பொடிடப்பா - சிறுகதை

podi-dappa-short-story
பொடிடப்பா - சிறுகதை

வில்லாயுதம் ஒரு பொடிபோடுறதுல வெறியர்னே சொல்லலாம். அவருக்கு வயசு 65 ஆகுது. ஒரு சிட்டிகை பொடி போடலைன்னா அவருக்கு ஒலகமே நகராம நிக்கிறமாதிரி ஆயிறும்.  அவரோட வேட்டி துண்டு எல்லாமே பொடிக்கறை யோடதான் இருக்கும். ஏதாவது வேலை செய்யிறப்ப ஒரு சிட்டிகை பொடி உள்ளாற இழுக்கலைன்னா அவருக்கு ஒன்னும் ஓடாது

அவரோட தொழில் சட்டி பானை செய்யிறது. திருகையில மண்ண வைச்சி முன்னாடி அதச்சுத்திவிடுறதுக்கு அவரோட பொஞ்சாதி தனிகோடி ஒக்காந்து சுத்திவிட்டுச்சுன்னா அவரோட விரல்கள் களிமண்ணுல விளையாட ஆரம்பிச்சி பானை சட்டின்னு செஞ்சி அத திருகை சுத்துறப்பவே லாவகமா அறுத்தெடுத்து பக்கத்துல தூக்கி வைப்பாரு.
பாக்குறதுக்கு லேசா இருந்தாலும் எல்லாராலயும் அதைச்செய்ய முடியாது . சும்மா கைய வைச்சாலே களிமண் வழுக்கிட்டு ஓடும். அத லாவகமா வளைச்சி  கழுத்தில ஒரு டிசைன் போட்டு அப்புறமா பானை வாய வளைச்சி விட்டு அழகா செஞ்சி முடிச்சி கையோட நூல் வைச்சி அறுத்து எடுத்து தூக்கிப் பக்கத்துல வைக்கிற அழகுக்கு தேசிய விருது குடுக்க்லாம்அம்பது அறுவது பானைய செஞ்சி எறக்கிடுவாரு. 

என்னான்னா அதுக்கு நடுவில அஞ்சு ஆறு தடவை பொடிய மூக்குல வைச்சி சர் சர்னு உறிஞ்சிடுவாரு. கையெல்லாம் களிமண்ணா இருக்கும் அத துண்டில தொடைச்சிட்டு பொடிய எடுத்து மூக்குல வைச்சி உறிஞ்சும் போது அவர் மொகம் அலாதியான சொர்கத்தப்பாத்த மாதிரி லயிக்கும்

சரி அவர்தான் அப்படின்னா அவர் சம்சாரம்பேரு தனிக்கோடி, அதுக்கு ஒரு படி மேல அதுக்கும் வயசு 60 இருக்கும். எப்பையும் சுருக்குபையில பொடி டப்பா இருக்கும். திருகைக்கு முன்னாடி ஒக்காரும்போதே ஒரு சிட்டிகை இழுத்துட்டுத் தான் சுத்திவிட வே ஒக்காரும். ஒரு காலை திருகைக்குப் பக்கமா நீட்டிக்கிட்டு ஒருகாலை மடக்கிக்கிட்டு சுத்துறதுக்குத் தோதா ஒக்காந்து சுத்திவிடும். சுத்தும் போது ஒரே வேகத்துல சுத்திவிடனும் . இல்லாட்டா பானை ஒளைஞ்சிடும். அதுக்கு வில்லாயுதத்துக்கிட்ட பொசகெட்ட சிறுக்கின்னு ஏச்சு வாங்க முடியாது , அதுனால கவனமா ஒரே வேகத்துல சுத்திக்கிட்டே பொடி போட்டுக்குறது அதோட தெறமை.

அந்தக்காலத்துல ஊருல பாதிக்குப்பாதிப்பேர் பொடி போடுறவுகளா இருப்பாங்க. சும்மா ஒக்காந்து பேசிக்கிட்டு இருக்குறப்ப கைய நீட்டுனா ஒரு சிட்டிகை பொடி குடுன்னு அர்த்தம். பொடி வைச்சிக்கிறதுக்குன்னே அப்ப டப்பா இருக்கும் . அதுனால அதுக்குப்பேரு பொடி டப்பா.செலபேர் மட்டையிலயிம் வைச்சிருப்பாக. அது பொடி மட்டை.   அப்பயெல்லாம் T.A.S ரத்தினம் பட்டணம் பொடிதான் பிராண்டு. எல்லாக் கடைகளிலும் கெடைக்கும்னு விளம்பரம் பண்ணுவாங்க.

ஆத்துல அழகர் எறங்குறப்ப T.A.S ரத்தினம் பட்டணம் பொடி காரவுங்க அங்க அங்க பெருசா வெளம்பரம் போர்டு வைச்சிருப்பாங்க. முறுக்கு மீசையோட ஒருத்தர் ஒக்காந்து பொடி இடிக்கிறமாதிரி படம் போட்டு பெருசா T.A.S ரத்தினம் பட்டணம் பொடி நு விளம்பரம் பண்ணுவாங்க.

