கடங்காரி - சிறுகதை

kadangari-short-story
கடங்காரி - சிறுகதை

ஆளுக காத்து க் கெடக்குறாகல்ல வெரசா வடையச்சுட்டு எடு எடுத்ததுக்கப்புறம் பூரி சுடனும் சுட்டது காலியாப்போச்சு அந்தப் பெரியவருக்கு சூடா பூரிவேணுமாம் வெரசா எடுத்தா காத்துக்கெடக்க மாட்டகல்ல விசுக்குன்னு கையக்கழுவபோய்ருவாகல்லன் னு ஓனரம்மா சொல்றதைக்கேட்டுக்குட்டு நல்லா வடைய வேகவைச்சி எடுக்குறதுல கவனமா இருந்தா பொடிசிப்பாட்டி,

இன்னிக்கி வேலை முடிஞ்சி போறதுக்குள்ள எப்புடியாவது அட்வான்ஸா 200 ரூ வாங்கனும்னு ஓடிக்கிட்டு இருந்துச்சு அவ மனசுல. இந்தம்மா 200 ரூ குடுத்தா அதுக்கப்புறம் 300 ரூ காரவீட்டம்மா தாரதாச்சொல்லிருக்காக ஆனா இது என்னாத்தை சொல்லுமோ என்னமோனு கவலையாவும் இருந்துச்சு

காலையில இந்தக்கடையில ஓனரம்மாவுக்கு ஒத்தாசையா வடை பூரி சுடுறது தட்டுகளை எடுத்துக் கழுவிவைக்கிறது சாம்பார் சட்டிணி ஊத்துறதுன்னு வேலை மாசம் 1000 ரூ சம்பளம் வேலைக்கி வரலன்னா பிடித்தம் உண்டு, என்னா ஒரு ஆறுதல்னா காலையில 7மணில இருந்து 11 அல்லது 12 வரைதான் கடை தொறந்திருக்கும் அதுக்கு மேல ஓனரம்மா வீட்டுக்குச் சமையல் பண்ணப்போயிரும் கடைய மூடிட்டு

பொடிசி அதுக்கப்புறம்  கார வீட்டுக்குபோய் தோட்டம் தொரவு கூட்டுறது பாத்திரபண்டம் கழுவுறது எல்லாம் செய்யும் அந்த அம்மா மத்தியாணம் சாப்புட ஏதாவது குடுக்கும். அங்க மூணுமணி வரை வேல கெளம்பையில ஒரு காபி குடுக்கும் அங்க சம்பளம் 1500 ரூ ஆக மொத்தம் 2500 ரூவாதான் வருமானம், அதுக்குள்ள பொழப்ப நடத்தனும் , ரெண்டு வேளை சாப்பாடு இங்குணக்குள்ளயே முடிஞ்சிருறதுனால ரவைக்கி( ராத்திரிக்கி) பேருசா பசிக்காது ஒரு வேளை பசிச்சா வெள்ளி செவ்வாய்கல்ல கவலை இல்ல எப்புடியும் கருமாரிஅம்மன் கோயில் பிரசாதம் உண்டு, செல வேளைகள்ல பக்கத்துல இருக்குற ஏசுசாமி கோயில்ல ஞாயத்துக் கெழமைகள்ல சாப்பாடு மீந்துச்சுன்னா கூப்புட்டுக் குடுப்பாக இதுக்குள்ளதான் வண்டி ஓடுது

இது இப்புடியே ஓடிக்கிட்டு இருந்தாப் பரவாயில்ல. போனவருசம் மகனோட மாமியா போய் சேந்துருச்சு. சம்மந்தின்ற மொறையில செய்மொறை செய்யனும் ஞாயப்படி பாத்தா மயன்காரன் தான் செய்யனும் அவங்க மாமியாக்கு, அவன் பொண்டாட்டிய வெறுங்கையோட அனுப்பிச்சிட்டு காசு பொறட்டிட்டு வாறேன்னு சொன்னவன் வாரவரைக்கும் தூக்காம இருப்பாகலா பொணத்த,அவசரமா மருமக வந்து கேட்டதுனால 10000 ரூ தவணைக்கி வாங்கிக் குடுக்க வேண்டியதாப் போச்சு. 3பைசா வட்டிக்கு.

வட்டி மாத்திரமே 300 ரூ மாசம் கொஞ்சம் கொஞ்சமா மிச்சம் புடிச்சி 9800 ரூ சேத்தாச்சு இன்னிக்கி சொன்னமாதிரி 500 ரூ கெடைச்ச துன்னா 10000 ரூ அசல் வட்டி 300 சேத்துக் குடுத்துமுடிச்சிரலாம்னு கணக்குப்போட்டா.

