சாயாக்கடை ரகசியம் - சிறுகதை

chaya-kadai-secrets-short-story
சாயாக்கடை ரகசியம் - சிறுகதை

அந்த ஊருக்கே அதுதான் டீக்கடை... யாரைக்கேட்டாலும் சாயாக் கடைக் கார்வீடுன்னா சொல்வாங்க. அவங்க. வீட்டோடதான் கடையும் இருக்கும் திண்ணை மாதிரி அதுல பொட்டிமாதிரி அடைச்சிருப்பாங்க.... அவங்க உள்ளாற போகவர ஒரு வழி இருக்கும்...

சாயாக்குடிக்கிறவங்க முன்னாடி வந்து குடிப்பாங்க..கருப்பட்டிலதான் சாயா ஆனா அம்புட்டு ருசியா இருக்கும்.. கூடவே வாழப்பழம் வறிக்கி ரொட்டி பன் முருக்கு வெத்தலபாக்கு அப்புறம் காலையில வடை கொஞ்சம் முட்டாய் இம்புட்டுத்தான் யாவாரம்

அதுலதான் பொழப்பு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அவரு வெளிய போயிருக்குற நேரத்துல அவரோட சம்சாரம் சாயாப்போடும் பிள்ளங்களும் அங்க வேலை செய்வாங்க

அந்த ஊருல ரேடியோபொட்டி அவங்க வீட்டுல மாத்திரம்தான் இருந்தது அதுல காலையிலயும் சாய்ங்காலமும் செய்தி கேக்க ஆளுக கூடிடுவாங்க. அவங்க ரேடியோ ஊருக்கே கேக்கும்..அம்புட்டு சவுண்டு அதுல அப்படி செய்திகேக்க வாரவுக சாயாவும் குடிப்பாங்க....
பெரும்பாலும் காலயில லாடஞ்செம்புல புள்ளக வந்து சாயாக்கேக்கும்.. அதுல ரெண்டு சாயா வாங்கிட்டுப்போனா வீட்டுல எல்லாருக்கும் ஒருமடக்கு கெடைக்கும்

அந்த ஊருல பெரிய வீடு சாயாக்கடைக்காரர் வீடுதான். அந்தக்காலத்துல அவங்க அப்பா சேத்த சொத்து ...அந்த ரேடியோகூட லண்டன்ல இருந்து வந்ததுன்னு பெருமைப் பட்டுக் குவாங்க..... அதுல ஒரு பெருமை

ஆனா இப்ப நெலமை மோசம். வீடும் கொஞ்ச நெலமும் ( அதுல வெளைச்சல் இல்ல) தான் மிச்சம்... மணியும் சுப்பையாவும் அண்ணன் தம்பிகதான்.. சேந்துதான் சாயாக்கடையப் பாத்துக்கிட்டாக 

கொஞ்சநாளுல்ல ரெண்டுமூணு டீக்கடை தொறந்துட்டாங்க அதுனால சாயாக்கடை நொண்ட ஆரம்பிச்சது....புதுசாக்கடை தொறந்ததுனால அவங்க சீனில டீப்போட ஆரம்பிச்சாங்க.... அதுனால ருசி புதுசா இருந்ததால மக்கள் அங்கபோக ஆரம்பிச்சாங்க.... கடை ஈ ஓட்டுனாங்க

அப்ப இவங்களும் ஒரு முடிவெடுத்து கருப்பட்டி சாயா தனி ரேட்டு சீனிச்சாயா தனி ரேட்டுகாப்பியும் அப்படித்தான் தனிரேட்டுன்னு எழுதிப்போட்டு வியாபாரம் பண்ணுனாங்க..... 

புதுக்கடையில சிகிரெட் பீடி பொகையில சுருட்டுன்னு விக்க ஆரம்பிச்சதால சனங்க டீயும் சிகிரெட்டும் குடிக்க அங்கபோனாங்க **
இங்க அதை விக்க மணி ஒத்துக்கல. அது ஒடம்புக்குக்குக்கேடு நாம விக்கிற வெத்தலபாக்கோட நிறுத்திக்குவோம் காசுக்காக எதை வேணுமானாலு விக்கவேணாம் அதுபாவம்ன்னாரு....

நாளாக நாளாக கடை மூடுற அளவுக்கு ஆகிப்போச்சு... அப்பத்தான் கருடர் பாலத்துக்கிட்ட விக்கிற பருத்திப்பால் ஏன் தயார்பண்ணி விக்ககூடாதுன்னு மணி கேட்டாரு...எல்லாரும் ஒத்துக்கிட்டதுனால **

காலையில பருத்திப்பால் மாத்திரம் வைக்கலாமுன்னு முடிவாகி பருத்திப்பால் வியாபாரம் தொடங்கினாங்க... 

