Breaking News :

Saturday, June 10

புத்தகம் : கள்ளிக்காட்டு இதிகாசம்

புத்தகம் : கள்ளிக்காட்டு இதிகாசம் ஆசிரியர் : வைரமுத்து 

👑 2003 சாகித்ய அகாடமி விருது பெற்றநாவல் ...
1958 களில் வைகை அணை கட்ட வேலைகள் ஆரம்பித்த நேரத்தில், நீர் பிடிப்பு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் நிலையை அருமையாக, எளிமையாக விளக்கும் கதை...

👑 ஆசிரியர் கவிஞர் வைரமுத்து என்பதால் நாவல் முழுவதுமே கவித்துவமாக இருக்கிறது...
 வாசிக்க வாசிக்க அவ்வளவு ஆவலாக உள்ளது... திரைப்பட  பாடல்கள் எழுதுபவர் என்பதாலும் என்னவோ கதை ஒரு அருமையான திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தியது...

 அத்தோடு தேனி மாவட்டம் சுற்றுவட்டார கிராமங்களின் மொத்த பழக்கவழக்கங்கள், பண்பாடு, பேச்சுவழக்கு அனைத்தையும்   நாவலை வாசித்தாலே அறிந்து கொள்ளலாம் ....
ஆசிரியர் நிறைய அறிவியல் தகவல் களையும் நாட்டுப்புற சடங்கு சம்பிரதாயங்களையும் விளக்கியுள்ளார்...
🙂சாராயம் காய்ச்சுவது, ஆடு கோழி திருடுவதில் உள்ள நுணுக்கங்கள்,  மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, நாட்டு வைத்திய முறைகள், உணவு பழக்கங்கள்,  மிளகாய் செடி கத்திரிக்காய் செடி பயிரிடுவது ஆரம்பம் முதல் அறுவடை வரை உள்ள நுணுக்கங்கள், கழுதைப்புலிகளுக்கு பிணத்தை உண்ணும் பழக்கம் உண்டு என்பதும், கழுதைகளுக்கு பிணம் எரிக்கும் வாடை மிகவும் பிடிக்கும் என்பதும் எரிந்து முடிந்த சாம்பலை கூட வந்து முகர்ந்து பார்க்கும் பழக்கம் கழுதைகளுக்கு உண்டு என்பதும் நூலை வாசித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் ...
சுடுகாட்டில் வெட்டியான் செய்யும் வேலை முதல் கிணறு வெட்ட பயன்படுத்தும்  வெடிமருந்து தயாரிப்பு என அனைத்து தொழில்நுடக்கங்களையும் அருமையாக விளக்கியுள்ளார்...

🌸 இதிகாசம் என்று  பெயர் வைக்க இரண்டு காரணங்களை கூறுகிறார்... ஒன்று உண்மையில் நடந்தது மற்றொன்று  நூலின் மொத்த பொறுப்பும் எழுதிய ஆசிரியருக்கே என்பது...
🌸 கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நிஜத்தில் நடந்தவையே எனினும் கதையின் காண்பிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் வெவ்வேறு வீடுகளில் வெவ்வேறு நேரங்களில் நடந்தவை... அவற்றை ஒன்றாக இணைத்து ஒரே கதையின் கீழ் கொண்டு வந்திருக்கிறார்... 

 கதை சுருக்கம்:

 பேயத்தேவர் ஒரு ஏழை விவசாயி... மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனார்,  இரண்டு பெண்கள் ஒரு ஆண்...
 மூத்த பெண் செல்லத்தாய் அவளுக்கு ஒரு மகன் மொக்கராசு மொக்கராசியின் தகப்பனார் இறந்தவுடன் செல்லத்தாயி மறுமணம் செய்து கொள்கிறாள்... ஆனால் அவள் கணவன், மொக்கராசுவை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை.. ஆகையால் மொக்கராசு, தாத்தா வீட்டிலேயே இருக்கிறான்...
பேயத்தேவர் மனைவி அழகம்மாள்... இரண்டாவது மகள் மின்னல்,
 அவளது கணவனும் ஏழை விவசாயி ஒரு பெண் குழந்தை உள்ளது... நியாயஸ்தனான மின்னலது கணவன் ,கந்து வட்டிக்காரனின் கொடுமையை தாங்காமல்  அவனை கொலை செய்துவிட்டு  சிறைக்கு சென்று விடுகிறான் ...
ஆகையால் மின்னலையும்  குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பேயத் தேவரிடமே விழுகிறது....
 செல்லத்தாயையும் அவளது கணவன் வரதட்சணை நகை கேட்டு அடிக்கடி அடித்து பிறந்த வீட்டுக்கு விரட்டி விடுவான் ...ஆக செல்லத்தாயும்   பிரசவத்திற்கு வந்ததுடன் வீட்டுக்கு செல்லாமலேயே அப்பா நகை போடும் வரை இருப்பது என்ற முடிவுடன் இருக்கிறாள்... ஆக இரண்டு பெண்களை அவர்களின் குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பு வருகிறது...
 ஒரே மகனான சின்னு சிறு வயதிலிருந்து படிப்பு ஏறாத, போக்கிரித்தனம் செய்வதும் சிறு சிறு திருட்டு வேலைகள் செய்து பின் கஞ்சா விற்று அடிக்கடி ஜெயிலுக்கு சென்றும், இறுதியாக சாராயம் காய்ச்சுவதில் கைதேர்ந்தவனாகவும் மாறிவிடுகிறான் ....

