தழும்பு - சிறுகதை

thazhumbu-short-story
தழும்பு - சிறுகதை

இன்னிக்கி தீபாவளி பட்டாசு வெடிக்கிற நேரம் எப்போன்னு செய்திகளைப்பாத்துக்கிட்டு இருந்தானுக பிள்ளைக. எப்புடியும் 5000 ரூவாக்காசை கரியாக்கிடப்போறானுக. அதுக்குன்னே பண்டு நடத்தி பட்டாசு ஸ்வீட்டு செலவுக்குக்கு காசுன்னு குடுத்துருறாங்க. மொத்தவெலையில வாங்கி பிரிச்சிக்கிறதால வெலை கம்மியாம்.

எவ்வளவுன்னாலும் கரியத்தான போகப்போகுது....இப்ப அதை அவனுககிட்ட சொல்ல முடியுமா...... ஓ அந்த பழைய கதைய கேட்டு அலுத்துப்போச்சுப்பா. நாங்க ஒங்கல மாதிரி இல்ல. எங்கப்பா நல்லா சம்பாதிக்கிறார் அதுக்கு மேல பட்டாசு தொழில நம்பியும் நெறயப்பேரு இருக்காங்கங்கல்லன்னு நாயம் பேசுறானுக..

அப்பயெல்லாம் பேசமுடியுமா பேசுனாலே அடிதான் அப்பாகிட்ட இருந்து. எங்கவீட்டுல எப்பையுமே கடைசி நிமிசம் வரை துணிமணியும் வந்து சேராது பட்டாசும் வந்துசேராது. மத்தவனுக எல்லாம் தீவாளிக்கி மொதநா ராத்திரி டெய்லர் கடைல கெடப்பானுக. அப்புடியே வெளக்குத்தூண் பக்கமா போய் பட்டாசு சிவகாசில இருந்து கொண்டாந்து விக்கிறத சல்லிசா வாங்கிட்டு பனியன் கைலி துண்டு சட்டை ஜட்டின்னு கொறஞ்ச வெலையில வாங்கிட்டு வருவானுக.
ராத்திரிபோற பயலுக ஊரை சுத்திப்புட்டு மூணுமணிக்கிப்பக்கமாத்தான் வீடே வந்து சேருவானுக.

அந்தக்கொடுப்பினை எங்களுக்கு இல்ல. ஏன்னா அது காசு கையில வைச்சிருக்க வீடுகள்ள நடக்குறது. எங்க வீட்டுல கடன் வாங்கி பணம் கைக்கு வந்தாத்தாத்தான் மீதி எல்லாமே.

அன்னிக்கும் அப்புடித்தான் அப்ப நான் ஏழாவது படிக்கிறேன்னு நெனைக்கிறேன். அப்பா போனவரு காலையில வர திரும்பல. 

ஸ்பெசல் டூட்டி போயிட்டு வரும்போது ரெடிமேட் டவுசர்சட்டை பட்டாசு எல்லாம் வாங்கிட்டு வாறேன்னு சொல்லிருந்தாரு.
அஞ்சு மணிக்கி மத்தவுக எல்லாம் புதுத்துணிமணியோடபலகாரம் சுட்டு கோயில் வீட்டுல பூசைக்கி கொண்டாந்து பூசை பண்ணி எடுத்துட்டுப்போய் எண்ணதேய்ச்சிகுளிச்சிட்டு புது டிரெஸ் போட்டு பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிட்டாக
ஆனா அப்பாவை இன்னும் காணோம். தம்பி அழுக ஆரம்பிச்சிட்டான். இன்னும் ரெண்டு குட்டிப்பசங்க எந்திரிக்கல. அவங்களை எழுப்பவேணாமுன்னு அம்மா சொல்லிட்டு குழிபணியாரம் இட்லி சுட்டுக்கிட்டு கொஞ்சம் பொறுடா அப்பா வந்துருவாருன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. பொழுதும் விடிஞ்சிருச்சு அவரை இன்னும் காணோம்.

நாங்க வாசலையே பாத்துக்கிட்டு இருக்கோம் மத்தவனுக சரவெடிபோட்டு கலக்குறானுக. நாங்க வேடிக்கை பாத்துக்கிட்டு சோகமா இருக்கோம் அழுகையா வேற வருது.

ஒருவழியா அப்பாவும் வந்துட்டாரு. ஒரே சந்தோசம். ஹே அப்பா வந்துட்டாருன்னு கத்திக்கிட்டு அவரு கூட வீட்டுக்குள்ளாற ஓடுனோம். ஆனா அவரு மூஞ்சி சரியில்ல.

அவரு பையப்பிரிச்சி எனக்கும் தம்பிக்கும் பனியனும் அம்மாவுக்கு சேலையும் ஒரு துண்டும் எடுத்தாரு. பக்குன்னுச்சு. 
அப்பா டவுசர் சட்டை இல்லையான்னு கேட்டேன்.

அதுக்கு அவருசொன்னாரு. மூக்குறிஞ்சி டைலர்கிட்ட தைக்கக்குடுத்தேன் . எளவுமனுசன் கடையப்பூட்டிட்டு போயிட்டான் சாயங்காலம்தான் தொறப்பானாம் என்னா பண்ணுறதுன்னு தெரியலன்னாரு. அப்ப அவரு கண்ணு லேசா கலங்குச்சு ....நான் கண்டுபிடிச்சிட்டேன்....அவர் பொய் சொல்றாருன்னு.

