பொன்னுத்தாயி - சிறுகதை
பொன்னுத்தாயிக்கி ஒரேமகன் தான். வாயக்கட்டி வயித்தக்கட்டி மகன வளத்தா ரொம்பப்பெரிய வேலையில்லைனாலும் அவனுக்குன்னு ஒரு வேலையத்தேடிக்கிட்டான். வயசும் ஆகிப்போச்சு அவனுக்குன்னு ஒரு தொண வேணும்ல.. எத்தன நாளைக்கி ஆத்தாலே பாக்கமுடியும் ... வயசுப்பய வேற ஒரு கலியாணம் கச்சேரி நடக்கவேணாமா அப்பத்தான ஊருக்குள்ள மருவாதி இருக்கும்
மொட்டயா இருந்தா ஆரு மதிப்பா. குடும்பம் புள்ள குட்டின்னு இருந்தாத்தான நாலுபேரு மதிப்பாக...அவளுக்கும் வயசாகிட்டே போகுது முன்ன மாதிரி வேலபாக்க முடியல
ராசேந்திரன் கிட்டச்சொஓதுனா""சொந்தம் சுறுக்குகளுக்குள்ள பொண்ணு இருந்தா சொல்லச்சொல்லி " ஏன்னா அவந்தான் இந்த வேலை செஞ்சிக்கிட்டு இருந்தான்
கலியாணம் முடிஞ்சிச்சின்னா கமிசன் வாங்குவான் பவுனுக்கு இம்புட்டுன்னு கணக்கு பையன் போட்டோ சாதகம் எல்லாம் வாங்கிட்டுப்போனான்..
பொண்ணுவீட்டுல கேப்பாகல்ல மாப்பிள்ள என்ன பண்ணுறார்ன்னு... இவமக கதிரேசனுக்கு பீடி சிகிரெட் தண்ணி கூத்தியான்னு எந்த கெட்டபழக்கமும் இல்ல ஏன்னா இப்பெல்லாம் அதுதன கேக்குறாக மாப்புள்ள சம்பாரிக்கிறது எம்புட்டுன்றது முக்கியமில்ல.... என்ன பழக்கம்வழக்கம்ன்றது முக்கியம்ன்னு பாப்பாகல்ல
ராசேந்திரனும் ஒரு பொண்ணு கொண்டாந் தான். பத்தாப்பு படிச்சிருக்கு மாநிறம் சராசரி ஒசரம்.. நல்ல கலையானமுகம்... துருதுருன்னு கண்ணு ... வட்ட மொகம்ன்னு இவளுக்குப் புடிச்சிப்போச்சி.... கதிரேசனும் சரி புடிச்சிருக்குன்னு சொன்னான்...
மேக்கொண்டு பேசனும்... ஆரகூட்டிட்டுப்போய் பேசுறது... ஆருமில்ல அதுனால அவளும் மகனுமா போய்ப்பொண்ணூ கேட்டாக அவங்களும் பாத்துட்டு இவுகளைப்பத்தி விசாரிச்சிட்டு சரின்னு சொன்னாக
திருப்ரோண்டம்( திருப்பரங்குன்றம்) கோயில்ல வைச்சி கலியாணம் கோயிலுக்குப்பக்கத்துல இருக்குற ஓட்டல்ல சாப்பாடுன்னு ஏற்பாடுபண்ணியாச்சு. பொண்ணுக்குப் பத்துபவுன் மாப்பிள்ளக்கி ரெண்டுபவுன்ல சங்கிலி சீர் செனத்தி ஊர்நாட்டு வழக்கம்போலன்னு பேசியாச்சு
கலியாணத்துக்கு முகூர்த்தப்பாய் பாத்திமாகிட்ட சொல்லியாச்சு.அதுல கோபுரம் வாரமாதிரி மயில்ல்லாம் இருக்குறமாதிரி கலர்கலராப்போடச்சொல்லியாச்சு...
மறுவீட்டுச்சாப்பாட்டுக்கு கெடக்கறி விருந்து பொன்னுத்தாயி வீட்டுல ஏற்ப்பாடு பண்ணி திருமங்கலம் சந்தையில கெடாப்புடிச்சிக் கொண்டாந்து கட்டியாச்சு.. ஹமீது வெட்டி கறியாக்குடுத்துருவாரு...சமையலுக்கு மணிகிட்ட சொல்லியாச்சு.. புள்ளைக பிரியாணி கேக்குதுன்னு அதையே ஏற்பாடும்பண்னியாச்சு...
பொண்ணுக்கு தாலி முகூர்த்தப்பொடவ ஒலகம்பஞ்சுல தலகாணி ஈரோடு சமுக்காளம் எல்லாம் வாங்கியாச்சு...
