கலியாண கலர்பாயும் கறிக்கொழம்பும் - சிறுகதை

kaliyana-color-payum-kari-kolambu-short-story
கலியாண கலர்பாயும் கறிக்கொழம்பும் - சிறுகதை

அன்னிக்கி சொந்தக்காரவுக வீட்டுல மறுவீட்டு விருந்துச்சாப்பாடு.மறுவீட்டுச்சாப்பாடுன்னா அசைவம் போடுவாக கோழி முட்டை கறிக்கொழம்புன்னு எல்லாம் தடபுடலா இருக்கும்.
 
இவளுக்கு மூணும் பொண்ணுக , விருந்துக்குக் கூப்புட்டாகளேன்னு போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே அழுக. என்னான்னு விசாரிச்சா இவங்களைப்பாத்ததும் எளக்கார மாப்       போச் சாம் விசேசகாரவுங்களுக்கு. ரொம்ப நேரமாக் காக்கவைச்சிட்டு கடைசில மிச்ச மிருந்த கறிக்கொழம்பு மாத்திரம் ஊத்தி அம்புட் டுத்தேன் திண்ணுட்டுப்போங்கன்னு சலிப் போட சொன்னாகளாம், மூணும் வந்து அழுதுச்சுக. அப்ப இவ சொன்னா நம்மளுக்கு கலியாண பாய்  ஆடர் ஒண்ணு வந்திருக்கு  அது முடிச்சிக்கொடுத்தா நல்ல காசு வரும்  அப்ப ஒரு கிலோ கறி எடுத்து மனசா செழிக்க செழிக்கச் சாப்புடலாம்னு வாக்குக் கொடுத்திருந்தா.

எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு புருசன் சம்பாரிக்கிறவரை, இவ புருசன் ஆக்சிடெண்ட்ல அடிபட்டு நடக்கமுடியாம வீட்டுல மொடங்குனவன்ன எல்லாம் தலைகீழாப்போயிறுச்சு,  வெளிவேளைக்கி இவ போனா சந்தேகம் மனுசனுக்கு என்னத்தச்சொல்ல அந்த நேரத்துல அவளுக்கு பாய் முடையிறதச் சொல்லித் தந்ததே இப்ராகிமோட பீவி பாத்திமாதான், அந்த ஊருல பாய்மாருக வீட்டுலதான் பொம்பளைக பாய் தயாரிக்கிறத தொழிலாச்செஞ்சிக்கிட்டு இருந்தாக,

இவளோட புருசன் அடிபட்டு மொடங்குன வன்ன என்ன பண்ணுறதுன்னு திக்குத் தெரியாம நின்னப்ப பாத்திமாதான் சொன்னா ஒனக்குப்பாய் முடைய சொல்லித்தாறேன் பொம்பளைக வெளியபோய் கஸ்டப்படாம வீட்டுக்குள்ளாறயே வேலை செய்யலாம் வீட்டு வேலைகளைப்பாத்துக்கிட்டே சமையலும் செஞ்சிக்கிட்டே சும்மா இருக்குற நேரத்துல செய்யிற தொழில்தான் இது கெளரவமான தொழில் ஆருக்கிட்டயும் போய் கைகட்டி நிக்க வேண்டியதில்லன்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் சொல்லிக்கொடுத்தா

