வள்ளி டீச்சர் - சிறுகதை
எனக்கு வேலைக்கான ஆடர் வந்திருந்துச்சு. மத்திய அரசுப்பணி நல்ல சம்பளம் வேற ஆனா வெளியூர்லதான் வேலை. நான் இருந்த ஊரையும் மக்களையும் பிரியவேண்டிய சூழ்நிலை... இனிமே எனக்கு ஊர் இந்த ஊரில்ல இனிமே நான் மதுரைக்காரன் இல்ல. ஊரைக்காலிபண்ணியாகனும்...
அப்ப அம்மா சொன்னாங்க போகிற எடத்துல புகழோட வாழனும்னா நாலு பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டுப்போ... போற எடம் நல்லாருக்கும். நீயும் நல்லாருப்ப.புலம் பெயர்தல் என்பது சிலர் வாழக்கையில் தவிர்க்க முடியாததாகிவிடும்... இனிமே உன் வாழ்க்கை அந்த ஊர்தான் இந்த ஊர்க்கு நீ வரப்போக இருக்கலாம். விருந்தாளியா
உனக்கு சொந்தபந்தமெல்லாம் இனி அந்த ஊர்தான். எல்லா நல்லதுகெட்டது எல்லாம் அங்கதான் நாங்களே வந்தாலும் பார்வையாளர் அல்லது விருந்தாளிகதான் நு சொல்லும் போதே நெஞ்ச ப்பிசையிறமாதிரி ஒரு லேசான வலி...
அப்ப நான் சொன்னேன் அம்மா அப்பா நீங்கதான் எனக்கு தெய்வம் ஆசீர்வாதம் பண்ணுங்கன்னு கால்ல விழுந்தேன்.
அப்பத்தான் அம்மா கேட்டாங்க நீ வள்ளிடீச்சர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கலியா அவங்களுக்கு உன்ன ரொம்பப்புடிக்குமேன்னு சொன்னவன்ன எனக்கும் அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு தோணிச்சி
ஏன்னா வள்ளி டீச்சர்தான் எனக்கு முதல் டீச்சர். ஒண்ணாங்கிளாசுக்கும் ரெண்டாங் கிளாஸ்க்கு ம் அவங்கதான் டீச்சர். அது ஒரு பஞ்சாயத்துப்போர்டு நடத்துற ஆரம்பப்பள்ளி. பள்ளிக்கூடமே பள்ளிவாசல் கட்டடத்துல தான் இருந்துச்சு. பின்னாடி மசூதி முன்னாடி பள்ளிக்கூடம். சாதரண ஓடு வேய்ஞ்ச கட்டடம்தான். ஒன்னுல இருந்து அஞ்சாவது வரைதான் வகுப்புகள். ஒன்னாவதுக்கும் ரெண்டாவதுக்கும் வள்ளி டீச்சர். எல்லாரும் சேந்துதான் ஒக்காரணும்..
மூனாவதுக்கு பாத்திமா டீச்சர். நாலாவதுக்கு பூரணம்டீச்சர். அஞ்சாவதுக்கு சுப்பையா வாத்தியார் . பள்ளிக்கூடத்துக்கு ஒரே ஆயா பாப்பாம்மா . ஒரு வகுப்புக்கு 20 பேரு. அவ்வளவுதான் பள்ளிக்கூடம்
வள்ளிட்டீச்சர் சுப்பையா வாத்தியாரோட மனைவி. பூரணம் டீச்சர் என்னோட பாட்டிமாதிரி. ஆக அது ஒரு குடும்பப் பள்ளிக்கூடம். சாயங்காலம் பள்ளிக்கூடத்துல மக்காச்சோள உப்புமாவும் பவுடர் பாலும் குடுப்பாங்க.. அதுக்குத்தான் பலபேரு பள்ளிக்கூடத்துக்கு வாரதே. என் பள்ளிகூட்டாளிக அயூப், ஹுமாயின் கருப்பையா எல்லாம் அங்கதான்.....
