முள் வாங்கி - சிறுகதை

mul-vaangi-short-story
முள் வாங்கி - சிறுகதை

எழுதியவர் -எழுத்தாளர்-மீனாட்சி ராமசாமி, ஆவடி

"ரைட்டா ?ரைட்டா?" என கால்களை தாவித்தாவி ஒவ்வொரு கட்டமாக குதித்து ,பாண்டி விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது கிராமத்து சிறுமி வள்ளிக்கு  வாழ்க்கையிலும்  எது சரி ? எது தவறு? என்று தெரியாத வயது தான்...  

 கலர் கலராய் பச்சை , சிவப்பு ,மஞ்சள்   என்று பூப்போட்ட வள்ளியின் பாவாடையும் ,மேல் சட்டையும் ஒரே துணியால் தைக்கப் பட்டிருந்தது  ..அவளது அந்த பழைய பாவாடை அவளது பாண்டி விளையாட்டுக்கு ஏதுவாக வெகு தூக்கலாகவே தான் இருந்தது... 

"ஏய் வள்ளி ! நீ விளையாடியது போதும்.... வேலை இருக்கு வா !நீ சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு வந்த பிறகு தான் அடுப்புல உலையே வைக்கணும்" என அவளது  அம்மா குரல் கொடுக்கவே,

இதோ வந்துட்டேமா" எனக் கூறிய வள்ளி பாதியில் பாண்டி விளையாட்டை நிறுத்திவிட்டு,மனதில் சற்று சலிப்போடு  தாயிட்ட கட்டளையை நிறைவேற்ற புறப்பட்டாள் விறகு பொறுக்க...

வெகு தூரம் சென்றும் சுள்ளி கிடைக்காமல் போகவே ,கருவேல முற்புதருக்குள் செல்ல ஆயத்தமானாள் வள்ளி..
எதிர்பாராத விதமாய் எதிரில் வந்து நின்ற 16 வயது சிறுவன்  மணி அவளை கட்டி அணைத்து முத்தம் தர முயன்றான் ...உடல் முழுக்க கூச்சத்துடன் வள்ளி சத்தம் போட முயல, அவளது வாயை கைகளால் பொத்தினான்... 
எங்கிருந்து வந்தது வள்ளிக்கு, பத்து ஆண்களின் பலம்?...

 சட்டென்று அவனை கீழே தள்ளிவிட்ட வள்ளி ,..அருகில் கிடந்த காய்ந்த முட் கிளையை எடுத்து அவனை சரமாரியாக அடித்து தன்னை காப்பாற்றிக் கொண்டாள்...

 சிறுபிள்ளை என்றாலும் அவளுக்குள் வந்தது ஓர் யானை பலம்... யானை துதிக்கையால்  தூக்கி எறிந்து மிதிப்பதை போல். இவளும் அவனை கீழே தள்ளி மிதித்து பந்தாடினாள்

 இதை சற்றும் எதிர்பார்க்காத அவனோ கையெடுத்து கும்பிட்டு "என்ன மன்னிச்சிடு... வெளியில சொல்லாதே! என் மானமே கப்பலேறி போயிடும்" என்ன சொல்லி அழுது கொண்டே

ஓட ஆரம்பித்தான்
. அவனை பின்தொடர்ந்து ஓடிய
அவளும் மூச்சுரைக்க ஓடி வந்து நின்ற இடம் அவளது இல்லம்....

 தாய் முத்தம்மா ஓடி வந்த மகளை பார்த்து அரண்டு போய் கட்டியணைத்து" என்ன ஆச்சுடி வள்ளி?சுள்ளி பொறுக்க போன இடத்திலே பாம்பை பார்த்தியா??இப்படி ஓடி வர ?"என்று கேட்கவே,
ஆமாம்மா ..ஒரு நச்சு பாம்பு..ஆனா கொல்லாம விட்டுட்டேன்.அது பேரு மணி "என்றாள்.

