கூடப் பொறந்தவுக - சிறுகதை

kuda-poranthavanga-short-story
கூடப் பொறந்தவுக - சிறுகதை

பொன்னம்மா அக்காவுக்கு ரொம்ப முடியலயாம் விழுந்துருச்சாம். சேதிகேட்டு தங்கச்சிமாருக அஞ்சுபேரும் "ஆத்தி மூத்தவளாச்சே போனவருசம் கூட ஒன்னாமொன்னா திருவிழா கோயிலு கொளம்னு போய்ட்டு வந்தமே இப்புடி 

ஆகிப்போச்சே"ன்னு தலையில சும்மாட வைச்சி நார்பொட்டிகளோட ஒவ்வொருத்தரா ஆரப்பாளையத்துக்கு வந்துக்கிட்டு இருந்தாக. அப்ப இப்ப மாதிரி பஸ் ஆட்டோ வசதி எல்லாமில்ல. நடந்து வரணும் இல்ல வண்டிகட்டி வரனும். தகவலும் ஆள் போய்த்தான் சொல்லிகூப்புட்டு வரணும் செலபேரு மாத்திரம் சைக்கிள் வச்சிருப்பாக மத்தபடி நடராசாதான்

அவுக ஆறுபேரு ஒன்னாப்பொறந்தவுகதான். ஆனா வாக்கப்பட்டது ஒவ்வொரு ஊரு. ஒருத்தி மருதங்கநல்லூர்னு ராம்நாடுபக்கத்துல இன்னொருத்தி மருதைகுள்ளயே மதிச்ச யத்துல இன்னொருத்தி ஆரப்பாளையத்துல அப்புறம் புதுக்கொளத்துல ரெண்டுபேரு அப்புறம் கோரிப்பாளையத்துல. அப்பவே 

அவுகளுக்கெல்லாம் வயசு தெரியாது போனசித்திரதிருவிழாவோட நு ஆரம்பிச்சி ஒவ்வொருத்தரும் ஒரு வயசகுத்து மதிப்பா சொல்லுவாக. எல்லாமே70 மேல இருக்கும்

எல்லாருமே சரியானஒழைப்பாளிகதான். இவுக எல்லாம் ஒன்னு கூடுறது 

ஆரப்பாளையத்துலதான். அது மீனாச்சிக்கிபத்துநாள் திருவிழான்னு கோயில்ல கொடியேறுறப்ப வந்து சேருவாக. வரும்போது அவுக அவுக ஊருகள்ல என்ன வெளையுமோ அதக்கொண்டாருவாக. மருந்தங்கநல்லூர் காரம்மா மொளக கொண்டாரும். அதுல கடைசி எடுப்பு மொளகா உப்புல ஊறவைச்சி கொண்டாரும். அது கஞ்சிக்கி நல்லாருக்கும். வெறும் வாயிலயே திண்ணலாம். காரமிருக்காது அம்புட்டா. 

புதுக்கொளத்துகாரம்மாக புளி கொண்டா ருவாக. கோரிப் பாளை யத்துக் காரம்மா அரிசிகொண்டாரும் எல்லாம் நார் பொட்டில தான் எல்லாரும் ஒரே வீட்டுலதான் தங்குறது. அவுகளுக்கு எதுவுமே தனியாத்தேவப்படாது. வெறுந்தரையில கையத்தலைக்கி வைச்சிக் கிட்டு அவுக அவுகபாட்டுக்குத்தூங்குவாக.

வீட்டுல பெரிய பானையில சோத்தவடிச்சி குண்டாச்சட்டில கொழம்ப வைப்பாக. ஆளாலுக்கு ஒரு வேலை பாக்குறதுதான் ஒவ்வொ ருத்திக்கும் ரெண்டு சேலைக்கிமேல கொண்டாருறது இல்ல. 