இப்ப மணி 11 ஆச்சு ஓனரம்மாகிட்ட நைசா பிட்டப்போட்டா 200 ரூ குடுத்தா நல்லாருக்கும் ஒரு கடன அடைச்சுப்புடுவேன் நீங்கதான் கொஞ்சம் மனசுவைக்கனும்னு தயங்கித் தயங்கி சொன்னாபொடிசி
அதுக்கு ஓனரம்மா சொல்லிச்சி எது நின்னாலும் அட்வான்ஸ் கேக்குறது நிக்காதே ஒனக்கு, ஒன்னய போனாப்போகுதுன்னு தான் வேலைக்கே வைச்சிருக்கேன், ஏதோ வயசான பொம்பளையா இருக்க ஒரு ஆதரவா இருக்கட்டும்னு தான் வைச்சிருக்குறேன் நீ செய்யிற வேலைய எனக்குச்சேத்துச்செய்ய முடியாதா. கடை வருமாணத்துல சம்பளம் குடுக்குறதே அதிகம் இதுல அட்வான்ஸ் வேறயான்னு ஒரு பஞ்சப்பாட்டு பாடிருச்சு ஓனரம்மா,

இல்லைம்மா இன்னிக்கிகடசித்தேதி குடுக்குறேன்னு சொல்லிட்டேன் அதான்னு இழுத்தாபொடிசி, நீ கேட்டதைக் குடுக்கலாமுன்னு எனக்கும் ஆசை ஆனா இன்னிக்கி சாயங்காலம் டவுனுக்குப்போய் மொத்தவெலையில அரிசி பருப்பெல்லாம் வாங்கியாரனும் அதுல காசுகொஞ்சம் மிச்சமாகும் இங்குணக்குள்ள வெல ஆனைவெல குருதவெலை சொல்றாங்க அதான் பாத்தேன் நான் நாளைக்கி யாவாரத்துல வாரகாச நான் தாறேன் நாளைக்கி வாங்கிக்கோனு சொல்லிச்சி

அதுக்கு பொடிசி சொல்லிச்சி நாளைக்கின்னா சொல்றீக இன்னிக்கி முடியாதான்னு கேக்க ஓனரம்மா ஆமா நாளைக்கி நிச்சயமாத் தாறேனு சொல்லிச்சி

அடுத்துவேலைய முடிச்சிட்டு கார வீட்டுக்குப்போய் அங்க வேலைகளை முடிச்சிட்டு அந்தவீட்டம்மாகிட்ட 300 ரூ கடன் கேட்டுச்சு. அதுக்கு அந்தம்மா சரி தாறேன் வாங்கிக்கன்னு எடுத்துக்குடுத்துருச்சு. அப்பத்தான் பொடிசிக்கி இவங்ககிட்டயே அந்த 200 ரூவாயக்கேட்டுப்பாப்பமேன்னு பீடிகை போட்டுச்சு. 

அம்மா இன்னொரு 200 ரூ குடுத்தீங்கன்னா அத நாளைக்கித் திருப்பிக்குடுத்துருவேன் நாளைக்கி  ஓட்டல்காரம்மா தாரம்னு சொல்லிருக்குன்னு கேக்க. காரவீட்டம்மாவுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்துருச்சு நீ காசு கேட்டவன்ன குடுத்ததால கூடக்கொஞ்சம் கேக்கலாமுன்னு பாக்குறீயா இதுதான் ஒன்னமாதிரி ஆளுகளுக்கு கேட்டவன்ன காசு குடுக்கப்படாது.னு சொல்லவும்

பொடிசி சொல்லிச்சி பரவாயில்லம்மா   வேணாம்  நு சொல்லிட்டு வீட்டுக்குப்போய் வீட்டுல இருந்த பணத்தையும் எடுத்துக்கிட்டு தவணைக்காரம்மாகிட்டப் போச்சு

தவணைக்காரம்மாகிட்ட 10100 ரூவாயக் குடுத்துட்டு எம்மா கொஞ்சம் பொறுத்துக்க நாளைக்கிநான் மீதி 200 ரூவாயகொண்டாந்து தாறேன்னு சொல்லிச்சி அதுக்கு அந்தம்மா என்ன பேச்சு பேசுற  அசலு 10000 ரூ வட்டி 300 ரூ சேத்துக்குடுத்தாக் குடு கடன் அடைஞ்சிரும்  இல்ல பணம் பிரச்சனைன்னா வட்டி 300 ரூவாயக்கடிட்டு நடையக்கட்டு  நாளைக் கின்னா அடுத்தமாசம் பொறந்துருது