பருத்திய ஊறவைச்சி ஆட்டிப்பால் எடுத்து அதைக்கொதிக்கவைச்சி அதுல வெல்லம் சுக்கு ஒடைச்ச பச்சரிசி ஏலக்கா சுக்கு போட்டு வேகவைச்சி தேங்கா துருவிப்போட்டு சுடச்சுட வெங்கலபானையில வைச்சி யாவாரம் தொடங்கினாங்க

அது நல்லா பிக்கப் ஆயிருச்சு... அது சாயாவுக்கு காப்பிக்கும் மாத்தா இருந்துச்சு. அதுவும் போக அது ஒரு கிளாஸ் குடிச்சா அப்புறம் காலையில சாப்பாடு தேவைப்படாது அதுவே காலைச்சாப்பாடு ஆயிடும் குறைந்த செலவுல வயிறு நெறைஞ்சிச்சி....

அதுனால நல்லா ஓட ஆரம்பிச்சிருச்சி... அடகு வைச்ச நகையெல்லாம் திருப்பி அந்தக்குடும்பம் நல்லா வந்துச்சு. இதைப்பாத்துட்டு ரெண்டுபேரு அதே பருத்திப்பால் கடை தொறந்தாங்க... ஆனா அவங்களுக்கு ஓடல ஏன்னா அதுல அபுட்டு ருசி இல்ல.....

அவங்களுக்கு இவங்கமேல பொறாமை எப்புடி இதுமாதிரிப்பருத்திப்பால் ருசியாப் பண்ணுறாங்கன்னு தெரியல ... அதுக்குள்ள என்னமோ ரகசியம் இருக்குன்னு பேசிக்கிட்டாங்க.... அப்புடி இப்புடி அதை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுனாலும் அது ரகசியமாகவே இருந்துச்சு....

அவங்க வீட்டுலயும் அது மணிக்கு மாத்திரம்தான் தெரியுமாம்... பருத்திப்பால் தயார்பண்ணி கடைக்குள்ள வைச்சிட்டு கடைக்குள்ள மணிய விட்டுசாத்திடுவாங்க அவர் சேக்க வேண்டியதைச்சேத்துட்டு சாம்பிராணி போட்டு சாமி கும்புட்டுட்டு கடைதொறப்பார்..... அதுனால யாராலயும் அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியல....

அதுனால போட்டியாளர்களால போட்டிபோட முடியல... இவங்களுக்குமாத்திரம் நல்லா வியாபாரம் நடந்துச்சு... வீட்டுல உள்ள வங்களும் கேட்டுப்பாத்துட்டாங்க அதை வீட்டுக்குள்ள யாருக்காவது சொல்லுங்க ந்னு கேட்டாலும் மணி சொன்னாரு... ஒருத்தருக்கு மட்டும் தெரிஞ்சாத்தான் அது ரகசியம் அடுத்த ஆளுக்குத்தெரிஞ்சா அது தலைப்புச் செய்தி யாகிவிடும் வேணாம்ன்னாரு.....

கடைக்குள்ள அவர் இல்லாத நேரங்கல்ல தேடிப்பாத்தாலும் எதுவும் கெடைக்கல ....எப்படிக்கேட்டாலும் அவரும் சொல்லல...

ஒரு நாள் ராத்திரி திடீருண்ணு மணி மாரடைப்பால மயங்கிட்டாரு.... அவரை ஆஸ்பத்திரிக்குக்கொண்டுபோனாங்க.. அப்ப வீட்டுக்காரவுகளுக்கு அவர்கிட்ட அந்த ரகசியத்தை இப்ப கேக்கம விட்டா ஒருவேளை தெரியாமலே போய்டுமோன்னு பயந்தாங்க **

அப்ப அவர் சுப்பையாவ மட்டும் கைகாட்டி கூப்புட்டாரு... அவரும் உள்ளாற போனாரு 

அப்ப மணி சொன்னாரு... அந்த ரகசியம் என்னோட போகட்டும்... அதைச் செஞ்சதுக்கு தான் சாமி என்னப் போட்டுப்பாத்துருச்சு....
நீங்க அது இல்லாமலே யாவாரத்தைப் பண்ணுங்க அதுல வார வருமானம் போதும் சனங்க ஒடம்பைக்கெடுத்து யாவாரம் பண்ணுனா அது நெலைக்காதுன்னாரு...கொஞ்சநேரத்துல அவர் கண்ண மூடிட்டாரு...

வெளிய வந்த அவர்கிட்ட கேட்டாங்க சொன்னாரான்னு அவர் ஒதட்டப்பிதுக்கினார் அதுமாதிரி ஒண்ணும் இல்லையாம்....ன்னு
கொஞ்சநாள் கழிச்சிமறுபடி யாவாரம் தொடங்குனாங்க...ஆனா யாவாரம் சரியாப்போகலை...

ஆனா பக்கத்துத்தெருவில ஒருகடையில பழைய சாயாக்கடை ருசில பருத்திப்பால் விக்கிறதா சொல்லி சனங்க அங்க போக ஆரம்பிச்சாக... இங்க படுத்திருச்சு....

ஆனா ஒருமாசத்துல அந்தக்கடை மொதலாளிய போலீஸ் புடிச்சிக்கிட்டு போயிருச்சு கடையில வேலை பாத்த ஒரு பையன் ரகசியத்தை ஒளறினதா......

அப்ப மணி வீட்டுல இருந்த எல்லாரும் பேசிக்கிடாங்க.... நல்லவேளை அய்யா விசயத்தை யார்கிட்டயும் சொல்லலன்னு

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்