அகம் - சிறுகதை
அவன் அவனோட சம்சாரத்தை ஒரு எடத்துக்கு நாம இன்னின்னிப்போறோம்ன்னு கூப்புட் டான்.. எங்க போறோம்னு சொல்லுங்க அதுக்கேத்தமாதிரி சேலைகட்டணும்ன்னு சொன்னா அவ.. நம்மலோட பழைய வீட்டப்பாக்கப்போறோம்னு சொன்னான்.
நாம வித்த அந்த பூர்வீக வீட்டயான்னு கேட்டா ஆமா... இன்னிக்கிப்போயே ஆகனும்னான்.. சரி இருங்க கெளம்பி வாறேன்னு கெளம்பப்போனா அவ
அவன் அந்த சின்ன வீட்டுலதான் 35 வருசம் குடித்தனம் நடத்துனது.. அம்மா அப்பா பிள்ளை குட்டிக எல்லாம் சேந்து குடித்தனம் நடத்துனது அங்கதான்.
அது சிக்கனமான வீடு அவன் வருமானத்துக் குள்ள சமாளிக்கக்கூடியவீடு.. ஒரு ஹால் ஒரு பாத்ரூம் ஒரு அடுப்படி அதுக்குக்கதவு எல்லாம் கெடையாது.. பாத்ரூம் கதவு இருக்குறதே பெருசு... அதுக்குள்ளதான் ஒண்டிக் குடித்தன முன்னு சொல்லுவாங்களே அது சரியாப் பொருந்துற வீடு..அது
அதுக்குள்ளதான் எல்லாம் அம்மா அப்பா பிள்ள குட்டி எல்லாம் ஒன்னோட ஒண்ணு நெறுக்கி அடிச்சிக்கிட்டு படுத்துக்கெடப்பாக. தனியா பெட்ரூமெல்லாம் கெடையாது..
ஒண்ணுமேல ஒண்ணு கெடக்கும்.. தலகாணி சண்ட பெருசா நடக்கும்.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தலகாணி உண்டு..பிள்ளக தூக்கம்வாரவரைக்கும் தலகாணி கெடைக்கும் தூங்குனவன்ன அது அடுத்த ஆளுக்குப் போயிறும்..
காலையில பாத்ரூம் போறது பெரும்சண்ட வெளிய நின்னுக்கிட்டு அவசரத்துக்கு கதவ ஒடப்பாங்க... ஆறுபேர் அதுலதான் போகனும்குளிச்சிட்டு டிரெஸ்சேஞ்ச் பெண்கள் எல்லாம் அடுப்படிலதான் பண்ணிக்கனும்
பிரைவசி சுத்தமாக்கெடையாது..எல்லாம் ஒண்ணுமுன்னாத்தான் ... கெடக்கும் பழைய டிரங்குப்பெட்டிலதான் டிரஸ் எல்லாம் ஆளாலுக்குதனிப்பொட்டி.. சின்ன புள்ளக ளுக்கும் அவனோட சம்சாரத்துக்கும் ஒரே பொட்டிதான்...கொஞ்சம் பெருசு
அந்த 10க்கு 10 ஹால்லதான் சாப்பாடு படிப்பு அப்புறம் எல்லாமே... வீட்டுக்குள்ள எப்பையும் ஆளுக இருக்கும்.. ஒரு பார்வை ஒரு உரசல் யாரும் பாக்காம ஒரு முத்தம்...எங்கயோ பாத்துக்கிட்டு இடுப்புல ஒரு கிள்ளு இது குடுத்த சந்தோசங்கள் இப்பயும் நெஞ்சுக்குள்ள கெடக்கு...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தனியாக நடக்குமொரு காதல் நாடகம் ..அம்மா அப்பாவைக்கவனிக்கிற கரிசனம் அவருக்கு சாப்பாடு பக்கத்துல ஒக்காந்து வைக்கிறது அப்ப நடக்குற கிண்டல் அதுக்கு அம்மாவோட வெக்கம் எல்லாம் தனியாக நடக்கும்.. நிகழ்வுகள்.....
அவனுக்கும் அவளுக்கும் நடக்கும் சண்டை சமாதானம் ஊடல் கூடல் அதுவும் அங்கதான்
அன்னிக்கி ஒருநா அப்புடித்தான் அமைஞ்சது அப்பாவும் அம்மாவும் சொந்தக் காரங்களைப் பாக்க பக்கத்து ஊருக்குப்போயிருந்தாக பிள்ளைக பள்ளிக்குடம் போயாச்சு...
