நொடிப் பொழுது மயக்கம் - சிறுகதை
பக்கத்துவீட்டுல ஓன்னு அலறல் சத்தம் கேட்டுச்சு. என்னா ஏதுன்னு புரியாமக் கத்துனாக. இவளுக்கு ஒன்னும் புரியல மாடில இருந்துவேகமா எறங்கி தடதடன்னு பக்கத்து வீட்டுக்கு ஓடினா, அங்க அந்த வீட்டுல இருந்தவரோட மக ஒருரூம் கதவைத் தட்டி தொறக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தா
இவ அங்கபோனதும் அக்கா அப்பா தூக்கு மாட்டிக்கிட்டாரு கதவத்தொறக்க முடியல உள்ளாற பூட்டிருக்காரு சீக்கிரமா கதவத்தொறந்தாதான் அவரைக்காப்பாத்த முடியும் நு அழுதுகிட்டே கத்துனா
இவளும் போய் தள்ளிப்பாத்தா முடியல. வெண்டிலேட்டர் வழியாப்பாத்தா அவர் அந்த முயற்ச்சில தான் இருந்தாரு ஒரு ஸ்டூலப் போட்டு அதுமேல ஏறி பேனில் சேலையமாட்டி சுருக்குப்போட்டுக்கிட்டு இருந்தாரு
இவங்க கதவை தட்டி புரயோசனம் இருக்குற மாதிரி தெரியல. ஏன்னா அவர் அவராக் கதவைத்தொறக்குற மாதிரி தெரியல. நேரமும் இல்ல எந்த நேரத்துலயும் அவர் தொங்கிடுவார் போலத்தெரிஞ்சது இப்ப ஒரே வழி கதவை ஒடச்சிதொறந்து அவரக்காப்பாத்துறதுதான்
இப்ப வேகமா அவளும் இவளும் கதவை இடிச்சிதொறக்க முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாக ஆனா முடியல ரொம்பக்கஸ்டமா இருந்துச்சு அப்ப இவ சொன்னா இன்னும் ஆளுகளைக்கூப்புடு கடப்பாரை இருக்குதான்னு கேட்டா இருக்குன்னு ஓடிப்போய் எடுக்கப்போனா அதுக்குள்ள இன்னொருத்தர் வந்துட்டாரு அவரும் கதவை ஒடைக்கமுயற்ச்சி பண்ணுனாரு
அதுக்குள்ள அந்தப்பிள்ள கடப்பாரைய கொண்டாந்துருச்சு அதை வைச்சி பேத்து கதவைதொறக்க தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாக அதுக்குள்ள உள்ளாற ஸ்டூலை தள்ளிவிட்டு அது கீழ விழுகிற சத்தம் கேட்டதும் பதட்டமாயிடுச்சு எல்லோருக்கும் ஓன்னு அலறுனா அவரோட மக அப்பா அப்பான்னு கத்துனா
அவரோட சம்சாரம் ஆறுமாசத்துக்கு முன்னாடிதான் அநியாயமா செத்துப்போச்சு ரெண்டு பேருக்கும் அவ்வளவாவயசாகல அவருக்கு 55 இருக்கும் அவர் சம்சாரத்துக்கு 47- 48 இருக்கும் ஆணும் பொண்ணுமா ரெண்டு பிள்ளைக ரெண்டுபேருக்கும் கலியாணமும் பண்ணி வைச்சாச்சு.
அந்தம்மாசொந்த வயல்ல போய் வேலை பாத்துட்டு வந்து படுத்தவதான் ஒடம்பு நீலமாப்போய் செத்துப்போச்சு. என்னான்னு விசாரிச்சா ஆளுவைச்சிவயலுக்கு மருந்த டிக்கனும்னு பேசி ஆளை வரச் சொல்லி ருக்கு. வந்தவன் கூலி அதிகமாக் கேட்டவன்ன இந்த அக்காவே மிசின வாடகைக்கு வாங்கி மருந்தக்கலக்கி அடிச்சிருக்கு அதுல என்னா கோளாறாச்சுன்னு தெரியல. எப்புடியோ அந்த மருந்து உள்ளாற போய் ஆளைக்காலி பண்ணிடுச்சு. பாவம் இவர் விழுந்து விழுந்து அழுதார்.
