திமிறுபுடிச்சவளாம் - சிறுகதை

thimiru-pudichavalam-short-story
திமிறுபுடிச்சவளாம் - சிறுகதை

அந்தபுள்ள சொன்னவடி கேக்கமாட்டீங்குது கொஞ்சம்கூட மரியாதை பெரியவுகட்ட இல்ல எடுத்தெரிஞ்சு பேசுது ஆரு சொன்னாலும் கட்டுமட்டுக்கு அடங்கமாட்டீங்குது என்னா பண்ணுறதுன்னுதெரியலன்னு வீட்டுக்குவந்த தங்கச்சிவீட்டுகாரர்கிட்ட கொற சொல்லிக்கிட்டு இருந்துச்சு ருக்குமணி.

அவளோட மகளப்பத்தித்தான் இந்தப்புகாரு. அவுக வீட்டுக்கு போனவருசம் வந்துட்டுப்போனப்புறம் இப்பத்தான் வாராரு அவங்களோட தங்கச்சிபுருசன் பெருமாளு.. அவரு வந்தவர அந்தபுள்ள வான்னுகேக்கல வந்தவன்ன ரூமுக்குள்ள போனவதான் . அங்கயேகெடக்கா. ருக்குமணி போயி எவ்வளவோ சொல்லிப்பாத்தா. அவ முடியாதுன்னுட்டா. அவளும் சொன்னா

அவரு தப்பா நெனச்சிக்குவாரு வந்து வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்றதுல என்ன கொறஞ்சுபோயிடுவன்னா
அதுக்கு அவமக செல்விசொன்னா ஒனக்கு வேணும்னா போய வரவேத்துக்க தலையில வைச்சி கொண்டாடு என்னால முடியாதுன்னு திட்டவட்டமாசொல்லிட்டா

ஒனக்கு அவ்வளவு பிடிவாதமா நாளெழுத்து படிச்சிபுட்டோம்ன்ற திமிறான்னு கேட்டா ருக்குமணி
ஆமா அப்புடித்தான் வைச்சிக்க ஒன்னமாதிரி என்னால இருக்கமுடியாதுன்னா. 
ருக்குவுக்கு கோவம் வந்துடுச்சு யாரப்பாத்து என்னா சொல்ற கழுதன்னு கோவமாக்கேட்டா
எல்லாம் வந்திருக்குதே அந்தக்கழுதையத்தான் சொல்றேன்னா

ருக்குமணி அதிர்ந்துபோயிட்டா
ருக்குமணியோட புருசன் ஒடம்பு சரியில்லாம இருந்து போய்ச்சேந்துட்டாரு
அவரு வேலசெஞ்ச இடத்துல இருந்து கொஞ்சம் பணம் வந்துச்சு. அப்புறம் தெரிஞ்சவுக வீடுல வேல இதுல குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு

ருக்குமணிக்கி வெவரம் அவ்வளவா போதாது. மகனும் சின்னவன் அதுநால   அவ எல்லாத்தையும் அவளோட தங்கச்சிபுருசன் பெருமாளுக்கிட்டக் கேட்டுத்தான் செய்வா. அதுநால அடிக்கடி வந்து ஒதவிசெய்வாரு பெருமாளு
அவருமேல மரியாத ரொம்ப வைச்சிருந்தா ருக்குமணி. அவரு போன வருசம் வந்துட்டுப்
போனப்புறம் இங்க வாரதில்ல கேட்டா எனக்கு அங்க மரியாத இல்ல
ஒம்பொண்ணு சரியா கவனிக்கிறதில்ல

ஒன்னோட குடுபத்துக்கு எவ்வள்வு ஒதவிசெஞ்சேன் ஆனா செல்வி மதிக்கமாட்டீங்குறான்னாரு
அதுக்கு ருக்குமணி நீங்க வாங்க அவகிட்ட எடுத்துச்சொல்றேன்னா. அதுக்கப்புறம் வர சம்மதிச்சிச்சாரு. அப்ப வ்ந்தப்பபோதுதான் இந்தப்பிரச்சனை பெருசாயிடுச்சு

அவரக்கழுதன்னா சொல்றன்னுகேட்டா ருக்குமணி அதுக்கு இல்ல தப்பா சொல்லிட்டேன் அது தெருநாயின்னா
அவருகாதுல விழுந்துடப்போகுதுடி மெதுவாப்பேசுன்னா ருக்குமணி அதுக்கு செல்வி விழுகட்டும் நல்லாவே விழுகட்டும் அது சூடு சொரண இல்லாத நாயி அதுதான் வந்துருக்குன்னா