அன்னிக்கி வண்டிகளை நிப்பாட்டி அங்க அங்க இலவசமா பொடி வினியோகம் செயவாங்க. பெரிய டப்பா வாங்குனா சின்ன டப்பா இலவசம்னு குடுப்பாங்க. அதுக்குன்னு ஒரு கூட்டம் அலைபாயும்

அண்ணாச்சி கடைகள்ல பொடி வாங்கப் போனா அதுக்குன்னு இருக்குற பீங்கான் ஜாடில இருந்து சின்னதா ஒரு கரண்டி வைச்சி அளந்து நாலு அல்லது அஞ்சு நு அளந்து குடுத்து காசு வாங்குவாங்க. அத பொடி மட்டையிலயோ இல்ல பொடி டப்பாவில யோ வாங்கியாந்து வைச்சிக்கிட்டு உறிஞ்சிவாங்க.

மழைக்காலத்துல ஏகமா பொடி போடுறது ஓடும். வில்லாயுதத்துக்கும் அவர் சம்சாரத்துக்கும் அடிக்கடி பொடி வாங்குறதுல சண்டை வரும். தனிக்கோடி எப்பையும் பொடி வாங்கி வைச்சிருக்கும். தீந்துச்சுன்னா ஒடனே போய் வாங்கிட்டு வந்துரும். ஆனா வில்லாயுதம் அப்புடி இல்ல பல சோலிகள்ல அத மறந்துட்டு பொடிப்போடுற நெனப்பு வாரப்ப  டப்பாவைத் தொறந்தா தீந்து போயிருக்கும். ஒடனே பொஞ்சாதிக்கிட்ட பொடி கடன் கேப்பாரு.

பொஞ்சாதியும் செல்லமா திட்டிக்கிட்டே அடுத்த தடவ தரமாட்டேன் அப்புடி என்ன வேலக்கழுத ஒனக்கு பொடி வாங்கி வைக்கிறதக்காட்டிலும்னு சொல்லிக்கிட்டே ஒரு சிட்டிகை எடுத்துக்குடுக்கும். டப்பாவக் கையில குடுக்காது குடுத்தா கூட ஒரு சிட்டிகை எடுத்துப்புடுவார்னு கையில வைச்சிக்கிரும்

ராத்திரி நேரங்கள்ல தான் பொடி அதிகமா வில்லாயுதத்துக்குத் தேவைப்படும். அதுக்குன்னு வாங்கி வைச்சிட்டுத்தான் படுப்பாரு. மொத்தமா வாங்கி வைச்சிக்கிற பழக்கம் இல்ல. கேட்டா அடிக்கடி போடத்தோணுமில்லம்பாரு.

சுல்லைவைக்கும்போது  சட்டிபானைகளை அடுக்கி நடுவில வெறகு எரு எல்லாம் வைச்சி சட்டி பானைகளைச் சுட்டு எடுக்க ஏற்பாடு செய்யும் போது அவருக்கு ஒருகையில பொடி டப்பா வந்து வந்து போகும். வேலை நடக்கையில கஞ்சி தண்ணி எல்லாம் வேணாம் அவருக்கு. சீனி கடை டீயும் பொடி டப்பாவும் போதும் . அசராம வேலை செய்வாரு.

கலியாணம் காச்சிக்குபோனா தாலி கட்டுற நேரத்துல மாத்திரம் பொடியத் தொடமாட்டரு. பொடியப்போடுறப்ப தப்பித்தவறி தும்மிட்டா வசவு தாங்க முடியாதுல்ல. பெரிய மனுசனா இருந்துக்கிட்டு இந்த சோலி தேவையான்னு திட்டு வாகல்ல. அதான் அங்க மாத்திரம் கட்டுப்படுத்திக்கிடுவாரு.

ஒரு தடவ அவரோட பேரன் ஒருத்தன் ரொம்ப சேட்டை பண்ணுனான். அடங்கவே மாட்டான். எம்புட்டு அடிச்சிப்பாத்தும் கேக்கல. அவர் அவனைக்கூப்புட்டு பேசிக்கிட்டே இருக்கையில அவன் மூக்குல ஒரு சிட்டிகை பொடிய திணிச்சிப்பிட்டாரு. அம்புட்டுத்தேன் அவன் முழி பிதுங்கி கண்ணெல்லாம் தண்ணியா ஊத்தி ஒரு மாதிரி ஆயிட்டான்
அதுல இருந்து ஏதாவது சொன்னபடி கேக்கலைன்னா அய்யா கிட்ட சொல்லி பொடிப்போடச்சொல்லிப்புடுவேன்னா அவன் பயந்து சொல்படி கேப்பான் அதுல இருந்து அய்யாவைப்பாத்தாலே பயம் அவனுக்கு. ஆனா அதுலயும் சேட்டை. அவரோட பொடி டப்பாவைத்தூக்கி ஒழிச்சி வைச்சிட்டான். அவந்தான் எடுத்தான்னு தெரியும் ஆனா ஒன்னுமே தெரியாதுன்னு சாதிச்சான்.