அதுனால அந்தமாச வட்டி 300 ரூவாயும் சேந்துரும் இன்னிக்கி ராத்திவரை டயம் தாறேன் நீ 10300 யோட கடனடைக்க நாளைக்கின்னா அது அடுத்தமாசம் நானே ரெண்டுக்கு வாங்கித்தான் உனக்குத்தாறேன் நான் அவங்களுக்குக் குடுக்கனுமில்ல அவங்ககிட்ட நான் கதைசொல்லமுடியாதில்ல ஒனக்கு எது வசதியோ அதைப்பண்ணு இன்னிக்கின்னா 10300, இன்னிக்கித் தாண்டுனா வட்டி 300 க் குடுத்துட்டு அப்புறமா   ஒருமாச டயமிருக்கு மெதுவாக்கொண்டாந்து 10300 க் குடுத்துட்டு கடனை அடைச்சிட்டுப் போன்னு சொல்லிச்சி
பொடிசிக்கு ஒருபக்கம் வகுத்தெரிச்சலா அநியாயமா வட்டி 200 ரூ இல்லன்றதுக்காக 300 ரூ வட்டி குடுக்கவேண்டியதா இருக்குதேன்னு அழுகையா வந்துச்சு.  எம்மா ஒரு நா தான பொறுத்துக்கக் கூடாதான்னு கெஞ்சிச்சி ஆனா அந்தம்மா அசையிறதா இல்ல

அதைப்பாத்துக்கிட்டு இருந்த தவணைக் காரம்மாவோட பேத்தி சொல்லிச்சி பாவம் பாட்டி கொஞ்சம் பொறுத்துக்கக் கூடாதான்னு தவணைக்காரம்மாகிட்டச் சொல்லிச்சி, ஆனா அந்தம்மா போய் உன் சோலியப்பாரு இதிலெல்லாம் நீ தலையிடாத ஒனக்கு வெவரம் பத்தாது நீ சின்னப்புள்ளன்னு அடக்குச்சு

சரிதாயி இந்தா 300 ரூ வாங்கிக்க நான் மீதிய அப்புறமாக்கொண்டாந்து தாறேன்னு குடுத்துச்சு தவணைக்காரம்மாகிட்ட, அப்ப பேத்தி பொடிசிக்கிட்ட  கொஞ்சம் இருங்க பாட்டின்னு சொல்லிட்டு தவணைக்காரம்மாக் கிட்ட பாட்டி எனக்குத்தவணைக்கிப் பணம் வேணும்னு கேட்டுச்சு ஒனக்கு எதுக்கு பணம்னு கேக்க அதெல்லாம் ஒனக்கெதுக்கு பணம்குடுக்க முடியுமா முடியாதானு கேக்க அந்தம்மா எம்புட்டு வேணுமுன்னு கேட்டுச்சு

அதுக்கு பேத்தி சொல்லிச்சி 200 ரூ அதுக்கு வட்டி எவ்வளவுன்னு கேக்க  தவணைக் காரம்மா 20 ரூவான்னு சொல்லிச்சி  அதைக் கேட்டுட்டு சரிபாட்டி எனக்கு 200 ரூ குடு  நான் நாளைக்கி வட்டியோட தாறேன்னு கேட்டவன்ன தவணைக்காரம்மாவுக்குப் புரிஞ்சி போச்சி பேத்தி பொடிசிப் பிரச்சனைய தீக்க உள்ள வாரான்னு ஆனா பேத்தின்றதால மறுக்க  முடியல,200 ரூ  எடுத்துக்குடுத்தா பேத்திக்கிட்ட.

பேத்தி அதைவாங்கி பொடிசிகிட்டக்கொடுத்து இந்தா பாட்டி உன் கடனை இதவைச்சி அடைச்சிரு நாளைக்கி நீ எனக்குக் கொண்டாந்து 200 ரூ குடுத்துரு நு சொல்லவும்  பொடிசிக்கி சந்தோசம் ஆயிருச்சு. எம்புட்டு அறிவு புள்ளைக்கின்னு  திருஸ்டி கழிச்சி சொடக்குப்போட்டுட்டு 200 ரூவாய வாங்கி தவணைக்காரம்மாகிட்ட 10200 குடுத்து எம்மா என் கடன் முடிஞ்சிருச்சு ஆனா இப்ப உன் பேத்திக்கி நான் கடங்காரி ஆயிட்டேன் அது பணத்துக்கான கடன் இல்ல சமயத்துல ஒதவுனதுக்கான கடன் காரி.னு சொல்லிட்டு நீ நல்லா இருக்கனும் தாயின்னு கும்புடும் போது பொடிசி கண்ணு கலங்குச்சு. 

அப்ப நான்னு தவணைக்காரம்மா கேக்க இது மாதிரி பேத்தியப்பெத்த நீயும் நல்லாருக் கனும்னு சொல்லிட்டு கண்ணத்தொடைச்சிட்டு வெளிய நடக்க ஆரம்பிச்சா பொடிசி அதைப் பாத்துட்டு த்தன்னோட சக்கர நாக்காலியத் தள்ளிக்கிட்டு உள்ளாற போச்சு அந்த காலு வெளங்காத தவணைக்காரம்மா.

அ.முத்துவிஜயன்