கடைசிபெஞ்ச் காளிதாஸ் - சிறுகதை
நான் வேலைக்கி வெளியூர் வந்து ரெண்டு மூணு வருசம் கழிச்சி கிட்டத்தட்ட SSLC முடிச்சி 5 - 6 வருசம் கழிச்சி ஊருக்குப்போயிருந்தேன் வீட்டுக்குள்ள அம்மா தம்பி எல்லார்கூடயும் பேசிக்கிட்டு சாப்புட்டுக்கிட்டு இருந்தேன். அப்ப அம்மா தாயி பிச்சபோடுங்கன்னு குரல் கேட்டது...
நான் சொன்னேன் ஏதாவது போட்டு விடுங்க ம்மான்னு சொன்னேன் , அப்ப அம்மா சொல்லிச்சி தினம் இவனுக்கு இதேவேலை காலங்காத்தால சட்டியத்தூக்கிட்டு வந்துருனானுக.
பாத்தா உன் வயசுக்கு ரெண்டு அல்ல மூணு வயசு மூத்தவனா இருப்பான் போல மாடு மாதிரி வளந்துருக்கான்...கைகால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஒழைச்சி சம்பாதிக்கிறவயிசில் பிச்சை எடுக்குறான் அவனுக்குப்போய் போடச்சொல்லுற...
ஏதோ நொண்டி மொடம் வயசாளி சீக்காளின்னா பரவாயில்ல....ன்னு சலிச்சிக்கிச்சு....
நான் அப்பத்தான் சாப்பிட்டு முடிச்சி வெளியகைகழுவ வந்தேன்... வெளியில நிக்கிற ஆளை எங்கயோ பாத்துருக் கோமேன்னு பொறி தட்டுச்சு...
சட்டுன்னு நெனவுக்கு வந்துருச்சு. டேய் நீ காளிதாஸ் தானன்னேன்.... அவன் சொன்னான் அவன் செத்துபோயிட்டான்...நான் வேறன்னான். நான் கேட்டேன் டேய் பொய்சொல்லாத நீ கடைசி பெஞ்ச் காளிதாஸ் தானன்னேன்...
அவன் சொன்னான் கடைசிபெஞ்ச் காளிதாஸ் தோத்துப்போயிட்டான் அப்புறம் செத்துப்போயிட்டான்.... நான் வேற ந்னு சிரிச்சான் ஆனா அவன் கண்ணுல கண்ணீர்வழிஞ்ச்சி.....
தன்னோட பள்ளிப்பருவத்துத்தோழனை பிச்சக்காரனா பாக்குற அதிர்ச்சி என் மூஞ்சில அறைஞ்சுச்சு...
அதேநேரத்துல அதே பள்ளிபருவத்து தோழன் முன்னாடி பிச்சக்காரனா நிக்கிற உயிர்போகும் வலி அவன் கண்ணுல தெரிஞ்ச்சிச்சி.... இந்தக்கொடுமை யாருக்கும் வரக்கூடாது இறைவான்னு ஸ்தம்ம்பிச்சுபோய் நின்னுக்கிட்டு இருந்தேன்....
என்னோட பத்தாவது பதினொன்னாவது வகுப்புகள்ல என் கூடப்படிச்சவந்தான் காளிதாஸ். அப்பயே அவன் ஆறடி தாட்டியான ஒடம்பு மொகமெல்லாம் அம்மைத்தழும்பு பெரிய ஆளுமாதிரி இருப்பான்
பள்ளிக்கூட சட்டதிட்டப்படி அரக்குகலர்ல அரைக்கால் டவுசர் வெள்ளை அரைக்கை சட்டை யூனிபாரம் போட்டு அதுக்கு மேல வேட்டிகட்டிட்டு வந்து பள்ளிக்கூடம் வந்து அந்த வேட்டிய அவுத்து வைச்சிடுவான்
( ஏன்னா வேட்டிகட்டி உள்ள வரக்கூடாது)
கடைசி பெஞ்ச் மூளைதான் அவன் இடம். தங்களோட நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதுக்காக சில வாத்தியார்கள் சீண்டுவது எப்பையும் அவனைத்தான்
ஏன்னா படிப்பு அவன் மண்டையில ஏறல எப்பையும் பெயில் மார்க்குதான் ஒவ்வொரு வகுப்புலயும் எத்தன வருசம் இருந்தானோ தள்ளி தள்ளி கடைசி ரெண்டு வருசம் என்கூடசேந்தான்....
அதுனால கேள்வி கேக்குறதுன்னா அவனைத்தான் மொதல்ல கேப்பாங்க என்னா காளிதாஸ் சொல்லு பாக்கலாம் பதிலைம்பாங்க....
அவன் வழக்கம்ப்போல எந்திரிச்சி நின்னு மண்டையச்சொரிவான்.... உடனே அவங்களுக்கு கோவன் வந்துரும்...மாடுமாதிரி வளந்துருக்க இது கூடப்படிக்கமாட்டியான்னு அடி ஸ்கேல் எடுத்து கைய நீட்டச்சொல்லி அடிப்பாங்க.