அத ஒருத்தி மாத்தி ஒருத்தி கட்டிக்கிட்டு புதுசா வாங்குனமாதிரி சந்தோசப்படுவாக. அப்ப எல்லாம் சுங்கடிச் சேலைதான் பட்டு நூல்காரவுக தறிப்போட்டுக் கொண்டாந்து விக்கிறதுதான். ஜாக்கெட் எல்லாம் போடுறதில்ல. சேலையிலயே சுத்திக்கிறதுதான் . அதுக்காக வெக்கப் படுறதெல்லாம் அப்ப இல்ல. அப்ப அது ஒரு பொருட்டாவே இல்ல.அப்ப இந்த சாக்கெட்ப் போட்டா நாடகக்கரிமாதிரி திரியிறான்னு கிண்டல் பண்ணுவாக.

காலையில எந்திரிச்சி மொதநா தண்ணி ஊத்திவைச்ச நீச்சத்தண்ணிய ஆளுக்கு ஒரு லாடம்சொம்பு குடிப்பாக. அப்புறம் மத்தியானம் உச்சில சூரியன் வந்தப்ப சமைச்சத சாப்புடுறது. சாயங்காலமா குளிச்சிப்புட்டு திருவிழாப்பாக்கப்போறது எல்லாம் நடந்தேதான் அப்ப பஸ் எல்லாம் கெடையாது. 

ஆரப்பாளையத்துல இருந்து நடந்து கெளம்பி புட்டுத்தோப்பு தாண்டி கெரடர் பாலத்துக்குகீழ போய் சந்தக்கிட்ட வெலகி மேலமாசிவீதில புகுந்து கறிவேப்பிலகாரச்சந்து வழியாப் போனா வடக்குக்கோபுரம் அப்புடியே உள்ளா புகுந்தா அம்மன்சன்னதி சாமி சன்னதின்னு வந்துரும் . சாமி வெளிய வர எப்புடியும் 9 மணிக்கி மேல ஆயிடும். 

அதுல மொதல்ல காளைமாட்டுல மேளம் அடிச்சி வருவாக. அப்புறம் ஒட்டகம் வரும் அப்புறம் யானைன்னு ஒவ்வொன்னா வரும். சாமிகள்ல மொதல்ல விநாயகர் அதுக்குப் பின்னாடி அப்புறம் முருகர் சொக்கநாதர் பிரியாவிடைன்னு தீவட்டி வெளிச்சத்துல மினுத்துக்கிட்டு 

அதுக்கு அப்புறம் பின்னாடி மீனாச்சி அம்மன் பூப்பல்லாக்குல மதுரமல்லிகை மணக்க மணக்க ஊர்வலம் பாத்து கும்புட்டு அம்மா தாயி எல்லாத்தையும் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டு அப்புறம் மேலகோபுர வாசல்கிட்ட ஒரிஜினல் நாகப்பட்டினம் அல்வா வாங்கி பகுந்து தின்னுபுட்டு அப்புடியே காப்பித்தண்ணிய வாங்கிக்குடிச்சிப்புட்டு சுருக்குப்[பையில இருந்து காசெடுத்து குடுத்துப்புட்டு வீட்டுல இருக்குற சிறுசுகளுக்கு மிச்சர் காராச்சேவு பொட்டணம் வாங்கிட்டு திரும்ப பொடிநடையா வந்துசேர ராத்திரி 12 ஆயிடும்.

அப்புறம்தான் கச்சேரி ஆரம்பிக்கிகும். இதுல ரெண்டு பேரு நல்லாதேன் நடந்த அலுப்புக்கு சொக்குதுன்னு தரையில உருண்டுரும், பாக்கி நாலும் நாலுதெசைக்கித்திரும்பி ஒக்காந்துக் கிடும். இதுல முக்கியமான விசயம் என்னான் னா நாலுக்கும் சுத்தமாக் காதுகேக்காது. இது ஒருத்தர் ஒருததருக்குதெரியாதமாதிரி இருப்பாக. 

அப்பப்பேச்சு ஆரம்பிக்கும்
" ஏண்டி புதுகொளத்தா இந்த வருசம் வெள்ளாமை எப்புடி"ன்னு ஒன்னு ஆரம்பிக்கும். அதுக்கு இன்னொன்னு 
"வெள்ளனாபோயிருந்தா வெள்ளனாவே வந்துருக்கலாம்"னு பதில் சொல்லும். 