ருக்குமணியால தாங்க முடியல கோவத்தோட உச்சிக்கேபோயிட்டா அவளோட முடியப்புடிச்சி இழுத்துட்டு வந்து அவருகிட்ட மன்னிப்புக்கேளுன்னா

அதுக்கு உன் கால்ல எவ்வளவு வேண்ணாலும் உழுகிறேன் ஆனா அவனுக்கு மரியாத கெடையாதுன்னா
அடிக்கப்போன அவகிட்ட பெருமாள் நான் போயிடுறேன்னு

அவள விட்டுடுன்னு. சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு
ருக்குமணிக்கி ஒண்ணும் புரியல அப்ப செல்விசொன்னா பாத்தியாஅவன் ஏன் ஓடுறான்னு தெரியுதா
போனதடவ இங்க அவன் வந்திருந்தப்ப
மொதல்லயே அவன் பார்வை சரியில்ல

வழிஞ்சான் . சித்தப்பாவாச்சேன்னு நானு கண்டுக்கல்ல. அன்னிக்கி காலையில நீ வேலைக்கிபோயிட்ட.
அவன் கொஞ்சம் லேட்டாப்போறேன்னு வீட்டுல தங்கிட்டான் நீ போனப்புறம்
என்னோட ரூமுக்குள்ள வந்து அசிங்கமாப்பேசினான் நான் திட்டுனேன்

அதுக்கு இதெல்லாம் சகஜம்தான்
உங்ககுடும்பத்துக்கு எவ்வளவோ செஞ்சி ருக்கேன் நீ கொஞ்சம் அனுசரிச்சி போனா இன்னும் நெறயா செய்வேன்னான் நான் சொன்னேன் நீ எனக்கு அப்பா மாதிரி இப்படிப்பேசலாமான்னுகேட்டேன்

அதுக்கு அவன் நான் ஒண்ணும் ஒங்க அப்பாகூடப்பொறக்கல. அங்கிள்ன்னு வைச்சிக்கன்னான். நான்சொன்னேன் வெளியபோடா நாயேன்னு அதுக்கு அவன் கொஞ்சம் அத்துமீறுனான் நான் இதுமாதிரி நேரங்கல்ல பாதுகாப்புக்கு வைச்சிருக்குற பெப்பர் ஸ்பிரேய எடுத்து அவன் மூஞ்சில அடிச்சேன் அவனால தாங்கமுடியல. 

அம்மாகிட்ட சொல்லிடாதன்னு கால்ல வுழுந்தான் பொழச்சிப்போ நாயே இனிமே இந்தப்பக்கம் வந்துடாத வந்தா மரியாதை இல்லன்னு சொல்லிட்டேன் உன் கிட்டயும் சொல்லல.
அதுநாலதான் அவன் இவ்வளவுநாளா இங்க வரல நீதான் வர வைச்சிட்டன்னா.
ருக்குமணி கண்ணுல இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பிச்சது.என்ன மன்னிச்சிருதாயி ஒன்னப்புரிஞ்சிக்காம என்னன்னவோ பேசிட்டேன்னா

அப்ப செல்வி சொன்னா ஒம்மேல தப்புல்ல ஒனக்கு வெவரம் பத்தாது. என்மேல தப்பிருந்தா சொல்லுன்னா
அதுக்கு ருக்குமணி சொன்னா, நீன்றதுனால அவன அத்தோட விட்டுட்ட நானா இருந்தா
அன்னிக்கி வீட்டுல அவனோட பொணம் வுழுந்திருக்கும்ன்னு

செல்விசொன்னா அதான் நான் உன்கிட்ட சொல்லலன்னு
இதுதெரியாம நான் என் தங்கத்தை தப்பாபுரிஞ்சிகிட்டனே... என்ன மன்னிச்சிரு மகளேன்னு  அழுதா....
 அதுக்கு செல்வி சொன்னா... அம்மா நீ உன் காலத்துலயே இருந்துட்ட.... நாங்க அப்படி இல்ல... எதிர்த்துக்குரல் கொடுக்கத் தொடங்கிட்டோம்....

வீட்டுக்குள்ளயேயும்..... வெளியேயும்.....
செல்வியப்பாக்கப்பெருமையா இருந்துச்சு...சின்ன வயசுல தான் பட்ட கஸ்ட்டம் எல்லாம்  நினைவுக்கு வர கண்ணீர் வந்தது  ... தொடைக்க மனசில்லாம....   மகளைப்பெருமையோட பாத்துக்கிட்டு இருந்தா........ ருக்குமணி....
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்