சேட்டை - சிறுகதை

chettai-short-story
சேட்டை - சிறுகதை

அந்தப்பயலப் போல ச்சேட்டை பண்ணுறவன் எவனும் இல்லைங்குறது அந்தஏரியாவில இருக்குற அத்தனை பேரோட மொத்த கருத்து. இம்புட்டுக்கும் அவனுக்கு வயசு 5 தான் பக்கத்துல இருக்குற பள்ளிக்கொடத்துல யூ.கெ .ஜி தான் படிச்சான் அப்ப. ஆனா வாயும் செய்கையும் ரொம்ப நீளம்.

அந்த வயசுல இருக்குற ஒருத்தன் அப்புடிப் பேசுவானா அதுமாதிரி நடந்துக்குவானான்னு கேட்டா அவனோட வயசுக்கு அது ரொம்ப அதிகம் நு தான் எல்லாரும் சொல்வாங்க

அவன் அவனோட அப்பாவ பேர் சொல்லித் தான் கூப்புடுவான். "அப்புடிக் கூப்புடக் கூடாது டா"பெரியவங்களன்னு அவனுக்குச்சொன்னா அதுக்கு ஒடனே சொல்லுவான் "எல்லாரும் அவர அப்புடித்தான கூப்புடுறாங்க அம்மா கூட சமயத்துல அப்புடித்தான கூப்புடுது அது வயசு அப்பாவ விடக்கம்மிதான"ன்னு பதில் சொல்லுவான்

அது ஒரு அடுக்கு மாடிக்கட்டிடம் மொத்தம் ஆறு வீடுகள் தான் அதுல மொதல் மாடில தான் நம்ம ஹீரோ இருக்குறான். ரெண்டாவது மாடில இருக்குறவர் பைக் கண்ணாடிய கல்லெடுத்து அடிச்சி ஒடைச்சிட்டான். அவருக்குக் கோவம் வந்துருச்சு. அவர் இவன இப்படிச்செய்யக்கூடாதுப்பா நு அவன் கிட்ட அட்வைஸ் பண்ணிட்டு வேலைக்கிப் போய்ட்டாரு

இவன் நேரா அவர் வீட்டுக்குப் போனான். அவங்க வீட்டுக்கதவைத்தட்டி அவர் சம்சாரத்துக்கிட்ட சொன்னான் "ஒங்க வீட்டுக்காரரை கொஞ்சம் சொல்லி வையிங்க நம்ம லைனல் குறுக்க வராரு அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது"ன்னு சொன்னான் கோவமா

அந்த அம்மாவுக்கு சிரிப்புத்தாங்கல. "என்னடா செய்வ?" அப்புடின்னு கேட்டாங்க. இவன் சொன்னான்" நான் அதைச்சொல்ல மாட்டேன் நடந்தபின்னாடி நீங்க வருத்தப்பட்டு பிரயோசனம் இல்ல"ன்னு சொல்லிட்டு அஜித் மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு வந்துட்டான்
இதை அவங்க நம்ம ஹீரோ அம்மா கிட்ட சொல்ல நம்ம ஹீரோவ செமத்தியா கவனிச்சிட்டாங்க . ஆனா அதுக்கு அவங்க பெரிய வெலை கொடுக்க வேண்டிய தாப் போச்சு. ஆமா அவங்க வீட்டுல புதுசா வாங்கி மாட்டிருந்த எல். இ டி டிவியை கண்ணாடி கிளாஸ எரிஞ்சு ஒடைச்சிட்டான் போச்சு 50 000 ரூ.

அதைப்பாத்துட்டு அவனோட அப்பா செம்ம கோவமாயிட்டாரு. அவரு பங்குக்கு அவன அடிக்கப்போனாரு அப்ப அவன் அவனோட அம்மாகிட்ட சொன்னான் "அம்மா ஒன் புருசன்கிட்ட சொல்லி வை அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது"ன்னு மிரட்டினான். என்னத்தச் சொல்லன்னு மலைச்சிப்போய் நின்னுட்டாங்க

அன்னிக்கி லீவு அன்னிக்கிக்காலையில நம்ம ஹீரோ வீட்டுல இருந்தசுத்தியல எடுத்துக்கிட்டு அவனுக்குன்னு ரெண்டு பொண்ணுக வயசு 3,4 இருக்கும் அதுகளோட போனான். போகும் போது "இன்னிக்கி நாம எதுனாச்சும் சாதிக்கனும்"னு சொல்லிக்கிட்டே போனான். அதுகளும் வெவரம் தெரியாம ஆமாடா நாம யாருன்னு காமிப்போம்னு சொல்லிக்கிட்டே கூடப்போச்சுதுக.

