அம்மாளுக - சிறுகதை
அந்தப்பொண்ணு அவளோட சொந்தக் காரவுகளுக்கு மகளோட கலியாணப்பத்திரிக்கை வைக்கப் போயிருந்தா. அவரும் பத்திரிக்கைய வாங்கிட்டு
" எங்கம்மா கலியாணம் நு கேட்டாரு. செவகங்கயிலதான் கலியாணம். அவசியம் வந்துருங்க சாக்குப் போக்குச்சொல்லப்புடாது அவசியம் வரணும் "னு சொன்னா.
"சரி மாப்புள்ள எந்த ஊரு?" கேட்டப்ப
"செவகங்க தான் அதான் கலியாணம் அங்குணக்குள்ள வைச்சிருக் கோம், அவுக வீடு அங்கதானிருக்கு பஸ்டாண்டுபக்கத்துல. நீங்க வாரப்ப பஸ் டாண்டுவரைக்கும் போகவேணாம் மதுர முக்குல எறங்கி வடக்குபக்கமா வந்தா அங்க பெருமாள்கோயிலு இருக்கு.பக்கத்துலயே மண்டபம் .அங்க கலியாணத்த முடிச்சிட்டு மண்டபத்துல வரவேற்பு”ன்னு சொன்னா...
அப்ப அவரு சொன்னாரு
“அங்க அம்மாளுக கொல்லங்குடி முத்தூருல இருக்காக. அம்ம பக்கமா மானாமருதையில சம்பந்தமெல்லாம் பண்ணீருக்காக. ஏன் மருதக்கோட்டையில கூட குடுக்கல் வாங்கல் உண்டு இதுவும் அப்புடித்தேன் போல இப்ப ஆரும் அறி முகமில்ல சரி வந்துபாத்தாத் தெரியும் வாரனும்மா குடும்பத்தோட”ன்னு சொன்னாரு
கல்யாணத்தன்னிக்கி காலங்காத்தாலயே கெளம்பி மாட்டுத்தாவணி போய் செவகங்க பஸ்நிக்கிற எடத்துக்குப் போனா தொண்டி போற பஸ் ரெடியா நின்னுச்சு. சம்சாரம் சொல்லிச்சி
“ எதுக்கும் சாப்புட்டுபோயிரலாம் கோயில்ல கலியாணம்ன்றீக. காலை டிபன் இருக்குமோ என்னாவா”ன்னா.
அப்ப அவர்சொன்னாரு ”இல்லாட்டினா என்ன அங்க போய் பாத்துக்கலாம்”னாரு. பஸ் பூவந்தி தாண்டி ஒரு எட்டரை மணிக்கா போய் சேந்துச்சு. அங்க மதுரமுக்குல எறங்கி கோயிலுக்கு வழி கேட்டவன்ன சொன்னாக
“அது ஒருமைல்தூரமிருக்கும் ஆட்டோ பிடிச்சிப்போங்க”ன்னாக.
இவரு
“சரி வா நடக்கலாம் செவகெங்கையப் பாத்தா மாதுரி இருக்கட்டும்”னு சொல்லி நடக்க ஆரம்பிச்சாக. அதுபாட்டுக்குப் போயிட்டே இருந்துச்சு. அங்குணக்குள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு எதுத்த சந்துலதான் மண்டபம் சொன்னாக. அதுக்குப்பக்கத்துல பெருமாள் கோயிலு. பெருமாள் கோயில் பெருசுதான் பக்கத்துல கம்மாக்கரையா இல்ல கம்மாவான்னு தெரியல மண்டபம் இருந்துச்சு வாசல்ல பல முகங்களப் போட்டு வயசு பயகளோட போட்டா 50, 60 போட்டு 40 அடி 60அடி கட்டவுட் வைச்சி வாழ்த்துகட்டவுட்டுகள் கலக்குச்சு...
சொந்தக்காரப்பொண்ணு வாசல்ல நின்னு வரவேத்துச்சு.
“ வாங்க வாங்க”ன்னு அப்ப இவர் கேட்டார்
“அம்மாளுக வந்துட்டாகளா?”ன்னு .
