விதிப்படி - சிறுகதை

vithippadi-short-story
விதிப்படி - சிறுகதை

செவப்பாயி வந்து அவளோட புருசனுக்குப் பொண்ணுகேட்டா 
“என்ன பண்ணுவீகளோ தெரியாது என் புருசனுக்கு ரெண்டாந்தாரமா ஒங்க மூத்த மகளக்குடுக்கனும் நான் யார் கால்ல விழுகனுமோ சொல்லுங்க விழுகிறேன் எப்புடியாவது அது நடந்தாகனும்” நு அழமாட்டாதகொறையாப்பேசுனா செவப்பாயி

“ என்னா புள்ள கிறுக்குத்தனமா இருக்கு ஆராவது தன்னோட புருசனுக்குப்பொண்ணு பாப்பாகளா அதுவும் ரெண்டாந்தாரமா இல்ல நீ கேக்குறதுக்காக பொண்ணத்தான் ரெண்டாந்தாரமா குடுப்பாகளா ஒனக்கு கிறுக்கு எதுவும் புடிச்சிருச்சா இல்ல நாங்க லூசுன்னு நெனச்சி வந்தியா போய் வேற வேலையப்பாரு” நு சொன்னாரு அவரு
“ இல்ல நல்லாத்தெரிஞ்சி சொயநெனப்போடதான் வந்து கேக்குறேன்  நீங்க ஒங்கபொண்ணக்குடுக்கலைன்னா நான் நாண்டுக்கிட்டுச் சாவுறதத்  தவிர வேற வழியில்ல ஏன்னா அங்க என்னான்னமோ நடந்துக்கிட்டு இருக்கு நான் என்னையும் என் புருசனையும் காப்பாத்தனும் நா வேற வழியில்ல இது ஒன்னுதான் வழி தயவுசெஞ்சி ஏற்பாடு செய்யிங்க “ நு அழுதா

“ வெவரமாச்சொல்லு என்ன நடக்குது ஆரு இதையெல்லாம் பண்ணுறா சொன்னாத்தான தெரியும் நீபாட்டுக்கு கூதுப்புடியா  நான் பொறந்தது நல்லூரு என்னப்பன் பொறந்தது செல்லூருன்னு பேசிக்கிட்டு இருந்தா ஒரு எழவும் புரியல கோவந்தான் வருது” ந்னாரு

அப்ப செவப்பாயி சொன்னா

“ என் புருசனுக்கு அவனோட ஆத்தா செல்லம்மா அவுக தம்பி மகளை ரெண்டாந்தாரமா கட்டிவைக்க ஏற்பாடு பண்ணுது ஏன்னா அவ தம்பிமகளுக்கு வயசாயிருச்சு ஒன்னும் கலியாணம்கூடி வரல அதுவும் போக அவ கண்ணறாவியா வாய்பூராம் எத்துப்பல்லா இருப்பா அவ வந்தான்னா என்னய ஒழிச்சிட்டுத்தான் அடுத்த வேலை பாப்பா  அதுதான் உங்க கால்ல விழுந்து கெஞ்சிட்டுக்கெடக்குறேன்”

“அது சரி அதுக்காக என்கிட்ட ஏன் வந்த நான் எப்புடி என் மகளை ரெண்டாந்தாரமா குடுக்கச்சம்மதிப்பேன் நான் கெடக்குறேன் விடு என் மக எப்புடிச்சம்மதிப்பான்னு நெனச்ச உன் புருசன் வயசென்னா அவ வயசென்ன ஒனக்கு மனசாச்சி இல்லயா”

“ அதெல்லாம் பாக்கமயா வந்துருப்பேன் உன் மக சாதகத்தை வாங்கிக்கொண்டுபோய் ஜோசியக்கார மாமாகிட்டக்குடுத்துப்பாத்தேன்

அதுல அவளுக்கு ரெண்டாந்தாரமாத்தான் அவளுக்குக் கலியாணம் நடக்கும் ஆனா அவளுக்கு 5 ஆம்பளைப்பிள்ளைகளும் மூனு பொம்பளைப்பிள்ளைகளும் பொறக்கும் அமோகமா பேரன் பேத்திகளோட நீண்ட ஆயிசோட இருப்பா ஒரு கொறையும் இல்லனு சொன்னாக அது மட்டுமா என்னோட சாதகத்தையும் என் புருசன் சாதகத்தையும் சேத்தே கொண்டுபோய்குடுத்தேன் அதப்பாத்துப்புட்டு