பின்னர் மகளிடம் விவரம் கேட்டு பதைபதைத்து விட்டாள்  வள்ளியின் தாய்... 
பெண் பிள்ளையை பெற்றவளாயிற்றே.. இருப்பினும் இதை வெளியில் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வார்களோ?என பயந்து மறைக்கும் மற்ற பிள்ளைகளைப் போல் இல்லாமல், தன்னிடம் உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்திய தன்மகளை எண்ணி பெருமிதம் அடைந்தாள்...

 அதே நேரம் முள்ளால் உடல் முழுதும் கீறலால் ரத்தக்கோடு போட்டு,இரத்தம் சொட்ட சொட்ட மணி அவனது  தாயின் காலில் வந்து விழந்தான்.அவனும் நடந்ததை நடந்தபடி அப்படியே கூறினான்
 மணியின் தாய் அவனை ஓங்கி அறைந்து,..

 உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகனும்.. தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சு தான் ஆகனும்”
. என்று கூறவே செய்வதறியாது திகைத்தான் மணி..

 "இதையும் கேளுடா மணி....பஞ்சாயத்து கூட்டினால் நான் அந்த பொண்ணு  பக்கம் தான் பேசுவேன்.
 "உனக்கு அம்மாவா இருக்கிறதை விட இன்னைக்கு அவளுக்கு அம்மாவா இருக்கிறது மட்டுமே சரி" என்று கூறி தவறான எண்ணம் கொண்ட தன் மகனை எண்ணி அழுதாள்...

 இந்த  செய்தி எப்படியோ வாசலுக்கு தண்ணீர் தெளித்தது போல் அங்கங்கே பரவி விட அந்த  விசயத்தை.  புள்ளி வைத்து நீட்டி வளைத்து கோலம் போட்டு கொண்டிருந்தனர் அந்த ஊர் மக்கள் ..

ஊர் பஞ்சாயத்து... அந்த ஊரில் சினிமா பாணியில் பெரிய ஆலமரம் ஒன்றும் இல்லாததால்,,, பஞ்சாயத்து தலைவரின் வீட்டு    திண்ணையே விவாத மேடை ஆனது ..

 பத்து வயது சிறுமி வள்ளி தலைநிமிர்ந்தபடி ஒரு புறமும்... எதிரே இரத்த கீறல்களுடன் வரிக்குதிரை போல் மணி தலைக்குனிந்து நிற்க பஞ்சாயத்து ஆரம்பித்தது...

 ஊர் மக்கள் அவனை பார்த்து மாறி மாறி  கேள்வி எனும் அம்பினை தொடுத்து துளைத்தெடுக்க ஆரம்பித்தனர் ..
"உனக்கு இந்த குற்றத்திற்கு என்ன தண்டனை கொடுக்கிறது ?"என்று கேட்ட பஞ்சாயத்து தலைவரை பார்த்து,
"நிறுத்துங்க" என்று கத்தினாள் வள்ளி "என்ன நடந்ததுன்னு தெரியாம ..ஆளுக்காளு , தப்பு செஞ்சவரை விட்டு விட்டு இவனையே குற்றம் சொல்றீங்களே? "என்று வள்ளியின் குரலைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றனர் ஊர்மக்கள்
 ஊரே வாயடைத்து நிற்க,...

 வள்ளி தனது பேச்சை தொடங்கினாள்.. இதோ நி்ற்கிறாரே இந்த பஞ்சாயத்து தலைவர் ... இவர்தான் உண்மையான குற்றவாளி .
இவரே தண்டனைக்குரியவர்..

இந்த பையன் அவரோட தோட்டத்துல மாங்கா பறிச்சதற்காக,
அவனை முள்வேலியில தள்ளி சரமாரியா அடிச்சிட்டாரு ..

"இதுக்கு நான் தான் ஒரே சாட்சி .
கண்ணால் பார்த்த சாட்சி . ஊர் பெரிய மனுஷன்ல அதான் செஞ்ச தப்ப மறைக்க வேறு கதை கட்டிட்டாரு ...  ' என்று கதையில் ஒரு திருப்பத்தை கொடுத்தாள் வள்ளி..

