டாக்டரம்மா - சிறுகதை

doctor-amma-short-story
டாக்டரம்மா - சிறுகதை

அந்த இடத்துல சனங்க அவரோட வருகைக்காகக் காத்துருந்தாக. அவங்கபெரும்பாலும்...கொஞ்சம் புத்திஸ்வாதீனமில்லாத பேய்பிடிச்சதா கருதப்பட்டவங்களை கூட்டிட்டு வந்துருந்தாக. அது மாதிரி இருக்கவுகளைப்பாத்தாலே தெரிஞ்சது. ஏதோ பிரச்சனைன்னு. கிட்டத்தட்ட பத்துப்பதினைஞ்சு பேருக இருந்தாக.

ஒருவழியா அவரு வந்தாரு. ஒவ்வொருத்தரா பாதிக்கப் பட்டவங்களை கூட்டிட்டுப்போய் மந்திரிச்சிட்டு வந்துட்டு இருந்தாக அந்த வரிசையிலதான் பேகம் தன்னோட மக நூர்ஜகானைப் பிடிச்சிட்டு நின்னுட்டு இருந்தா, பேகம் ஒடிசலான ஒடம்பு பாக்கவே பரிதாபப்படுறமாதிரி இருந்தா. 

அவளோட மக நூர்ஜகான் ஒல்லியா சோந்து போய் நின்னுட்டு இருந்தா. நூர்ஜகானுக்காகத்தான் பேகம் வந்துருந்தா, இதுபோல பல எடங்களுக்குக்கூட்டிட்டுப்போயும் அவளுக்கு சரியாகல. இங்க பலபேரு நம்பிக்கையாச்சொன்னதுனால வந்துருந்தா. நம்ம பொழப்பு இப்புடிஆகிப்போச்சேன்னு இறைவனை நொந்துக்கிட்டா.

அவளோட புருசன் இப்போ அவகூட இல்ல. அதுனால பகல்ல வீட்டு வேலை செஞ்சிக்கிட்டு சாயங்காலம் பூக்கட்டி வித்துக்கிட்டு அதை வைச்சிப்பொழப்பு ஓட்டிக்கிட்டு இருந்தா, அவளோட மக நூர்ஜகான் அவளுக்குக்கெடைச்ச மரகதம். படிப்புல அம்புட்டு சுட்டி எல்லாத்துல யும் மொத ரேங்குன்னு வந்துட்டு இருந்தா. 

தன்னோட அத்தனை பிரச்சனக்கு நடுவில அவளை இங்க்லீஸ் மீடியத்துல சேத்து படிக்கவைச்சா .அவ படிச்ச பள்ளிக் கொடத்துல பத்தாவதுல மொதமார்க்கும் மாவட்ட அளவில மொதமார்க்கும் வாங்கிருந்தா. அதுக்கு ஒதவியா அவளைக்கு சொல்லிக்குடுத்து அவளை நல்ல மார்க்கு எடுக்க வைச்சது அவங்க பள்ளி வாத்தியார் எட்வர்டு. அவர்தான் இவளுக்கு ஊக்கம் கொடுத்து தெரியாததை சொல்லிக்கொடுத்து ஒதவியா இருந்தாரு

அவ எடுத்தமார்க்கைப்பாத்துட்டு அவருதான் சொன்னாரு பக்கத்துல இருக்குற பெரிய பள்ளிக்குடத்துல சேர அழைப்பு வந்துச்சு.அவங்க முழுசும் இலவசமா சீட்டுக்குடுத்தாக. அப்ப எட்வர்டு அங்க போய் படிம்மா. அப்பத்தான் +2ல நல்லமார்க்கு எடுக்க முடியுமுன்னு சொன்னாரு. இவளும் அங்கபோய் படிச்சா. அவளோட லட்சியம் ஒரு பெரிய டாக்ட்டர் ஆகுறதுதான்.
பிளஸ் 2 ல நல்ல கட்டாப் மார்க்கும் கெடைச்சது. பேகத்துக்கு ஒரே சந்தோசம். எட்வர்டு சொன்னாரு எப்புடியும் அரசாங்க மெடிக்கல் காலேஜ் கெடைக்கும்ன்னு. பேகம் அத்தனை கஸ்ட்டத்துக்கும் நல்ல பலன் கெடைச்சதுன்னு சந்தோசப்பட்டா. பள்ளிகுடத்துல சொந்தக்காரங்க ஊருல எல்லாரும் பாராட்டுனாக, பூக்காரம்ம மக நல்ல மார்க்குன்னு. கூடப்படிச்ச பெரிய எடத்துப்புள்ளைகளொட அம்மா அப்பால்லாம் அவங்க பிள்ளைகளைத்திட்டுனாக. எவ்வளவு வசதி செஞ்சிகுடுத்தும் தேறலைன்னு