எனக்க்குகொழந்தப்பாக்கியமே இல்ல அது நடக்கவே நடக்காது ஆனா என் புருசனுக்கு நல்ல கொழந்தப்பாக்கியம் இருக்கு ஆனா அது என் மூலமா இல்ல நு சொன்னாரு இப்ப நான் முன்னாடி சொன்னதையும் என் புருசன் சாதகத்தையும் கூட்டிக்கழிச்சிப்பாரு நான் ஏன் கேக்கு றேன்னு தெரியும்” நு சொன்னா

செவப்பாயி ஆத்தாவும் இவரோட சம்சாரமும் ஒன்னாப்பொறந்தவங்க இவரு செவப்பாயிக்கு சித்தப்பா மொறை வேணும். செவப்பாயிய அவ புருசன் மில்லு வேலைபாக்குறாரு நல்ல சம்பளம்னு சொல்லி கட்டிக்குடுத்தாக செவப்பாயி ஆளு நல்ல கலரு ஓங்குதாங்கான ஒடம்பு அதேமாதிரிதான் அவளோட புருசனும் ஆறடிக்கு மேல ஓங்கு தாங்கா இருப்பாரு. பாக்குறவுக எல்லாம் நிமிந்துதான் பேசனும் 

செவப்பாயி கலியாணம் பண்ணிக்குடுத்து பத்துமாசத்துல புள்ளத் தாச்சியா ஆனா. எல்லாருக்கும் சந்தோசம் எல்லாரும் ஆவலா பிர்சவத்தை எதிர்பாத்து இருந்தாக அப்பப்பாத்து அவளுக்கு அம்மை போட்டுச்சு. எல்லோருக்கும் பயமாப்போச்சு என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு கலங்கிக்கெடந்தாக. அப்ப செவப்பாயியோட ஆத்தா சாமிக்கு வேண்டிக்கிட்டா ”என் மகளையாவது காப்பாத்திக்குடு”ன்னு அதேமாதிரி புள்ளையக்காப்பாத்தமுடியல அவளமாத்திரம்தான் காப்பாத்த முடிஞ்சது அதுக்கப்புறம் அவ மொகமெல்லாம் அம்மத்தழும்பாப்போச்சு. 
அதுக்குப்பின்னாடி அவ வயித்தில எதுவும் தங்கல, ரெண்டு மாசம் மூனுமாசம் னு நின்னு கழிஞ்சு போயிருச்சு எதுவும் வயித்தில தங்கல இதுனால அவங்கவீட்டுல இவளுக்கு ஏச்சு பேச்சுக அவளோட மாமியா இவள மலடி மலடின்னு சாடையாப்பேசுறதும் ஊரெல்லாம் போய்

“ எனக்குன்னு வாய்ச்சிருக்கே ஒன்னு அது எதுக்கும் பிரயோசனம் இல்லாம அது என்ன வயிறா இல்ல காளவாசலா ஒன்னும் தங்க மாட்டீங்குது ஊரெல்லாம் என் மயன ஒரு மாதிரி பேசுறாக”ன்னு பொறனி பேச ஆரம்பிச்சிது

அத செவப்பாயி அப்ப அப்ப வந்து அவளோட சின்னம்மா அதவது இவருபொண்டட்டிக்கிட்டச் சொல்லி அழுவா ”அவளும் எல்லாம் சரியாப்போகும் ஒங்களுக்கு என்ன வயசா ஆயிருச்சு கொஞ்சம் தள்ளிப்போகுது பேசாம அழகர்கோயில்ல சாமிக்கு வேண்டிக்கிட்டு தொட்டிகட்டிப்போடு நீ தொட்டியப்போட்டா சாமி  வயித்த ரொப்பும்” நு சொல்லுவா

ஆனா அதுமாதிரி நடக்கல பிரச்சனை தொடந்துச்சு, அப்ப குலதெயவம் கோயில் சூலாட்டுப்பூசையில சாமியாடிக்கிட்ட மடிப்பிச்ச கேட்டு கால்ல விழுந்தா செவப்பாயி. அப்ப சாமி சொல்லுச்சு” நீ கெடாவெட்டி பூசையப்போடு எனக்கு வயிறு நெறையும்  உனக்கு தொட்டியக் கட்டுறேன்” நு சொல்லிச்சி அந்தப்பூசைக்கி இவரும் போயிருந்தாரு அங்க இவரு தன்னோட மகளுக்குக் கலியாணம் கூடிவரலன்னு சாமியாடிக்கிட்ட கேட்டாரு இவருக்கு சாமியாடி சொன்னாரு இன்னும் நேரம் வரலியேப்பா கொஞ்சம் பொறு  மாப்புள்ள கொண்டாருறேன் “ நு சொல்லிச்சு

