பெருமை - சிறுகதை

perumai-short-story
பெருமை - சிறுகதை

சாயங்காலம் எப்ப ஆகுமுன்னு காத்துக்கெடப்பாங்க அவங்க. எல்லாருமே 60 வயசுக்குமேற்பட்ட ரிட்டயர்டு ஆகி மகன்வீட்டுலயோ இல்ல மகவீட்டுலயோ தனியாவோ இருக்குறவங்க.  அவங்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரத்துல சந்தோசமான நேரம் அந்த சாயங்காலம் 4 மணில இருந்து 7 மணி வரைக்கும்தான்

 தினம் ஆறுல இருந்து 10 வரைக்கும் ஆளுக எண்ணிக்க மாறும். அவங்க வாக்கிங் மாதிரி போயிட்டு அந்த பார்க்குல கூடுவாக
அங்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பொருளாதாரம் எல்லாம் அலசப்படும். ஆனா வீட்டப்பத்திப்பேசுனா சோகமாயிடுவாங்க. அங்க ரெகுலரா வார யாராவது திடீருண்ணு வரலன்னா கவலைப்படுவாங்க. ஒரு வேளை ஒடம்பு 

சரியில்லையோ காலன் பிரிச்சிடுவானோன்னு கவலப்படுவாங்க அவரோட வீட்டுப்பக்கமா திரும்பிப்போகும்போது ஒரு பார்வை பாத்துட்டுப்போவாங்க. ஏதாவது பந்தல் கிந்தல் போட்டுருக்கான்னு. ஏன்னா அவங்க இருக்குறதே அந்த வீட்டுக்குச்சொமையா நெனைக்கிறவங்க ஏதாவது ஒண்ணுன்னா இவங்களுக்கெல்லாம் சொல்லிக்கிட்டா இருக்கப்போறாங்க. சட்டுப்புட்டுன்னு சோலிய முடிச்சிடுவாங்க  கடைசிக் காலத்துல கூட நண்பனப் பாக்க முடியாதுபோனது உறுத்தலா இருக்கும் 

இதுஅவங்க வாழக்கைப்புத்தகத்தின் கடைசி அத்தியாயம்.  

அங்க ரெகுலரா வாரவருதான் ராமானுஜம்  அவரோட பிரண்டுதான் முனுசாமி. ரெண்டுபேரும் ஒரே எடத்துல வேலை செஞ்சி ரிட்டயர்டு ஆனவங்கதான். ராமானுஜம் ஆபீசரா இருந்து ரிட்டயர்டு ஆனவரு. மூனுசாமி கடைசிவர கிளார்க்கா இருந்து ரிட்டயர்டு ஆனவரு. ராமானுஜம் வீட்டுல அவருக்கு நல்ல மரியாதை. அவரோட மருமக உள்ளங்கையில வைச்சித்தாங்குவா. மகனும் அப்படித்தான். அவருக்கு ஒரு மகளும் உண்டு அவ வேற ஊருல இருக்கா, அப்ப அப்ப அங்கயும் போயிட்டு ஒருவாரம் தங்கிட்டு வருவாரு அவளும் நல்லா அப்பாவைக்கவனிச்சி அனுப்புவா. அப்ப எல்லாம் முனுசாமி அல்லாடிப்போயிடுவாரு நண்பனப் பாக்காம. ராமானுஜம் சம்சாரம் இப்ப இல்ல மகராசி பூவும் பொட்டுமாப்போய் சேந்துட்டா, முனுசாமி சம்சாரத்தோட மகன் வீட்டுலதான் இருக்குறாரு. அவருக்கு அவரு மகன் வீட்டுல கவனிப்பு இல்ல. அவர அவரோட மருமக திட்டிக்கிட்டே இருப்பா, இருக்குற பிரச்சனையில இது வேற உசுற வாங்குதுன்னு. அதக்கேக்குறப்ப அவருக்கு மனசு ஒடஞ்சிபோயிடும் . நாம இப்புடி பாரமா இருக்குறமேன்னு. அத ராமானுஜம்கிட்ட சொல்லிப்பொலம்புவாரு

அப்ப எல்லாம் என்ன மாதிரி இருக்கனுமுன்னு பெருமையாப்பேசுவார் ராமானுஜம்.ராமனுஜத்துக்கு ஒரு ஆசை நண்பனை குடும்பத்தோட வீட்டுக்கு அழைச்சி ஒருவேளை விருந்து வைக்கனும்ன்னு. தன்னோட பெருமைய காமிக்கனும்ன்னு ஆசை.அத மருமக கிட்ட சொன்னாரு. அவளும் அதுக்கென்ன கூட்டிட்டுவாங்க. வார வெள்ளிக்கெழமை மதியம்ன்னு சொன்னா. அவரும் முனியசாமிக்கிட்ட விசயத்தச்சொல்லி விருந்துக்கு அழைச்சாரு. ஏற்கனவே ராமானுஜம் வீட்டுல அவருக்கு இருக்குற மரியாத தெரியுங்கறதால அவரும் ஒத்துக்கிட்டாரு

