ஓர் இரவு - சிறுகதை

one-night-short-story
ஓர் இரவு - சிறுகதை

பொன்னிக்கி அன்னிக்கி வேலை முடிய நேரமாயிடுச்சு. வழக்கமா எட்டு மணிஆயிப்போயிடும் .அன்னிக்கி 9 மணி ஆகிப்போச்சு. கையகால மொகத்தை சீக்கிரமா அலம்பிட்டு அடிச்சிப்புடிச்சி ஓடிவந்தா கடைசிபஸ் கைகாட்டீட்டு போயிடுச்சு. என்ன பண்ணுறதுன்னு தெரியல. ஒரு பஸ் எறங்கி மூணுகி,மீ நடக்குறது மாதிரி போகும் அது வருதான்னு தெரியல . அதுல ஏறுனவன்ன போன் பண்ணா அவளோட புருசன் வந்து 

கூப்புட்டுப்போவான். சரி புருசனுக்கு போன்போட்டா ரிங் ஆகுதுஎடுக்கல மகன் தான் எடுத்துப்பேசினான். அம்மா அப்பா தூங்குறாருன்னு சொன்னான்அவனுக்கு பத்து வயசுதான் ஆகுது. அவனுக்கு வெவரம் தெரியல. அவளோச புருசன் சரக்கடிச்சிட்டு வந்து மயங்கிக்கெடப்பான்

தினம் இதே அக்கப்போரு.அவன் கூட கைல காசு கெடைச்சா ஒடனே கெளம்பிடுவான் குடிக்க. வீட்டுல ஒரு பைசா வைக்க மாட்டான். இவ சம்வாரிச்சித்தான் வயத்தை கழுவனும். அதுலயும் கைவைச்சிருவான். குடுக்காட்டினா போட்டு அடிப்பான். நாறிப்போன பொழப்புத்தான் அவ பொழப்பு. பல்லக்கடிச்சிக்கிட்டு ஓட்டிக்கிட்டு இருந்தா. இப்ப அவனும் மல்லாந்துட்டான் இனி அந்தபஸ்ஸை நம்பிப்பயனுமில்ல. 

பஸ்டாப்புல இவ மாத்திரம் தனியா நின்னுக்கிட்டு இருந்தா. அந்தப்பக்கமா வந்த மூணுபேரு இவளைத்தனியா இருக்குறதை ப்ப்பாத்துட்டு ஒருமாதிரி பேசிக்கிட்டாங்க. என்னா ரேட்டுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க கூனிக்குறுகுனா அவனுக தொழிலுக்குப்புதுசுபோலன்னு சிரிச்சானுக. இவளுக்கு செத்துறலாம் போல இருந்துச்சு.

 அவனுக நடவடிக்கை சரியில்ல. இங்க இருந்தா ஆபத்துன்னு புரிஞ்சிபோச்சு. என்ன பண்ணுறதுன்னு தெரியலை.
தப்பிச்சாகனும்றது மாத்திரம்தான் மனசுல நின்னுச்சு. ரயில்வே ஸ்டேசன் போய்டலாமா. அங்க கூட்டமா ஆளுக இருப்பாக. பாதுகாப்பா இருக்குமுன்னு யோசிச்சா. அதுக்குத்தோதா அந்தப்பக்கம் போற பஸ் வந்துச்சு
அதுல ஏறி ரயில்வேஸ்டேசனுக்கு டிக்கெட் வாங்குனா. அதுலயும் ஒண்ணு ரெண்டு பேருதான் இருந்தாக. அவனுகளும் ஒருமாதிரி பாத்தானுக

சேலைய இழுத்துப்போத்திக்கிட்டா.
ரயில்வே ஸ்டேசன் வந்துருச்சு. எறங்கி அங்க போனா வாசல்ல கூட்டம் கூட்டமாப்படுத்துருந்தாக. நமக்குன்னு ஒரு எடம் வெளிச்சமா இருக்குற எடத்தத்தேடுனா. ஒரு லைட் கம்பத்துக்குக்கீழ ரெண்டு வயசான பொம்பளைக ஒக்காந்துருந்தாக அவங்க பக்கத்துல போய் ஒக்காந்தா

அதுல ஒரு அம்மா கேட்டுச்சு எந்த டிரெயினைப்புடிக்கனும்னு . இவளுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல முளிச்சா. இவ டிரெயின்ல ஏறுனதே இல்ல. எதையாவது தப்பா சொல்லி மாட்டிக்கக்கூடாதுன்னு. யோசனை பண்ணுனா. அதுக்குள்ள பக்கத்துல இருந்த அம்மா அஞ்சுமணிக்கி செங்கோட்டை வண்டியா இருக்கும்ன்னு சொன்னா. இவளும் ஆமா அதுதான்னு சொன்னா

ஸ்டேசனுக்குள்ள போனா வெறட்டுவாங்க இங்குனக்குள்ள இரும்மான்னு சொல்லிச்சி அந்தம்மா. அவங்க நெரந்தரமா அங்கயே இருக்குறவுகளாம். காலையில மார்க்கெட் போய் கூடையில காய் இல்ல பழம் வாங்கிட்டு வந்து தெருத்தெருவா வித்துப்புட்டு படுக்க இங்க வந்துரு வாகளாம் . வாரத்துக்கு ஒருதடவைதான் ஊருக்கு வீட்டுக்குபோவாகலாம். 