ஏன்னா அந்தம்மான்னா அவரும் கையில வைச்சி தாங்குவார். பேரைக்கூடச்சொல்ல மாட்டார் ஏண்டா என்னடா வேணும் இதெச்செய்யட்டுமா அதைச்செய்யட்டுமா என்ன வேணும்சொல்றா வாங்கியாந்து குடுக்குறேன்னு தாங்கு தாங்குவாரு. அதுமட்டுமில்ல சாப்பாடுல இருந்து தண்ணி வரைக்கும் அவங்க கையில வாங்கி சாப்புட்டாத்தான் அவருக்குத் திருப்தி. மகளோ மருமகளோ சாப்பாடு வைக்கவந்தா வேணாம் அவ வந்துருட்டும் அவகையில சாப்புட்டாத் தான் திருப்தின்னு பிடிவாதம் புடிப்பாரு.
பிள்ளைக கூட கேலிபண்ணும் பாவம் இப்பத்தான் கலியாணம் ஆன புது ஜோடி அப்புடியே உருகுறாரு பொண்டாடிய வைச்சின்னு கேலிபண்ணுவாங்க,அதுதான் அந்தம்மா சாவு அவரை உலுக்கிருச்சு
அன்னையில இருந்து அவர் தளந்துபோனாரு. சரியாச்சாப்புடுறதில்ல. சேவ்பண்ணுறதில்ல தாடியும் மீசையுமா அலைஞ்சாரு. அவர் மகனும் மகளும் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவரைத்தேத்த முடியல. என்னய தனியா விட்டுட்டுப்போயிட்டான்னு எப்பப்பாத்தாலும் கண்ணீர் விட்டுக்கிட்டு இருப்பாரு. 31 வருச தாம்பத்தியம் அவங்ககூட இவரால அவங்களோட இழப்ப ஏத்துக்க முடியல.
இவளுக்கு ஒரு சம்பவம் நெனப்புக்கு வந்துச்சு. ஒருதடவ இந்த அம்மா அவங்களோட அம்மா வீட்டுக்குப்போயிருந்தாக. இவர்கிட்ட ஏதோ அங்க சொந்தக்காரவுக கலியாணம் நான் மாத்திரம் போயிட்டு வந்துருறேன்னு சொல்லிட்டுப்போயொட்டாங்க. இவரும் சரின்னு ஒத்துக்கிட்டாரு.
ஆனா ஊருக்குப்போனவங்க வரல. ஏதோ காரணத்துனால அன்னிக்கி ராத்திரி அங்கயே தங்கிட்டாங்க. இவர் சாயங்காலம் வெளிய போய்ட்டு வீட்டுக்கு வந்தவர் அவங்க இன்னும் வராதது பாத்து அவங்களுக்குப்போன் போட்டார். ஏம்மா போன சோலி முடிஞ்சிச் சின்னா காலாகாலத்துல வரவேண்டியதுதான அங்க ஒக்காந்துக்கிட்டு என்னா மனியம் பண்ணிக்கிட்டு இருக்கன்னு கோவமாவும் குழைவோடவும் கேட்டாரு.
அதுக்கு அந்தம்மா பொறந்த வீட்டுல ஒருநா தங்கக் கூடவா விடமாட்டீங்க. வந்து ரொம்பநாளாச்சு இருந்துட்டுப்போமா இன்னிக்கி திங்கக் கெழமை போனா திரும்பாப்பயணம் ஆயிடும் இருந்துட்டுப்போன்னு அப்பா சொன்னாரு அதான் தங்கீட்டேன் நாளைக்கி விடிய பொறப்பட்டு வந்துருவேன்னு சொன்னா
அதுக்கு இவர்செஞ்சகாரியம் பாத்து மகனும் மகளும் அசந்தே போனாங்க. ஒடனே வாடகைக்கார் எடுத்துக்கிட்டுப் போய் ராத்திரியோட ராத்திரியா கூப்புட்டு வந்து அவங்க கையிலதான் சாப்புட்டார். அந்தம்மா பேசுனது இவளுக்கும் கேட்டுச்சு. ஏன்யா இப்புடிக்கிறுக்குப்புடிச்ச மாதிரி நடந்துக்கிற ஒருநாள்ல என்ன ஆயிடப்போகுது. ஒரு நாளைக்கி இப்புடிப்பண்ணுறீங்களே ஒரு நா நான் ஒரேடியாப்போய்ட்டா என்ன பண்ணுவன்னு கேட்டவன்ன அவர் அழுகுற சத்தம் கேட்டுச்சு...முடியாதும்மா நானும் கூடவே வந்துருவேன்னு தழுதழுத்துச் சொன்னது கேட்டுச்சு அன்னிக்கி.
