பாத்திமா நாச்சியாரும் பூக்குழியும் - சிறுகதை
என்னோட தங்கச்சிய மானாமதுரையில கட்டிக்குடுத்துருக்கோம் , அதுனால மானா மதுரை அடிக்கடி போய்வரது வழக்கம். அப்படி இந்தமாசத்தொடக்கத்துல மொதவாரம் அங்க போயிருந்தப்ப என்னோட பிரண்டு ஒருத்தர பாத்தேன் அவர் கொஞ்சம் சமூகச்சிந்தனை இருக்குறவரு. அவர்கிட்டப் பேசிக்கிட்டு இருந்தப்ப அவர் சொன்னார் இந்தப்பக்கத்துல ஒரு அதிசயத்திருவிழா இருக்கு பாக்க வாறீங்களான்னு கேட்டார்
நானும் அதுக்குத்தான ஆவலாக் காத்திருக் குறோம் நிச்சயமா வாறேன் அது என்ன அதிசயத்திருவிழான்னு கேட்டேன் அதுக்கு அவர் சொன்னாரு ஒரு இஸ்லாமிய தர்கா முன்னாடி இந்துக்கள் விரதம் இருந்து பூக்குழி எறங்குவாங்க அப்புடி எறங்கி வாரவங்களுக்கு இஸ்லாமிய சொந்தங்கள் விபூதி பூசி விடு வாங்க ஊரே திருவிழா களைகட்டும் அதுவும் என்னிக்கி இஸ்லாமியப்பண்டிகையான மொகரத்தன்னிக்கி இது அதிசயத்திருவிழா தானனு கேட்டார்
நானும் சொன்னேன் நிச்சயமா அதை நான் பாக்கனுமே என்னிக்கி எங்கன்னு கேட்டேன் அதுக்கு அவர் சொன்னார் வார ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதுவன் திடல் ன்ற கிராமத்துலதான் அது நடக்கப்போகுது வறீங்களான்னு கேட்டார் நிச்சயமா வருகிறேன் நு சொன்னதும் சரி மொதநாளே நீங்க எங்க வீட்டுக்கு வந்துருங்க மறுநாள் சேந்தே போவம்னு சொன்னாரு
அதேமாதிரி நானும்7 ஆம் தேதி ராத்திரியே அவங்க வீட்டுக்குப்போயிட்டேன். அப்ப அவர் சொன்னாரு வாங்க சாப்புடலாம்னு பக்கத்துல இருக்குற தெருவோர ஓட்டல்க்குக் கூட்டிட்டுப்போனார். அங்க நமக்குப்புடிச்ச புரோட்டா ஆம்லேட் ஆடர் பண்ணிட்டு காத்திருந்தோம்
அப்ப அங்க காப்புக்கட்டி மஞ்ச வேட்டி துண்டு போட்ட ஆளுக அங்க அங்க போய்கிட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தரைக்கூப்புட்டு என்ன காப்புக் கட்டிருகீங்கன்னு விசாரிச்சோம் அப்ப அவர் சொன்னார் முதுவன் திடல் பாத்திமா நாச்சியார் தர்காமுன்னாடி பூக்குழி எறங்குறதுக்காகக் காப்புக்கட்டிருக்கோம், ஒரு வார விரதம் அசைவம் சாப்பிடாம சுத்தபத்தமா இருக்கனும்
பொதுவா இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்த்தல் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், விவசாயம் செய்து அறுவடை செய்த பிறகு, பாத்திமா நாச்சியாருக்கு படையல் செய்வது இந்த கிராம மக்களிடம் உள்ள கூடுதல் வழக்கங்கம்னும் சொன்னாரு
சரி நீங்க எதுக்காக விரதம்னு கெட்டப்ப கலியாணம் பண்ணி 7 வருசம் ஆகுது குழந்தைப்பாக்கியம் இல்ல. பண்ணாத வைத்தியம் இல்ல. இந்த தர்காவுக்கு வேண்டிக்கிட்டேன் குழந்தை பொறந்திருச்சு அதான் நேர்த்திக்கடன் செலுத்த காப்புக்கட்டிருக்கிறேன்
நாளைக்கிக்காலையில வெள்ளனா வே பூக்குழி எறங்குவோம் அந்தப் பூக் குழிக்கித்தான் இப்ப எல்லாரும் வெறகு கொண்டுபோய் குடுக்கப்போறோம்னு சொன்னார்.