அடிக்கடி சொத்தை பிரித்து தருமாறு வந்து சண்டையிட்டு செல்வான்...

 மனைவி அழகம்மாள் இறந்ததை தாங்க முடியாத துக்கத்துடன் சேர்த்து இரண்டு மகள்களையும் நினைத்து வருந்துவார்...அவரது நெருங்கிய  நண்பரும் அடிக்கடி பண உதவி புரிபவருமான வண்டி நாயக்கரிடமே எப்பொழுதும் மனம் விட்டு பேசுவார்...
 திடீரென அவரது இறப்பையும் தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாகிறார்... அவர் இறந்த பின் அவரிடம் கடன் வாங்கியதற்காக வண்டி நாயக்கரின் சின்ன வீடு பேயத்தேவரது நிலங்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்கிறாள் ....

இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கரட்டுக்கடியில் கிடந்த நிலத்தை உழுது  படாத பாடுபட்டு கிணறு வெட்டி தண்ணீரும் வந்துவிடும்... கிணறில் வெடி வைக்கும் பொழுது மின்னலது மகள் சிறு குழந்தை  சிக்கி உடல் சிதறி இறந்து விடுகிறது, பித்து பிடித்த மின்னல்... மீண்டும் துக்கம்.... விவசாயம் செய்து சற்று செழித்து வரும்பொழுது அணைக்கட்டும் வேலைக்காக  நீர் பிடிப்பு பகுதியான இடங்களை அப்புறப்படுத்துமாறு அரசு உத்தரவிடுகிறது...
 ஊரை காலி செய்து வெளியூருக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறது ...
ஊர் மக்கள் அனைவரும் திரண்டு எதிர்க்கிறார்கள் ...ஒரு கட்டத்துக்கு மேல் வேறு வழியின்றி அரசாங்கம் கொடுத்த சிறு தொகை வாங்கிக் கொண்டு ஊரை காலி செய்து விடுகிறார்கள் ...
ஆனால் பேயத்தேவர் இறுதிவரை வீம்பாக வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று இருக்கிறார்...

 இதற்கிடையில் முருகாயி என்று ஒருத்தியும் அவர்கள் குடும்பத்தில் இருந்து வருகிறார் ..கடைசியில்தான் தெரியும் முருகாயிக்கும் பேயத்தேவருக்கும் என்ன உறவு என்று ....
பேயத்தேவர் இளவயதில் முருகாயியை விரும்புவார்... வீட்டில் எதிர்ப்பு...கீழ் ஜாதியான முருகாயியை கட்டித் தராமல் வேறு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்... கணவன் மற்றும் தாய் தந்தையை இழந்து விடுவாள்...

 அனாதையாக இருந்த முருகாயிக்க்கு ஆதரவளிக்க பேயத்தேவர் மனைவி அழகம்மாள் முருகாயி இனி நம் வீட்டிலேயே இருக்கட்டும் என்று வைத்துக்கொள்வாள்... அழகம்மாளும் பேயத்தேவரும் அன்னியோன்யமாக இருந்ததற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி...

கதை முடிவில் நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை நிரப்பிக் கொண்டே வரும்... முக்கியமான பொருட்களை எடுத்து வருகிறேன் என்று தண்ணீரில் நீந்தி சென்ற பேயத் தேவர் மூழ்கி இறந்து விடுகிறார் ...கதை சோகமாக முடிந்தாலும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நவரசங்கள் நிறைந்த கதையாகவே இருக்கிறது... நகைச்சுவை, காதல் ,வீரம் என அனைத்தும் கலந்த கலவை...

நன்றி...
அ. யோகானந்தி

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.