எல்லாப்பிள்ளைகளுக்கும் கைபிடிச்சி சிலேட்டுல அ ஆ எழுத்தச் சொல்லிக் குடுப்பாங்க . அப்புறம் வாய்ப்பாடு மனப்பாடம் செஞ்சி சொல்லச்சொல்வாங்க
கொன்றை வேந்தன் ஆத்திசூடி எல்லாம் கோரசா பிள்ளைங்க சொல்லும்போதுதான் தெருவுல நடக்குறவங்க நின்னு கேட்டுட்டுப் போவாங்க. அது ஒரு அழகான காலம். காலையில தமித்தாய் வாழ்த்து வள்ளி டீச்சர்தான் பாடுவாங்க... அவ்வளவு இனிமையா பாடுவாங்க....
வள்ளிடீச்சர் வீடு எங்கவீட்டுக்குப் பக்கத்தில தான். பள்ளிக்கூடத்துல டீச்சர். வீட்டுக்கு வந்தா அத்தை வாத்தியார் மாமா . அவ்வளவுதான் வாத்தியாரும் டீச்சரும் தீவிர முருகபக்தர்கள். சோம வார விரதம் சஸ்டி விரதம் ஒண்ணு விடாம இருப்பாங்க. திங்கக்கிழமையானா அவங்க வீட்டுல விரதம்தான் சாயங்காலம் மூணுமணிக்கி பள்ளிகூடத்துல ருந்து வந்து விரதம் விட்டுத்தான் சாப்புடுவாங்க சாயங்காலம் 4 மணிக்கி கா கான்னு கத்தி காக்காக்கி சோறுவைச்சா அன்னிக்கிதிங்கக்கிழமைன்னு சொல்லாமத்தெரியும்
பாப்பம்மா ஆயாவும் என் சொந்தம்தான். அம்மாயி மொறை, வள்ளிட்டீச்சர்தான் எனக்கு அ. ஆ சொல்லிக்குடுத்தவங்க. நிறையா கதை சொல்வாங்க. அவங்களுக்கு டீ நேரத்துல டீ நான் தான் வாங்கிக்குடுப்பேன். பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல ஹமீது ஓட்டல் மாதிரி வைச்சிருப்பாரு. அங்க டீயும் வடையும் கெடைக்கும்.. டீச்சருக்கு வாத்தியாருக்குத்தெரியாம வாங்கிட்டு வரணும். அவர் பாத்தா திட்டுவாரு....டீச்சர் யாரையும் அடிக்க மாட்டாங்க. ஆனா வாத்தியார் கணக்கு எடுப்பார் கண்டிசன் அதிகம் கைய நீட்டச்சொல்லி ஸ்கேலால அடி பின்னிடுவாரு
டீச்சர் மகன் பாலமுருகன் எனக்கு ஒருவயசு கம்மி. நானும் அவனும்ரொம்ப பிரண்டுக. ஏழாவது படிக்கையில பக்கத்து ஊருக்குக்கு பள்ளிக்கூடத்துக்கு நாங்க ரெண்டுபேரும் போவோம். என் டப்பா தயிர்சாதத்த புடுங்கிட்டு இட்லி குடுப்பான்...
பாப்பம்மா ஆயா பள்ளிக்கூடத்த தொறந்து வைச்சிட்டு கூட்டிப்பெருக்கிட்டு சொந்தக்கடைய விரிச்சிரும். பாப்பம்மாயி கடையில பள்ளிக்கூடப்பிள்ளைக எல்லாம் தேன்முட்டாயி நெல்லிக்கா மோதிர அப்பளம் எலந்தப்பழம் புளிஉருண்டை மாங்காகீத்து ஆரஞ்சுமிட்டாய் கடலமுட்டாய் எல்லாம் வாங்கிதிம்பாங்க.