கொஞ்ச நேரத்துல பக்கத்து பில்டிங்ல ஒரே சத்தம் அவங்க அம்மா என்னான்னு எட்டிப்பாத்தா பக்கத்து பிளாக் காரர் ஒருத்தர் அவரோட காரோட ஹெட்லைட் அப்புறம் பின்னாடி லைட்டுகள யாரோ சுத்தியல் வைச்சி ஒடைச்சிருக்காங்க அதுனால அவர் போலீசுல கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறதா கத்திக்கிட்டு இருந்தாரு . அங்க பாத்தா நம்ம ஹீரோ சுத்தியல சட்டைக்குள்ள மறைச்சிட்டு அவர்கிட்ட "அங்கிள் ஒங்கலால முடிஞ்சா யார் இதை செஞ்சதுன்னு கண்டுபிடியுங்க பாப்போம்"னு கூலா சொல்லிக்கிட்டு இருந்தான்

அதுக்குள்ள அந்த பிள்ளக இவனப்போட்டுக் குடுத்துருச்சுக. "நாங்க ஒடைக்கல இவன் தான் ஒடைச்சான்"னு. நல்ல வேலை அவர் இவனோட அப்பாகூட வேலை செய்யிறவர் அதுனால அவர் கூடப்பேசி சமரசம் பண்ணி காசு குடுத்து சரிபண்ணுனாரு இவனோட அப்பா.

அன்னிக்கி மழைபேஞ்சு ஊரல்லாம் தண்ணி தேங்கிக்கெடந்துச்சு. இவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு கிரவுண்டு இருந்துச்சு. அதுல தண்ணி தேங்கி சேறாக்கெடந்துச்சு. நம்ம ஹீரோவுக்கு ஒரே குசி. அதுல போய் குப்புறப்படுத்துக்கிட்டு கை கால் டிரஸ் எல்லாம் சேறாக்கிக் குதிச்சிட்டு இருந்தான் சும்மா இல்லாம அந்தப்பக்கமா போன ஒருத்தர் அவன்கிட்ட வாயக்குடுத்தாரு "சேத்துல என்னாடா பண்ணுற டிரஸ் எல்லாம் சேறாகிப்போச்சே?" ன்னு கேக்க அவன் சொன்னான் "நான் நீச்சல் கத்துக்கிறேன் அது என் இஸ்ட்டம். ஒங்க பொண்டாட்டிக்கிட்ட இத நான் தொவைக்க சொல்லமாட்டேன் மூடிட்டுப்போங்க"ன்னான். அவர் இவன் கிட்ட வாயக்குடுத்தா நம்மளுக்குத்தேன் அசிங்கனு சைலண்டா கெளம்பிட்டாரு.

இங்கதான் இப்புடின்னா அவன் பள்ளிகொடத்துல அடிச்ச லூட்டி சொல்லி மாளாது. அங்க பக்கத்துல இருக்குற பொம்பளப் பிள்ளைக மூஞ்சில ஸ்கெட்ச் பேனால கிறுக்கி வைச்சிட்டான். அது கம்ப்ளெயிண்ட் ஆயிடுச்சு. அதே மாதிரி கூடப்படிக்கிற பிள்ளைகள மெரட்டி அது ஒரு பிரச்சனை ஆச்சு. அதாச்சும் பரவாயில்ல. அவனோ கிளாஸ் டீச்சர் கிட்டப்போய் "டீச்சர் என்னைய கல்யாணம் பண்ணிக்கோங்க ஒங்க மனசு கோணாமப்பாத்துக்குவேன்"னு சொன்னான்னு அவங்க டீச்சர் வந்து இவனோட அப்பாகிட்ட கம்ளெயிண்ட் பண்ணுனாங்க

இவங்க அப்பாவுக்குக் கோவம் வந்து அவன அவங்க முன்னாடியே விசாரிக்க அவன் கூலா சொன்னான் "அய்யே இதுகிட்டப்போய் அப்புடி சொல்வேனா இவங்க மூஞ்சி சகிக்கல ஒரு வேளை அப்புடிச்சொன்னா பக்கத்துக்கிளாஸ் மிஸ் ரொம்ப அழகா இருப்பாங்க அவங்க கிட்டத்தான் சொல்லனும்னு நெனச்சேன்"னான். அந்த டீச்சருக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு "பிள்ள நல்லா வளத்துருக்கீங்க"ன்னு கோவமா சொன்னாங்க