 ஒன்றும் புரியாமல்   குற்றவாளியான பள்ளி மாணவன் மணியோ ,அவனை தண்டனையிலிருந்து காப்பாற்றிய வள்ளியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான்..

என்ன காரியம் செய்ய இருந்தோம்? அதுவும் ஒரு  சிறுமியிடம்.... ஒரு நிமிட சபலத்தில் நமது  பள்ளி வாழ்க்கையையே பறிக் கொடுத்து இருப்போமே  "  என எண்ணி மனம் கலங்கியே வெட்கி தலை குனிந்தான் ..
. இவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை  ஊர் பெரிய மனுஷனுக்கு  நீங்களே கொடுத்திடுங்க மக்களே" என்றாள் வள்ளி.

 அடுத்து அங்கு பஞ்சாயத்து தலைவரின் பதவி பறிபோகவே, அவருக்கான தண்டனையாக பையனுக்கு வைத்திய செலவதற்கான 10,000 ரூபாய் மொய் பணமும் கொடுக்க  வைத்தனர் ஊர் மக்கள் 
ஊர் மக்கள் கலைந்து செல்லவே, தனித்து விடப்பட்ட தாய் தன் மகளிடம் "ஏண்டி ! இப்படி ஒரு பொய்யை  சொன்ன? ஊரில் பெரிய மனுசன் அவரு, தப்பு செஞ்சவன் காட்டிக்  கொடுக்காமல் ....  ..

வயசான மனுசனின், மானத்தை வாங்கிட்டியே ? என்று திட்டினாள் அம்மா..
 அந்த மணியனுக்கு 15 வயசுதான்மா ஆகுது.. ஏதோ வயசு கோளாறு, தப்பு செஞ்சிட்டான்... அதற்கான தண்டனையை அவனுக்கு நானே கொடுத்துட்டேன்..

 ஆனா ஊர் தலைவர் என்று வந்து நின்னாரே.ஒருத்தர் பஞ்சாயத்து சொல்ல..அவருக்கு  60 வயசு...   ..
 அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாரே இதைப் பற்றி விசாரிக்க, அப்பா உன் பக்கத்தில் இருக்கிறப்பவே, உன்னை அவர் பார்த்த பார்வையே சரியில்லை.  ....  அவரது நடத்தையை பற்றி என் கூட பழகுற  பிள்ளைங்க சொன்ன போது நான் நம்பவில்லை ...ஆனா

 அந்த கஷ்டத்தை நானே ஒரு தடவை அனுபவிச்சேன் .... அத அப்ப நான் சொன்னா நீ நம்பியிருக்க மாட்ட... நானும் பொம்பள புள்ள தானே..என்னை அவர் மடியில தூக்கி வச்சுகிட்டு, கொஞ்சி என்னை தொட்ட விதம்  சரி இல்லம்மா ...அது எனக்கு புரியாமலும்  இல்ல...

60 வயசுல கீழ்த்தரமான எண்ணம் கொண்ட இந்த மாதிரியான ஆளுங்க காலில்  குத்துன முள்ளு மாதிரி ....அந்த முள்ளை பிடிங்கி அங்கேயே அப்படியே விட்டுவிட்டா திரும்ப திரும்ப அது எல்லோருடைய காலிலும் குத்திக்கிட்டே தான் இருக்கும் .... காலில் குத்திய முல்லை  புடுங்கி தூர எறியனும்.. 

"முள்வாங்கி போல" என்றாள் வள்ளி
 இந்நேரம் மணி தான் செய்த தப்பை உணர்ந்திருப்பான்.. பாவம்...படிக்கிற பய. க அவனோட வாழ்க்கையை  கெடுத்து விடக்கூடாது அவனுக்கு நீதி சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கு?' என்று கூறி அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் 

" பத்து வயதில் இவளுக்கு இத்தனை பக்குவமா? "என்று மகளை பார்த்து வியந்தபடி அவளை பின் தொடர்ந்தாள் அவளது தாய்.