கலியாணநாளன்னிக்கி கோயில்ல வைச்சி தாலிகட்டி அப்புடியே ஓட்டல்ல டோக்கன் வாங்கிசாப்பாடு 200 பேருக்கு ஒரு சாப்பாடு 50 ரூவான்னு போட்டு சாயங்காலம் மறுவீடுன்னு வந்து சேந்தாச்சு வழக்கம்போல மறுவீட்டுக்கு சீரு ஊர்வலமாக் கொண்டாந்து மணமகளே மருமகளே வா வான்னு பாட்டு போடு மருமகவீடு வந்து சேந்துட்டா...
சம்பந்திக்கி கறிவிருந்து வைக்கயில எளவட்டங்க வழக்கம்போல தண்ணி சாப்புட்டு வந்து அளப்பற பண்ணி சமாதானம் ஆயி எல்லாம் முடிஞ்சிது....இருக்குறது ஒரேவீடு அதுனால அன்னில இருந்து பொன்னுத் தாயிக்கி படுக்க எடம் பிரச்சனையாப்போச்சு
சின்னஞ்சிறுசுக வீட்டுக்குள்ள குடித்தனம் நடத்த கயித்துக்கட்டிலு வெளியபோட்டு பொன்னுத்தாயி படுக்கவேண்டியதாப்போச்சு கொசு புடிங்கித்தள்ள அவஸத்தையாப்போச்சு இதுல மழைநேரம் ஒண்ணும் பண்ணமுடியல சமாளிக்க முடியல அதுனால வீட்ட ஒட்டி முன்னாடி மாடுகட்டிருந்த எடத்துல ஒரு தாவாரம் போட்டுக்குடுத்தான் மகன்
மருமக வந்து ஒருமாசம் சமையல் ரெண்டுபேரும் சேந்து செஞ்சாக. மாமியாவும்மருமகளும் ஒருத்தி தலையில ஒருத்தி பேண் எடுக்குறதும்...அவ சேலைய இவதொவச்சிக்காயப்போடுறதும் கோயில் கொளத்துக்கு ரெண்டுபேரும் போகவாறதுமா ஊர் கண்ணு படுற அளவுக்கு மூணுமாசம் போச்சு...
இது பக்கத்துவீட்டு அலமேலுக்குப்புடிக்கல ஏன்னாஅவளுக்கு அஞ்சும் பொண்ணு அதுல நாலு பொண்ண எப்புடியோ கட்டிக் அதுனால குடுத்துட்டா அஞ்சாவத பொன்னுத்தாயி மகனுக்குக்குடுக்க ஆச... ஆனா பொன்னுத்தாயி அத ஒத்துக்கல... பொன்னு கருப்பு... குட்ட வேணாமுன்னு சொல்லிட்டா அதுனால பொன்னுத்தாயப் அலமேலுக்குப் பாத்துப்பொறாம.. அதுனால அவ உள்ளாற புகுந்து ரெண்டு பேருக்கும் சண்டய மூட்டிவிட்டா...
பொன்னுத்தாயிக்கிட்ட பக்கத்துதெருவில மாமியாவ மருமக கெணத்துல தள்ளிகொண்டுட்டதாகவும் நீ எதுக்கும் சாக்கிறதயா இருக்கனும்ன்னு தூபம்போட்டா
மருமக கல்யாணமாகி மூணுமாசமாகியும் ஒண்ணும் வாந்தியெடுக்காததால மகனுக்கு வேறகல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறதா ஓதிவிட்டா...
மாமியா மருமக ரெண்டுபேருக்கும் பகை வளர ஆரம்பிச்சது...மருமக புருசன் கிட்ட வேற வீடு பாக்கச்சொன்னா... பொன்னுத்தாயி காதுல அதுவிழுந்து உக்கிரமாயிட்டா... "என்னாபாடு பட்டு வளத்தேன் நேத்து வந்தவ இன்னிக்கி என்மகன் மனசக்கெடுத்து ப்புட்டாளே"ன்னு பொலம்புனா
அந்த நேரம் பாத்து அவகிட்ட அலமேலு "எதுக்கும்சாக்கிறதயா இரு. .உங்க வீட்டுக்குப் பக்கத்துலயும் ஒரு மொட்டக்கெணறு இருக்கு....அதுல தள்ளுனாலும்தள்ளுவா"ன்னு சொல்ல பொன்னுத்தாயி மகன் கிட்ட கெணத்த மூட ஏற்பாடு பண்ணச்சொன்னா...
தெனம் படுக்குறப்ப பாலு குடிக்கிறது பொன்னுத்தாயிக்கிப்பழக்கம்.... அதுக்காகவே ஒரு மாடு வளத்தா... அலமேலு அதுக்கும் வெனை வைச்சா..."இப்பல்லம் பாலுல என்னத்தையோ கலக்கிக் குடுத்தா கொஞ்ச நாள்ல ஒடம்பு மெலிஞ்சி செத்துரு வாகளாம்"ன்னு ஓதிவிட்டா ...