அதுக்கு அது சொல்லிச்சி
“இல்ல என்னமோ வேன் புடிச்சி வாராகலாம் இன்னம் சந்தடிய காணாம் ஏழரைக்கே கெளம்பிட்டா களாம் நீங்க வாங்க டிபன் சாப்புடலாம்”னு கூட்டிட்டுப்போய் சாப்பிடவைச்சா, அங்க தெரிஞ்சமூஞ்சி ஒன்னத்தையும் காணோம் எல்லார் மூஞ்சிகளும் புதுசா இருந்துச்சு என்னமோ வித்யாசமா இருந்துச்சு...
அப்ப இந்தப்பொண்ணோட கலியாணம் நெனவுக்கு வந்துச்சு
இந்தப்பொண்ணோட கலியாணம் நடந்தப்ப இதேமாதிரிதான் மாப்பிள்ளை வீட்டாளுக அன்னியமா இருந்தாக. அப்புறம் வெசாரிச் சப்பத் தெரிஞ்சது அவுக நம்ம கூட்டத்தைச் சேந்தவுக இல்லையாம் ஆனா நம்மாளுக மாதியேதானாம் அதே தொழில் செய்யிறவுக தானாம் . பாண்டி நாட்டச்சேந்தவுக இல்லை யாம் திண்டுக்கல் பக்கம்னு சோழநாட்டாளுக நுசொன்னாக.
”அது வேற கூட்டமப்பா அது நம்மல்ல கொஞ்சம் கம்மிதான்”னு சொன்னாருஒருத்தர்.
“அதாவது நம்மசாதில உட்பிரிவு கூட்டம்தான் வேற இப்ப படிச்சபொண்ணுகளுக்கு படிச்ச மாப்புள்ள கெடைக்கிறது நல்ல சொத்துபத்தோடன்னா கொஞ்சம் அப்புடித்தான் நகர வேண்டிருக்கு”னு ஒருத்தர் சமாதானம் சொன்னார்.
இப்ப இந்தக்கலியாணம் பத்திப் பேச்சு வந்துச்சு. அப்ப ஒருத்தர் சொன்னார்
“என்னாருந்தாலும் அம்மாளு களுக்குள்ள சம்பந்தம் பண்ணுறது எப்படி அசலுல அதுவும் வேத்து கூட்டத்துல பண்ணுறது எப்புடி நல்லாவாஇருக்கும்”னாரு
அதுக்கு இன்னொருத்தர் சொன்னார்
“எப்புடின்னாலும்இவ அம்மாவே இதுமாதிரி கலியாணம் முடிஞ்சி ஒரு பொண்ணு ஆணுனு ரெண்டப்பெத்து இன்னிக்கி மகளுக்குக்கு கலியாணமும் வைச்சிட்டா இப்ப என்ன கெட்டா போயிட்டா எல்லாம் மனசுதாப் பா” ன் னாரு ஒருத்தர்
“இதெல்லம் இப்ப சகசாமா போச்சு...”ன்னாரு முன்னாடி சொன்னவரு...
”சரி சரி எல்லாரும் கோயிலுக்குக்கெளம்புங்க முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு”ன்னாரு பையனோட அப்பா. அதுக்கு
“இருங்க எங்காளுக வந்துரட்டும்”னு சொல்லிக்கிட்டு இருக்கப்பவே வேன் வந்து நிக்க இந்தப்புள்ள சொந்தக்காரவுக எல்லாம் வந்து எறங்குனாக அவுகளைப்பாத்ததும் அந்தப்பொண்ணு மொகம் மலந்துச்சு...
அப்ப இவர் கேட்டாரு
“ என்னாம்மா மாப்புள்ள வீட்டுல ஒருத்தரும் அடையாளம் தெரியலயே அவுக அம்மாளுகதானா?”ன்னு கேட்டாரு.
அதுக்கு அவ கண்ணுல இருந்து லேசா கண்ணீர் துளிர்த்துச்சு....
”இல்லங்க இது லவ் மேரேஜ். அவுக அம்மாளுக இல்ல வேத்தாளுக என்ன பண்ணுறது புள்ளைங்க ஆசப் பட்டுட்டாக .
