்க்கும் போது அப்புற்றிலிருந்து கிருஷ்ணரின் அழகான திருமேனி வெளிப்படுவதை ஊர்மக்கள் கண்டனர். பின்னர் அந்த இடத்திலேயே கிருஷ்ண பரமாத்மாவுக்கு அழகான திருக்கோயில் அமைத்து இத்தலத்திற்கு "திரு ஆயர்பாடி" என்ற திருநாமமிட்டு வணங்கி வந்தனர்.

கிருஷ்ணரின் திருமேனி கிடைத்த இடம் துளசி வனமாக இருந்ததால் இந்த தலத்திற்கு பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசிவனக் கோயில்) என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது.

புற்றிலிருந்து வெளிவந்ததால் திரு ஆயர்பாடி தலத்தில் கிருஷ்ண பரமாத்மா சுயம்புத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் திருக்காட்சி தரும் திருமகள் கேள்வன், இங்கு மனித உருவினைப் போன்று இரு திருக் கரங்களுடன் மாடு மேய்க்கும் இடையனது திருக்கோலத்தில் காட்சி தருகின்றார்.

கலியுகத்தில் தர்மம் குறைந்து அதர்மம் தலை தூக்குவதால் கொடியவர்களை அழிக்கவும் நல்லவர்களைக் காக்கவும் ( துஷ்ட நிக்ரஹம்; சிஷ்ட பரிபாலனம்) பெருமான் வலது கரத்தில் சாட்டையோடு இடது திருக்கரத்தை தன் இடையில் வைத்தவாறு வடக்கு திருமுக மண்டலத்தில் காட்சி தருகின்றார். பெருமாள் திருக்கரங்களில் எப்போதும் இருக்கக்கூடிய வெண்சங்கும் திருவாழியும் இன்றி திருமுடியில் அமிர்த கலசம் என்கிற சிறிய பானையை தூக்கி வைத்தவாறு காட்சி தருவது வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும்.

மண்ணிலிருந்து தோன்றிய மாலோலனின் திருமேனி என்பதால் இவர் பீடத்தின் மீது நிற்காமல் தான் தோன்றிய மண்ணின் மீதிருந்து இத்திருத்தலத்தில் காட்சி தருகின்றார்.

பெருமானின் திருச்சந்நிக்கு முன்பாக கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் சௌந்தரவல்லித் தாயாரின் சந்நிதி உள்ளது. "சௌந்தர்யம்" என்ற தனது திருநாமத்திற்கு ஏற்றவாறு அழகே உருக்கொண்டு காட்சி தருகின்றார் தாயார்.

சைவ வைணவ ஒற்றுமை

பரத்வாஜ முனிவரும் அகத்திய முனிவரும் ஈசனையும் பெருமானையும் ஒருசேர தரிசனம் காண விரும்பினர். இந்த இரு முனிவர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணம் கொண்ட அரியும் அரனும் இருவருக்கும் ஒரு சேர தரிசனம் அளித்தனர்.

இந்த நிகழ்வைக்கொண்டாடும் வகையில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று தீர்த்தவாரி கணக்கிடப்பட்டு அன்றிலிருந்து 5 -ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு திருக்கோயிலில் இருந்து இரு மூர்த்திகளும் புறப்பட்டு "அரிஅரன்கடைவீதியில்" (ஹரிஹரன் பஜார்) காலை 4.30 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக பிரம்ம முகூர்த்தத்தில் சந்திக்கும் நிகழ்வு தற்போதும் நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் பெருமானுக்குச் சாற்றிய மாலை ஈசனுக்கும் ஈசனுக்குச் சாற்றிய மாலை பெருமாளுக்கும் அணிவிக்கப்படுகிறது.

இத்தலத்தில் அழகான 16 கால் மண்டபம் உள்ளது. ராமபிரானுக்கு தனிச் சந்நிதி உள்ளது.

மழலை பாக்கியம் இல்லாத அன்பர்கள் கிருஷ்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திர நாளில் இத்தலத்திற்கு வந்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க அவர்களுக்கு உடனடியாக மழலைப் பேறு ஏற்படுவதாக நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிவதில் சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றார்

கரி கிருஷ்ணர்.

ஆயர்பாடியில் அவதரித்து பல லீலைகளை புரிந்த பகவான் கிருஷ்ணரை பொன்னேரிக்கு அருகில் உள்ள திரு ஆயர்பாடியிலும் வழிபடுவது நம் பிறவியின் பேறு ஆகும்.

மழலைப் பேறு வேண்டி கர்நாடகாவில் உள்ள தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய இயலாத அன்பர்கள், சென்னைக்கு அருகில் உள்ள இத்தலத்திற்குச் சென்று வழிபட்டு தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறப் பெறலாம்.

பரத்வாஜ முனிவர் பூஜை செய்யப்பட்ட பெருமாள் இவர் என்பதால் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இத்தலத்தில் வைகானச ஆகம முறைப்படி பூஜை செய்து வருகின்றனர்.

பொன்னேரி ரயில்வே நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திரு ஆயர்பாடி கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயில்.

திருக்கோயில் காலை 7.30 மணி முதல் 10:30 மணி வரையிலும் மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு திருக்கோயில் பட்டாச்சாரியார் அவர்களை 94447 20636, 99949 07282 ,99941 82494 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

©முன்னூர் கோ.ரமேஷ் B.Sc.,B.L.,