அவர்தான் இப்ப இதுமாதிரி பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்ப எல்லாரும் சேந்து கதவஒடைச்சி உள்ளாற போனா அப்பத்தான் தொங்கிருப்பாருபோல ஒடனே அவர் காலைப்புடிச்சி இவ தூக்கிக்கிட்டு மத்தவங்க ஒடனேவிழுந்து கெடந்த ஸ்டூல எடுத்துப் போட்டு சுருக்க அவுத்துவிட்டு கீழ கொண்டாந்து படுக்கப்போட்டாங்க
மூஞ்சில தண்ணியதெளிச்சி அவரை நெதானத்துக்கு கொண்டாந்தாக. அவர் சுய நெனப்பு வந்ததும் என்ன ஏன் காப்பாத்து னீகன்னு அழுதுகிட்டே கேட்டாரு நான் அவகிட்டயே போயிருப்பனேன்னு சொன்ன வன்ன அவரோட மகளுக்கு வந்துச்சே கோவம். நீயெல்லாம் ஒரு மனுசனா. எல்லாரும் ஒரு நா சாகவேண்டியவுகதான். அதுக்காக எல்லாரும் உங்களைப்போல ஒரு முடிவெடுத்தா மத்தவங்க பொழப்பு என்னாகுறது
நாங்க ஏற்கனவே அம்மா போன துக்கத்தை முழுங்கிட்டு சமாளிச்சிக்கிட்டு இருக்கோம் நீங்களும் போயிட்டா எங்களுக்கு யார் இருக்கா சமாதானம் சொல்லவேண்டிய நீங்களேஇப்புடிப்பண்ணுனா நாங்க எங்க போய் முட்டிக்கிறது... உங்க அப்பா உங்க அம்மா செத்தவன்ன போயிருந்தார்னா உங்க நெல்ம என்னாயிருக்கும். அவர் கஸ்ட்டப்பட்டு உங்களை வளக்கல. அவருக்கு சோகமும் வருத்தமும் இல்லாமையா இருந்துருக்கும் ஒருத்தர் போனா அதுக்காக எல்லாரும் உங்களை மாதிரி முடிவெடுத்தா குடும்பங்கள் என்னாகும்... எங்களுக்கு நீங்க வேணும்பா ந்னு சொல்லி அவர் கையப்புடிச்சி அழுதா...
இப்ப அவர்கண்ணும் கலங்குச்சு. அப்ப அவர் சொன்னார் நீ சொல்லுறதுதான் சரி. எனக்காக இல்லாட்டியும் உங்களுக்காக நான் இருக்குறேன். இந்த சிந்தனை எனக்கு ஏன் வராமப்போச்சு. நான் என்னப்பத்தியே கவலைப்பட்டுட்டு உங்களைப்பத்தி ஏன் நெனைக்காமப்போனேன்....என்ன மன்னிச்சிரும்மா...இனிமே இந்தத்தப்ப நான் செய்யமாட்டேன் இது சத்தியம்னு சொன்னார் கண்களில் நீர் வழிய அதைப்பாத்துட்டு அவர் மக மகன் கண்களிலும் கண்ணீர் வழிஞ்சது...
அப்ப காப்பாத்துனவர் சொன்னார் தற்கொலை எண்ணம்ன்றது சில நொடிகள் ஏற்படும் சிக்கலான எண்ணம் தான் அதை அவங்க கடந்துட்டாங்கன்னா மறுபடியும் அந்தத் தப்ப செய்யமாட்டாங்க அவங்களை நாம் நம்பலாம்னு......
அதேநேரத்துல அவர் அவர் சம்சாரத்துமேல வைச்சிருந்த அன்பு என்னை சிலிர்க்கவைச்சிருச்சுன்னு சொன்னா கண்ணதொடச்சிக்கிட்டு இவ.....
அ.முத்துவிஜயன்