ஆனா அவன் எந்தரியாகசனும் காட்டாமா மரம் மாதிரி நிப்பான். ரொம்பக் கடுப்பா யிருவாங்க வாத்தியாருக....
அப்புறம் என்ன மண்டிபோடச்சொல்லுவாங்க வகுப்புல பெருமபாலும் மண்டி போட்டுக் கிட்டுதான் இருப்பான் ...
சில நல்லாப்படிக்கிறபசங்க அலுத்துக்கு வானுக ... இவனுக ஏன் இங்க வாரானுகன்னு...
அவன் படிப்புலதான் கடைசிபெஞ்ச். செஞ்சிலுவை சங்க நிதின்னா மொத ஆளா போய் பணம் கலக்ட் பண்ணி கொண்டாந்து குடுப்பான் அவன் அளவுக்கு ஆரும் முடியாது...
ஆண்டு விழா இன்ஸ்பெக்சன்ன்னா வகுப்புல பள்ளிகொடத்துல கொடி எல்லாம் ஒட்டி அலங்காரம் பண்ணுறதுல அவன மிஞ்ச ஆளுகிடையாது
அதேமாதிரி அந்தகாலத்துல வகுப்புல எழுதுற கரும்பலகை தேஞ்சுபோயிடுச்சுன்னா அதுல கருப்புக்கலவை கலந்து பூச வாத்தியார் கேட்டா மொத ஆளா கைத்தூக்குவான்... நானும் அவன் கூட சேந்துக்குவேன்..
பெரும்பாலும் சனிக்கிழமை சாயங்காலம் ரெண்டு பீரியடுக்கு முன்னாடியே போகச்சொல்லிருவாரு. வாத்தியார் கலவை தயார் பண்ணனும்ல...
அவனுக்குத்தான் தெரியும் காம்பினேசன். ஊமத்தை எலை காய் அப்புறம் நல்ல அடுப்புக்கரி... அப்புறம் என்னமோ சேத்து அம்மி இல்ல உரல்ல பேஸ்ட் மாதிரி அரைச்சி ஒரு டிபன் பாக்ஸ்ல எடுத்துக்கிட்டு பள்ளிக்கொடம் விடுற நேரத்துக்கு அங்க போயிடுவோம்...
பள்ளிக்கொடம் 4.30 க்கு விடும் ஆறுமணிக்கு பூட்டுறத்துக்கு வாட்ச்மேன் வந்துருவான். அதுக்குள்ள அந்தக்கலவைய பிளாக்போடுல தன்னோட பனியன கிழிச்சி அந்தக்கலவையில முக்கி ஒரேமாதிரியா அப்புவான். நான் அதைப்பாத்து ஓகே சொல்லனும். அப்ப அவன் என்ன விசயா சரியா இருக்கான்னு கேப்பான்
அப்ப எனக்கு இங்கிலீஸ் பாடத்துல டாம் வொயிட்வாசஸ் த ஹவுஸ் ந்ற பாடம் நெனவுக்கு வரும் ஏன்னா அதுலதான் அவன் வெள்ளை அடிக்கிறத ஒரு ஓவியம் வரைறதா கற்பனை பண்ணி அழகுபாப்பான்...
இதுக்குள்ள அவன் ஒடம்பெல்லாம் கரி அப்பி ஒரு மாதிரி ஆயிடும்... அத்தோட வகுப்பறைக்கதவ சாத்திட்டு வந்துருவோம் அப்ப இருந்து ஞாயத்துக்கெழமை புல்லா காஞ்சி திங்கக்கெழமை தயாராயிடும்
திங்கக்கெழமை வாத்தியார் வந்துபாத்துட்டு எல்லாரும் காளிதாசுக்கு கைதட்ட்ல் குடுங்கன்னு சொல்வாரு... அப்ப அவன் மொகத்துல ஒரு சந்தோசம் வரும் அதுக்காகவே அடிக்கடி அவன் இந்த வேலை செய்வான்....ஏன்னா எக்சாம் பேப்பர் குடுக்கும் போது நல்லா மார்க் எடுத்த வங்களை நிக்கச்சொல்லி வாத்தியார் கைதட்டச்சொல்வாறு...அதுல என்னைக்கும் அவன் கைதட்டல் வாங்குனதில்லை அந்த ஏக்கம் அவன் கண்ணுல தெரியும்
முழுப்பரிச்சைக்கு முன்னாடி மூணு ரிவிசன் பள்ளிக்கொடத்துல வைப்பாங்க. அதுல 50/100 க்கு மேல வாங்குறவுகளுக்குத்தான் முழுப்பரிச்சை எழுத அனுமதிக்கிற வழக்கம் அங்க இருந்துச்சு.... எடுக்காதவங்க பிரைவேட்டாத்தான் எழுதனும்... பள்ளி 100/100 பாஸ் காமிக்கிறதுக்கான ஏற்பாடு இது...
