டீக்கடை மொய்தீன் - சிறுகதை

tea-kadai-moideen-short-story
டீக்கடை மொய்தீன் - சிறுகதை

அந்த ஊருல டீக்கடமொய்தீன்ன்னா தெரியாதவுக ஆருமிருக்கமாட்டாக. சில்க் சுமீதாவோட தீவிர ரசிகரு. அதென்னமோ அவருக்கு சில்க்கத்தவிர வேற எந்த நடிகையும் புடிக்காது. மத்த நடிகையெல்லாம்கழுவிஊத்து வாரு டீக்கிளாசக்கழுவி ஊத்துறமாதிரியே.

சிலுக்கோட கண்ணுல விழுகாதவன் ஆம்ப ளையே இல்லன்றது அவரோட உறுதியான நம்பிக்க.அவஒதட்டச்சுழிக்கிறஒரு சீனப் பாக்கவே கடைக்கி லீவு வுட்டுட்டுப்போய் பொன்மேனி உருகுதே பாட்டு இருக்கற மூன்றாம் பிறை அப்புறம் சகலகலாவல்லவன் போயி பாத்துட்டு வார ஆளு இவரு. வந்து நேத்துராத்திரி அம்மான்னு பாடிக்கிட்டே டீ ஆத்துவாரு. கடைக்கி வாரவுக அப்புறம் அவரோட பீவி எல்லாரும் காறித்துப்புனாலும் தொடச்சிட்டுசில்க் படம் பாக்கப்போறத நிறுத்தமாட்டாரு

அவரு கடைக்கே அவருபேருவைக்கல சில்க் டீஸ்டால் ந்னு வைச்சி புரட்சி பண்ணவரு. மத்த பாய்மாருக வந்து சொல்லிகில்லி பாத்தாக பாய் கடப்பேற மாத்துங்க . ஒரு மாதிரியா இருக்குன்னு

அசறலயே இவரு. போங்கபாய் வேலையப் பாத்துக்கிட்டு. டீல கோளாறு இருந்தா சொல்லுங்க ஏத்துக்கிறேன் பேருல கோளாறெல்லாம் சொல்லாதீக எனக்குப் புடிச்சிருக்கு அம்புட்டுத்தேன்

சில்க் மாதிரி திரும்பத்திரும்ப நெனைக்க வைக்கும் நம்ம கட டீ அதான் அந்தப் பேரும்பாரு.
டீயும் அவரமாதிரி போடமுடியாது. தனியாபாத்துரத்துல பாலு கொதிச்சிட்டு இருக்கும் டீத்தூள் தனியா டீயாத்துற கோப்பைல கொதிச்சிட்டு இருக்கும். அளவா டிக்காசத்த கிளாசுல ஊத்தி அளவா பாலச் சேத்து ஆளுக்கேத்தா மாதிரி சர்க்கரைபோட்டு ரெண்டு ஆத்து ஆத்தி தோள்ள போட்டிருக்கிற 

துண்டாலகிளாசத்தொடச்சிபூக்கொத்துகுடுக்குற மாதிரி டீயக்குடுப்பாரு அதான் எல்லா ருக்கும் புடிச்சிப்போய் அங்க கொண்டாந்து சேக்கும்

அவருக்கு புள்ளகுட்டிகெடயாது பீவி மாத்திரம் தான் எல்லாரும் கிண்டல் கூடப்பண்ணுவாக சில்க்கயே பாத்துக்கிட்டு பீவியக் கவனிக்கல போலன்னு. அதெல்லாம் கண்டுக்கமாட்டாரு பீவிவேற. சிலுக்குவேற அது தேவத பாத்து ரசிக்கனும்பாய்ம்பாரு
கடையிலவியாபார்த்தப்பெருக்குறதுக்காக

வடபோட ஆரம்பிச்சாரு. உளுந்தவட மசால்வட சமோசான்னு. சாயங்காலமானா கடைல கூட்டம் சமாளிக்க முடியலவேலைக்கி ஆள் போட்டுப்பாத்தாருபத்தாவது நாள் அவன் தனியாக்கடை போட்டுட்டான் . நமீதா டீஸ்டால்ன்னு இது சரிப்படாதுன்னு யாரையும் வேலைக்கி வைக்கிறதில்ல.