எட்வர்டு தான் அவளைக் கவுன்சிலிங்க கூட்டிட்டுப்போனாரு. எதிர்பார்த்தமாதிரியே அரசாங்கக்கல்லுரில சீட் கெடைச்சது. (நல்ல வேளை அப்ப நீட் வரலை.)பாக்குறவுககிட்ட எல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக்கிட்டா. அவளுக்கு தெரிஞ்சவங்களும் பாராட்டுனாங்க. புள்ளைன்னா அப்புடி இருக்கனும் அம்மான்னா பேகம் மாதிரி இருக்கனும்ன்னு

ஊரே சேந்து வழி அனுப்பிச்சிச்சி அவளை படிக்க. அஞ்சரை வருசம் படிப்பு முடிஞ்சது. நூர்ஜகான் டாக்டர் படிப்பை MBBS வெற்றிகரமா முடிச்சா. பட்டமளிப்பு விழா நடக்கும்போது அவங்க சொந்தக் காரங்க எல்லாம் வாரேன்னு கெளம்பிட்டாங்க. நம்ம புள்ள டாக்டர் ஆகுது பாக்கனுமுன்னு. எல்லரையும் தன்னோட கஸ்ட்டத்துக்குநடுவில வேன் வைச்சிக்கூப்புட்டுப்போனா. எடவர்டும் வந்தாரு.

அவளுக்கு MBBS பட்டமளிக்கும்போது எல்லாரும்கைதட்டுனாங்க பேகம் அவளைக்கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்தா. எங்க வீட்டு இளவரசின்னு நூர்ஜகான் எட்வர்டு கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா. எல்லாம் உங்களாலதான் சார்ன்னு. அவர்க்குக்கண்ணு கலங்கிடுச்சு 

அவர்தான் திரும்ப அட்வைஸ் பண்ணுனாரு மேல படின்னு அவளும் சரின்னா வந்தவங்களுக்கு எல்லாம் பிரியாணி வாங்கிக்குடுத்தா பேகம்எல்லாரும் வாழ்த்தினாங்க. பேகத்துக்கு அது தகுதிக்கு மீறிய செலவுதான். இருந்தாலும் ஒருசந்தோசம் மக டாக்டர் ஆகிட்டான்னுதாங்கிக்கிட்டா செலைவை.

அடுத்து மேல்படிப்புக்கு நீட் பரிட்சை இருக்கே. அது எழுதி ரேங்க் எடுத்தாத்தேன் படிக்க முடியும் அதுனால ஒரு பிரைவேட் கோச்சிங் செண்ட்டரில் சேந்தா, 60000 ரூ கேட்டாங்க. பேகம் இருந்த நகை நட்டு சேத்துவைச்ச காசு அம்புட்டையும் சேத்து பணம் பொறட்டி கொண்டுபோய் கட்டுனா, நூர் அதுல சேந்து படிச்சா. அது நகரத்துல தங்கிப்படிக்கவேண்டியதாயிடுச்சு. அவ அங்க தங்கிப்படிச்சிட்டு இருந்தா.

அப்புடி இருக்கும்போதுதான் அவளுக்கு ஒருநா போன் வந்துச்சு. ஒடனே வரும்படி. அடிச்சிபுடிச்சி இவ அங்க போனா. அவளோட மக இருந்த இருப்பைப்பாத்துட்டு அழுதுட்டா. நூர்ஜகான் முடியெல்லாம் களைஞ்சி போட்டிருக்குற டிரஸ் எல்லாம் கிழிஞ்சி தலையகீழ கவுந்து ஒக்காந்துருந்தா, இவ பக்கத்துல மெல்லப்போய் நூருன்னு கூப்புட்டா அவ திரும்பல. இன்னோரு தடவை கூப்புட்டா. 

அவ தலைய திருப்பி கோவமா என்னான்னு கேட்டது பேய் கேட்டமாதிரி இருந்துச்சு. அவங்க சொன்னாங்க ரெண்டுநாளா இப்புடித்தான் இருக்கா. எதுக்கும் கூட்டிட்டுபோய் வீட்டுல வைச்சி ப்பாருங்கன்னு. பேகம் அவளை கூட்டிட்டு வந்தா . அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு பல இடத்துல மந்திரிக்க கூட்டிட்டுப்போனா. அங்க சரியானமாதிரி இருக்கும் ஆனா வீட்டுக்கு வந்தா திரும்பப்பழைய கதைதான்