ரம்சானுக்கு ஒருமாசம் முழுசும் பஞ்சாயத்துப்போர்டு பிரசிடெண்ட் இப்ராஹிம்சாராவுத்தர் பிள்ளைகளுக்கு வடையும் காசும் குடுப்பாரு
மசூதில நோம்புக்கஞ்சி குடுப்பாங்க. அதுல பங்கு பூரணம் டீச்சர் வள்ளி டீச்சர் வீடுகளுக்கு வரும். ரம்சானுக்கு திக்கடியும் தலக்கறியும் டீச்சர் வீடுகளுக்குக் குடுத்துவிடுவாரு
மத்தியான நேரத்துல வெளையாட்டுக்கு பள்ளிவாசல் பின் புறம் இருக்குற எடத்துல
வெளையாடுவோம். அங்கதான் மெளத் ஆனவங்களை அடக்கம் செய்வாங்க. சமாதிகள் இருக்கும் கொஞ்சம் பயமாருக்கும். அங்க ஒரு குளம் இருக்கும். அதுல கைகால் கழுவுவோம். ஆழம் இருக்காது.
இப்புடித்தான் இருந்துச்சு அந்த பள்ளிக்கூடம். அது பள்ளிக்கூடமாகவே தெரியல ஏதோ வீடுமாதிரிதான் இருந்துச்சு. ஆறாவதுக்கு அப்புறம் நான் பள்ளிக்கூடம் மாறிட்டேன்.
ஆனா வள்ளிடீச்சர் விசாரிச்சிக்கிட்டே இருப்பாங்க. நான் பத்தாவது நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணவன்ன அவ்ங்ககிட்டப்போய் சொல்லி ஆசீர்வாதம் வாங்குனேன். நல்லா படி பட்டம் எல்லாம் வாங்குன்னு வாழ்த்தினாங்க..
அதுனாலதான் இப்ப அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கப் போனேன்.வாப்பா எப்படி இருக்கே அம்மா அப்பா எல்லாம் நல்லாருக்காங்களான்னு விசாரிச்சாங்க. நான் நல்லாருக்காங்கன்னு சொன்னேன். அப்புறம் வேலை கெடைச்சதையும் வெளியூர் போகப் போறதையும் சொல்லி ஆசீர்வாதம் வாங்க வந்திருக்குறதையும் சொன்னேன்.. அவங்க மொகமெல்லாம் சந்தோசம். கொஞ்சம் இருன்னு சொல்லீட்டு உள்ளாற போனாங்க.
போய் 15 நிமிசம் ஆச்சு. வரல நான் காத்திருந்தேன். கொஞ்சநேரத்துல குளிச்சிட்டு ஈரம்காயாம நெத்தில விபூதி இட்டு பக்திமயமா வந்து உள்ளாற கூப்புட்டாங்க. அவங்க வீட்டுல சாமி அறைக்கிகூட்டிட்டுப்போய் கும்புட்டு விபூதி இட்டாங்க. நான் அவங்க கால்ல விழுந்தேன். அவங்க அப்ப சொன்னாங்க எந்திரிய்யா . நீ நல்லா வருவ அந்த ஆறுமுகம் உன்ன காத்துக்கிடுவாரு.. பெரிய ஆளா வருவ. உன்னால முடிஞ்சதை தமிழுக்குச்செய்.. நீ பெரிய எழுத்தாளனா வரணும்... தமிழ்கடவுள் முருகன் உன்னோட எப்பையும் இருப்பாருன்னு சொல்லி கைல 10 ரூவா குடுத்தாங்க.
அந்தப்பத்துரூவாயும் வள்ளிடீச்சரும் எப்பையும் நெனவுக்கு வருவாங்க ஆசிரியர்தினம் வரும்போதெல்லாம் அந்தப்பழைய 10 ரூ நோட்டு இன்னும் என்னிடம் பத்திரமா இருக்கு.
அ.முத்துவிஜயன்