சரிப்பா பரவாயில்ல டவுசர் சட்டை தொவச்சி வைச்சிருக்கேன் அதைப்போட்டுகலாம்ன்னு சொன்னேன் அம்மா ஆமாடா நான் தொவைச்சி பெட்டில வைச்சிருக்கேன் இப்போதைக்கி பனியன் சேலை துண்டவைச்சி சாமிகும்புடுவோமுன்னு சொல்லிச்சி. 

பட்டாசுன்னு அப்பா சீனிவெடி பாக்கெட் நாலு வாங்கிட்டு வந்துருந்தாரு இதுதான் ரொம்பநேரம் வெடிக்குமுன்னு சொன்னாரு

கோயில் வீட்டுல இருக்குற துணிகளையும் அந்தப்பட்டாசு எண்ணை சீயக்கா அம்மா சுட்ட பணியாரம் இட்லி வைச்சி சாமி கும்புட்டுட்டு குளிச்சிட்டு இருக்குற டிரஸைப்போட்டுக்கிட்டு அம்மா சுட்ட இட்லி பணியாரம் சாப்பிட்டுட்டு போன வருசம் வாங்குன துப்பாக்கி எடுத்துட்டு தெருவுக்குள்ள போனேன்

அங்க எங்க சொந்தகாரங்க வீட்டு முன்னாடி வெடி வெடிச்சிட்டு இருந்தாங்க. அவங்க மகன் ஒரு பயந்தாங்கோலி. நடுங்கிக்கிட்டு வெடி வைக்கவே பயந்துட்டு இருந்தான் . அப்ப அவங்க அம்மா என்னகூப்புட்டு டேய் இவனுக்கு சொல்லிக்குடுடா வெடிவைக்கன்னு சொன்னாங்க

எனக்கும் சந்தோசம். வெடி அவன்கைபிடிச்சி வைக்க சொல்லிக்குடுத்தேன்... கொஞ்சம் கொஞ்சமா பயம் வெலகி வெடிக்க ஆரம்பிச்சான்

அப்புறம் அவனே வெடிச்சான். யாரு வெடி வைச்சா என்ன சத்தம் ஒண்ணுதான. நானும் வேடிக்கைபாத்துட்டுஇருந்தேன்....கொஞ்சநேரத்துல அவங்கஅம்மா சரிஉள்ளாற வந்து சாப்புடுங்க அப்புறமா வெடிக்கலாமுன்னு சொன்னாங்க. என்னையும் உள்ளாற கூப்புட்டு லட்டு ஜிலேபி எல்லாம் திங்கக்குடுத்தாங்க. அப்ப அதெல்லாம் அதிசயம்.

திண்ணுட்டு வெளிய கெளம்புனேன் அப்ப அங்க இருந்த சின்னப்பையன் கத்துனான் என் துப்பாக்கியக்காணோமுன்னு..... அவனோட அம்மா தேடிக்கிட்டு இருந்துச்சு. இங்குணக்குள்ள தான வைச்சேன்னு அவன் அழுக அதிகமாச்சு

அப்ப நான் வெளிய கெளம்புனேன். என்கிட்ட இருந்த துப்பாக்கிய அவங்க பாத்துட்டாங்க.
டேய் நில்லுடா ந்னு வந்து என் துப்பாக்கிய புடுங்குனாங்க. 

சொந்தக்காரப்பயலாச்சேன்னு சேத்தா சின்னபுள்ளயோட துப்பாகிய களவாண்டுட்டா போற களவாணிப்பயலே இதுக்குத்தான் கிட்டசேக்குறதே இல்லன்னு முதுகுல ஒரு அடிவைச்சாங்க. 

அது லேசாத்தான் வலிச்சது ஆனா அதுல பாக்காம கால் வைச்சதுல கம்பிமத்தாப்பு கொளுத்திப்போட்டதுல கால வைச்சி பயங்கரமா சுட்டுடுச்சு...அம்மான்னுஅலறிட்டேன்...அவங்களே பயந்து போயிட்டாங்க லேசாத்தான முதுகுல தட்டுனேன்அதுக்குப்போய் ஏன் ஓவரா கத்துறன்னாங்க அப்புறமா நான் காலைப் புடிச்சிட்டு அழுததப்பாத்து விசயம் தெரிஞ்சிக் கிட்டாங்க. 

அதுக்குள்ள அவங்க வீட்டு பையன் அம்மா துப்பாக்கி இங்க இருக்குன்னு சொன்னான்
அப்ப அவங்க மொகம் ஒரு மாதிரி ஆகிடுச்சு. பாத்து நடக்கப்படாதா வா தேங்கா எண்ண வைச்சி விடுறேன் சரியாப்போகுமுன்னாங்க ஆனா நான் அழுதுகிட்டே போய் அம்மாகிட்ட நடந்ததை சொன்னேன்

அம்மா திட்டுனாங்க அங்க ஏண்டாபோன அவங்க எல்லாம் ஒரு மாதிரி. இருக்கப்பட்டவுங்க ஒண்ணும் சொல்ல முடியாது சொல்லி காலைப்பாத்தாங்க. வெந்துபோய் இருந்துச்சு. அதுல தேங்கா எண்ண தடவும் போது அம்மா கண்ணு கலங்கிடுச்சு..... செருப்பு கூட வாங்க வக்கில்லாத நெலமைய நெனச்சி..

இப்பவும் அந்த அந்தத்தழும்பப்பாத்தா கண்ணுகலங்குன அம்மா மூஞ்சிதான் ஞாவகம் வரும்.....கண்ணு கலங்கும்
அ.முத்துவிஜயன்