திருவிளையாடல் - சிறுகதை
அழகான மலை அதை ஒட்டிய அருமையான தாமரைக்குளம். குளத்தை ஒட்டி சுத்திப்படந்து கெடக்கும் ஆலமரங்கள் குளத்துல பூத்துக்கெடக்குற தாமரை அல்லி மலர்கள் இப்புடி பாக்குறதுக்கே சொர்க்கமாதெரியும் அந்த எடம். வாசல்ல மொறைச்சிக்கிட்டு நிக்கிற பூதங்கள் ரெண்டு உள்ளாற அருவாளோட நிக்கிற கருப்பசாமி சூலாயுதத்தோட இருக்குற சோனை அப்புறம் இருளப்பசாமி கன்னிமார்கள் ஏழுபேரு ராக்காயிஅம்மன் கல்லு மண்டபத்துக்குள்ளகெழக்கபாத்து இருக்குற அய்யனாரு அவருபக்கத்துல பூரணா புஸ்கலாதேவிகள் பிள்ளையாரு முருகன் அப்புறம் போன
பொரட்டாசிப்பொங்களுக்குத்தூக்கிட்டு வந்து நேத்திக்கடன் சேத்த மண்குதிரைகள் கோயிலுக்கு உள்ளாற வெள்ளக்குதிரையில முறுக்கிய மீசையோட அருவாளோட கருப்பு...இப்புடி பாக்கவே அருமையா இருக்கும் அந்த கோயிலு. அந்தக்கோயிலுக்கு பரம்பரைப்பூசாரிதான் மாயாண்டி. பங்காளிகளுக்குள்ள வருசம் மாத்தி
மாத்திக்காணிபாப்பாக. அவங்கதான் சாமிக்கு பொங்கவைச்சிப்பூசை பண்ணுறது. ஒருவருசம் வார வருமானத்தை வைச்சி அடுத்துகாணி வாரவரை பொழப்ப ஓட்டுவாக. கைத்தொழில் ஒண்ணு வச்சிக்கிருவாக. மண்பொம்மை போடுறது இல்ல கடை வச்சிக்கிறது எங்கயாவது வேலைக்கிப்போறதுன்னு. அவங்க சொந்தக்காரங்க
பந்துக்கம்பெனி மில்லு டயர்கபெனின்னு வேலைபாப்பாக. அதுல மில்ல மூடிப்புட்டு வீடுகட்டி வித்துப்புட்டான். அதுனால மாயாண்டிக்கு வேலை போச்சு. மண்ணு வேலை அவருக்கு செட்டாகலை. அதுக்கு நடுவுல இந்தவருசம் காணி வந்துச்சு. இவரு போதாத நேரம் கொரானாவும் வந்துச்சு. மார்ச்சுல மூடுன கோயில் இன்னிக்கி வரைக்கும் தொறக்க முடியல. அவரு மாத்திரம் வந்து வெளக்குப்போட்டுட்டு அரைக்காப்படி அரிசில பொங்கல வைச்சி தனியா பூஜையும் பண்ணி ட்டு தழுகை வைச்சதை காக்காவுக்கு வைச்சிட்டு மிச்சத்தை வைச்சி பசிய சமாளிப்பாரு
வழக்கமா பொங்கல் வைக்க குடுக்குறவுகளும் ஆளைக்காணோம்
கோயில் நடை சாத்தியே கெடக்குறதுனால ஆரும் உள்ளாற வாரதில்ல. சனங்க முன்னடி சாமிக்கு மட்டும்தான் பயப்படுவாக . ஆனா இப்ப கொரானாவுக்குத்தான் அதிக பயம்
அதுனால இந்த வருசம் சாமி மாயாண்டியையும் சோதிச்சிடுச்சு
பசியும் பட்டினியுமா போச்சு பொழப்பு.
பக்கத்துல கம்மாயில நூறுநாள் வேலைக்கி வார ஆளுக எல்லாம் வேலை முடிஞ்சி இந்த தாமரைக்கொளத்துல வந்து குளிச்சிட்டு கொண்டாந்த கஞ்சிய குடிச்சிட்டுப்போவாக. அப்புடியே வெளிய நின்னு சாமிய கும்புட்டுப்போவாக
மாயாண்டிக்கு அவுக பாடு தேவலைன்னு தோணிச்சி. வேலை முடிஞ்சவன்ன சம்பளம் கெடச்சிடும். இவரு கருப்பப்பாத்துக்கேட்டாரு. எல்லாருக்கும் ஒரு வழிபண்ணுறயே எனக்கு ஒருவழியும் காமிக்க மாட்டீன்றயே கருப்புன்னு கண்ணீரோட வேண்டுனாரு.