எதிர்பாத்தது போலவே காளிதாஸ் வெளியேத்தப்பட்டான்.... அவங்களுக்கு ரிசல்ட்தான் முக்கியம்...
அவனோட அம்மா வந்து ஹெட்மாஸ்ட்டர்கிட்ட கெஞ்சினாங்க... காளிதாஸ் கண்ணீர்விட்டு அழுதான்... கஸ்ட்டப்படு படிச்சி பாஸ் ஆயிடுவேன் எழுத விடுங்கன்னு பொலம்புனான்...எனக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு.... ஆனாலும் பள்ளிக்கூடம் ஒத்துக்கலை.... அவன் செஞ்ச சேவை கைதட்டல் எல்லாம் ,,,,வீணாப்போச்சு பள்ளிக்கொட ரிசல்ட் முன்னாடி...
பள்ளிக்கொட ரிசல்ட் அவங்க எதிரபாத்தபடி 100/100 வந்துச்சு... பேப்பர்ல எல்லாம் பெருமையாப்போட்டுக்கிட்டாங்க அது காளிதாஸ் போன்றவர்களோட எதிர்காலத்த குழிதோண்டிபொதைச்சி அதுக்குமேல ரோஜாப்பூ நட்டமாதிரி தெரிஞ்சிச்சி நான் நல்லமார்க எடுத்தும் காளிதாசை நெனைச்சி கண்ணீர் வந்தது.....
அதுக்கபுறம் அவனை இப்பத்தான் பாக்குறேன்... என்னடா ஆச்சின்னு கேட்டேன் அவன் கண்ணீர்வழியச்சொன்னான். நான் தோத்துட்டேன்.... அம்புட்டுத்தான் அப்புறம் எப்புடி உசிர் இருக்கும் நான் செத்துட்டேன்... அதான் இப்ப வேற ஆளு நான்....ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னான்.ஆனா அவன் கண்ணுல வழிஞ்ச கண்ணீருக்கு என் நெஞ்சி நொறுங்கிப்போச்சு.... எனக்கும் அழுகையா வந்துச்சு....
அம்மாக்கிட்ட வெவரம் சொன்னேன். அவனைக்கூப்புட்டு திண்ணையில சாப்பாடு வைக்கச்சொன்னேன்...அவன் சொன்னான் அதெல்லாம் வேணாம் விசயா இந்த சட்டில போடச்சொல்லு நாளைக்கி வரைக்கும் வைச்சி சாப்புட்டுக்கிறேன்...ன்னு சொன்னான்... சரி சாப்புடு அதுலயும் தாறேன்னு அம்மா சொன்னாங்க அவங்க கண்ணும் கலங்கிடுச்சு அவன் நல்லா சாப்புட்டான் அவன் சாப்புடும் போதே தெரிஞ்சது.... அவனோட பசி.....
அப்புறம் போகும் போது சொன்னான் அம்மாகிட்ட சொல்லு நான் வந்தா சோறு குடுக்கச்சொல்லின்னு சொல்லிக்கிட்டே போனான்......
எனக்கும் அம்மாவுக்கும் மனம் ரொமபக்கனத்துப்போச்சு அன்னிக்கி முழுசும் எனக்கு ஒருமாதிரியாவேஇருந்துச்சு...சாப்பாடு புடிக்கல.... என்ன வாழக்கை ஏன் கடவுள் இதுமாதிரி சிலர் வாழக்கையில் வெளையாடிறான்னு..... அவர்மேல கோவமா வந்துச்சு.... அன்னிக்கித்தான் அவனைக்கடைசியாப்பாத்தது..... அப்புறம் நான் ஊர் திரும்பிட்டேன்.....
அடுத்த தடவை ஊருக்குப்போகும்போது பள்ளிவகுப்புத்தோழன்கிட்ட அவனைப்பத்திக்கேட்டேன்
அவன் சொன்ன தகவல் என் நெஞ்சு பிழக்குற செய்தியா இருந்துச்சு.... ஆமா அவன் முழுசா மனநிலை பாதிக்கப்பட்டு ஒருநாள் வீதிஓரத்துல பொணமாக் கிடந்ததாச் சொன்னான் ....
யாரோ என் நெஞ்சப்புடிச்சி அழுத்துனமாதிரி கனத்து கண்ணீர் வழிய ஆரம்பிச்சது.....என்னால கட்டுப்படுத்த முடியல அப்ப அவன் சொன்ன வார்த்தை என் காதுல திரும்பத்திரும்ப க் கேட்டுச்சு
விசயா நான் தோத்துபோயிட்டேன்..... அதுனால செத்துப்போயிட்டேன்னு.......
அன்னிக்கிப்பூராம் என் கண்ணீர் வந்துக்கிட்டே இருந்துச்சு.........
அ.முத்துவிஜயன்
(பின் குறிப்பு: இது உண்மையா வெறும் கதையான்ற முடிவை உங்ககிட்டயே விட்டுருறேன்)