ஏற்கனவே கவலயினால கொஞ்சம் மெலிஞ்சிருந்த பொன்னுத்தாயிக்கி சந்தேகம் மண்டயக்கொடைய பால் குடிக்கிறத நிறுத்திப்புட்டா...
இதுக்கு நடுவில மருமக வாந்தியெடுத்தா... இப்ப் பொன்னுத்தாயிக்கி ஒரே சந்தோசம் என்னன்னாலும் பேரப்புள்ள பொறக்கப் போறதுன்னு மருமகளை மறுபடி கொண்டாட ஆரம்பிச்சிட்டா...எல்லாத்தையும் மறந்து...
விடுவாளா அலமேலு...மருமககிட்ட ஓதுனா உன் கருவக்கலைக்க உன் மாமியா என்னமோ மருந்து வாங்கிவைச்சிருக்கா அவ கையில எதுவும் வாங்கிகுடிக்காதன்னு ஓதுனா..
அதுல மருமக ரொம்பப்பயந்துட்டா.. மாமியாவ சூன்யக்காரிமாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டா.. பகை முத்தி மாமியாவுக்கும் மருமகளுக்கும் சண்ட வர ஆரம்பிருச்சு... தினம் சண்டதான்...கைபட்டா குத்தம் காலபட்டாகுத்தமுன்னு ஆகிப்போச்சு...
அன்னிக்கி சாயங்காலம் அலமேலு கீழ மயங்கிவிழுந்துட்டா... வீட்டுக்குள்ளார தூக்கிட்டுப்போனா பேச்சு மூச்சு இல்லை...ஒடனே நெருப்புல பட்டமொளகாயப்போட்டு பொகமூட்டம் போட்டா பொன்னுத்தாயி... எல்லாரும் அச்சுபிச்சின்னு தும்ம கொஞ்சநேரத்துல அலமேலும் தும்மி நெனவு வந்துச்சு ஒடனே ஆஸ்பத்திரிக்கிக் கொண்டுபோனதுல ஒருகையும் காலும் வெளங்காமப்போச்சு... அவளால எந்த வேலையும் செய்ய முடியல... மகளுக வந்து பாத்துட்டுப் போனாகளேதவிர ஆரும் கூட வைச்சிக்கமாட்டீன்னுசொல்லிட்டாங்க...
வீட்டுலதனியாஅவஸ்த்தப்பட்டா...பொன்னுத்தாயிக்கிப்பாவமாப்போச்சு...
அவள பாவப்பட்டுப்பாத்துக்கிட்டா... அப்ப அப்ப சாப்பாடுகுடுத்து குளிக்கவைக்க ஒத்தாசை எல்லாம் செஞ்சா... அலமேலு நடமாட்டம் கொறைஞ்சி போச்சு... ஒடஞ்சிபோயிட்டா... தினம் பொன்னுத்தாயிதான் பாத்துக்கிட்டா...
இது அவள மாத்திடுச்சு... பொன்னுத்தாயி கஞ்சி ஊட்டும்போது கண்ணுல தண்ணி வரும் வாயும் இழுத்துக்கிட்டதால சரியாப் பேசமுடியல...கஸ்ட்டப்பட்டு சொன்னா என்ன மன்னிச்சிரு... இதுக்கு நான் அருகத இல்லாதவ உனக்கு எம்புட்டோ கெடுதல் பண்ணேன் இல்லாதது பொல்லாத சொல்லி உன் குடும்பத்த கெடுத்தேன் ஆனாநீ அத மனசுல வைச்சிக்காம என் உசிறக்காப்பாத்தி இப்பயும் என்னப்பாக்குற
உன் கால்ல விழுந்து மன்னிப்புகேட்டாலும் நான் செஞ்சபாவம் போகாதுன்னு அழுதுகிட்டே சொன்னா...
அதுக்கு பொன்னுத்தாயி சொன்னா இதுல என்ன இருக்கு... மனுசனுக்கு மனுசன் முடியாதப்ப ஒத்தாசை பண்ணனும்... பகையாளியா இருந்தாலும் ஒடம்புக்கு முடியாது போனா ஒதவிசெய்யனும்... கஸ்ட நேரங்கள்ல்ல எதையும் பாக்காம ஒதவி செய்யிறவதான் மனுசப்பெறவின்னு சொன்னா...
ஆனா நான் மனுசப்பெறவியே இல்ல... எனக்கு நரகம்தான் கெடைக்கும்ன்னு அழுதா அலமேலு... அவ கண்ணதொடச்சிட்டு சொன்னா பொன்னுத்தாயி எப்ப தப்ப ஒணந்து கண்ணீர்விட்டயோ அப்பயே உன் தவறு எல்லாம் கடவுள் மன்னிச்சிருவாரு கவலைப்படாதேன்னு சொன்னா.....
அதைக்கேட்டு கண்கலங்கி கும்புட்டா அலமேலு.........
அ.முத்துவிஜயன்