அப்புறம் என்ன செய்யிறது. வேற டப்பாதான் வாங்குனாரு வில்லாயுதம்.
இப்புடிப்போய்க்கிட்டு இருந்தப்ப ஒரு நா திடீருன்னு தனிக்கோடிக்கு ஒடம்பு சரியில்ல. படுத்த படுக்கையா ஆயிட்டாங்க. அதுல இருந்து வில்லாயுதத்துக்கு ஒன்னும் ஓடல. எவ்வளவு வயசானாலும் வெளிய எங்கயும் சாப்புடமாட்டாரு அவரு. வீட்டுல சோறாக்கி அதுல நல்ல எண்ணைய ஊத்தி தொட்டுக்க வாழைப்பழம் வைச்சி சாப்புடுறதுதான் அவருக்கும் புடிக்கும். 

கொளம்புன்னா அது தனிக்கோடி வைக்கிற கொளம்புதான் அவருக்கு உசிறு. மூணு நாளைக்கி ஒரு தடவதான் அது கொளம்பு வைக்கும். அத மண்சட்டிலதான் வைக்கிம்.அத சுண்டவைச்சி சுண்ட வைச்சி அவருக்குக் குடுத்து தானும் சாப்புடும். அந்த சுண்டவைச்ச கொளம்பு வத்தி அம்புட்டு ருசியா இருக்கும்

கெழவி படுத்ததுனால அவருக்கு சாப்பாடு எடுக்கல. ஆனா கெளவியையும் போய் பாக்கல. ஏன்னா படுத்த படுக்கையா அவளப்பாக்குற சக்தி அவருக்கில்ல. எல்லாரும் கோளாறு சொன்னாக. கட்டுன பொண்டாட்டி இழுத்துக்கிட்டுகெடக்கிறா போய்ப்பாத்தா என்ன கொறைஞ்சா போயிடுவாருன்னு சாடை பேசுனாக.

வழக்கமா வார கார்மேகம் மருத்துவர் வந்து பாத்துட்டு ராத்திரி தாங்காது கெளவின்னு சொல்லிட்டாரு. பேரன் பேத்தி மகன் மக எல்லாம் சுத்தி ஒக்காந்துருந்தாக. கெளவிக்கு தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கிட்டுக் கெடக்கு. எல்லாரும் வாயில பாலு தொட்டு வைச்சிக்கிட்டு இருந்தாக அது போய்கிட்டு இருந்துச்சு.

அப்ப வில்லாயுதத்தை வரச்சொன்னாக. அவர் வது தனிக்கோடியக் கூப்புட்டாரு ஏ புள்ள ஏ புள்ளன்னு சொல்லும் போது அவரால கண்ணீரை அடக்க முடியல. எல்லாராலயும் தான் அப்ப தனிக்கோடி கை அசைஞ்சது அது ஒரு சிட்டிகை பொடி கேக்குற சாடை. அப்பத்தான் இவருக்கு நெனப்பு வந்தச்சு பொடி டப்பாவத் தொட்டு நாளாச்சுன்னு . அதத்தேடுனாக் காணோம். ஒடனே ஆளனுப்பி பொடி வாங்கிட்டு வரச்சொன்னாரு. 

வந்ததும் தனிக்கோடி வாயில பாலத் தொட்டு வைச்சிட்டு ஒரு சிட்டிகை பொடி எடுத்து தனிக்கோடி மூக்குக்கிட்டக் கொண்டு போனாரு. லேசா மூக்குக்குள்ள போனவன்ன அந்த மொகத்துல ஒரு ஆனந்தம் தெரிஞ்சது அதோட பார்வை நெலைகுத்திடுச்சு.

மகராசி பூவும் பொட்டுமா புருசன் கையில போட்ட பொடியோட சொர்கம் போயிட்டா. அப்ப எல்லார் கண்ணும் கலங்கிடுச்சு. வில்லாயுதம் துண்டால வாயப்பொத்திக்கிட்டு வெளிய வந்துட்டார்.

தனிக்கோடி போன பின்ன அந்தப்பொடிய அவர் தொடவே இல்லை. பொடியும் பொண்டாட்டியும் அவருக்கு ஒன்னுதான். 
எப்பப்பாத்தாலும் அந்த காலி பொடி டப்பாவையே பாத்திட்டு இருந்தாரு. அவர் சாகுறவரை அந்த பொடி டப்பாவை கூடயேவைச்சிருந்தாரு. பொண்டாட்டி நெனப்பா அதைப்பாக்குறப்ப எல்லாம் அவர் கண்ணு கலங்கும். இப்ப யெல்லாம் அவர் துண்டுல பொடிக்கறை இல்ல. ஆனா தொவைக்காததுனால அழுக்கா இருந்துச்சு.

அ.முத்துவிஜயன்