போரும் சமாதானமும் - சிறுகதை
அன்னிக்கி காலையில இருந்தே ஒன்னும் சரியில்ல. சண்டை காபியில் ஆரம்பிச்சது. அன்னிக்கின்னு அவ காபில சக்கரை போட மறந்துட்டா. அவன் காபில சக்க ரையில்ல மறந்துட்டீயா"ன்னு கேட்டான்
அதுக்கு அவசொன்னா "இப்ப என்ன ஒரு நாளைக்கி சக்கரை இல்லாமத்தான் குடிங்க தினம் போட்டுத்தான முழுங்குறீங்க ஒரு நாள் போடாட்டினா என்ன குடியா முழுகிடப் போகுது" நு வெரப்பா சொன்னா
"ஏன்மா சக்கரையில்லாம காபி போட்டுட்டு சக்கரை கேட்டா சவடால் அடிக்கிற ஒனக்கு முடியலன்னு சொல்லு நானே போட்டுக் கிறேன்"னு சொன்னவன்ன திரும்பிப் பாஞ்சா அவன் மேல. "போட்டுக்குடிக்க வேண்டி யதுதான அப்புறம் எதுக்கு கம்ளெயிண்ட் பண்ணுறீக குடிச்சித் தொலைங்க"ன்னா
என்ன ஆச்சு இவளுக்கு இன்னிக்கி அடுப்புல கொளம்பு போல காலையிலயே கொதிக்கிறா நு ஒன்னும் புரியல. அதுக்குள்ள காபி ஆறிப்போக குடிக்கமுடியல இவனுக்கு சூடா வேணும், இப்ப சுடவைக்கச்சொல்லுறதா இல்ல என்ன பண்ணுறதுன்னு தெரியல. ஒரு யோசனை வந்துச்சு சுடைவைக்க சொன்னா திரும்ப கொதிப்பா அதுனால சைலண்டா வாஸ்பேசின்ல கொட்டிடுவோம் எதுக்கு வீண் பிரச்சனைன்னு நெனச்சான்
அதுமாதிரியே நைஸா கொண்டுபோய் கொட்டிட்டு தண்ணியத் தொறந்துவிட்டுட்டுத் திரும்பிப்பாத்தா பின்னாடி மொறைச்சபடி அவ. "என்ன பண்ணுனீங்க?"ன்னு கேட்டா முழி எல்லாம் பத்ரகாளி ஆக விரிஞ்சி
இவன் மாட்டிக்கிட்டான் வழிஞ்சான். "காபி குடிச்சிட்டு கப்ப கழுவுறேன்"னு சொன்னான். "ஏன் இப்படி பித்தலாட்டம் பண்ணுறீங்க காபிய முழுசா கொட்டுனதநான் பாத்தேன் கண்ணு முன்னாடி பாத்ததக் கதவுடுறீங்க. எப்பப் பாத்தாலும் பித்தலாட்டம் பொய் தானா?"னு மொறைச்சிக்கிட்டே கேட்டா
அதுக்கு இவன் "இல்ல சூடு ஆறிப்போச்சுன்னா நல்லா இருக்காது உன்கிட்ட சுடவைக்கச் சொன்னா கத்துவ அதான் காபிய தியாகம் பண்ணிட்டேன்"னான் பணிவா, அதுக்கு அவ சொன்னா "பால் வெலை தெரியுமா லிட்டர் 60 ரூ காபித்தூள் வெல ஜி.எஸ். டி யோட 298 ரூ கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா அத்தோட நான் கத்துவனா ? கத்துறமாதிரி வேலை செஞ்சிட்டு கத்துறன்னா ஏன் கத்தமாட்டேன், செய்யிறது எல்லாம் தீவுனை செஞ்சிட்டு ஆடு திருடுன கள்ளன் மாதிரி முழிச்சா கத்தாம என்ன பண்ணுவாங்க
ஒன்னச்சொல்லிக் குத்தமில்ல. ஒன்ன இப்புடி வளத்துருக்காளே ஒருத்தி ஒங்கம்மா அவளச்சொல்லனும். வளத்துருக்கா பாரு வளம தெரியாம எல்லாம் என் தலையெழுத்து நான் கெடந்து அனுபவிக்கிறேன். அவ எங்கயோ ஒக்காந்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருப்பா மகராசி" ன்னு மூக்க சிந்துனா