அவளோட புருசன் இப்ராகிம் கீழமாசிவீதில மொத்தமா கோரை நூல் மஞ்சி சாயம் எல்லாம் வாங்கியாந்து குடுத்து பாய் போட்டவன்ன அத அவரே மொத்தமா வாங்கிட்டுப்போய்  வித்துட்டு வந்து காசு கொடுப்பாரு,  அப்ப இவங்க வீட்டுலயே பாய் போடுற தறி அமைச்சிக்கொடுத்தா பாத்திமா அதை எப்புடிப்போடுறதுன்னும் சொல்லிக்குடுத்தா       
அதுக்குன்னு மூணு மூங்கில்க முக்காலி மாதிரி அமைச்சி குறிப்பிட்ட அளவு மூங்கில் கம்புகள படுக்கவசமா வைச்சி ஆணி அடிச்சி கட்டி அதுல நூல கோர்த்து பாவு மாதிரி ரெடிபண்ணிக்கொடுத்தா, அதுல ஒக்காந்து வேலை செய்ய நீளமான பலகை அதுல ஒக்காந்துக்கிட்டுத்தான் நகட்டி நகட்டி பாய் போடனும், பாவுல மாதிரியே மரத்துல செஞ்ச ஓட்டை ஓட்டையா போட்ட பலகை இருக்கும் அதை வைச்சித்தான் அடிச்சி இறுக்கி நெருக்கமா கோரைய சேத்து பாய் செய்யிறது. குறுக்கு எடுபடுற வேலைதான் என்ன செய்ய வயிறு இருக்குதே

மொத்தக்கடையில கோரைய வாங்கியாந்து அதுக்கு பச்சை செவப்பு நீலம் மஞ்சள்னு கலர் கெமிக்கல் வாங்கியாந்து சாயம் காச்சி அதுல கோரைய முக்கி வேலவைச்சி  கலர் கோரை தயார் செய்யனும், சாதாபாய்களுக்கு சேலை முந்தாணி  மாதிரி கலர் கோரை போடனும், கலியாணப் பாய் எல்லாராலயும் போட்டுறமுடியாது , ஆனா இவ அதையும் கத்துக்கிட்டா, அதுக்கு நெறையா மெனக்கெடனும் அதுல கோபுரம் கிளி மயிலு  மாதிரி டிசைன் பண்ணனும், அதையும் பாத்திமாதான் சொல்லித்ததந்தா, அதுவும் சமுக்காளம் செய்யிறமாதிரிதான்

பாய் போட்டவன்ன  அடுத்து நூலைச்சேத்து அடுத்த பாய் போடலாம். இல்ல அவுத்து வைச்சிறலாம், இதுல நூல்பாய் கம்மி ரேட்டு மஞ்சிப்பாய் ரேட் அதிகம் அதுக்கு மஞ்சி வாங்கியாந்து அதுல நூல் நூத்து அந்த மஞ்சி நூல்ல பாய் போட்டுக்குடுப்பா. அது நல்லா ஒழைக்கும் அதுனால அதுக்கு வேலையும் அதிகம் நல்லாவும் ஒழைக்கும் 
பாய் போட்டவன்ன இப்ராகிம்கிட்ட கொண்டு போய் குடுத்தா காசு குடுப்பாரு  அப்புடியே அடுத்த தயாரிப்புக்கு கோரையும் நூலும் வாங்கிட்டு வந்துருலாம் இப்புடித்தா பொழப்பு போய்கிட்டு இருந்துச்சு

ஏற்கனவே சொன்ன மாதிரி அந்தக் கல்யாணப் பாய்க்கு தனியா கெமிக்கல் கலர் வாங்கிட்டு வந்து கோரைய வேகவைச்சி கலர் பூசி ரெடி பண்ணி அஞ்சு நாளா உசிறக் கொடுத்து பாய் மொடைஞ்சி கலியாணக் காரவுக வீட்டுல குடுத்து காசு சொளையா வாங்கியாந்துட்டா.

அன்னிக்கி பிள்ளைகளுக்கு லீவு ஞாயத்துக் கெழமை வேற அதுனால கறி எடுத்துக் கொழம்பு வைக்கிறதுன்னு முடிவெடுத்து கறியும் வாங்கியாந்து கொழம்பு வைச்சி சோறாக்கி ரெடி பண்ணிக்கிட்டு இருந்தா, அதோட அதா பாயும் போட்டுக்கிட்டு இருந்தா அன்னிக்கி மத்தியாணம் இப்ராகிம்  வந்து பாய் வாங்கிட்டுப்போறதாச் சொல்லி இருந்தாரு. அதுனால பாய் போட்டுக்கிட்டே சமையலும் நடந்துக்கிட்டு இருந்துச்சு.

