கடைத்தேங்காய் - சிறுகதை
அந்த ஏரியாவுலயும் அடைப்புத்தான் இருந்துச்சு. மத்தியானம் வரைக்கும்தான் கடைகளெல்லாம். அதுனால வெள்ளனாவே மார்க்கெட்டுக்குப்போய் காய் பலசரக்கு எல்லாம் வாங்கியாந்துருங்க அப்புடியே ரேசன்ல அரிசி பாமாயில் தொவரம்வருப்பு குடுக்குறாகளாம் பாத்து வாங்கிட்டு வாங்கன்னு அவன் சம்சாரம் சொன்னா. அப்புறம் மறக்காம மாஸ்க் போட்டுட்டுப்போங்க. கூட்டமா இருந்தா வந்துருங்க வெறும் கஞ்சியக்கூட
காய்ச்சிக்குடிச்சிக்கலாமுன்னு அட்வைஸ் வேற. அவ குடுத்த இட்லிய தக்காளிச்சட்டிணியோட முழுங்கிட்டு வண்டிய எடுத்துக்கிட்டு கெளம்புனான்.
மார்க்கெட்டுல கொஞ்சம் கூட்டம்தான் கத்திரிக்கா வெங்காயம் தக்காளின்னு காயெல்லம் வாங்கிட்டு வெளிய வரும்போதுதான் பாத்தான். அந்த அம்மாவை. மார்க்கெட்டு வாசல்ல 10 தேங்கா முருங்கைக்கீரைஎலுமிச்சம்பழம் வைச்சிட்டு வெயில்ல சாக்கை விரிச்சி கடைபோட்டுருந்துச்சு. மொத்த சரக்கும் 200 ரூ தாண்டாது.
இவனைக்கூப்புட்டுச்சு ராசா தேங்கா வாங்கிட்டுப்போ ஒனக்கு புண்ணியமாப்போகும் போணி பண்ணுன்னு கூப்புட்டுச்சு.இவன் பொதுவா தேங்கா வாங்குறதில்ல. முன்னாடி ஒருதடவ அந்த அம்மாகிட்டத்தேங்கா வாங்கி வீட்டுல போய் பாக்குறப்ப அழுகி இருந்துச்சு
இவனோட வீட்டுக்காரம்மா ஒங்களுக்கு ஒண்ணியிம் தெரியல அழுகுன தேங்காயக்குடுத்து ஏமாத்திப்புட்டாங்கன்னு திட்டுனதுல இருந்து தேங்கா வாங்குறதே இல்ல.
கொளுத்துற வெயிலில சேலைய மூஞ்சில சுத்திக்கிட்டு வேர்க்க விருவிருக்க யாரும் கவனிக்காம ஒக்காந்துருந்துச்சு எப்புடியும் 65 வயசு இருக்கும். இவன் அதுகிட்ட கேட்டான் ஏன் இப்புடி கஸ்ட்டப்படனும்ன்னு அப்ப அது சொல்லிச்சி வீட்டுல கைகால் வெளங்காமக்கெடக்குற மகன் விட்டுட்டு வந்துருக்கேன். ரேசன் கடையில வாங்குன அரிசி தீந்துபோச்சு இத வித்துத்தான் அரிசி வாங்கிட்டுப்போய் சமைக்கணும். காலையில நீச்சத்தண்ணி குடுத்துட்டு வந்தேன். புள்ள பசியா இருக்குமுன்னு கவலையோட சொல்லிட்டு தேங்கா இல்லாட்டி எலிமிச்சம் பழம் முருங்கைக்கீரை எதுனாச்சும் வாங்குங்கன்னு சொல்லிச்சு
இவனுக்கு யோசனையா இருந்துச்சு. சரி நான் போய்ட்டு வாறேன்னு எதுவும் வாங்காமக்கெளம்பிட்டான். நேர ரேசன் கடைக்கிப்போனான் அங்க கொஞ்சம் கூட்டமாத்தான் இருந்துச்சு. ஒரு மணிநேரம்வரிசையில நின்னு 20 கிலோஅரிசி தொவரம்பருப்பு பாமாயில் வாங்குனான். இந்த மாசம் அது இலவசமாம். கடைக்காரரு காசுவேணாமுன்னு சொல்லிட்டாரு
அதை வாங்கிட்டு வெளிய வந்தான் நேரமாச்சு. இவனுக்கு ஒரு யோசனை வந்துச்சு. திரும்ப மார்க்கெட்டுக்குப்போனான்.