"ஏன்மா ஏன் நம்மளுக்குள்ள நடக்குறதுக்கு எங்கயோ இருக்குற என் அம்மாவ ஏன் இழுக்குற பாவம் அவங்க என்ன வளக்க எவ்வளவு பாடு பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும், தேவையில்லாம அவங்கள இழுக்காத"ன்னான்
அதுக்கு அவ சொன்னா "ஆள வளத்தா அறிவையும் சேத்து வளத்துருக்கலாம் இப்ப நான் கெடந்து லோல்படுறேன் எல்லாம் அவரைச்சொல்லனும் அதான் எங்கப்பாவை பாத்துப்பாத்துப்புடிச்சாருபாரு ஒரு மனுசன எனக்குன்னு பொறந்து வந்தமாதிரி என்னத்தச்சொல்ல. ஒவ்வொருத்திக்கும் எப்புடிப்பட்ட புருசன் கெடைச்சிருக்கான் எனக்குன்னு வந்து வாச்சிருக்குதே எல்லாம் என் தலவிதி"ன்னு பொலம்புனா
இப்பத்தான் இவனுக்கு வரக்கூடாத அந்தக்கோவம் வந்துச்சு. "இப்ப என்ன கூப்பாடு போடுற, நீ சமைக்கிறதெல்லாம் ஒரு சமையல் அத திங்கனும்றது என் தலைவிதி எனக்குன்னு வந்து சேந்தியே பரதேவதை, இந்தக் கொடுமைய நான் எங்கபோய் சொல்ல , எங்க அம்மா சமைச்சா எட்டூரு மணக்கும் அம்புட்டுருசியா இருக்கும். ஒன் சமையல் நடக்கும்போது ஒரு குசுவாசம் கூட வாரதில்ல நான் தலையெழுத்தேன்னு திங்குறேன். அந்தக் கருமத்த ஒரு சமையல ஒழுங்காச் சொல்லிக் குடுத்து வளத்துருக்கலாம் ஒன்ன
ஒரு எழவும் தெரியாத மண்ணக்கொண்டாந்து என் தலையில கட்டி வைச்ச ஒங்க அப்பனத்தான் தேடிக்கிட்டு இருக்குறேன் மவன் கையில கெடைச்சான் அவ்வளவுதான்"னு கோவமா கத்துனான்
அதுக்கு அவ சேலைய வரிஞ்சி கட்டிக்கிட்டு "என்ன செய்வ எங்க அப்பாவ சொல்லுயா சொல்லு கொன்னுபுடுவியா இல்ல கொல பண்ணுவியா என்ன செய்வ"ன்னு படு கோவமாக் கேட்டா
"ஒன்னும் பண்ண மாட்டேன் ஒங்க அப்பனப் பாத்தா ஏன்யா பொண்ணுதான் பெத்தியா இல்ல பிசாசைப்பெத்தியான்னு நாக்கப்புடிங்குறமாதிரி கேப்பேன்"னான்
அதுக்குள்ள அவங்களோட மக தூங்கி எந்திரிச்சி வந்தா." என்ன இங்க சண்டை?"ன்னு கேட்டா. ஒடனே அவ சொன்னா "ஏன்டி நான் நல்லாத்தானே சமைக்கிறேன் ஒங்க அப்பனுக்கு புடிக்கலையாம் நல்லாவே இல்லயாம் திட்டுறாரு"னு புகார் சொன்னா
அதுக்கு அவங்க மக சொன்னா "ஆமா சரியாத்தான சொல்லிருக்காரு. உன் சமையல் வாய்க்கு வெளங்கல. பாட்டி ஜோரா சமைப்பாங்க. அம்புட்டு ஏன் ஸ்கூல்ல நீ குடுத்துவிடுற சாப்பாட யாருக்காவது சேர் பண்ணுனா உவ்வேன்னு பழிப்பு காட்டு வாளுங்க அதுனால சாப்பிட முடியலைன்னா குப்பையிலதான் போடுவேன் அத ஒரு நாய் கூட மோந்துபாக்காது"ன்னா பாரு
இவளுக்கு கோவம் உச்சில ஏறிடுச்சு கையில கெடச்ச ஒட்டடை அடிக்கிற குச்சியால அவள வெளுத்துவாங்கிட்டா "குட்டிப்பிசாசே நீயும் ஒங்க அப்பனோட சேந்துட்டியா எனக்குன்னு யாருமே இல்லயா நான் அனாதையா கடவுளே ஏன் என்ன இப்படி சோதிக்கிற?"ன்னு ஒக்காந்து அழ ஆரம்பிச்சிட்டா