ஒருநாக்காலையில அஞ்சுமணிக்கி கடதொறக்கவந்தப்போ கடமுன்னாடி ஒரு சின்னப்பையன் சுருண்டு படுத்துக் கெடந்தான். டவுசரு கிழிஞ்ச சட்டயோட

எழுப்பிவிட்டுட்டுக்கடை தொறந்தாரு அவன் டீக்கிளாசை எல்லாம் எடுத்துவந்து தந்தான். விசாரிச்சிப்பாத்தாரு. அவனால பேசமுடியல ஊமையாயிருந்தான் சைகலதான் பேசினான், என்னா பண்ணியும் அவரால வெவரத்த வாங்க முடியல. அவன் சொல்றது இவருக்குப் புரியல. டீக்குடுத்தாரு. வாங்கி ச் சூடாச் சாப்புட்டான். பாத்தாலே தெரிஞ்சது அவன் கொடுமையான பசில இருந்தது

டீயச்சாப்புட்டவன்ன அவன் கண்ணுல தெளிவு வந்துச்சு. அன்னிக்கிப்புறாம் அங்கயே இருந்து டீக்கடைல ஒதவிபண்ணான். வீட்டுல இருந்து பீவி கொண்டாந்த சாப்பாடுல கொஞ்சம் குடுத்தாரு. சாப்புட்டான்.சைகயிலே கேட்டான் கிளாசைக்கழுவட்டுமான்னு

இவரு வேணாம்ன்னாரு. அவன் அதப்பத்திக் கவலப்படாம கழுவ ஆரம்பிச்சான். சரி நம்ம கூடயே இருக்கட்டும். எதுக்கும் போலீசுல சொல்லிவப்பம்ன்னு ஸ்டேசன்ல கூட்டிப்போயி காமிச்சாரு. அவங்களும் உங்க கூடயே இருக்கட்டும் எல்லா ஸ்டேசனுக்கும் தகவல் அனுப்புறம் . சேதிகெடச்சா சொல்றோம்னாக

மறுநாள்ல இருந்து அவரு கூடவே இருக்க ஆரம்பிச்சான் . கடைல ஒதவியா இருந்தாலும் அவனப்பத்தி ஒண்ணும் கண்டுபுடிக்க முடியல . கடைக்கி வந்தவுக சில்க் படம் போர்டுல இருக்குறதக்காட்டி தெரியுமான்னு கேட்டாக. அவனுக்குத் தெரியல. மொய்தீனக்கிண்டல் கூடப்பண்ணுனாக. பாரு உன் கடைலஇருக்குற வனுக்கே சில்க்கதெரியலன்னு பாய் சொன்னாரு. பச்சப்புள்ள அவனக் கெடுக்கா தீகன்னு.

இப்ப கடையில டீவி வாங்கிவைச்சாரு பாய்அதுல சன் டிவி ராஜ் டிவின்னு ஓடிட்டு இருக்கும். கேபிள் கனெக்சன் போட்டுருந்தாரு. ஒருநாள் சேனல் மாத்தயில அதுல இந்திப்பாட்டு ஓடிச்சிஅதுல ஜீனத் அம்மன் பாடிக்கிட்டு இருந்துச்சு சத்தியம் சிவம் சுந்தரம்ன்னு

இந்தப்பய அதைப்பாத்தான். எல்லாரும் கிண்டல்பண்ணுனாக டேய் இவன் ஜீனத்தோட ரசிகன்னு. ஆனா அவன் கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சிச்சி

அதப்பாய் பாத்துட்டாரு. அப்ப அவரோட பிரண்டு ஒருத்தரு கொஞ்சம் ஊமைகள் கூடபேசிப்பழக்கமுள்ளவரு. அங்க வந்தாரு

அவரவைச்சி அவனப்பத்தி தகவலத் தெரிஞ்சிக்க முயற்சிபண்ணாரு. பாய்
அதுல அவன் இந்த ஊரச்சேந்தவனில்ல
வடநாட்டச்சேந்தவன்ன்னு தெரிஞ்சது
ஆனா அதுக்குமேல ஒண்ணும் தெரியல

இவரும் எப்புடியாவது கண்டு புடிச்சி டுறதுன்னு இருந்தாரு. அன்னிக்கி விநாயகர் ஊர்வலம் வந்துச்சு. புள்ளையாரகடல்ல கலக்க ஊர்வலம் வந்துட்டு இருந்துச்சு. அப்ப அவனக்கவனிச்சாரு. அவன் மொகத்துல சந்தோசம் தெரிஞ்சது. 