ஆறுமாசம் ஆகிப்போச்சு.மேல்படிப்புக்கு நீட் எக்சாம் எழுதமுடியலைரொம்பச்சொர்ந்துபோனா. செலவு வேற மக இப்புடி ஆகிப் போயிட்டாளேன்னு வேதனை வேற அவளும் இளைச்சித்துரும்பாயிட்டா. அவளால வீட்டுவேலைக்கிப்போக முடியல சைக்கிள்ள பூ வியாபாரம் மாத்திரம் பாத்துட்டு பொழப்பை ஓட்டிக்கிட்டு இருந்தா. கடைசியா ஒரு அம்மா சொன்னதைக்கேட்டு இங்க கூட்டிட்டு வந்துருக்கா

அவரு உள்ளாற வரச்சொன்னாரு. இது பேயோட வேலைதான்னு சொல்லிட்டு மந்திரிச்சாரு. தண்ணி அள்ளி மூஞ்சில தெளிச்சாரு**

அவ மயக்கமாயிட்டா. சரியாப்போச்சு வீட்டுக்குக்கூட்டிட்டுப் போகசொன்னாரு. போய்ட்டு வார வழில எட்வர்டு பாத்தாரு
அவருக்கு கோவமா வந்திருச்சு. பேகத்தை திட்டுனாரு. இந்தக்காலத்துல பேயாவது பிசாசாவது. இவளே ஒரு டாக்டர் பேயோட்டப்போனா படிச்ச படிப்புக்கு மரியாதை என்னான்னு கோவிச்சிக்கிட்டாரு. அன்னிக்கி சாயங்காலம் அவரே அவளை ஒரு மன நல மருத்துவர்கிட்ட கூப்புட்டுப்போனாரு. 

அங்க அவரு நூருக்குகவுன்சிலிங்பண்ணிட்டு மாத்திரை எழுதிக்குடுத்தாரு. அந்தப்புள்ள நீட் எண்ட்ரன்ஸ் எக்சாமுக்காக ராப்பகலா த்தூங்காம ஓய்வெடுக்காமப்படிச்சிருக்கு. மூளைக்கும் ஓய்வு தேவைதான அதுனால அது டிஸ்டர்ப் ஆகிடுச்சு நல்லா ரெஸ்ட் எடுக்கனும் அதுக்கும்சேத்து மாத்திரைதாறேன்னு சரியாகிடும்ன்னு குடுத்தாரு

மூணுமாசத்துல கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு. அப்ப எட்வர்டு சொன்னாரு ஒங்க அம்மா பாவம். ரொம்ப பாடுபட்டுச்சு. நீ தற்காலிகமா ஏன் வேலைக்குப்போகக்கூடாதுன்னு நூரைக்கேட்டாரு . அவ நீங்க சொல்றமாதிரிசெய்யிறேன்னு சொன்னா. அப்ப அவருசொன்னாரு எனக்குத்தெரிஞ்ச கிளினிக்ல சொல்லிருக்கேன் நீ அங்க போய் பிராக்ட்டிஸ் பண்ணுன்னு சொன்னாரு. 
இவ அங்கபோக ஆரம்பிச்சா.அன்னிக்கி அம்மாவக்கட்டிப்புடிச்சி அழுதா நீ இனி ஓய்வெடும்மா. பூ விக்க அலைய வேணாம் நான் டாக்ட்டரா சம்பாரிக்கிறேன் எத்தனை நாளைக்கித்தான் கஸ்ட்டப் படுவேன்னு சொன்னா. அப்ப பேகம் சொன்னா இந்த பூக்கள்தான் நமக்குச்சோறு போட்டுச்சு . அதுதான் ஒன்னைய படிக்கவைச்சிச்சி. இன்னிக்கி நீ டாக்டர் ஆனதுனால என்னையும் டாக்டரோட அம்மான்னு கூப்புடவைச்சிருக்கு. அதுதான் நம்மளை காப்பாத்துற இறைவன் நான் உசுறோட இருக்குறவரை அதை விடமாட்டேன்....

பூவாங்குறப்ப பெண்களோட மொகமும் பூ மாதிரி மலரும். இது ஒண்ணுதான் எல்லா மதத்துக்காரவுங்களுக்கும் பொது அதுதான் எல்லாக்கடவுள் மேலயும் சாத்தும்போது அந்தப்பூவெல்லாம் அதைக்கட்டின நம்மை வாழ்த்தும் நாமலும் நல்லாருப்போம்னு சொல்லிட்டு பூக்கூடைய சைக்கிள்ள எடுத்துட்டுப்போற அம்மாவை கடவுளாப்பாத்து கைகூப்புனா கண்கலங்கி நூர்ஜகான்...............

(பின் குறிப்பு இது ஒரு உண்மை சம்பவம்)

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்