ஆனா கேட்டது விடாது. 
"ஆமா சரியாத்தேன் சொன்ன. மழை கம்மி தான. அதுனால ஆத்துல தண்ணி தொறக்கல கம்மாயிலயும் தண்ணி இல்ல"ன்னு 
பின்னூட்டம் குடுக்கும். 

இப்ப அது சொல்லும்
 "ஆத்துக்குள்ள அழகர் எறங்குறதச் சொல்லு றீயா ஆமா இந்த வருசம் தேரோட்டம் முடிஞ்சி ஆரோட்டம் முடிஞ்சாமுள்ள அழகர் எதிர் சேவை"ன்னு பதில் சொல்லும். 

இதுக்கு நடுவில மூணாவதா ஒரு பிரச்சனைய கொண்டாரும் மூணாவது . வளத்த காதை தண்டட்டியோட ஆட்டிக்கிட்டு அது கேக்கும் 

"ஏண்டி போனவருசம் சாமி என்ன பட்டு உடுத்தி வந்துச்சு"ன்னு. 
அதுக்கு பதில் சொல்றதா நெனச்சிக்கிட்டு நாலவது சொல்லும் ஆமா "அந்தப்பட்டுச்சேலயத்தான கேக்குற. அது டிரங்குப்பொட்டிலதான் கெடக்கு. என்ன எலிகடிச்சிருச்சு"ன்னு பதில் சொல்லும்.'

 இப்புடி ஒன்னுக்கு ஒன்னு சம்பந்தமில்லாம பேச்சுவார்த்தை நடக்கும். உண்மையில காதுகேக்குறவுக ஆராவது இதக்கவனிச்சிப்பாத்தா மண்ட கொளம்பிடுவாக. ஆனா அதுக எதைப்பத்தியும் கவலைப்படாது

இதுல ஒருத்தியோட பேரனுக்கு தமிழரசின்னு பேரவைச்சி அதை அந்தக்கெழவிக்கிட்ட சொல்றேன்னுஆரம்பிச்சி அத புரியவைக்க டம்ளரை எடுத்துகொண்டாந்து டம்ளர்னு ஆரபிக்க அதப்பாத்து ஒன்னு "லோட்டா"வான்னு கேக்க அதுபெரிய சிரிப்பாப்போச்சு." லோட்டா ரசமா"ன்னு கேட்டுச்சு தமிழரசின்னு சொல்லிப்புரிய வைக்க முயற்சி பண்ணுனப்ப. இப்புடித்தான் ஒவ்வொன்னும் 

மொதநாள் மண்டகப்படி தொடங்கி பத்துநாள் திருவிழா திருக்கலியாணம் தேரோட்டம் வரை மீனாச்சிகோயில் திருவிழா. அதுல திருக்கலியாணத்துக்கு மஞ்சக்கயிறு மாத்தி தேரோட்டம் அன்னிக்கிச்சாயங்காலமே செலப்ப எதிர்சேவை தள்ளாகொளத்துல வந்துரும் அப்புடியே இந்த ஆறுபேரும் ஆரப்பாளையத்துல சொந்தக்காரவுககிட்ட பிரியா விடை வாங்கி கோரிப்பாளையத்துக்கு போய் அங்க அழகர் எதிசேவை ஆத்துல எறங்குறது அப்புறம் வண்டியூர் திருவிழா தசாவதாரமெல்லாம் பாத்துத்தான் அது அது ஊர்திரும்புற வழக்கம் 

இது வருசா வருசம் நடக்குறதுதான். 

இந்த மாநாட்டுலதான் பொண்ணுக பாக்க கலியாணம் பேச ஆளுகலப்பாக்கமுடியும். அதுலயும் கோரிப்பாளையம் மடத்துல திருவிழாவுக்கு அத்தன சொந்தமும் வந்து தங்குறது வழக்கம் சுத்துப்பத்து பதினெட்டு ஊர்கள்ல இருந்து பொண்ணு பொடிசுகளோட வருவாக. அங்குணக்குள்ளயே பாத்து பேசி முடிச்சிட்டு அப்புறம் சாவாசமா கலியாணம் நடக்கும்...மடத்துல பொதுவில இருந்து எல்லாருக்கும் சாப்பாடும் போடுவாக.

