ஆண்டவன் கட்டளை - சிறுகதை

aandavan-kattalai-short-story
ஆண்டவன் கட்டளை - சிறுகதை

அன்னிக்கி கும்பகோணம் அருகே வலங்கைமானில் ஒரு நிகழ்ச்சி அதுக்குபோய்ட்டு திரும்பி வந்துக்கிட்டு இருந்தான் அவன். நிகழ்ச்சி முடிய மாலை 5.00 மணியாயிருச்சி. அங்க இருந்தவங்களோட பேசிட்டு இருந்துட்டுக் கிளம்ப ஆறாயிருச்சி. எப்புடியும் இரவு 8.40 க்குத்தான் கும்பகோணத்துல ரயில் புக்பண்ணிருந்தான் அதுனால மெதுவா கிளம்பி ரயில் நிலையம் வந்து சேந்தான்.

 அங்க இருக்குற ஒரு கேண்டீன்ல டிபன் நல்லாருக்கும். இட்லி பொங்கல் பூரி வடை சப்பாத்தி நு குடுப்பாங்க அதுவும் போக கும்பகோணம் ஸ்பெசல் காப்பி அங்க 10 ரூக்கி குடுப்பாங்க நல்லாருக்கும்.
அந்தக்கேண்டீன் போய்ட்டு நாலு இட்லி வாங்கிச்சாப்புட்டுப்புட்டு அப்புடியே ஒரு காப்பியும் வாங்கிக்குடிச்சிப்புட்டு வரப்போற ரயிலுக்காகக்காத்திருந்தான். அங்க வந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பிரபலங்களும் அங்கு வர அவங்ககூடப்பேசிட்டு இருந்தான் . ஏ.சி கம்பார்ட்மெண்ட் பி-2 பெர்த் 14 அப்பர் பெர்த்துதான்

ஏறிப்படுக்கச் கொஞ்சம் சிரமா இருந்தாலும் படுத்தா தொந்தரவு இருக்காது ஆனா மதுரைக்கி அதுஅதிகாலை 1.45 க்கு வரும் அதுனால பாத்து தூங்கிடாம இறங்கனும். இல்லாட்டி ரயில் ராமேஸ்வரம் போயிரும் . ஒருவழியா 850 க்கு கொஞ்சம் தாமதமாத்தான் வந்தது ரயிலு. ஒரு வழியா ஏறி பெர்த்துல படுத்துக்கிட்டு ஞாவகமா அவனோட சின்னபோன்ல ( பழைய பட்டன் மாடல்) ல 1.15 க்கு அலாரம் வைச்சிட்டு படுத்துத்தூங்கினான்

நல்லாத்தூங்கிட்டு இருக்குறப்ப திடீருன்னு முழிப்பு வந்து எழுந்து பார்த்தான் ரயிலு நின்னுக்கிட்டு இருந்துச்சி. வெளிய எட்டிப்பாத்தா அது திருச்சி ரயில்வே ஸ்டேசன். அப்ப சைடு அப்பர் பெர்த் ஒன்னு நம்பர் 31 நு அவனுக்கி ஞாவகம் அதுல எறங்கிப்படுத்தான் ஏன்னா மதுரையில பாத்து எறங்க வசதியா இருக்கும். அந்தபெர்த்துக்கு நல்ல வேளையா யாரும் வரல மறுபடி ஒரு தூக்கம் . அலாரம் 1.15 க்கு போன்ல அடிச்சது  பாத்துட்டு அரைத்தூக்கத்துல  கோட் மேல் சட்டைப்பையில் வைச்சிட்டு திரும்பப் படுத்தான்

சரியா 2.00 . மணிக்கி ரயில் மதுரை வந்து சேந்த்துச்சு. அடிச்சிப்பிடிச்சி எறங்கி ஸ்டேசனை விட்டு வெளியே வந்து ஏற்கன்வே அங்க போட்டு வைச்சிருந்த இரு சக்கரவாகனத்தை எடுத்துக்கிட்டு அவனோட ஊரு அங்க இருந்து 4 கி.மீ தூரம் அச்சம்பத்து என்ற ஊர். அங்க கிளம்பினான் போறவழியில இரவில் திறந்து வைச்சிருக்கும் டீ கடை மொடக்குச் சாலை பாலத்துக்குப் பக்கத்துல இருக்கும் அதுல வண்டிய நிப்பாட்டிட்டு ஒரு டீ சாப்பிட்டான். 