அவன் சாமி கும்புட்டான். அவன் கண்ணுல தண்ணி வழிஞ்சிச்சு. அப்ப பாய் தெரிஞ்சிக் கிட்டாரு அவன் இந்துன்றத. அன்னிக்கி வெள்ளிக் கெழம கடைய சீக்கிரமா அடைச்சிட்டு அவன பக்கத்துல இருந்த கோயிலுக்குக் கூட்டிட்டுப் போனாரு உள்ளபோய் சாமிகும்புட்டுட்டுவான்னாரு
அவன் சந்தோசமாபோயி சாமிகும்புட்டான் வரும்போது அவன் நெத்தில காவிநெரத்துல அனுமார்கிட்ட இருந்து எடுத்து பூசிட்டு வந்தான். அப்ப சந்தோசமா இருந்தான்

அதுல இருந்து அவன அங்க சும்மா இருக்குறப்ப போயிசாமி கும்புட்டு வரச் சொன்னாரு. அவனும் போயிட்டு வந்தான். கடைக்குள்ள சின்னதா ஒரு ஆஞ்சநேயர் பொம்மவைச்சிக்கிட்டான்
கடைக்கிவாரவுக வித்யாசமாப்பாத்தாக அவன் மொய்தீன் குடும்பத்துல ஒருத்த னாயிட்டான். இப்ப அவன தத்தெடுக்க மொய்தீனுக்கு ஆச வந்துச்சு

ஒரு நாள் சில்க் இறந்துருச்சுன்னு செய்திவந்தவன்ன ரொம்ப சோகமாயிட்டார் பாய் மூணுநாளா கடை தொறக்கல. கடைக்கி முன்னாடி சில்க் படம் வைச்சி மாலை போட்டு வைச்சாரு. கடைய மூடிட்டு சில்க்க ப்பாக்க சென்னைக்கே போய்ட்டாரு. போய்ட்டு வந்து பொலம்பிக்கிட்டே இருந்தாரு. தேவதைய அநியாயமா கொன்னுட்டானுகளேன்னு கண்கலங்க சொல்லிக்கிட்டு இருந்தாரு

அப்புறம் ஒரு வழியா கடையதொறந்து சில்க் படத்த பெருசா வைச்சி பாத்துட்டே இருப்பாரு. இப்புடியே போச்சு அவர் பொழப்பு. கொஞ்ச வருசங்களாச்சு அவனுக்கும் வயசு பதினாலு பதினஞ்சு ஆகிப்போச்சு**
இப்ப அவனத்தத்து எடுக்கனும்ன்னா அவனுக்குப்பேருவைக்கனும் அவனோ அனுமாரக் கும்புடுறான் எப்புடின்னு புரியல

ஆனா அவனுக்குக்காதும் கேக்காது அதுனால அவன அப்துல்ன்னு கூப்புட்டாலும் அண்ணா மலைன்னு கூப்புட்டாலும் கேக்கப் போறதில்ல

ஆனா பாய் அவனுக்கு ராஜான்னு பேரு வைச்சாரு எல்லாருக்கும் பொதுவாருக் கட்டும்ன்னு. அப்ப ஒருத்தரு சொன்னாரு பேசாம அவன நம்ம மதத்துல சேத்துடலாம். நு. அதுக்கு பாய் சொன்னாரு