செவப்பாயி புருசன்கிட்டச்சொல்லி எக்கசக்கமா செலவு பண்ணி கெடா வெட்டிப்பூசையும் போட்டா. அப்ப சாமியாடி சாமி எறங்கி வந்தப்ப இவளோட புருசன்கிட்ட ஒனக்கு சீக்கிரமே தொட்டிகட்டுறேன்னு வாக்குக் குடுத்துச்சு அதைப்பாத்துட்டு செவப்பாயி நமக்குத்தான் புள்ள பொறக்கபோகுதுன்னு இருந்தா ஆனா இவளோட மாமியா  இவ புருசனுக்கு தம்பிமகளைக்கட்டிவைக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருந்தா

இப்ப இவர்போய் தன்னோட மககிட்டப்பேசுனாரு” இது மாதிரி ஒன்னய ரெண்டாந்தாரமா செவப்பாயி புருசனுக்குக் கேக்குறாக என்னா சொல்லுற?’’ நு

அப்ப அவரோட மக சொன்னா ” இது என்னா கூத்தாருக்கு கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவனத்தூக்கி மனையில வையி”ன்றமாதிரி இருக்கு நான் மாட்டேன் அவரு வயசென்னா என் வயசென்னா அதுவும்ரெண்டாந்தாரமா அதவிட முக்கியம் என்னோட பெரியம்மா மக எனக்குச்சக்களாத்தியா நல்ல கூத்து இது” நு சொல்லிக்கோவிச்சிக்கிட்டா முடியாதுன்னுட்டா

அப்ப இவரு சொன்னாரு” ஒனக்கு ஒரு கண்ணு ஒச்சம் ஒருகண்ணுதான் அதுவும் சரியாத்தெரியாது நாங்களும் எத்தனை மாப்பிள்ளை பாக்குறது வாரவெனெல்லாம் என்னா குருடிய காமிக்கிறீங்க நு சொல்லி கேவலப்படுத்துறாங்க என்னா செய்ய?” நு பரிதாபமா சொன்னாரு

அப்ப அவரோட சம்சாரம் வந்து சொல்லிச்சி” ஆத்தா ஒனக்கு இதுவே அதிகம் மாப்புள்ள பாத்துப்பாத்து ஓஞ்சிட்டோம் ஒருத்தனும் சீண்ட மாட்டீங்குறானுக எங்களை என்னாத்தப்பண்ணச்சொல்லுற  எல்லாம் ஒன்னோட நல்லதுக்குத்தான் சொல்லுறேன் நான் செவப்பாயிக்கிட்டப் பேசிட்டேன் அவ கலியாணம் முடிஞ்சதும் தனியாப்போயிருவாளாம் ஒங்க கூட இருக்கமாட்டாளாம் கஞ்சிமாத்திரம் நீ ஊத்துனாப் போதுமாம் இன்னொரு விசயம் நீ மாட்டீன்னா அவ தொங்குவேன்றா அதுக்கு நடுவில நம்ம பங்காளி பெரியசாமி அவர் மகளக் கட்டிவைக்க ஒத்துக்கிட்டாராம்  நானும்கோயில்ல போய் குறி கேட்டேன் சாமி உத்தரவு குடுத்துருச்சு.  சும்மா 

வெட்டியாப்பேசிக்கிட்டுக்கெடக்காம போய் கலியாணம் பண்ணிக்கிட்டு சாதகத்துல சொன்ன மாதிரி புள்ள குட்டியபெக்குற வழியப்பாரு” நு கோவமா சொல்லிச்சு

அப்ப இவர் மக அப்பாகிட்ட அழுதா ”வேற வழியே இல்லையாப்பா” ன்னு பரிதாபமா அப்ப இவர் சொன்னாரு” எல்லாம் விதிப்படிதான் நடக்கும் எல்லாம் அவன் செயல்” நு

அப்பக்கேட்டாபாரு அவர் மக ஏம்ம்பா அவருக்கு ரெண்டாம் கலியாணம் பண்ணுறமாதிரி ஏன் செவப்பாயி அக்காவுக்கு ரெண்டாம் கலியாணம் பண்ணக்கூடாது?” நு

வந்துச்சே கோவம் இவருக்கு “ அடி நாயே செருப்பால அடிப்பேன் என்ன பேச்சுப்பேசுற இதுக்குத்தான் பொட்டச்சிகளைப் பேசவிடக் கூடாதுன்றது” நு கத்துனாறு

அப்ப மகசொன்னா ”விதிப்படின்னு சொன்னீங்களே அது நீங்க எழுதுன விதிப்படி தான?” 

பளார்னு விழுந்துச்சு ஒரு அறை அவளோட கன்னத்துலயும் அவரோட விதிமேலயும்

அ.முத்துவிஜயன்