அவங்க சொன்னாங்க இங்குனக்குள்ள யே இரும்மா. நாங்க பாத்துக்குறோமுன்னு
அவளும் அவங்க கூட ஒக்காந்தா. போலீஸ்காரம்மா ரவுண்டு வந்துச்சு. இவளைப்பாத்துட்டு கேட்டுச்சு புதுசா இருக்க எந்த டிரெயினுன்னு. முன்னாடி அந்தம்மா சொன்னது நெனவு வந்துச்சு செங்கோட்டை ரயில்ன்னு சொன்னா. அப்ப அந்தபோலீஸ்காரம்மா சொல்லிச்சி மூணாவது பிளாட்பாரம் . அஞ்சு மணிக்கிவரும்ன்னு சொல்லிட்டுப்போச்சு. 

அந்த அம்மா ரெண்டுபேரும் சேலையப்பொத்திக்கிட்டு சரிஞ்சாங்க அப்பகொசு வேற புடுங்குச்சு. அப்ப அவங்க சொன்னாங்க இந்தாம்மா சாக்கு இருக்கு அதைப்பொத்திக்க. நல்லதுக்குத்தான் சொல்றேன்னு சொல்லிச்சி இவளும் சாக்க எடுத்துப்பொத்திக்கிட்டா. பசிக்குதான்னு கேட்டுச்சு அந்தம்மா. பதிலக்கூட எதிர்பாக்காம ரெண்டு கொய்யாப்பழத்தைக்குடுத்து தின்னச்சொல்லிச்சி. இன்னோரு அம்மா வாழைப்பழம் ரெண்ட குடுத்துச்சு. சாப்புட்டுப்புட்டு கண் அசந்தா. 

தீடீருண்ணு யாரோ காலை சொரண்டுறமாதிரி இருந்துச்சு. முளிச்சிப்பாத்தா ஒருத்தன் ஈன்னு இளிச்சிக்கிட்டு கைல கத்தியகாமிச்சி எந்திரிச்சி வான்னு சைகை காட்டுனான்

இவளுக்கு ஒடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது , அந்த அம்மாரெண்டுபேரும் நல்லாத்தூங்கிட்டு இருந்தாக. பயத்துல வேர்த்துடுச்சு. தூரத்துல போலீஸெல்லாம் சேர்ல அரைத்தூக்கத்துல இருந்தாக
என்ன பண்ணுரதுன்னு தெரியல. அதுக்குள்ள பக்க்த்துல இருந்த ஒரு அம்மா 

படக்குன்னு எந்திரிச்சி ஒக்காந்துச்சு. அவன் கொஞ்சம் பின் வாங்குனான். அந்தம்மா கூடையில இருந்து அருவாளை எடுத்து காமிச்சிச்சி மரியாதையா ஒடிடுன்னு 
அவன் பயந்தமாதிரி தெரியல. 

டமால்ன்னு எந்திரிச்சி போட்டுச்சுபாரு ஒருசத்தம் மொத்தப்பேரும் எந்திரிச்சிட்டாங்க. அதுக்குள்ள அந்த அம்மா அவனை இழுத்துப்புடிச்சிக்கிச்சி அவன் கத்தில அந்தம்மாவைக் குத்தப்போனான். அது வெலகிட்டு அருவாளை எடுத்து அவன் கழுத்துல வைச்சிடுச்சு. ஏலே ஆருகிட்ட கத்தியக்காமிக்கிற. கீழக்குடிகாரிக்கிட்ட கத்தியா. நு சொல்லிக்கிட்டே அவனோட காலுக்கு நடுவில முட்டியால முட்டுனவன்ன அய்யோன்னு அலறுனான் அதுக்குள்ள போலீஸ்காரம்மா விசிலடிச்சிக்கிட்டு வந்துருச்சு. வந்து அவனை ப்பாத்துட்டு இவனா டேய் வாடா ஒண்ண லாடம் கட்டுனாத்தான் சரிப்படுவ 

பேசஞ்சரை டிஸ்ட்ரப் பண்ணுறன்னுகம்புல நாளு அடிகுடுத்து தள்ளிட்டுப்போச்சு 
இவ பக்கத்துல வெட வெடன்னு நடுங்கிட்டு இருந்தா. அப்ப அந்தம்மா சொல்லிச்சி பயப்படாத மகளே தைரியமா இருக்கனும்

பயந்தா அவனுகளுக்கு குளிர் விட்டுப்போயிடும் தைரியமா எதுக்கனும் அப்பத்தான் நம்மலகாப்பாத்திக்க முடியும்ன்னு சொல்லிசிரிச்சிட்டு வெத்தைலய எடுத்து வாயிலபோட்டுட்டு மெல்ல ஆரம்பிச்சது. எங்கவீட்டுல இருந்தவனுக எங்கவீட்டுப்பொண்ணுககிட்ட வம்புபண்ணுனரெண்டுபேரை சண்டையில வெட்டிப்போட்டுட்டு உள்ளாற போனதுனாலதான் நான் இங்க இருக்கேன்

என்கிட்டயே இவன் கத்தியகாமிக்கிறானா வெட்டிப்போட்டுருப்பேன் தப்பிச்சிட்டான் நீ படுத்துக்க மகளே இந்த பொன்னுத்தாயி இருக்குறவரைக்கும் ஒருத்தனும் ஒன்ன ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு சிரிச்சிச்சி அது மதுரை மீனாட்சியே சிரிச்சமாதிரி இருந்துச்சு. இவ கண்ணுல தண்ணி வந்துச்சு இல்லாதவங்க எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு

நாளைக்கி ராத்திரி எவன் கூடத் தங்குனன்னு கேக்கபோற புருசனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கத் தொடங்குனா... பொன்னி

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்