பிள்ளைக வீட்டுல கறிக்கொழம்பு திங்கப் போற சந்தோசத்துல வெளயாடிக்கிட்டு இருந்துச்சுக.  இவ கொழம்பு கொதிக்கிற  வாசம் வந்தவன்ன  கறிவெந்துருச்சான்னு போய் பாத்து எறக்கப்போனா, அப்ப கறிக்கொழ்புல என்னமோ வித்தியாசம் தெரிஞ்சது. கொழம்பு அப்புடியே ரத்தக்கலர்ல  செக்கச்செவேல்னு இருந்துச்சு, பாத்ததும் இவளுக்கு அடி வயிறு கலங்கிப்போச்சு 

ஆத்தீ என்னமோ நடந்துருக்குதே இல்லாட்டினா கொழம்பு மஞ்சக்கலர்லதான் இருக்கும் இது ரத்தச்செவப்புல கெடக்குன்னு கலங்கிப்போனா, அழுக அழுகயா வந்துச்சு ஒரு வார ஒழைப்புல வந்த காசுல கறி வாங்கியாந்து வைச்ச கொழம்பு பிள்ளக வேற ஆவாலா காத்துக்கிட்டுக்கெடக்குதுக என்ன இது சோதனைனு கலங்கி நின்னப்ப 
இவளோட மகளுகளக்கூப்புட்டு வெசாரிச்சா ஏண்டி நீங்க என்னமும் பண்ணுனீங்களான்னு கேட்டப்ப மூத்தது இல்லம்மானு சொல்லிச்சி , இளையது பேந்தப்பேந்த முளிச்சது ,அப்ப நடுவுளது சொல்லிச்சி அம்மா இந்தப் புள்ளதான் பாய்க்குப்போடுற சாயத்தை கொழம்புல போட்டுருச்சு ,அதுதான் கொழம்பு நெறம் மாறிப்போச்சுனு சொல்ல வந்த கோவத்துல கடைசிப்புள்ளயப் போட்டு அடி நிமித்திப்புட்டா. 

ஏண்டி வம்பாடு பாட்டு குறுக்க ஒடிச்சி நீங்க கேட்டிகளேன்னு  கறிக்கொழம்பு வைச்சா இப்புடிப் பண்ணீட் டீங்களேன்னு ஒரு பக்கம் அழுக ஒரு பக்கம் கோவம் வர  வெறிபுடிச்ச மாதிரி ஆயிட்டா ,பிள்ளைக வெறுஞ்சோத்த எப்புடி திங்கி றதுன்னு தலையில கைவைச்சி ஒக்காந்துட்டா,

அழுக வந்து கண்ணுல மாலை மாலையா ஊத்துது பிள்ளக வந்து அழுகாதம்மா நாங்க தண்ணிய ஊத்தி கஞ்சியா சோத்த சாப்புட்டுக் கிறோம்னு சமாதானம் சொல்லிச்சுக. ஆனாலும் சமாதானம் ஆகாம அழுதுக்கிட்டே இருந்தா.
அப்ப பாத்திமா வீட்டுக்குள்ளவந்தா இவ அழுதுகிட்டு இருக்குறதப்பாத்து மச்சி என்னாச்சு ஏன் அழுகிறன்னு விசாரிச்சா. இவ வெவரத்தைச்  சொன்னதும் அவளுக்கே ஒரு மாதிரி ஆயிப்போச்சு.   இப்புடியா பண்ணுங் கன்னு அது வெசமாயிடுமே மொதல்ல அதை குழியத்தோண்டி உள்ளாற போட்டு மண்ணால மூடுங்க  மச்சி கோழி நாய் திண்ணாலும் வெசமாயிடும் அந்தப்பாவம் நமக்கு வேணாம்,னு சொல்லிட்டு கொஞ்சம் இருங்க நான் வீட்டுக்குப்போய்ட்டு வாறேன்னு சொல்லிட்டுப் போய் திரும்பி வந்தா