இப்ப மக கேட்டா "என்னம்மா இது கொடுமையா இருக்கு அடிச்சது நீ அடிவாங்குனது நான் நாந்தான் அழுகனும் அடிச்சிட்டு நீயே அழுகுறியே இது என்ன அராஜகமா இருக்கு ?"ன்னா
"அதுதான் ஒங்கம்மா வழக்கம். எல்லாத் தப்பையும் அவளே செஞ்சுட்டு என்னய ஏசுறதுதான் அவ பழக்கம். என்னத்தச்சொல்ல அந்தக்காலத்துல சொன்னாங்க , ஆணுக்குப்பெண் அடிமைன்னு இப்ப எல்லாம் மாறிப்போச்சு. புருசன் பொண்டாட்டிக்குக் கொத்தடிமைன்னு ஆகிப்போச்சு. நாம ஏதாச்சும் சொன்னமுன்னா இதுமாதிரி ஒப்பாரி வைப்பா. பாக்குறவுக இவன் அவள என்னமா கொடுமை பண்ணுனா அவ பாவம் இப்படி அழுவா. இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் கொடுமக்காரவுகன்னு நம்மளத்தான் கோளாறு சொல்லுவாங்க"ன்னான்
அதுக்கு மக சொன்னா "நான் அப்படி இருக்க மாட்டேன்பா. கொடுமைப்படுத்த மாட்டேன் நல்ல பொண்ணா இருப்பேன் பா நீங்க அழாதீங்க"ன்னு சொன்னவன்ன அவ மக நம்ம கண்ணீரத்தான் தொடப்பான்னு ஆர்வமாப் பாத்தா, ஆனா அவ நேர அப்பாவப்போய் கட்டிப்பிடிச்சிக்கிட்டா,
இப்ப ஆரம்பிச்சா பாரு கச்சேரி அவ "ஏய் என்னாடி நீபோய் என் புருசனக் கட்டிப்புடிக்கிறது நானும் கட்டிப்புடிப்பேன் இது என்னோட புருசன்" நு சொல்லிட்டு கிட்டவந்தா.
அப்ப அவன் சொன்னான் "கிட்ட வராத பயமா இருக்குது. சாத்துனாலும் சாத்துவ"ன்னு சொல்லி ட்டு எந்திரிச்சி ஓடினான். அவன் ஓட அவ தொறத்த வீட்டுக்குள்ள ஒரு ஓட்டப்பந்தயம் நடந்து அவன ஒருவழியா ப்புடிச்சி கட்டிப்புடிச்சிக்கிட்டா. அப்புறம் கேட்டா"ஏங்க உண்மையச்சொல்லுங்க நான் நெஜமாவே கொடுமைக்காரியா என் சமையல் உண்மையிலயே நல்லா இல்லயா சொல்லுங்க"ன்னு பரிதாபமாக் கேட்டா
அதுக்கு அவன் சொன்னான் "அவ்வளவு மோசம்னு சொல்லமாட்டேன் பரவாயில்ல"ன்னான் பொத்தாம் பொதுவாக. அப்ப அவ கண்ணுல இருந்து கண்ணீர் வந்துருச்சு. "உண்மையில யே நல்லா இல்லயா சொல்லுங்க ப்ளீஸ்"னா
அவன் திரு திருனு முளிச்சான் பழைய ஆடு திருடுன கள்ளன் முழி. அதப்பாத்துட்டு அவ சொன்னா , "உண்மைதான் எனக்கு சமைக்க வராது, எங்க அம்மா நான் சின்ன வயசில இருக்கும்போதே போய் சேந்துட்டாங்க.வளப்பு எல்லாம் அப்பாவோடதுதான். அவர் தாயில்லாப்பிள்ளைன்னு தங்கத்தட்டுல வைச்சித்தாங்குவாரு
அவரே சமையல் எல்லாம் செய்வாரு, திரும்பக்கல்யாணம்பண்ணிக்கல. ஏன்னா வருகிற பொண்ணு எப்படி இருப்பாளோ ஒரு வேளை என்ன சரியாக்கவனிக்காம கொடுமை ப்படுத்துனா அவரால தாங்கமுடியாது.