கம்மாக்கி வேலைக்கி பொறுப்பேத்த ஆபீசரு அவரும் அங்க வந்துதான் சாப்புடுவாரு. மாயாண்டிக்கு அவரு பூசை க்கி குடுப்பாரான்னு ஆளுக கிட்ட விசாரிச்சாரு. அதுக்கு வேலைக்கி வந்தவுக சொன்னாக அவரு கிருஸ்டீன் யா. அவரு எப்புடி
பொங்கலுக்குக்குடுப்பாருன்னு சிரிச்சாக. அவரு இத தூரத்துல இருந்து பாத்துக்கிட்டு இருந்தாரு. மாயாண்டி க் கிட்ட பேசுனவரை கூப்புட்டு விசாரிச்சாரு. மாயாண்டிய கூப்புட்டு கேட்டாரு. ஒனக்கு ஒதவனும்னு தோணுது ஆனா பொங்கல் வைக்க என்னால முடியாது. நீ வேணுமானா நூறுநாள் வேலைக்கி வந்துரு. பக்கத்துல தான் கம்மா தூரு வாருறோம்ன்னு சொல்லி சிரிச்சாரு. ஏன்னா மாயாண்டி கவுரவம் பாக்குறவரு மண்ண அள்ளிப்போடுற வேலைக்கி வருவாரான்னு சந்தேகம்.
மாயாண்டிக்கும் தயக்கமா இருந்துச்சு, இப்ப பூசாரின்ற மரியாதை இருக்கு அது அந்த வேலைக்கிப்போனா இருக்குமா ன்னு சந்தேகம். அன்னிக்கி ஜூலை 30 ஆகஸ்ட்டுல கோயிலை தொறக்கச் சொல்லிடுவாகன்னு பேசிக்கிட்டாக. அன்னிக்கி சாயங்காலம் என்னா கவருமெண்டு சொல்றாகன்னு பாப்பம்முன்னு காத்திருந்தாரு. அப்ப ரேடியாவுல பாட்டு பாடிக்கிட்டு இருந்துச்சு.
அதுல திருவிளையாடல் படத்துல இருந்து டி ஆர்மகாலிங்கம் பாடுன இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை நீ இருக்கையிலே எனக்குப்பெருஞ்சோதனைன்னு பாடிக்கிட்டு இருந்தாரு. அதுல ஒரு வரி வந்துச்சு. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னைன்ற வரி என்னமோ பண்ணுச்சு. ஒரு முடிவுக்கு வந்தாரு மாயாண்டி.
மறுநாள் அந்த ஆபீஸரைப்போய் பாத்தாரு அய்யா நான் வேலைக்கி வாறேன்னு சொன்னாரு. அப்ப அவரு கேட்டாரு அது ஒங்களுக்கு சரிப்படுமான்னு
அப்ப மாயாண்டி சொன்னாரு எம்பெருமான் ஈசன் சும்ந்த மண்கூடைதான அது நான் சொமக்குறதுல தப்பில்லை. அவரு பிட்டுக்குச்சொமந்தாரு
நான் வயத்தகழுவ சொமக்குறேன் காலையில வந்து பொங்காலை வச்சிபூசை முடிச்சிட்டு வந்துருறேன்.வேலைக்கி.அதுல கெடைக்கிற காசுல கருப்புக்கு பொங்கலும் வைக்கலாம். பசியும் ஆறலாமுன்னு சொன்னாரு. சரி நாளையில இருந்து வந்துருங்கன்னு சொன்னாரு
ஆனா கருப்பு அதைப்பாத்துட்டும் சும்மா இருக்குமா. அன்னிக்கி சாயங்காலமே அறிவிப்பு வந்துச்சு. 50 பேருக்குள்ள சமூக இடைவெளியோட பாதுகாப்பா பூசை பண்ணலாம். கோயில் தொறக்கலாமுன்னு
மாயாண்டி க்கி சந்தோசம். கருப்பு நான் மண்சொமந்து சம்பாரிச்சி வைக்கிற பொங்கலை சாப்புட்டா கடனாளியிடுவோமுன்னு கோயிலத்தொறக்கச்சொல்லிப்புட்டாரு ஆனா அதுக்காக நான் ஒத்துக்கிட்டதை
மாத்தமாட்டேன் வெள்ளிசெவ்வாய்க்கி மாத்திரம் கோயிலு. மத்த நாளுகள்ல வேலைக்கிப்போறதுன்னு முடிவெடுத்தாரு
என்னா சொல்லுற கருப்புன்னு கேட்டரு
எப்பையும் குறி சொல்லுற பனமரத்துல இருந்து கெவுளி அதை சத்தம் போட்டு ஆமோதிச்சி..........
மலையடி கருப்புன்னுன்னு கன்னத்துல போட்டுக்கிட்டாரு மாயாண்டி
பக்தியோட......
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்