திரும்பி வந்த அவ கையில ரெண்டு பாத்திரஙக இருந்துச்சு. அப்ப சொன்னா அவ மச்சி இதுல பிரியாணியும் கறியும் இருக்கு விசேசக்காரவுக கொண்டாந்து எங்களுக்குக் குடுத்தாக, பிள்ளைகளுக்குக் குடுங்க பாவம் ஏமாந்து போயிருங்க. எங்க வீட்டுல அடிக்கடி பிரியாணி கொண்டாந்து குடுப்பாக சொந்தக் காரவுக, அது  நாங்க எப்பையும் சாப்புடுறது தான் இன்னிக்கி நீங்க சாப்புடுங்க நு குடுத்தா

அப்ப இவ ” இத இங்க குடுத்தா உங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீகன்னு” கேக்கவும் அவ சொன்னா ஒளை வைச்சிட்டு வந்துருக்கேன் அவர்வரலேட்டாகும் போய் அரிசிபோட்டா ரெடியாயிடும் ரசம் வைச்சி சமாளிச்சிடுவேன்னா

அப்ப இவ சொன்னா ”ரொம்ப சந்தோசம் அத்தாச்சி நீங்க தப்பா நெனைக்கலைன்னா இங்க ஏற்கன்வே வடிச்ச சோறு இருக்கு அத எடுத்திட்டுப்போகலாம்ல” சொன்னவன்ன பாத்திமா சொன்னா தாரளமா ”எடுத்திட்டுப் போறேன். குடுங்க”ன்னா. 

இவ பிரியாணிய எடுத்துவைச்சிட்டு வடிச்சசோத்த போட்டுக் குடுத்தா பாத்தி ரங்கள்ல, அப்ப பாத்திமா சொன்னா கொஞ்சமாக்குடு மச்சி மீதி ராத்திரிக்கி நீங்க சாப்புடலாம்ல   எங்க வீட்டுல ராத்திரி சப்பாத்திதான் இங்க இருந்தாலும் நீங்க சாப்புடுவீங்கன்னு சொல்லிட்டு கொஞ்சமா எடுத்துக்கிட்டுக் கெளம்புனா

அப்ப பாத்திமா சொன்னா எங்களுக்குப் பிள்ளக இல்ல இவளுகளப்பாத்தா எனக்கே ஒரு ஆறுதல் அதுகதான் ஒங்களுக்கு சொத்து எல்லாம் குடுத்த அல்லா எங்களுக்கு அந்த பாக்கியத்தைக் குடுக்கல  என்ன பண்ணன்னு கண்ணத்தொடைச்சிக்கிட்டா. அது பாத்து இவளுக்கும் கண்ணு கலங்குச்சு எல்லாம் நல்ல படியா நடக்கும் சீக்கிரமே ஒங்க வீட்டுலயும் கொழந்த சத்தம் கேக்கும்னு சொல்லும்போது 

அந்த ஊர் மசூதில பாங்கு ஒலிக்கிற சத்தம் கேட்டுச்சு கண்ணத்தொடச்சிக்கிட்டுப்போனா பாத்திமா,
அதேநேரத்துல அவ குடுத்த பிரியாணிய எடுத்து பிள்ளைகளுக்கு தட்டுல போடப்போன அவளுக்கு  கண்ணு மங்கலாத்தெரிஞ்சதுக்குக் காரணம் கண்ணுல நெறஞ்சி நின்ன கண்ணீர்தான் ,தொடைச்சிட்டு பிள்ளைகளைச் சாப்புடச்சொன்னா இவ. அந்த பிரியாணில என்ன என்னமோ தெரிஞ்சிச்சி அவளுக்கு பிள்ளைகளோட மொகத்துல வந்த சந்தோசத்துல பாத்திமாவோட மொகம் தெரிஞ்சது.

அ.முத்துவிஜயன்