நமக்குப்புடிச்சதை விட அவங்களுக்குப்புடிச்சதை செஞ்சிட்டோம்னா பிரச்சனை இல்ல. இல்ல நம்ம விருப்பத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணி அதுக வேற முடி
வெடுத்துருச்சுன்னா...அத தாங்குற சக்தி எனக்கில்லைங்க”ன்னா...
அப்ப இவர் சொன்னாரு
“அதுவும் சரிதான். எனக்குத்தெரிஞ்சபொண்ணு ஒன்னு காதல் பண்ணி ருக்கும்போல. அப்பாம்மா கலியாணம் ஏற்பாடு பண்ணி கலியாணத்துக்கு மொதநா வர ஒன்னும் சொல்லல. அன்னிக்கி நைட்டோட நைட்டா ஓடிருச்சு அவளோட ஆளோட .பெரிய அவமானமாப்போச்சு.... அவர் மருந்தக் குடிச்சி
அவரக்காப்பாத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு....
""இப்பெல்லாம் சாப்ட்வேர் சாதின்னு ஒன்னு புதுசாவந்திருக்கு, அதுகளுக்குள்ள அட அம்மாளு கன்னு கலியாணம் பண்ணிக்கிறாக ரெண்டு பேரும் ஒரே தொழில்தான.
அந்தத்தொழில வைச்சித்தான பிரிச்சாக. இப்ப புதுசு புதுசா சாதிக அமெரிக்காவில இருக்குற சாதி சாப்டுவேர்ல வேலபாக்குற் சாதி இப்புடிப் போகுது...எல்லாம் காலமாத்தம் தான்....
இன்னொரு பக்கம் ஆம்பள ஆம்பளையை யேகலியாணம் பண்ணிக்கிறதும் பொண்ணு பொண்ணையே கலியாணம் பண்ணிக் கிறதும் தொடங்கிடுச்சு.. பரவாயில்ல பொண்ணு ஆம்பளையத்தான் பண்ணிக்கிறான்னு சந்தோசப்படுற காலம் ஆகிப்போச்சு... என்னத்தச்சொல்ல”ன்னாரு
”ஆமா ஆமா”ன்னு தலய ஆட்டுனா அவ.
அப்புறம் சொன்னாரு
“ இப்பெல்லாம் படிக்கிறப்பவே காதலாகி வேலை கெடைக்கிற வரைக்கும் காத்திருந்து எங்களுக்குக்குக் கலியாணம் செஞ்சி வைக்கிறீகளா இல்ல நாங்களே பண்ணிக் கட்டுமான்னு கேக்க ஆரம்பிச்சிட்டாக. அங்க பழைய சாதி நிக்கல.... இப்ப இருக்குற நெலமைதான் நிக்கிது... அவுகளுக்குள்ள இருக்குற நிதானமும் பொறுமையும் தன்னம்பிக்கையும்தான் நிக்கிது...அதுனால பெத்தவங்களுக்கு வேற வழியில்ல. ஒத்துக்கிட்டுத்தான் ஆக வேண்டிய திருக்கு” ன்னாரு ,
அப்ப அவ சொன்னா
“வாங்க கலியாணத்த நடத்துவோம் கலியாணம் முடிஞ்சபின்னாடி அவுகளும் அம்மாளுகதேன்...எனக்கு சம்பந்தி மகளுக்கு மாமனார் மாமியார் புருசன் ...அம்மாளுக்குள்ளனு பாக்காம வந்தவுக அம்மாளுகன்னு சொல்லி சந்தோசப்பட்டா எல்லாம் சரியாயிடும்...... எல்லாரும் அம்மாளுகதான்... இவபரவாயில்ல என்னோட அக்கா பசங்க ஜெர்மெனில அந்த நாட்டுப்பொண்ணத்தான் கலியாணம் பண்ணப்போறாகலாம்,,, அதுக்கு இது பரவாயில்ல”ன்னா....
”கணியன் பூங்குன்றனார் அப்பவே சொல்லல அது இப்பத்தான் நடமொறைக்கி வாரதுபோல
“” யாதும் ஊரே யாவரும் கேளிர்””ன்றத அன்னைக்கே சொன்னாரு
அந்த தீர்க்கதரிசின்னு சொன்னா டீச்சரான அந்தப்பொண்ணோட அம்மா .....
நன்றி அ.முத்துவிஜயன்