அதுனாலயே பண்ணிக்கல. நம்ம கல்யாணம் பேச்சு வந்தவன்ன சொன்னார் கொஞ்சம் சமையல் கத்துக்கோம்மா போற எடத்துல சமையல் தெரியலைன்னா பிரச்சனை ஆயிடும்னு சொல்லி கத்துக்குடுத்தாரு, ஆனா கட்டிக்குடுத்த புளியோதரையும் சரியாக்கத்துக்காத வித்தையும் எத்தன நாள் தாங்கும். இப்பத்தான் முயற்சி பண்ணிக் கத்துக்கிறேன். கொஞ்சம் பொறுங்க சீக்கிரமே நல்லா நான் சமைப்பேங்க நு கண்ணீர் வழியசொன்னவன்ன இவனுக்கு ஒரு மாதிரி ஆயிப்போச்சு
அவன் சொன்னான் நீ நல்லாத்தான் சமைக்கிற என்ன கொஞ்சம் இப்புடி அப்புடி இருந்தாலும் பரவாயில்ல. நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். என்ன இருந்தாலும் நீ என்னோட தங்கபொண்டாட்டில்ல. உன்கிட்ட சண்டபோட்டு நான் எங்கபோவேன்,னு சொன்னான்
அதுக்கு அவ சொன்னா நான் சீரியஸ் ஆ பேசிக்கிட்டு இருக்குறேன் நீங்க கிண்டல் பண்ணுறீங்க இதுதான் ஒங்ககிட்ட எனக்குப்புடிச்சது எல்லாத்தையும் டைலுட் பண்ணிடுறீங்க அதான் ஒங்க கிட்ட எனக்குப்புடிச்சதேன்னா
அதுக்கு மக சொன்னா என்ன டிராக் மாறுது நீங்க ரெண்டுபேரும் சமாதானமாகி என்ன திராட்டுல விட்டுருவீங்கபோல இதுதான் இந்த ஆம்பளைங்களையே நம்பக்கூடாதுப்பான்னு கண்ணத்துல அடிச்சிக்கிட்டுசொன்னா
அப்ப இவன் கேட்டான் பெத்த அப்பவையுமான்னு. அதுக்கு அவ சொன்னா அப்பா லட்சணம் தெரியுதே அரைமணி நேரத்துக்குள்ள கட்சி மாறியாச்சு. நீங்க எல்லாம் அரசியல்ல இருக்க வேண்டிய வங்கப்பா சரி சரி இன்னிக்கி டிபன் கோயிந்தா. வழக்கம்போல பிரட் எடுத்து டோஸ்ட் பண்ணிக்குடுங்க நான் சாப்புட்டுட்டு ஸ்கூல்கெளம்புறேன்னு சொல்லிட்டுக் குளிக்கப்போனா
மக குளிக்கப்போனவன்ன இவ கேட்டா ஏங்க நீங்க அவசியமா ஆபீஸ் போயே ஆகனுமான்னு கழுத்தை கட்டிக்கிட்டு கேட்டா. இங்கதான் விழுந்தான் அவன் , போகலாம் போகாமலும் இருக்கலாம். என்ன அதுக்கு டீல்னு கேட்டான்,
அதுக்கு சொன்னாபாருங்க பதில் "அந்தக்குட்டிச்சாத்தான் ஸ்கூலுக்குப்போன பின்னாடி"ன்னு கண் சிமிட்டினா.
செத்தாண்டா சிவநேசன்னு அவளைக் கட்டிப்புடிச்சான் அவன்
அதுக்குள்ள பொண்ணு சொன்னா "போதும் போதும் போர்ன்னா ரஸ்யாவும் உக்கிரேன் மாதிரி சண்டைபோடுறீங்க சமாதானம்னா இந்தியாவும் ரஸ்யாமாதிரி ஆயிடுறீங்க ஒங்களப் புரிஞ்சிக்கவே முடியலப்பா"ன்னா
"அதுக்கு ஒனக்கு வயசு பத்தாது"ன்னான் இவன்
அ.முத்துவிஜயன்