"இப்புடியெல்லாம் போனவருசம் வந்துட்டுத் தான போனோம். இப்ப இப்புடிக் கெடக்கா ளே"ன்னு மனசு பதை பதைக்க எல்லாரும் வந்தாக. பொன்னமாக்காவப்படுக்கபோட்டு இருந்தாக.வந்த தங்கச்சிமாருக எல்லாம் வாய் பொத்தி அழுகவா வேணாமான்னு பாத்துக்கிட்டு இருந்தாக. பொன்னமா அக்கா புருசன் வாசல்ல துக்கமா ஒக்காந்துருந்தாரு. அவருகிட்ட பக்கத்துல போய் விசாரிச்சிக் கிட்டு இருந்தாக. அப்ப அவரு சொல்லிக்கிட்டு இருந்தாரு மருத்துவர் "கார்மேகம் ( முடிவெட்டு றவர்) சொல்லீட்டாரு.
" ஒரு நா தாங்கா துன்னு" கரகரத்த கொரல்ல சொல்லிக்கிட்டு இருந்தாரு

அங்க வீட்டுக்கு உள்ளாற அஞ்சு தங்கச்சி மாருகளும் வந்து" யக்கா யக்கா"ன்னு பேச பொன்னம்மா கேட்டாஏண்டி அக்காவுக்கு என்னா வாங்கிட்டு வந்தீகனு கேக்க பக்குன்னு ஆயிபோச்சு." சேதிகேட்டு துண்டக்காணோம் துணியக்காணோ"முன்னு அடிச்சிப்பிடிச்சி ஓடி வந்தா இவ "என்னா வாங்கியாந்தீக?"ன்னு கேக்குறாளேனு நெனச்சி "என்ன வேணும் சொல்லு வாங்கியாரம்"னா புதுக்கொளத்தா.

அப்ப பொன்னம்மாக்கா சொன்னா "போய் அம்சவள்ளி கடை பிரியாணியும் நாகப் பட்டினம் அல்வாவும் வாங்கியாங்கடி போறப்ப சந்தோச மாப்போறேன்"னா.. ஒடனே ஆளனுப்பி வாங்கியாறச் சொன்னாக. 

வந்து சேந்துச்சு பிரியாணியும் தாமர எலையில அல்வாவும். அத தங்கச்சி மாருக அவளுக்கு ஊட்டிவிட்டாக. பிரியாணி நாக்குல ஒரு வா பட்டதும் அவ மொகத்துல ஒரு திருப்தி தெரிஞ்சது . போதும்னு சைகை காமிச்சா. அடுத்து அல்வா ஒரு துண்டு வாயில போட அவ கண்ணுல இருந்து கரகரன்னு தண்ணிவர நெலகுத்திருச்சு முழி....

அம்புட்டுத்தான் அக்கா கெளம்பிட்டா. 
தங்கச்சி மாருக துக்கம் தாங்காம கட்டிப்புடிச்சி ஒப்பாறி வைச்சாக. "போனமேடி போனமேடி போனவருசம் போனமேடி அக்கா சாமிபாக்கப்போனமேடி போயிட்டியேடி போயிட்டியேடி அந்த சாமிகிட்டயே போயிட்டியேடி" ன்னு ஒப்பாரில அழுக எல்லார் கண்ணும் கலங்கிடுச்சு..... அப்ப மதிச்சியக்காரி சொன்னா

 "பூவும் பொட்டுமா போய்ட்டா கொண்டாந்து பூவும் பொட்டும் வைச்சி விடுங்கடி"ன்னு சொல்ல அவதலையில பூவைக்க கலங்காத கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு. 

பொட்டுவைக்கயில அடிவயிறு ஆடிப்போச்சு...நெறஞ்ச வாழ்க்கைதான் அவளுக்கு அன்னிக்கித்தான் 88 ஆகுது....
ஆருக்குக்கெடைக்கும் அந்த பாக்கியம்... 

அ.முத்துவிஜயன்