அதுக்கு அசரலயே நம்ம ஹீரோ. "இப்புடிச்சின்னப்பையன் மேல வந்து அசிங்கமா கம்ளெயிண்ட் செய்யிற ஒங்களை எப்புடி டீச்சரா வைச்சிருக்காங்க" ன்னு சொல்லி அவங்க வயித்தெரிச்ச்லைக் கொட்டிக்கிட்டான். அன்னிக்கி அவனுக்கு செம மண்டகப்படி அப்பக்கூட அவன் சொன்னான் அது போகட்டும் "அவங்களுக்கு என் மேல இஸ்டமில்ல பேசாம என்கூடப்படிக்கிற காயத்ரிய எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க அவள நான் கண் கலங்காமப் பாத்துக்குவேன் அவளுக்கு வீட்டுப்பாடம் எல்லாம் நானே எழுதிக்குடுப்பேன்" னான்

அவனோட அப்பா தலையில அடிச்சிக்கிட்டாரு. "இவனோட ஆக்டிவிட்டீஸ் ரொம்ப ஹைப்பரா இருக்கு இவன டாக்டர் கிட்டக் காமிங்க"ன்னு ஒருத்தர் இவனோட அப்பாகிட்ட ஆலோசனை வழங்குனாரு. அவரும் ஒரு நாள் டாக்டர் கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கி அவர்கிட்ட இவனக் கூப்புட்டுப்போனாரு. அப்ப டாக்டர் இவனோட அப்பாகிட்ட சொன்னாரு "சின்னப்பையன் அவனுக்குச் செக்கப் மனநல மருத்துவர்கிட்டன்னா அவன் மனச ரொம்ப அது பாதிக்கும். அதுனால ஒங்களுக்கு பாக்கப்போறதாச்சொல்லி கூட்டியாங்க" ன்னு சொன்னார்.

அவரும் அதேமாதிரி இவன் கிட்ட சொல்லி கூப்புட்டார். அதுக்கு இவன் சொன்னான் "ஒங்களுக்குப் பிரச்சனைன்னா நீங்க போங்க எனக்கு நெறையா வேலை இருக்குது. ஹோம் ஒர்க் எழுதனும் படிக்கனும்"னு சொன்னான்

அவர் ஒரு மாதிரியா சமாளிச்சி இவன டாக்டர்கிட்ட கூப்புட்டு போனாரு. அன்னிக்கி டாக்டருக்கு சனிப்பார்வை போல. அவர்கிட்டப்போனதுமே இவன் சொன்னான் "டாக்டர் அப்பாவுக்கு ஒன்னும் பிரச்சனையில்ல. நல்லாத்தேன் இருக்குறார். என்னா அப்ப அப்ப கொஞ்சம் லூசு மாதிரி பேசுறார் அதுக்கு எதுனாச்சும் மருந்து குடுங்க"ன்னான்

அப்ப அவர்கேட்டார் "ஒனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லுப் பா" ன்னு கேக்க இவன் சொன்னான் "டாக்டர் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா நான் உள்ளாற வரும்போது பாத்தேன் ஒங்க கிளினிக்ல இருக்குற நர்ஸ் ரெண்டுபேரும் பேசிக்கிட்டு இரூந்தாங்க ஒங்க தொல்ல தாங்க முடியலன்னு அப்புடி என்னா பண்ணுனீங்க அவங்கள?"ன்னான்

அவர் ஆடிப்போய்ட்டார். அப்ப அவர் முழிச்ச  முழியப்பாத்து இவனோட அப்பா அடுத்து என்ன பண்ணுறது நு தெரியாம முழிச்சார். அப்ப டாக்டர்" சரி நீங்கபோய்ட்டு இன்னொரு நாளைக்கி வாங்க"ன்னு சொல்லி அனுப்பிச்சார், வெளிய வாரப்ப இவன் அந்த ரெண்டு நர்ஸ்களைப்பாத்து சொன்னான்" நர்ஸ் நான் டாக்டரை மெரட்டிட்டேன் இனிமே உங்க விசயத்துல அவர் அப்படி நடக்க மாட்டார்.

அப்புடி எதுனாச்சும் செஞ்சா  நீங்க ஒங்க மிஸ் கிட்ட கம்ளெயிண்ட் பண்ணுங்க. அவங்க இவரோட அப்பாகிட்ட சொல்லி இவர ஒரு நல்ல டாக்டர்கிட்ட கூப்புட்டுப்போய் சரி பண்ணிடுவாங்க" ன்னான். அவங்க ரெண்டு பேருக்கும் முழி பிதுங்கிடுச்சு..

நன்றி - அ.முத்துவிஜயன்