அவரோட வாக்கிங் நண்பர்கள் போயிட்டு வாங்கன்னு ஊக்கப்படுத்துனாங்க  போயிட்டு வந்து சொல்றேன்னு முனுசாமி ஒத்துக்கிட்டாரு..ராமானுஜமும் அதப்பெருமையா நெனச்சாரு

வெள்ளிக்கிழம ராமானுஜம் வீட்டுல விருந்து தயாராகிட்டு இருந்துச்சு, ராமானுஜம் நண்பனுக்கு பிடிச்ச அயிட்டம் எல்லாம் பண்ணச்சொன்னாரு. மதியாணம் ஒருமணிக்கி முனுசாமி சம்சாரத்தோட வந்தாரு. ராமானுஜம் அவர வரவேத்து  ஒக்காரவைச்சி சாப்புடசொல்லி பக்க்த்துல இருந்து மருமகள பரிமாறச்சொல்லி ப்பாத்துக்கிட்டாரு. ரெண்டுபேரும் திருப்தியாச்சாப்புட்டாங்க. தாம்பூலம் குடுத்து உபசரிச்சாரு. முனுசாமிக்கும் அவரு சம்சாரத்துக்கும் கண்ணு கலங்கிடுச்சு. ராமானுஜத்துக்கு அவரு வீட்டுல இருக்குற செல்வாக்கு மரியாதை எல்லாம். கொஞ்சம் பொறாமையே படவைச்சிருச்சு. அவர் வீட்டுல அவருக்கு இருக்குற மரியாத ஞாபகம் வந்து கண்ணு கலங்கிடுச்சு. அவரு ராமானுஜம் மருமகளை மனசாற ப்பாராட்டுனாங்க வாழ்த்திட்டுக்கெளம்புனாங்க.

ராமானுஜம் அவங்களை பஸ் டாண்டு வர கொண்டு விட்டுட்டு வரப்போனாரு. அவங்க அங்கயும் அவரபாராட்டுனாங்க கொடுத்து வைச்சவர்ன்னு . முனுசாமி அன்னிக்கி சாயந்தரம்  வாக்கிங் நண்பர்கள்கிட்ட நடந்ததசொல்றேன் சாயங்காலம் வாங்கன்னு சொல்லிட்டுக்கெளம்புனாரு.ராமானுஜத்துக்கு ரொம்ப சந்தோசம் .அவங்களை வழியனுப்பிட்டு வீட்டுக்குத்திரும்பினாரு. அப்ப அவரு மருமக  போன்ல பேசிட்டு இருந்தா. அவளோட அம்மாகிட்ட. அவ சொல்லிட்டு இருந்தா. ஆமாம்மா  போயிடுச்சுக அந்த ரெண்டும். இது கொண்டுபோய் விடப்போயிருக்கு. இதுவேதண்டம்  இது ரெண்டக்கூட்டிட்டு வருது அதுரெண்டும் சோத்தையே பாக்காத மாதிரி முழுங்குச்சு 

இதுவா வையி வையின்னு உசிற எடுத்துச்சு. இப்ப திரும்ப சாதம் வைச்சிருக்குகேன்.  இந்த சனியனுக்கு மாதம் வார 50,000 பென்சனுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு நடிக்கவேண்டியதாயிருக்கு. இல்லாட்டினா இது போய் மகவீட்டுல ஒக்காந்துக்கிட்டு அங்க குடுத்துடும் பென்சன் காச. எல்லாம் என் தலையெழுத்து இத கட்டிக்கிட்டு அழுகனுமுன்னு. என்ன பண்ணித் தொலையிறது. இத நம்பி வீட்ட வாங்கியாச்சு. இ எம் இ  இதுலதான் போயிட்டு இருக்கு. இல்லன்னா அப்பயே கழுத்தப்புடிச்சி வெளியதள்ளிருப்பேன்னு 

அதுக்கு அந்தம்மா எதோ சொல்ல  இவ ம்ம் பண்ணித்தொலையிறேன்னு சொல்லிட்டு இருந்தா. ராமானுஜத்துக்கு வேர்த்துப்போச்சு. இவரப்பாத்ததும் அவ அவங்கள வழியனுப்பீட்டீங்களா. கொஞ்சம் இருங்க சாப்பிடலாம்ன்னு சொன்னா.  அவரு சொன்னாரு வேணாம் ம்மா எனக்குப்பசிக்கலன்னு சொல்லிட்டு அவரோட அறைக்குள்ள இருந்த சம்சாரம் படத்துக்கு முன்னாடி போய் நின்னார்
 கண்ணீர் தார தாரயா ஊத்துச்சு. இந்த வார்த்தைகளக்கேட்குமுன்னாடி நீ போய் சேந்துட்ட கொடுத்துவைத்த மகராசின்னு சொல்லி குலுங்கிக்குலுங்கி அழுதார்...

அவரோட சம்சாரம் படத்துல அது தெரிச்சது........அன்னக்கில இருந்து அவர் சாயங்கால வாக்கிங் மீட்டிங்போறதில்ல.
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்