**அவன் ஒரு மதத்தச்சேந்தவன்னு தெரிஞ் சதுக்கு அப்புறம் அவன் மேல வேற மதத்தத்திணிக்கக்கூடாது. யாரு பெத்த புள்ளையோ. நம்மகிட்ட அடைக்கலமா வந்துட்டான். என்னிக்காவது அவனோட சொந்தக்காரவுக வரலாம் . அப்ப அவங்க அவன அவங்களோட புள்ளையாத்தான் பாக்கனும். அவனோட நெலமைய நமக்குச் சாதகமாப்பயன்படுத்திட்டோம்னு நெனைக்கக் கூடாது அவன் அவனாவே இருக்கட்டும்ன்னாரு. அதுக்கப்புறம் அவன் பெரியவனாயிட்டான். பாய்க்கு வயசாயிடுச்சு 

அவனே கடையப்பாத்துக்கிட்டான். பாய்க்கும் கொஞ்சம் பூர்வீக நெலத்துல பங்கு பிரிச்சப்ப கணிசமான பணம் வந்துச்சு. டீக்கடைய அழகு படுத்துனாரு. முழுசா அவனையே பாத்துக்க சொல்லிட்டாரு. அவன் சம்பாரிக்கிறத அவன் பேருலயே பேங்குல போட்டுவைச்சாரு

**வாலிபப்பருவம் வந்துச்சு. அவனைப்பாத்து ஒரு பொண்ணு ஆசைப்பட்டுச்சு. அது டீக்கடைக்கிப் பக்கத்துல இருந்த காய்கறிக் கடை வச்சிருக்குற ஒரு அம்மா வோட பேத்தி. அதுக்கு அம்மா அப்பா கெடையாது. **
இந்தப்பய செவப்பா அழகா இருக்க அவளுக்கு இவன் மேல் காதல் வந்துச்சு. இவனும் ஆசைப்பட்டான். ஆனா அந்தப்பாட்டி யோசனை பண்ணுச்சு. ஊர் பேர் தெரியாதவனா இருக்குறான். வீடு கூட சொந்தமா இல்ல நாளைக்கி பொண்ண விட்டுட்டு ஓடிட்டான்னா பாவம் அந்தப்புள்ள அனாதையாயிடும்னு யோசிச்சிச்சு

அப்ப பாய் போய் பேசுனாரு. அவன் பேருல ஏற்கனவே அவன் பேருல சேத்துவைச்சிருந்த பணத்தோட மேல பணம்போட்டு ஒரு வீடு வாங்கிக்குடுத்தாரு. இப்ப அந்தம்மாவுக்கு நம்பிக்கை வந்துச்சு கல்யாணம் முடிவாச்சு
கல்யாணம் இந்து மொறைப்படி நடந்துச்சு. பாய் அப்பா ஸ்தானத்துல இருந்து கலியாணம் பண்ணி வைச்சாரு. வாடிக்கையாளர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுனாங்க. ஒங்க மொறைப்படி கல்யாணம்நடந்திருந்தா பிரியாணி சாப்புட்டு இருப்போம்னு.

அதுக்கு பாய் சொன்னாரு அதுனால என்ன எப்புடியும் ஒரு வருசத்துல பேரப்புள்ள பொறந்துருவான் அப்ப பிரியாணி போட்டு அசத்திடலாம்ன்னாரு

கல்யாணம்முடிஞ்சதும் அவனும் புதுப் பொண்ணும் பாய் அப்புறம் அவர் சம்சாரம் கால்ல விழுந்தாங்க அவனைத்தூக்கி விட்டப்ப அவன் கண்ணுல இருந்து கண்ணீர் ஊத்துச்சு. அது என்னன்னமோ சொல்லிச்சி அதைப் பாத்ததும் பாய் கண்ணும் கலங்கிடுச்சு...

அல்லாவும் அனுமாரும் ஒங்களை நல்லா வைப்பாங்கய்யான்னு நா தழுதழுக்க சொன்னாரு... அவனுக்கு புரிஞ்சமாதிரி இருந்துச்சு... அப்ப அவன் சாடையில சொன்னான் எனக்கு அவங்களெல்லாம் 

நீங்கதானுன்னு.... இப்ப பாய் கலங்கிட்டாரு கண்ணத்தொடச்சிக்கிட்டாரு. 

- அ.முத்துவிஜயன்