அப்ப அவன் வேலைக்கி இன்னிக்கி நான் போகனுனுமான்னு,,இழுத்தான்.... அவ சொன்னா ஒங்க இஸ்டம்ன்னு... இவன் இல்ல இன்னிக்கி அம்மா அப்பா ஊரில இல்ல புள்ளைகளும் பள்ளிக் கொடத்துக்குப் போயாச்சு நாம மாத்திரம்தான் இதுமாதிரி சமயம் அமையாதுன்னு....வழிஞ்சான்
அவளுக்கும் வெக்கமாத்தான் இருந்துச்சு சரி நான் மார்க்கெட் போய் கறி எடுத்துட்டு வாறேன் சமையலுக்கு ஏற்பாடு பண்ணு ந்னு சொல்லிட்டு சைக்கிள் எடுத்துட்டுக் கெளம்புனான்...
மார்க்கெட்டுல எல்லாம் வாங்கிட்டு வெத்தல பாக்கும் வாங்கிக்கிட்டான்.. இன்னிக்கி வீட்டுல இருக்குறதே ஒரு சந்தோசமா தோணிச்சி வீட்டுக்கு வந்தா அவ குளிச்சிச்சிட்டு ஈரத்தலையோட மஞ்சள்பூசின மொகம் சோப்புவாசத்தோட ஜொலிச்சா... அவன் சீக்கிரமா சமையல முடி மத்தியானம் மீதி எல்லாம்ன்னு சிரிச்சிக்கிட்டே அவ கன்னத்த கிள்ளுனா அவ மூஞ்சி செவந்து போச்சு..
சமையல் ஆச்சு.. சாப்பிடப்போகையில பக்கத்துவீட்டு பங்கஜம் அக்கா கொஞ்சம் மொளகாப்பொடி குடேன் தீந்துபோச்சு வாங்கி வைச்சிருக்கேன் காயப்போட்டு அரைக்கனும்ன்னு வந்தா..
போனதடவ வாங்குனதே குடுக்கலன்னு நெனப்பு வந்தாலும் இதென்ன சிவபூசையில கரடி நொளஞ்சமாதிரின்னு சீக்கிரமா குடுத்து அனுப்பும்போது...ஓ மாமா இன்னிக்கி வேலைக்கிப்போகலயான்னு சீண்டுனா... இல்ல தலவலின்னு சமாளிச்சான்...
அவளை வெளியதள்ளி கதவச்சாத்திட்டு சாப்புடதட்டுக்களைஎடுத்துவைச்சா...அதுக்குள்ள திரும்ப ஆரோ கதவைத்தட்டுனாங்க பங்கஜம் உள்ள அக்கா இருக்கு தட்டுங்கன்னு சொல்ற சத்தமும்கேட்டுச்சு.. இவ கதவத்தொறந்தா இவ பொறந்த ஊருல இருந்து பெரியப்பா மகன் வந்துநின்னான்
வாங்க அண்ணேன்னு உள்ளாற கூப்புட்டா அவன் உள்ளாற வந்து மாமாஇல்லயான்னு விசாரிச்சான்... இவ தண்ணி அவனுக்குக் குடுத்தா...அதுக்குள்ள பாத்ரூமில இருந்து இவன் வந்து வாங்க மாப்பிள்ளன்னு விசாரிச்சான்.. மாமா பிள்ளகளுக்குக் காது குத்து வைச்சிருக்கேன் அவசியம் குடும்பத்தோட வரணும்ன்னு மஞ்சபையில இருந்து வெத்தலபாக்கு எடுத்து தட்டுல வைச்சிக்குடுத்தான்...
இவ அண்ணேன் வாரதவுக வந்திருக்கீங்க சாப்புட்டுத்தேன் போகனும்கைகழுவிட்டு வாங்கன்னு சொன்னா.... அவனும் தங்கச்சிவீட்டுல சாப்புடாமலான்னு கைகழுவிட்டு ஒக்காந்தான்...
இவனுக்கு எரிச்சலாக வந்துச்சு காரியத்தக் கெடுத்துப்புடுவான் போலருக்கேன்னு யோசிச்சான்..அவனும் சாப்புட்டுட்டு ஒக்காந்தான்..நீங்க சாப்புடுங்க மாமான்னு சொன்னான்... இவன் சாப்புட்டு அப்புறம் அவ சாப்புட்டு.வெத்தலை தட்டுல எடுத்துக் குடுத்தான்.... வந்தவன் பேச ஆரம்பிச் சிட்டான்...கெளம்புறதாஇல்ல...கெளம்புறமாதிரியும்தெரியல அதுக்குள்ள..இவன் கடுப்பாயி அண்ணனும்தங்கச்சியும் பேசிக்கிட்டு இருங்க நான் அரைநாள் வேலைக்கிக்கெளம்புறேன்னு கெளம்புனான்... அவளும்சோகத்தோட சரிங்க கெளம்புங்கன்னா...அவன் இருங்கமாமாநானும் வாறேன் பஸ்டாண்டுல விட்டுருங்கன்னு கெளம்புனான்...