அதுசரி என்ன லாஜிக் தர்காவுக்கு முன்னாடி பூக்குழி கொஞ்சம் வெவரமாச் சொல்லுங் கன்னு கேட்டதுக்கு அவர் சொன்னாரு
திருப்புவனம் அருகே முதுவந்திடல் என்ற கிராமம் இருக்குது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் இங்கு இருந்திருக்காங்க . ஆனால் காலப்போக்கில் இந்த கிராமத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பிற இடங்களுக்கு பொழப்புக்காக போய்ட்டாங்க.. இப்ப கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே அதிகம் இருக்காங்க . இருந்தாலும் பல வருடங்களுக்கு முன்னாடியே , இந்துக்களும் முஸ்லிம்களும் இங்கு ஒத்துமையா ஒருத்தருக்கு ஒருத்தர் அங்காளி பங்காளிகளா இருந்திருக்காங்க
ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், முஸ்லிம்களும், இந்துக்களும் ஒன்னாவே கொண்டாடி சந்தோசமா இருந்துருக்காங்க
. இந்த சமயத்தில்தான், அப்போது பாத்திமா நாச்சியார் என்ற பெண் ஒருவர் அங்கு சிறப்பாக வாழ்ந்துருக்காரு .. அந்த கிராமத்துப் பெண்ணை நினைவுகூறும் வகையில்தான் இங்கு 10 நாட்கள் விழா கொண்டாடுவது வழக்கம்... அவர் இறந்தபிறகு,
முதுவன் திடல் கிராமத்தில் மையப்பகுதியில் தர்கா, பள்ளிவாசல் ஆகியவற்றை அமைத்து, பாத்திமா நாச்சியாரை, முஸ்லிம்கள் தெய்வமாக வழிபட்டு வருவதை ஒவ்வொரு மொகரம் அன்றும் கடைப்பிடிக்கிறாங்க
அதேபோல, நேர்த்திக்கடன் தீர்க்க நினைப்பவை நடப்பதாகவும் தீர்க்கமாக நம்புறாங்க, இந்த கிராம மக்கள். அதுமட்டுமல்ல, அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் இந்துக்கள் அவைகளை தொடங்குவாங்க
இந்தவருசமும் அது மாதிரிதான் விரதமிருக்குறாங்க நாளைக்கிக்காலையில வெள்ளனா தீக்குழி எறங்குவாங்கன்னு சொன்னாரு
நாங்களும் காலையில 3 மணிக்கே அலாரம் வைச்சி எந்திரிச்சி குளிச்சிட்டுத் திருவிழாப்பாக்கபோனோம்
தர்கா முன்னாடி ஊரே கூடியிருந்துச்சு அங்க ஒரு பெரிய பள்ளம் வெட்டி அதுல நெருப்பு மூட்டி கங்குகளாக்கிப் பரத்திவிட்டுருந்தாங்க பக்கத்துல நிக்க முடியல அனலடிச்சது
கொஞ்சநேரத்துல பக்தர்கள் வரிசையா பறையொலி முழங்க வரிசையா வந்து பூக்குழி எறங்க ஆரம்பிச்சாங்க சின்னபயலுக பெரியவங்கன்னு ஏகப்பட்ட பேரு வரிசையா வந்து பூக்குழிக்குள்ள எறங்கி ஏறிவர அப்புடி வந்தவங்களுக்கு தர்காவில இருந்து வந்த இஸ்லாமியர்கள் துண்ணூரு பூசி விட்டாங்க
அது ஒரு மணிநேரப்பக்கமா நடந்துச்சு அதுக்கப்புறம் நடந்தது இன்னும் வினோதமா இருந்துச்சு
பெண்கள் முக்காடிட்டு உட்கார்ந்து கொள்ள, ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைச்சாங்க .. இப்படிச்செய்யிறதுனால பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாதுன்னு நம்புறாங்க
பாக்கவே அதிசயமாவும் ஆச்சர்யமாவும் இருந்துச்சு. இதுல வேடிக்கை என்னன்னா இப்ப இஸ்லாமியர்கள் அந்த ஊரில அவ்வளாவா இல்ல இருந்தாலும் இந்தத்திருவிழாவுக்காக வாறாங்க.
தீக்குழி இறங்கியவங்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்குவதும் .. இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்த, முஸ்லிம் மக்கள் விபூதி வழங்கி ஆசீர்வதிக்கும் காட்சியும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திச்சு.. இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் தொடருறது சந்தோசமா இருந்துச்சு.
அப்ப அங்க அதிகாலை நேரத்திலேயே பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.. முதுவந்திடல் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர் களுடன் பகிர்ந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடுனாங்க
நமக்கும் அது கெடைச்சது. அந்த உணவில ஒரு வாசமும் சுவையும் இருந்துச்சு அது நம்ம மண்ணோட வாசமாவும் சுவையாவும் இருந்துச்சு
அ.முத்துவிஜயன்