அப்போதுதான் கவனிச்சான் மேல்கோட்  சட்டை பாக்கெட் ஜிப் திறந்திருந்துச்சு. அதுலதான போன வைச்சோம் நு நெனப்புவர  தேடிப்பாத்தா போனைக்காணோம். ரயிலிலே கீழே விழுந்திருக்கு  ஒடனே வண்டியத்திருப்பி ரயிவே ஸ்டேசன் போய்ப்பாக்கலாம் ஒரு வேளை ரயில் நின்னா உள்ளபோய்ப்பாக்கலாம்னு போனான் . 

ஆனா இவன் போதாத நேரம் அது போயிருச்சி. திரும்ப வீட்டுக்கு வந்து யோசிச்சப்பத்தான் நெனவுக்கு வந்துச்சு அந்தபோன்லதான் எல்லா பாஸ்வோர்டு ஓ டி பி எல்லாம் லிங்க் பண்ணிருந்தது. அது யாராவது வில்லங்கமான ஆளுக கையில் கிடைச்சா எது வேணுமானாலும் நடக்கலாம் நு . ஒடனே திரும்ப வண்டி எடுத்துக்கிட்டு ரயிவே ஸ்டேசன் போனான். அங்க ரயில்வே போலீஸ்ல போய் கம்ப்ளெண்ட் குடுத்துறனும் நு. அங்கபோனா இப்ப TRP போலீஸ் தமிழ்நாடு கட்டுப்பாட்டுல வரதுன்னு சொன்னாங்க. 

அங்கபோய் அங்க இருந்த காவலர்களிடம் விவரத்தைச்சொன்னான்

அவங்க உடனே ரயில் எங்கபோகுதுன்னு செல்லுல பாத்துட்டு ராமநாதபுரம் அருகே போகுதுன்னு தெரிஞ்சிக்கிட்டு அங்க இருக்குற TRP போலீஸ் கிட்ட சொல்லி ரயில் அங்க வரும்போது பி-2 பெர்த் 14 ல செக்பண்ணச்சொன்னாங்க. அப்ப அவங்க சொன்னாங்க நீங்க தொலைஞ்ச போன் நம்பர் அப்புறம் உங்களோட போன் நம்பர் குடுத்துட்டுப்போங்க. ஏதாவது தகவல் கிடைச்சா சொல்றோம் நு
அவன் வீட்டுக்கு வந்துட்டு தொலைஞ்ச போனுக்கு கால் போட்டுப்பாத்தான் கால் போய் ரிங் ஆச்சு ஆனா யாரும் எடுக்கல. அப்ப இவனோட இஸ்ட தெய்வம்  கிட்ட வேண்டிக்கிட்டான் போன் 

திரும்பக்கிடைக்கனும் நு. கொஞ்சநேரத்துல ஒரு போன் கால் வந்துச்சு அதுல பேசுனவங்க மதுரை TRP போலீஸ். அவங்க சொன்னாங்க ”ராமநாதபுரத்துல TRP போலீஸ் போய் பி-2 பெர்த்14 ல தேடிப்பாத்தாங்களாம் போன் கிடைக்கலயாம் . எதுக்கும் ராமேஸ்வர்த்துல இருக்குற TRP போலீஸ்க்கு சொல்லிருக்கோம் பாக்கலாம்” நு சொன்னாங்க.

இவனுக்கு நம்பிக்கை போயிருச்சு இருந்தாலும் இஸ்டதெய்வத்துக்கிட்ட வேண்டிக்கிட்டு தூக்கம் வராம பொறண்டுக்கிட்டு இருந்தான் . லேசா கண்ணசந்தப்ப திரும்ப ஒரு போன் கால் மணி 5.30. அதுல ஒருத்தர் பேசுனாரு . ”நீங்க கால்பண்ண போன் வந்தது  அது உங்கபோனா” நு

கேட்டாங்க. ஆமா நு தொலைஞ்ச விபரம் சொல்ல அவங்க சொன்னாங்க “ நாங்க ராமேஸ்வரம் TRP போலீஸ். மதுரையில் இருந்து

TRP போலீஸ் சொன்ன விபரம் வைச்சித்தேடிப்பாத்தோம் அந்தபோன் பெர்த் நம்பர் 31 ல கிடைச்சது கம்பளிக்குள்ள இருந்துச்சு நீங்க நேரில் ராமேஸ்வரம் வந்து அடையாளம் சொல்லி போன வாங்கிக்கங்க” நு சொன்னாங்க

அதைக்கேட்டதும் இவனுக்கு ஒரு விசயம் நெனப்புக்கு வந்துச்சு.

அது அவன் கடந்த பிரவரி மாதம் காசிததமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அவர்களின் அழைப்பின் பேரில் எழுத்தாளர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு மகா கும்பமேளா 2025 நடந்த சமயத்தில் அலகாபாத்( பிரயாக்ராஜ்) அயோத்தி மற்றும் காசி( வாரணாசி) போய்ட்டு கும்பமேளாவில் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதர் கோவில் போய்வந்தது.