அப்பையும் அந்த அம்மா எதுவும் விக்காம சோந்துபோய் இருந்துச்சு
இப்ப இன்னும் மொகம் வாடிக்கெடந்துச்சு. மூஞ்சில மூடிருந்த சேலை வியர்வையில நனைஞ்சிருந்துச்சு
இவன் நேர அந்த அம்மாகிட்டபோனான். இந்தாம்மா இது ரேசன் அரிசி இது பருப்பு இது பாமாயில் வீட்டுக்கு எடுத்துட்டுப்போ. ந்னான். அது ஒண்ணும் புரியாமப்பாத்துச்சு. யோசிக்காத வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் சமைச்சி சாப்புடு மகனுக்கும் குடுன்னு சொன்னான்
அந்த அம்மாவால நம்பவே முடியல. நெஜமாவா சொல்றீங்கன்னு கேட்டுச்சு. ஆமா. எங்க வீட்டுல போனா டிபன் தான் போடுவோம் அதுவும் நெறையா இருக்கு. உன் வீட்டுக்குப்போனா நல்லாருக்கும் உங்க வயிறு நெறையும்ன்னு சொன்னான்
அந்தம்மா அழுதுருச்சு. என் சாமிதான் நீ அதுதான் ஒன்ன அனுப்பிச்சிருக்கு நீங்களும் ஒங்க குடும்பமும் நல்லாருக்கணும்ன்னு கண்ணீர்வழிய சொல்லிட்டு இந்தா ராசா தேங்கா எடுத்துக்க எலுமிச்சம் பழம் எடுத்துக்கன்னு அள்ளிக்குடுத்துச்சு. இவன் இது எவ்வளவும்மான்னு கேட்டான். அது காசுவாங்கமாட்டேன்னு சொல்லிடுச்சு. இவன் பையில இருந்த 100 ரூவாயக் குடுத்தான். அது வாங்கமாட்டேன்னு அடம்பிடிச்சிச்சு
இந்தாம்மா இதை வாங்காட்டினா நீ குடுக்குறத நான் வாங்க மாட்டேன்னு சொன்னான். அது அரை மனசா வாங்குச்சி. அதுகிட்ட மீதி சில்லறை இல்ல
இவன் சொன்னான் மீதிய நீங்களே வைச்சிருங்க அடுத்த தடவை கழிச்சிக்கிக்கலாமுன்னு சொன்னான்அது கையெடுத்துக்கும்புட்டுச்சு.
எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தான். இவன் சம்சாரம் திட்டுனா ஏன் இவ்வளவு நேரம்முன்னு. ஒரு பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்தேன்னு சொன்னான். ரேசன் கடையில் குடுத்தானான்னு கேட்டா. இவன் ஸ்டாக் தீந்துபோச்சாம் ந்னு சொன்னான்
பையில இருந்த தேங்காயப்பாத்துட்டு எவ்வளவுன்னு கேட்டா. இவனுக்கு வெலை தெரியல. குத்துமதிப்பா ஒரு ரேட்டு சொன்னான். கேட்டுட்டு ஒங்களை மறுபடியும் ஏமாத்திட்டாங்க. நீங்க குடுத்த ரேட்டு அதிகம்ன்னா,
இவன் சாமிய வேண்டிக்கிட்டான் . தேங்கா அழுகாம இருக்கணும்ன்னு
ஒடச்சப்ப தேங்கா அழுகலை ஆனா அழுகையோட பாத்த அந்த தேங்காக்காரம்மா மொகம் வந்துபோச்சு
அ.முத்துவிஜயன்