அவனை பஸ் ஏத்திவிட்டுட்டு திரும்ப வீட்டுக்கு வந்தான்... டூட்டி கேன்சல் லீவு மத்தியானமும்ன்னு சந்தோசமா அவன் அவகிட்ட சொன்னான்.... அதுக்கு அவ சொன்னா நம்ம போதாத நேரம் நான் வெளியாளுன்னு சோகத்தோட சொன்னா... அவனுக்கு சோகமாயிடுச்சு சரி நான் வேலைக்கிக்கெளம்புறேன்னு சொல்லிக் கெளம்புனான்.... அவ சோகத்தோட சிரிச்சா....
இதுமாதிரி பல நாடகங்கள் அந்த வீட்டுல.. அதுக்குள்ள அவங்களோட சுகதுக்கம் எல்லாம் நடந்துச்சு.. ரெண்டுபேரும் அந்த வீட்டுக்குக்குகெளம்பிப்போனாங்க...
அங்கபோனா அங்க புல்டோடசர் வைச்சி வீடுகளை இடிச்சிச்சிட்டு இருந்தாக... இவங்க வீடு இன்னும் கொஞ்சநேரத்துல இடிக்கப் போறோம்ன்னு சொன்னாங்க இடிச்சிட்டு மல்டிஸ்டோரேஜ் கட்டப்போறங்களாம்.... எடவேல்யூ அதிகமாச்சு 20 மாடிகட்ட வித்துட்டாங்களாம்
இவன் அவங்க கிட்ட கேட்டான் கொஞ்சம் எங்களை வீட்ட உள்ளாறபோய் பாக்க விடுவீங்களான்னு அவங்க சீக்கிரமா பாத்துட்டு வந்துருங்கன்னு சொன்னாங்க
இவங்க உள்ளாற போனதும் பழைய நெனப்பு வந்துருச்சு... அவ ஆசையா அடுப்படி யப் பாத்தா...இவன் வீட்ட சுத்திவந்தான் அவசொன்னா இங்கதான் நாம வாழ்ந்தோம் தூங்குணோம் புள்ளபெத்துக்கிட்டோம் நம்ம பிள்ளைங்க பொழங்குன எடமிதுங்க... இவங்க மஞ்சள் பூசி பொட்டுவைச்சசாமிமாடம் இருந்துச்சு அங்க விழுந்து கும்புட்டாங்க
அவன் அவளக் கட்டிப்புடிச்சி முத்தம்கொடுத்துட்டுச்சொன்னான் நாம இங்கதான் வாழ்க்கையத் தொடங்கு னோம் னு.அவ குனிஞ்சி தரையில சொவத்துக்கு முத்தம் கொடுத்தா... இந்தவீடு எல்லாத்தையும்பாத்துக்கிட்டு இருந்துச்சு...அம்மா அப்பா வோட சாவு இங்கதான் அவங்களை இங்கதான் சாத்திவைச்சிருந்தது குளிப்பாட்டினது கடைசியா வாய்க்கரிசி போட்டதுன்னு சொல்லும் போது ரெண்டுபேருக்கும் கண்ணீர் முட்டிச்சி வழிஞ்சிச்சி....
அதுக்குள்ள வெளிய இருந்து கூப்பிட்டாங்க
சீக்கிரம் வாங்கன்னு... வெளிய இவங்க வந்ததும் புல்டோசர் இடிக்கத்தயாராச்சு... இவங்களுக்கு செத்தவங்களை ஒரு இடிக்காட்டில் அடக்கம் பண்ணுற மாதிரி அழுகையா வந்துச்சு... ஆமா அங்க இவங்களோட நெனப்புக சந்தோசங்க துக்கம் எல்லாத்துக்கும்சாட்சியா இருந்த வீடு மண்ணோடு மண்ணாச்சு...அதைப்பாத்துட்டு ரெண்டுபேர்கண்ணும் கலங்குச்சு கண்ணீர்வழிய ஒருபிடி மண்ணெடுத்துட்டு கெளம்பினாங்க ... அதை வீட்டுல கொண்டுபோய் சாமி அறைக்கிட்ட வைச்சாங்க அவங்க குடும்பத்துல அந்த வீடும் ஒரு ஆளானமாதிரி இருந்துச்சு.....
கும்புட்டாங்க..... அதை விழுந்து கும்புடும்பாது அவங்க முன்னோர்களை தாத்தன் பூட்டன் அப்பத்தா அதுக்கும் முன்னாடி இருந்தவங்க எல்லாரையும் வீட்டுக்குக்கூட்டியாந்த சந்தோசம் வந்துச்சு....அப்ப ஏம் ம்க்கான்னு அம்மா கூப்புடுறமாதிரி கேட்டுச்சு
இவங்கரெண்டுபேர் கண்ணுலயும் கண்ணீர் வழிஞ்சிச்சி....
அ,முத்துவிஜயன்