எல்லாரும் ஒரு விசயம் சொல்லுவாங்க. காசி போனா ராமேஸ்வரமும் போய்வந்தாத்தான் அது யாத்திரை நிறைவடையும் நு. அவனுக்கு காசி போய் வந்தபின்னாடி ராமேஸ்வரம் போற ஆசை பெருசா இல்ல ஏன்னா காசியைவிட அவனுக்கு மிகவும் பிடித்த இடம் அரித்துவாரும் ரிசிகேசும் அங்கதான் அவன் பலமுறை போய்வந்துருக்கான்.

ஆனா இப்ப ராமேஸ்வரத்தில் இருந்து அழைப்பு வரச்சொல்லி 
என்ன ஒரு கட்டளை நமக்குன்னு நெனச்சிக்கிட்டான்

மறுநாள் இரவு 2.40 க்கு ரயில்ல ராமேஸ்வரம் நோக்கிப்புறப்பட்டான் ரயில் போய் சேர்ந்தநேரம் காலை 5 மணி. அங்க 5.45 க்கு திரும்பிவர ரயில் தயாரா நின்னுக்கிட்டு இருந்துச்சு. சரி TRP போலீஸ்கிட்டபோய் போன வாங்கிட்டு அந்த 5.45 வண்டில திரும்பிறலாம்னு போன அங்க யாருமே இல்ல

கொஞ்சநேரத்துல அங்க ஒரு TRP போலீஸ் வந்தார் . அவர்கிட்ட விபரம் சொல்லவும் அவர் சொன்னார்” இங்க இன்ஸ்பெக்டர் காலை 8.00 மணிக்குத்தான் வருவார் போய்ட்டு 8 மணிக்கு வாங்கன்னு சொன்னார். ஸ்டேசனை விட்டு வெளியே வந்தா கோவிலுக்கு அரசு பேருந்து கிளம்பத் தயார் நிலையில் இருந்துச்சு. சரி போய்ட்டு வரலாம் நு அதில் ஏறிப்போனான். அங்கே கோயில் அருகே லாக்கர் வசதி இருந்தது. 100 ரூ கொடுத்தால் நம்ம பைகளை அங்கே வைச்சிட்டு தேவையான துணிமணிகளுடன் போய் கடலில் குளிச்சிட்டு அதுக்கப்புறம் கோயில் உள்ளே 22 தீர்த்க் கிணறுகளில் குளித்துவிட்டு அப்படியே  ராமநாதசாமியையும் பர்வதவர்த்தினியையும் பாத்துட்டு வரலாம்னு போய் எல்லாம் முடிச்சிட்டு வெளியே வந்தால் மணி 7.45

பின் லாக்கரைகாலி பண்ணிட்டு நடந்து திரும்ப ரயில்வே ஸ்டேசன் போனான். அங்க TRP போலீஸ் அலுவலகத்துப்போய் விபரம் சொன்னான் அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர் “ சார் நீங்க டி.வி. ல வருகிற வா தமிழா வா ல பேசுனவர் தான நல்லாப்பேசுனீங்கசார்” நு சொல்லவும் எல்லாருக்கும் அவனுக்கும் மகிழ்ச்சி ஆயிருச்சு அப்ப அங்க இருந்த இன்ஸ்பெக்டர் அவனைப்பாத்து “ சார் என்ன பண்ணுறீங்க?” நு கேட்டவன்ன அவன் விபரம் சொன்னான்       அதைக்கேட்டுட்டு அவர் அந்த எழுத்தாளர் நீங்கதானா எனக்கும் உங்க கதைகள் ரொம்பப்பிடிக்கும் நு சொல்லி சந்தோசப்பட்டு போட்டோ எடுக்க்கொண்டார்கள். 

அவனுடைய போனை வாங்கிக்கொண்டதற்கான ஒரு கடிதம் கொடுக்கச்சொல்லி பெற்றுக்கொண்டு போனைக்கையில் கொடுத்தாங்க. அவன் வாங்கிட்டு இன்ஸ்பெக்டரிடம் அவரோட பேரைக்கேட்டான். அவர் சொன்னார் அவரோடபேரை அது “ விக்னேஸ்”

அட அது இவனோட இஸ்ட தெய்வம் நம்ப பிள்ளையாரோட பேர் அல்லவா

அப்ப அவனுக்கு நெனப்பு வந்துச்சு அவனை ராமேஸ்வர்த்துக்கு வரச்சொன்ன அந்த ”ஆண்டவன் கட்டளை” அதனுடன் இருந்த விநாயகரின் துணையும்.

அ.முத்துவிஜயன்.,